நிலவே நீ என்னைச் சுடாதே .3.
அயர்ந்து உன் மடியில் தலை சாய்த்து,
உலகை மறந்து உறங்க வேண்டும்.
அன்பு மகன் பிஞ்சு முகம் பார்த்து,
கை கோர்த்து கதை சொல்லவேண்டும்.
கூழானாலும் உன் கையால் குடித்து,
கூடலும் பின் ஊடலுமாய் வாழ வேண்டும்.
கணுக்காலில் மெள்ளவே கிலு கிலுக்கும்
சலங்கை சத்தம். காதருகே உன் கனல் மூச்சு ..
மூக்குத்தி வெளிச்சத்தில்...
முணுமுணுத்த கதைகள்..இன்னும் பல...
நெஞ்சில் மூட்டுதே நெருப்பு ..
பிரிவின் பெரு வேதனை... தருகுதே தவிப்பு ..
நறு முகையாளே! நம் இதயப் பிரளயங்கள் ..
இன்னும் எத்துனை நாள் .....
கை நிறைய இல்லாவிடினும்,
கடனின்றி வாழல் வேண்டும்.
கரை கடந்து, காலத்தே உன் மடியில்
கண்ணயர வேண்டும். வருவேன்.
உனைத் தேடி, விரைவில். வருந்தாதே!.
வதைக்காதே !ஒரு போதும். சொல்லால்
எனை சோர்விழக்க செய்யாதே!.
நைந்த நூலில் நெய்த துணியாய்,
கிழிந்ததே, இன்று என் மனம்.
நினைவெல்லாம் நிறைந்த என்
நிலவே, இன்று நீ எறிந்த பாணம்.
இனி ஒரு பிறவி வேண்டேன்.
பிறப்பின் பிரிவு வேண்டேன்.
கனியே !கண்மணியே! என் காதலியே!
கொஞ்சம் பொறு. எட்டத் தூரம் இல்லை. இன்னும்
கொஞ்சம் தான். நாயகியே !.
வட்டியுடன் முதலாய் வாழ்ந்திடுவோம். என்
வஞ்சிக்கொடியே! எதிர் வரும் காலம், இனி
நம் கையில். நறு முகையாளே!
நாயகனை நம்பு!.
.