சனி, 29 ஜனவரி, 2011

ஷிர்டி பகவான் பாபா தரிசனம்

ஷிர்டி பகவான் பாபா  தரிசனம்


   
மும்பை 'நெருல்' இல் இருந்து டிசம்பர் 20-ம் தேதி புறப்பட்டோம்."தாதர்", போகும் வழியில் "குர்லா", ரயில் நிலையத்தில் இறங்கிய ஜனத் திரளில், என் மூக்குக் கண்ணாடி எகிறி பறந்து போனது. பிளாட்பாரத்தில் விழுந்த கண்ணாடி மிதிபட்டு நூறாகிப் போனது.கண்ணிருந்தும் கண்ணாடியில்லாமல் அரைக் குருடன் ஆனேன். மேலும் மாற்றுக் கண்ணாடி பத்திரமாய் சென்னையிலே இருப்பது பொறி தட்ட, கண்ணில் கம்பளிப் பூச்சிகள் அப்போதே ஊர ஆரம்பித்தது.

இரவு 10 மணிக்கு ரயில் ஏறி ஷிர்டியை மறுநாள் அதிகாலை 0430மணிக்கு சென்றடைந்தோம். ஸ்ரீ சாய் பகவானுக்கான முதல் ஆரத்தி நேரம் அது."மிஸ்",பண்ணி விட்டோம்.நேராக ஹோட்டல் சென்று குளித்து விட்டு 0630 க்கு வரிசையில் நின்று 0730 மணிக்கு பகவான் தரிசனம் முடித்தோம்.


  


அங்கிருந்து நாசிக் வழியாக "திரும்பகேஷ்வர்",சிவாலயம் சென்றோம். இது ஜ்யோதிர்லிங்க ஸ்தலத்தில் ஒன்றாகும். பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் என மும்முகம்கொண்டவராய் பிரதிஷ்டை ஆகியுள்ளார்.கோதாவரி நதி உற்பத்தியாகும் இடத்தில் பிரம்மகிரி மலையடி வாரத்தில் அமைந்துள்ள திருத்தலம் இது.பக்தர்கள் கூட்டம்அலை மோதியது. கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம், வரிசையில் நின்று சிவ தரிசனம் செய்தோம்.


பின்னர் நாசிக் திரும்பிய போது,சாயம் காலம் நான்கு மணியாகி விட்டது. அங்கு ஸ்ரீராமன் சீதை, லக்ஷ்மணன் கூட சில காலம் வசித்ததாகவும், இராவணன், சீதா பிராட்டியை இங்கிருந்து தான், இலங்கைக்கு கடத்தியதாகவும், புராணம்.

மீண்டும் மற்றவை அடுத்த பகிர்வில்..

நன்றி: கூகுள் படங்கள்.
                                        

செவ்வாய், 25 ஜனவரி, 2011

மும்பைப் பயணம்

மும்பைப் பயணம்

ஒதுக்கப் பட்ட விடுமுறை நாட்களை எங்களுடன் கழித்த பேரன்,   பேத்தியை பாட்டி வீட்டில் கொண்டு விட மும்பை புறப்பட்டோம். 


டிசம்பர் 13 ம் தேதி இரவு ரயில் ஏறி, தேதி அதிகாலை 03 -30 மணிக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்-ல் இறங்கி, புறநகர் ரயில் பிடித்து 'நெருல்' போன போது நேரம் காலை 06-00  மணி. 

ரயிலில், சக  பிரயாணியாய் ஒரு   எலியாரும் கூடவே பயணிக்க, அனைவர் கவனமும் சோற்று மூட்டையில் தான். பஜ்ஜியில் இருந்து பனை நுங்கு வரை சாப்பிடகிடைத்தது.காப்பி, டீ என்ற பெயரில் அளவு குறைந்த, தரமில்லாத பானகங்களும் கிடைத்தன.வழக்கம் போல் சினேகிதத்தில்,நெருங்கி குசலம் விசாரித்து பெயர் கேட்காமல் பிரிந்து போனோம்.


"மும்பையில் ஆறு நாட்கள் தங்கியதில் "பாலாஜி மந்திர்",மற்றும்  வாஷியில்,"இன் ஒர்பிட்",என்ற அங்காடிக்கு சென்றது தவிர, வீட்டிலேயே முடக்கம்.அந்த வருடத்தின் குறைந்த குளிரை மும்பை எட்டியதை, பத்திரிக்கைகள் சொல்ல என் சுவாசப் பைகளில் அதன் ரீங்காரம் கேட்டதும்,ஒரு காரணம். பேரன், பேத்தியை மும்பை கோதரிகளுடன் விட்டு தம்பதி சமேதராய்,நீண்ட நாள் ஆவலாய் காத்திருந்த ஷீரடிக்கு,ஸ்ரீசாய் பகவானின் திருவடி தரிசனத்திற்குசென்றோம்.                அடுத்த பகிர்வில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் .இப்போதைக்கு என் வணக்கம் .

புதன், 5 ஜனவரி, 2011

விடுமுறைப் பயணம்..1

விடுமுறைப் பயணம்..1

துள்ளும் சிறார்க்கு
பள்ளி விடுமுறை.
பேரன் பேத்தியோடு 
பெரும் ரயில் பயணம். 

செண்பகம் அம்மாச்சி 
சென்னையில் ...
பிரேமா பாட்டி 
பம்பாயில் ...
தற்போதைய
தலைமுறை
தாத்தா பாட்டிகளின்
தலையாய வேலை ,இது 
தாங்கிப் பிடிக்கும் வேர்களாய் ..
ஓடி ஓடி உழைத்து, 
ஒய்ந்து போன, எமக்கு 
வாழ்க்கையில் காண 
விடுபட்ட தலங்களை,
வழிபாட்டு இடங்களை,
வலம் வரவும் ,வணங்கிடவும் 
வந்ததோர் வாய்ப்பு.

      

காதல் மனம்...

காதல் மனம்

 
உள் வாங்கும் மூச்சில் என்
உயிர் விரியும்.
உன் உள்நோக்கிப் பார்க்க
என் மனம் விழையும் .

கண்கள் ஊடுருவும், உன் 
கடல் ஆழத் தேடலில், 
இதயம் திறந்து, 
இன்னும் ஆழமாய்

முத்துக் குளிக்கும்.எனக்கு 
பித்துப் பிடிக்கும் ....காதலால்!