புன்னகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புன்னகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 19 பிப்ரவரி, 2011

வாழ்க்கைக் கோலங்கள் புள்ளி . 7.

புன்னகை மந்திரம் .

" நாளொன்று போனால் பொழுது ஒன்று போகும்", என நித்தியச்சிக்கல்களும், கவலைகளும் உடலையும் மனதையும் சோர்வடையச் செய்கின்றன."மோப்பக் குழையும் அனிச்சம் போல் ",நம் மன உளைச்சல், குடும்பம், சுற்றம், என தொடர்ந்து,வாழ்வில் தேக்கத்தை தருகிறது .அன்றாட சிலவுகள், அச்சுறுத்தும் பில்கள்,கல்வி கட்டணம், மருத்துவ சிலவுகள் என மலைக்க வைக்கின்ற தேவைகள்.இதைப்பற்றிய நம் கவலைகள் இதன் தீர்ப்பு ஆகாது. மாற்றாக,இக் கவலைகள் நம் செயல்பாட்டை முடக்கி, முன்னேற்றங்களுக்கு பல சமயம்,முட்டுக் கட்டை ஆகி விடுகிறது.

என்ன செய்யலாம் ?.எப்படி நம் சூழலை மாற்றலாம்?.

முகுந்தனும், வசந்தனும் அவர்களின் வாழ்வில்  இந்த  பாதிப்புக்களை, தம் மதிப்பு மிக்க ஆசிரியர் திரு.கல்யாணராமன் அவர்களிடம் இயம்பினர். ஆசிரியர் ஒரு சிறு புன்னகையுடன் "உங்கள் வாழ்க்கைக் கோலத்தின் மையப் புள்ளியான நீங்கள், முதலில் உங்களையே பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்",நீங்கள் கடந்து வந்த பாதைகளில் பெற்ற வெற்றிகள், இறையருளால் உங்களுக்கு கிடைத்து இருக்கின்ற உடல் ஆரோக்கியம், மனைவி, மக்கள் ஆகிய நல்லனவற்றில் மன நிறைவு பெறுங்கள்.மனதில் உற்சாகமும், சந்தோஷமும் பெறுவதை உணர்வீர்கள். ஒரு "டானிக்", குடித்த தெம்பு வரும்.

ஆரோக்கியமான சிந்தனைகள் உங்கள் மனம், உடல், உணர்வு, சக்தி எனும் கேந்திரங்களை ஒரு முகப்படுத்தி, மேலும் திறமை உள்ளவராய் உங்களை மிளிரச் செய்யும்.கவலை, கோபம், கண்ணீர், மன உளைச்சல் போன்ற எதிர் மறையான எண்ணங்கள் நம் உடலையும் மனதையும் குன்றச்செய்யும்.




நல்லது,கெட்டது என்பது பெரும்பாலும் நம் கண்ணோட்டத்தை பொறுத்தே உள்ளது. கெட்டதை சந்தித்தாலும், இதில் இருந்து மீண்டதை, வாழ்க்கையில் பாடம் கற்றதாய் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் பெறவேண்டும்.
அப்புறம் மனைவி,குழந்தை,சுற்றம், நட்பு, என எல்லோரையும் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.தொன்று தொட்டு, ஒரு மந்திரம் இருக்கு.சிலவே கிடையாது. மனசு வச்சா உடனே செய்யலாம். புன்னகை எனும் பெரும்ந்திரம் தான், அது .என்றார் ஆசிரியர்.
பாராட்டுக்களை எக்காரணம் கொண்டும் ஒத்திப் போடாதிங்க. ஆறின கஞ்சி,பழம் கஞ்சிங்க. எந்த நல்ல செயலையும் அப்போதே, அந்தக் கணமே பாராட்டுங்கள்.அலைபேசி, குறுந்தகவல், மின்னஞ்சல், இணையதளம் என்று காலத்தையும் தூரத்தையும் குறைக்கிற சாதனமெல்லாம் இதற்கு நல்லா பயன் படுத்தலாமுங்க. இது பெரிய ஆக்க சக்திங்க.அம்புடுதேன். சொல்லிப்புட்டேன்.
"பாராட்டு ஒருவரின் மூளையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது", என்ற ஆராய்ச்சியில் உடலிலும் மனதிலும்,உன்னதமான செயல்பாடுகளை உருவாக்குவதை கண்டறிந்துள்ளார்கள்.












எதிர்மறை எண்ணங்கள்.                                                 பாராட்டுக்கள்

"வெற்றி பெற்றவர், புத்திசாலி", என்று நம்மை உலகம் நினைக்க வேண்டும் என கருதுவது, நம் அனைவரின்இயல்புங்க.நம்புங்க!

பாராட்டுக்களும்,புன்னகை மந்திரங்களும், இதை சாதிக்கும்.

சுருங்கச் சொன்னால் பாராட்டுக்கள் மகிழ்ச்சி,மன நிறைவு,வெற்றி என்ற பாதையை நோக்கி இட்டுச் செல்கிறது. விசாலமான மனம்,விரிசல் இல்லா வாழ்க்கை,விரிகின்ற உலகம் என்பது,இதன் அடுத்த படிங்க.என்ன இல்லை என்பதை விட,"என்னவெல்லாம் நாம் பெற்று இருக்கிறோம்" என்ற மன நிறைவு, வெற்றி என்னும் ஆற்றில் சீக்கிரம் கரை ஏற உதவும். மனதாரப் பாராட்டுங்கள்.மனம் விட்டுச் சிரிக்கப் பழகுங்கள். வாய் விட்டு சிரிச்சா,நோய் விட்டுப்போகும். "புன்னகைகளால ஆகாததொன்றும் இல்லைங்க".நேற்றைய விட இன்று,  இன்றை விட நாளை, என நல்லதாய் நம் உலகம் விரியும்...
சரி தானுங்களா!.
         
நன்றி : கூகுள் படங்கள்                             

செவ்வாய், 7 டிசம்பர், 2010

நன்றி நவில்வோம் ..உழவுக்கும் தொழிலுக்கும் ....

நன்றி  நவில்வோம் ..உழவுக்கும் தொழிலுக்கும் ....

எறிந்த குப்பை,
அழுகிய உணவு,
எச்சம் சொச்சம்,
எல்லாம் பொறுக்கி.
கொட்டிடும் அழுக்கை, 
கூட்டியள்ளும்,
குப்பைக்காரர். 
குப்புசாமி.

பெய்யும் மழையில், 
நாய்கள் ஊளை, 
விடியற்க் காலை.
படிகள் ஏறி, 
குடிக்க, படிக்க 
பாலும், பேப்பரும் 
பாங்காய்ப் போடும், 
பள்ளிச் சிறுவன். 
பழனிச்சாமி.

இருந்தால்
ஏற்றம், 
உதிர்ந்தால் 
மாற்றம்.
நாம், முடி  துறக்க 
நம், முடி திருத்தும் 
மூலைக் கடை 
முனுசாமி.

நெடு மழை, 
நீள் வெயில், 
கடும் புயல். 
கம்பும், நெல்லும் 
கண்ணீரில் மூழ்க, 
வயலில் நித்தம், 
வயிற்றில் நெருப்புடன்
வேளாண்மை புரியும்,
வேலுச்சாமி. 

இச்சாமிகள் இன்றி,
சத்தியமாய் தானே!  
சாத்தியமில்லை,
நம் சுக வாழ்வு .
நன்றிகள் நவில, 
நேரமிலை என   
நினை யாமல்,
நின்று,  நாம்
சின்னப் புன்னகை,
சிறிதாய் கைகுலுக்கல் 
சிந்தும் அன்புடன், 
சிரிப்புடன், சில சொல்.

உள்ளத்தின் 
உயரம் காட்டி
உழைப்பின் மேன்மையை 
உணர்வால் போற்றுவோம் !
உயரும் உலகம்.
துயரம் குறையும்.
உலகில் கொஞ்சம்.   
            


ஞாயிறு, 5 டிசம்பர், 2010

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் ....

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்.. (கடந்த வாரம், நவம்பர் மாதம்,28 -ம் திகதி "விக்கி லீக்", என்னும் அமைப்பு தூதுவரகங்களில் பரிமாறப்பட்ட ரகசிய தந்தி ஆவணங்களை வெளியிட்டு, உண்மைகளை தோலுரித்து காட்டியது.கிட்டத் தட்ட 2,50,000 கேபுல்களுக்கு ஜூலியன் அசான்ஜே( Julian Assange ), மற்றும் அவரின் தோழர்களால்,இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கசிந்த ஆவணங்களில்,கிடைத்த தகவல்கள் பற்றிய கருத்துரை.)

Julian Assange

















அசான்ஜே அடித்தார்,
ஆப்புகள் அனைத்தும்
குவார்டர் மில்லியன்,
கோப்புகள் இறைத்தார்,
குவலயம் முழுதும்

சுதந்திர நாடென்றார்.
சொர்க்க பூமியென்றார்
தந்திர நாடாகி,
தர்க்க பூமியாய்.

புது விருந்தளித்து,
புன்னகை சிந்தி. 
கை நனைத்த பின்னர், 
கை பல குலுக்கி, 
கட்டித் தழுவி,

விடைபெறும் முன்னே,
விடுக்கிறார் மடல்அம்பை.
இளக்காரம் 
இடிச்சொல், என

புல்லுருவி வாசகம்
புரிந்துணர்வில், 
புரியாத வார்த்தைகள்.
புதைந்த மர்மங்கள். 

சங்கேதமாய்,தந்திகளில்
சடுதியில் செல்லும். 
சங்கேத சந்துகளின், 
சணல் பிரித்து, 
சங்கிலிகளின்
பின்னல் அறுத்து 
இனம் காட்டினார் 
இன்று இணைய தளத்தில்.

உள்ளொன்று வைத்து 
புறமொன்று பேசுவார்.
உதட்டுச் சாயம் 
உலரும் முன்னரே.
உலகே நீ உணர்வாய்.
உய்யும் வழி தேடிடுவாய்.