விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 டிசம்பர், 2010

நன்றி நவில்வோம் ..உழவுக்கும் தொழிலுக்கும் ....

நன்றி  நவில்வோம் ..உழவுக்கும் தொழிலுக்கும் ....

எறிந்த குப்பை,
அழுகிய உணவு,
எச்சம் சொச்சம்,
எல்லாம் பொறுக்கி.
கொட்டிடும் அழுக்கை, 
கூட்டியள்ளும்,
குப்பைக்காரர். 
குப்புசாமி.

பெய்யும் மழையில், 
நாய்கள் ஊளை, 
விடியற்க் காலை.
படிகள் ஏறி, 
குடிக்க, படிக்க 
பாலும், பேப்பரும் 
பாங்காய்ப் போடும், 
பள்ளிச் சிறுவன். 
பழனிச்சாமி.

இருந்தால்
ஏற்றம், 
உதிர்ந்தால் 
மாற்றம்.
நாம், முடி  துறக்க 
நம், முடி திருத்தும் 
மூலைக் கடை 
முனுசாமி.

நெடு மழை, 
நீள் வெயில், 
கடும் புயல். 
கம்பும், நெல்லும் 
கண்ணீரில் மூழ்க, 
வயலில் நித்தம், 
வயிற்றில் நெருப்புடன்
வேளாண்மை புரியும்,
வேலுச்சாமி. 

இச்சாமிகள் இன்றி,
சத்தியமாய் தானே!  
சாத்தியமில்லை,
நம் சுக வாழ்வு .
நன்றிகள் நவில, 
நேரமிலை என   
நினை யாமல்,
நின்று,  நாம்
சின்னப் புன்னகை,
சிறிதாய் கைகுலுக்கல் 
சிந்தும் அன்புடன், 
சிரிப்புடன், சில சொல்.

உள்ளத்தின் 
உயரம் காட்டி
உழைப்பின் மேன்மையை 
உணர்வால் போற்றுவோம் !
உயரும் உலகம்.
துயரம் குறையும்.
உலகில் கொஞ்சம்.   
            


வெள்ளி, 19 நவம்பர், 2010

பட்டணமான என் பட்டிக்காடு ..2 ..

பட்டணமான என் பட்டிக்காடு 
 
வானை நம்பி, 
வயிறு நிரம்பா
விவசாயம் விட்டு 
வாழ்வாதாரம் கூட்ட  
வசதிகளை தக்க வைக்க,
 
வாலிபர் பலரும்
வாய்ப்புக்கள்  தேடி
வளைகுடா செல்ல 
தறிகளும் சாயமும் 
திருப்பூர் அழைக்க,
கொல்லை, குடி ,
காடு துறந்து, பலர்
கொல்லத்துக்கும் போக       
   
பட்டணமான  என்
பட்டிக்காடு
 
பால்ய விவாகங்கள் 
பதியில்லா பெண்கள் 
கதியில்லா பெருசுகள்
விவரமறியா விடலைகள் என 
விரக்தியில் வாடி 
ஏங்குகிறது என் கிராமம். 
இன்று இளமையை இழந்து.