முருகானந்தமும்.... மாதவிலக்கு பிரச்சினைகளும்.
Registered Office
SF No 577,KNG PUDUR ROAD,
SOMAYAMPALAYAM ( PO ),
COIMBATORE - 641 108.
புழக்கடை ஓரம் உலக்கை வைத்து " மாதவிலக்கு, தீட்டு ", என ஒதுங்கி இருந்த தாய், பின் தமக்கை, தங்கை, மனைவி, மகள், என ஒவ்வொரு ஆண் மகனின் வாழ்க்கையிலும், காலம் காலமாய் எதிர்கொள்ளுகின்ற,தொடர்கின்ற இயற்கை நிகழ்ச்சி. பாராமுகம், பரிதவிப்பு, இயலாமை என அத்துடன் முடிகிறது,ஆண்களின் அவதி.
உடல் அளவிலும், மனதளவிலும் மாதம் தோறும், மாதரை கொடுமை படுத்துகிறது, இந்த மாத விடாய்.தாங்க முடியாத உதிரப் போக்கு, சொல்ல இயலாத வலி, வேதனை, எரிச்சல் என நீள்கிறது, பெண்களுக்கு சோதனை.இந்தக் காலங்களில், பெண்கள் பழைய துணிகள், காகிதங்கள்,காய்ந்த மரத் தழைகள், சமயத்தில் சாம்பலை யும் கூட உபயோகிப்பதாய்,ஆய்வுகள் எடுத்துக் காட்டு கின்றன.
இந்தப் பழக்க வழக்கங்கள், பிறப்புறுப்பில் பல தொற்று நோய்கள் உண்டாகவும், கர்பப் பையை நீக்கும் அளவிற்கு காரணமாய், பல சமயம் அமைகிறது.தன உடல் சுகாதாரம் பற்றிய அறியாமையும், வசதி இன்மையும், இதற்கான முக்கிய காரணங்கள்.இன்னமும்,நம் நாட்டில் 88 % விழுக்காடு மகளிர், நாப்கின் உபயோகப் படுத்த வில்லை என்கிறது, பெண்களின் சுகாதாரம் பற்றிய மற்றுமொரு ஆய்வு.
நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். தாய் விவசாயக் கூலி. பத்தாம் வகுப்பை எட்டாத முருகானந்தம்,மனைவி தனக்குத் தெரியாமல் மறைத்து எடுத்துச் செல்லும் பொருளைப் பற்றி வினவ .." இது பொம்பளைங்க சமாசாரம்..உங்களுக்கு சம்பந்தமில்லை !", என்பதில் தொடங்குகிறது, இந்தக் கண்டு பிடிப்பு.இதற்குப் பின்னால் பத்தாண்டு கால கடும் உழைப்பு, விலகிப் போன மனைவி, விட்டுப் பிரிந்த தாய், தொடர்பறுத்த நண்பர்கள் ' பைத்தியம் ', என்ற பட்டம், இன்னும் எத்தனையோ, பல இன்னல்கள்.
இன்று 47 வயதாகும் திரு முருகானந்தம் நாப்கின் சந்தையில் கொடி கட்டிப் பறக்கும் ஜான்சன் &ஜான்சன், ப்ரொக்டர் &காம்ப்ளே அவர்களின் நாலு கோடி ரூபாய் இயந்திரத்தை வெறும் அறுபத்தி ஐயாயிரம் ரூபாயில் வடிவமைத்து வழி காட்டியுள்ளார்.பதிமூணு ரூபாய் விலையில் எட்டு நாப்கின்கள், உலகத் தரத்தில். மற்ற நாப்கின்களை விடவும் சுமார் பதினைந்து மடங்கு விலை குறைவாய் ,சந்தையில் விற்பனை.
இந்தியாவில் 27 மாநிலங்களிலும் உலகத்தில் 110 நாடுகளிலும் இவரின் நாப்கின் தயாரிக்கும் கருவி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஜனாதிபதியிடம் விருது பெற்றவர்.பல நிறுவனங்கள் பாராட்டுகின்றன இவரை.படித்தவர் நிறைந்த அவையில்,இன்று ஆங்கிலத்தில் உரையாற்றும் திறன் வளர்த்துக் கொண்டுள்ளார்.
ஒரு கால கட்டத்தில் ஆராய்ச்சிக்கு ஆளின்றி, மகளிரின் பிரச்சினை அறிய, தானே நாப்கின் அணிந்து, ரப்பர் பலூனில் ஆட்டு ரத்தம் நிறைத்து, சோதனை மேற் கொண்டவர். லாபம் கருதாமல் சமூக நோக்கோடு, வசதி இல்லாரும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், செயல் படுகிறது இவரின் ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனம்.
SF No 577,KNG PUDUR ROAD,
SOMAYAMPALAYAM ( PO ),
COIMBATORE - 641 108.
e-mail:muruganantham_in@yahoo.com Mobile No : 9283155128
இவர் தன அனுபவத்தை பகிர்வதை அன்பு கூர்ந்து கீழ் காணும் கானொளியில் காண்க.
இன்று பழித்தவரை பாராட்டுகிறது உலகம் . பிரிந்த பத்தினியும் மீண்டும் கூடவும், தான் மேற்கொண்ட முயற்சியில் மனம் தளராமல், உழைப்பின் உச்சத்தில்,வெற்றி நடை போடுகிறார்.
மனம் மகிழ்கிறேன்....உதயம் ...இந்திய வானில் இன்னுமொரு நட்சத்திரம் .