வியாழன், 19 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும்.2.


கேடில் விழுச் செல்வம் கல்வி .

மெல்பர்னுக்கு வர முடிவெடுத்ததால் சிங்கப்பூரில் பாதியிலேயே ராஜனும், காயத்ரியும் படிப்பை விட வேண்டிய தாயிற்று. மேலும் இந்தியா,சிங்கப்பூரில் மே ஜூனில் பள்ளி ஆரம்பித்து மார்ச் அல்லது ஏப்ரல் வகுப்புக்கள்  முடியும். இங்கே பிப்ரவரி முதல் வாரம் ஆரம்பமாகி, டிசம்பர் நடுவில் முடிந்து விடும் .எப்படியானாலும் ரெண்டாம் கெட்டான் சூழ் நிலை.  புலம் பெயரும் முன்னதாகவே குழந்தைகள் பள்ளியில் சேர நாங்கள், 'ஹோம் வொர்க்' செய்தோம். ஏற்கனவே "அடிலைட்"ல் வசிக்கின்ற தங்கை வீட்டார், முன்பே குடி பெயர்ந்த தோழர்கள், இணைய தளம், மின்னஞ்சல்போதாது என்று... என் மகள் குடும்பத்தோடு ஒரு முறையும், தனியாகவும் ஆஸ்திரேலியாவுக்கு  விஜயம் செய்தார். குழந்தைகள் புதிய சூழல், புதிய பள்ளி இதை யெல்லாம் சமாளிக்க இயலுமா  என்பன பற்றிய கவலைகளுடன்.


நாங்கள் நவம்பர் 26 ம் தேதியே வந்து விட்டதால். டிசம்பர் ஜனவரி  இரண்டு மாதம் குழந்தைகள் வீட்டில் இருப்பார்கள். ஏதாவது டியூஷன் வைக்கலாம் என்று, சிங்கபூரிலேயே,  இணைய தளம் மூலம், ஒரு சீன டீச்சரம்மாவோடு  அறிமுகம் ஆனோம் . அவர் பலஉபயோகமான தகவல்களை, சளைக்காமல் தந்தார் .முதலில் ஆசியக் கண்டத்தில் இருந்து வருகின்ற குழந்தைகள் சீக்கிரமா "பிக் அப்" பண்ணி விடுகிறார்கள், கவலை வேண்டாம் என, வயிற்றில் பாலை வார்த்தார். அடுத்து நல்ல பல்கலை கழகத்தில், எதிர்  காலத்தில்  படிக்க வேண்டுமானால், எந்த பள்ளியில் படித்தல்  நல்லது,என்றும் யோசனை கூறினார் . அவர் ஆலோசனை , கூகுள் மேப் எல்லாம் தேடி ,ஒரு வழியாய் க்லென்  வாவேர்லே (Glen Waverley ) என்ற இடத்தில, வீடு பார்க்கச் சொல்லி, இங்கு இருந்த மாப்பிள்ளை மண்டையை காய்ச்சினோம். மூன்று மாதம் முன்னால் தான், இங்கு வேலையில் சேர்ந்திருந்த,  வெங்கட் அலைந்து திரிந்து வீடு பிடித்தது, தனிக் கதை .

ஒரு சுப யோக, சுப தினமான நவம்பர் 26 - ல் நான் பேரன் பேத்தி மூவரும் இங்கு தரை இறங்கினோம் . அடுத்த நாளே பக்கத்தில் உள்ள பள்ளிகளுக்கு போன் பண்ணினோம். நவம்பர் 29 ம் தேதி காலை 9 மணிக்கு பிரென்ட்வூட் செகண்டரி காலேஜில்  ( Brentwood Secondary College ) ராஜனுக்கும், க்லேன் வவேர்லி பிரைமரி ஸ்கூலில் (Glen Waverley  Primary  School ) காயத்ரிக்கும் நேர்முகத் தேர்வு. வரும் பொழுது மறக்காமல் பள்ளிகூட சான்றிதழ்கள், பாஸ்போர்ட் மற்றும் குடியிருக்கும் இடத்திற்கான அத்தாட்சி கொண்டு வருமாறு வேண்டிக் கொண்டனர் . ஓமென்று ' தெனாலியிலே வர்ற கமலஹாசன் மாதிரி ' ,போனிலேயே தலையாட்டினோம். அவர்கள் பவ்யமே என்னை ரொம்ப பயமுறுத்திச்சு. ' அட்மிஷன் அலெர்ஜி ',  என்ற பெரிய நோய், என்னை இந்த வயதிலும் விட்டு விடவில்லை. அப்போ வயத்திலே கரைச்ச புளியாலே வந்த ' அல்சர் ', இப்போது வரையிலும் நோவுது ...சிரிக்காதிங்க .. அவுங்க.. அவங்க.. பட்டா தான் தெரியும்..இந்த அவதி .
இந்த இடத்திலே, இங்கே உள்ள பள்ளி நுழைவுக்கான விதி முறைகள் பற்றி தெரிஞ்சுகிறது,கொஞ்சம் உத்தமம். நம்ம ஊர் மாதிரியே அரசாங்கப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் கல்விப்  பணியில். இரண்டின் கற்பிக்கும் தரத்தில் இடைவெளி ஜாஸ்தி இல்லேன்னாலும், கறக்கிற இடைவெளியை நம்மூர் மாதிரி " மெயின்டைன்"  பண்றாங்க . ஒவ்வொரு அரசாங்க பள்ளிக்கும், மேப்பில் வட்டம் போட்டு, கொடுதிடறாங்க .அந்த வட்டத்துக்குள்ளே வசிக்கின்ற குழந்தைக்கு கட்டாயம் இடம் கொடுத்தே ஆகணும். 'ஆகட்டும் பார்க்கலாம்', அப்படின்னு சொன்னா,  சொன்னவர்க்கு ஆப்பு என்கிறது சட்டம். இரண்டாவது, மாணவரின் வயசை பார்த்து, அதற்க்கேற்ற வகுப்பில் சேர்க்கை .ரெண்டாம் கெட்டானாக இருந்தால்,    சாதக பாதகங்களைச் சொல்லி, பெற்றோருடன் கலந்து, உரிய வகுப்பில் சேர்க்கிறார்கள். ஐந்து வயது முதல் பதினாறு வயது வரைக் கட்டாயமாய் கல்வி கற்பிக்கப் படல் வேண்டும் .

29 ம் தேதி காலையில், குளிர் பல்லைக் கிட்டியதால்,  'எஸ்கிமோ' க்கள் மாதிரி, ஏகப்பட்ட கம்பளி ஆடை அணிஞ்சு கிட்டு நான், வெங்கட் , ராஜன் ,காயத்ரி நால்வரும் முதலிலே  பிரென்ட்வூட் செகண்டரி காலேஜ் ( Brentwood Secondary College ) போறோம். என்னடா 'ஸ்கூல்' ன்னு சொல்லிட்டு 'காலேஜ் ' ன்னு, கதையை மாத்துறேன்னு நினைக்கிறீங்களா?. இங்கே பள்ளிகளை ப்ரீ-பிரைமரி, பிரைமரி, செகண்டரி காலேஜ் , யுனிவெர்சிட்டி படிப்புன்னு பிரிச்சிருக்காங்க .

பிரைமரி ஒன்றில் இருந்து ஆறாம் வகுப்பு வரை, செகண்டரி காலேஜ் ஏழாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டு வரை. ராஜனுக்கு ஒரே சந்தோசம்.தலை கால் புரியலே .நேரா கல்லூரிக்குப் போகப்போறமின்னு. மகள் ஆஷா,அலுவலக வேலையாய் இன்னும் 'பெர்த்' நகரத்தில். மூவாயிரம் கிலோமீட்டர் அப்பாலே .

அலுவலக அறையில் குறிப்பிட்ட நேரத்திற்கு துணை முதல்வர் வந்தார். முதலில் குழந்தைகளை பார்த்து "ஹாய்" ன்னு சொல்லிட்டு எங்களோட கை குலுக்கினார். ரெகார்ட்ஸ் வாங்கிப் பார்த்தார். ராஜனை எட்டாவது கிரேடில்  போட்டுடலாம்ன்னு சொன்னார். ஏழு இன்னமும் முடிக்கலேன்னு இழுத்தோம். அது பிரச்னை இல்லை .தேவையானால் சிறப்பு ' கோச்சிங் ' ஏற்பாடு பண்ணி விடுவோம், என்றார். வீடு வாடகை ஒப்பந்த நகல் பார்த்தார். சுவற்றில் மாட்டியிருந்த, வட்டம் போட்ட, மேப்பை பார்த்து தனக்குத் தானே, தலையை ஆட்டிக்கொண்டார். தேவையான ரெகார்ட்ஸ் அங்கேயே ' செராக்ஸ் ' எடுத்துக் கொண்டார் .

ஆங்கிலம் தவிர, ஏழாம் வகுப்பில் இருந்து ஒரு வெளிநாட்டுப் பாஷை கத்துக்கணும். கட்டாயம் என்றார் .ஜப்பான், ஜெர்மன்  மொழி கத்து தரோம் . "எது எடுத்துக்கிறே", என்று ராஜனைக் கேட்டார்."ஜெர்மன்" ன்னு சொல்லிட்டான். உனக்கு ஒரு வருடம் விட்டுப் போன ஜெர்மன் மொழியை, சனிக் கிழமை விடுமுறை தினத்தில், ஸ்பெஷல் கிளாஸ் வைச்சு சொல்லி கொடுத்திடறோம், என்று சொன்னார். அப்புறம் இங்கே ஆங்கிலம், விஞ்ஞானம், கணக்கு கட்டாய பாடம் .அது தவிர பதினான்கு விருப்பப் பாடத்தில், பிடித்த ஏழு எடுத்துக் கொள்ளலாம் என்றார் .ஆனால் ஒரு நிபந்தை, அப்படின்னு சொன்னார். முதலில் விண்ணப்பிபவர்க்கு முதல் மரியாதை . ஆதலால்   சீக்கிரம் இந்த விண்ணப்ப படிவங்களை பூர்த்தி பண்ணி கொண்டாங்கன்னார். 

அப்புறம் "யுனிபார்ம்",  புதுசாவும்  வாங்கிக்கலாம். செகண்ட் ஹான்டிலும் கிடைக்குதுன்னு. இது பத்தின விபரம் எல்லாம் எழுதிய தாளைக் கொடுத்து விட்டு, ' பள்ளிப் புத்தகங்களை, பள்ளி மூலமாகவோ, புத்தகக் கடையிலோ அல்லது ஆன்லைன் மூலமோ வாங்கிக்கலாம்', ன்னு சொல்லி அதுக்கான விபரம் அடங்கிய லிஸ்டும் தந்தார். 

இந்த ஆண்டுக்கான பள்ளிக் கட்டணம் ' ஐநூறு டாலர் ',எனவும் ரொக்கமாவோ, கிரெடிட்கார்ட் மூலமாவோ கட்டலாம். மொத்தமா கட்டமுடியலை என்றால், தவணையில் கட்டலாம். அது பற்றி அலுவலகத்தில் கேட்டுகுங்கோ .இது அரசாங்கப் பள்ளி இதை முன்னேற்றுவதற்கு, உங்களால முடிஞ்ச ஏதாவ்து ' டொனேசன் ' குடுங்க. ரசீது கொடுத்திடுவோம். உங்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று ..மானஸ்தன் கடன் கேட்கிற லெவெலில் இழுத்தார்..கண்ணில் பனித்த நீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டேன். இப்படியெல்லாம் ஸ்கூல் நடத்துவாங்களா ?.  எனக்கு தலை எல்லாம் கிர்ருன்னு ஆயிப் போச்சு ..அப்புறம் விசிட்டிங் கார்டு கொடுத்து விட்டு, அட்மிஷன் ஆயிடுச்சு.பணம் கட்டுங்கோ. ஏதேனும் சந்தேகம் இருந்த போன் பண்ணுங்க என்றார் .ராஜனைப் பார்த்து welcome  சொல்லி பிப்ரவரி மூன்றாம் தேதி காலை எட்டு  மணிக்கு ஸ்கூல் வந்திடு .'பை, பை', இன்னு சொல்லிட்டார் .எல்லாம் பதினைந்து நிமிடங்களில் .என்னோட வியப்பும், பிரமிப்பும் அடங்கலே.கொஞ்சமா கிள்ளி பாத்துகிறேன்..  ஆயினும் மலையைக் கெல்லி எலி புடிச்சா மாதிரி.. ஒரு பீலிங் ..பழக்க தோஷம் தான்..அவ்வளவு சீக்கிரத்தில் போகுங்களா ?.

அடுத்தாப்பிலே ,  பக்கத்திலே இருநூறு ௦௦மீட்டர் தள்ளி உள்ள காயத்ரி பள்ளிக்கூடம் போனோம். அக்மார்க் முத்திரை மாதிரி..அதே கேள்வி ..அதே பதில் என்கிற கதையாய்.ஒரே ஒரு வித்தியாசம் இங்கே ஒரு அம்மா துணை முதல்வர். அவுங்க ,இன்னும் ஒரு அஞ்சு நிமிடம் குறைவா, பத்தே  நிமிடத்தில். அட்மிஷன் ஓவர். பாரங்களை அள்ளிக் கொண்டோம். நில்லுங்க !.ஒரு விஷயம். டிசம்பர் 19  தேதி புது மாணவர்களை, சேரப் போகிற வகுப்பு பிள்ளை களோட அறிமுகம் செய்து வைப்போம். காயத்ரிக்கு சாப்பாடு ,ஸ்நாக்ஸ் ,தண்ணீர் கொடுத்து, தொப்பி, ஷூ போட்டு காலை ஒன்பது மணிக்கு கொண்டாந்து விடுங்க. மாலை மூன்று மணிக்கு வந்து கூட்டிட்டு போங்கன்னு சொன்னங்க .மொத்தம் ரெண்டு பிள்ளைக்கும் அட்மிஷன் 25 நிமிடம் தான் வீட்டில் இருந்து நடந்து போய் வர ஒரு மணி நேரம் ..நேரத்தை மதிக்க கத்துக்கணும்னு  நெனைச்சி கிட்டேன்...

ஆச்சா !.. நடந்து வீட்டிற்க்கு திரும்புகிறோம்.என் மனசு, அதோட கால இயந்திரத்தை  முடுக்கி 1988 ம் வருஷத்துக்கு கொண்டு போய்டுச்சு. என் மூத்த மகள் ஆஷா, அதான் இவாளோட அம்மா, கும்பகோணம் ஏ.ஆர் .ஆர். மெட்ரிகுலஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு,முடித்த சமயம்.

எனக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள ,கோலார் தங்கச் சுரங்கம் இருக்கும் இடத்தில உள்ள, தொலைக் காட்சி அஞ்சல் நிலையத்திற்கு பொறுப்பாளனாய் பணி மாற்றம். குடும்பத்தை அழைத்துச் செல்லுதல் உசிதம் இல்லை .கட்டாயம் கன்னடம் படித்தாக வேண்டும். பாடத் திட்டங்கள் மாறும் .ஆதலால் வழக்கம் போல்,எந்த பள்ளியில்,எவ்வளவு ரிசல்ட், என்ன ?. என்று அலசி ஆராய்ந்து வைத்திருந்தேன்.என்னுடைய கடந்த கால அனுபவம். நான் சரியான பள்ளிகளில்,முறையாய்  படிக்கலேன்னு, ஒரு தீராத வருத்தம். பிள்ளைகள் விஷயத்தில் இவை நிகழக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன் .மேலும் Readers Digest புத்தகத்தில் ' டிராமா இன் ரியல் லைப் ', ன்னு கடைசி பக்கங்களில் சில உண்மை நிகழ்வுகளை பிரசுரிப்பர் .அதில் ஜமைகாவில் இருந்து வேலை தேடி  அமெரிக்கா வந்த ஆசிரியர் ஒருவர் "மோசமான பள்ளியை, எப்படி முன்னுக்கு கொண்டு வந்தார்" என்று ஒரு கட்டுரை படித்து இருந்தேன் .மேலும் அந்த வருடம் என் நண்பரின் மகள் மாநில அளவில் ரேங்க் வாங்கியது.. எல்லாம் நெய்வேலி டவுன்ஷிப்பில்  உள்ள ஜவஹர் பள்ளியை என் மனதுக்கு சுட்டிக் காட்டின . 

உடனே நெய்வேலி சென்று என் நண்பரைக் கூட்டிக் கொண்டு, ரொம்பவும்  காத்திருந்து,  முதல்வர் திரு .சுந்தரம் அய்யா அவர்களைச் சந்தித்தேன். தமிழ் ஆசிரியர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னமும் வரவில்லை ஆயினும் பிளஸ் ஒன்னுக்கான வகுப்பை தொடங்கி விட்டார். "பணம் கட்டுங்க, உடனே வகுப்புக்கு அனுப்புங்க", ஆனால் ஒன்னு உங்கள் மகள் எண்பது விழுக்காட்டுக்கு மேல் எடுக்கவில்லை என்றால் கண்டிப்பாய் அட்மிஷன் கான்செல்.. என்றார். குடும்பத்தை என் பெரியம்மா துணையுடன் ,அங்கு மாற்றினேன். அந்த பள்ளியில் என் குழந்தைகள் படித்தது , ஒரு பெரிய திருப்பு முனை.

மழை விட்டும் தூவானம் விடலைங்குரா மாதிரி 1997 ம் வருடம் ,மீண்டும் பணிமாற்றம் .இரண்டாவது மகள் சீதாவையும், கடைசி மகன் அசோக்கும் பாண்டிச்சேரி பள்ளியில் சேர்க்க வேண்டும் . வழக்கம் போல் என் தெரிவு நூறு வருடங்களுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கிற "பெடிட்  செமினார்" பள்ளி அல்லது அதில் பணி செய்து பிரிந்து வந்த திரு.ரெகிஸ்  அவர்கள் ஆரம்பித்திருந்த "பாட்ரிக்", பள்ளிக்கூடம் .முன்னது ஆண்கள் பள்ளி. பின்னது இரு பாலரும் படிக்கும் பள்ளி .பாட்ரிக் பள்ளியில், குறிப்பிட்ட நாளில் தேர்வு எழுதச் சொன்னார்கள். இருவருக்கும் இடம்  கிடைத்தது .ஆனால் என் மகனுக்கு பெடிட் செமினாரில் சேரத் தான் விருப்பம் என்றான் .இன்னும் நாங்கள், நெய்வேலியில் தான், குடியிருப்பு .நான் உடன் என் மகன் வாங்கிய இருபதுக்கு மேற்பட்ட சான்றிதழ்களையும் எடுத்துக் கொண்டு ஆறாவது வகுப்பில் இடம் வேண்டி பேதித் செமினார் பாதர் அவர்களைச் சந்தித்தேன். நெய்வேலி 'ஜவஹர் பள்ளி' யில் மாணவர்களை உற்சாகப் படுத்த ஒவ்வொரு தேர்விலும் முதல் இரெண்டாம் ரேங்க் எடுத்த பிள்ளைகளுக்கு பாட்ஜ்  குத்தி சான்றிதழும் கொடுப்பார் .அதைத் தவிர நிறைய பேச்சு ,ஒப்புவித்தல் ,விளையாட்டு போட்டிகள் .பலவற்றில் கலந்து சான்றிதழ் பெற்றவன் .

பாண்டிச்சேரி தொலைகாட்சி நிலையத்திற்கு  பணி புரிய வந்திருப்பதைக் கூறி எல்லா சான்றிதழும் காண்பித்தேன். மகனையும் கூட அழைத்துச் சென்றேன் .ம்ம் நல்ல மதிப்பெண்கள் தான். ஆனால் இடமில்லை ..பார்க்கலாம் நாளைக்கு வாங்க என்றார். எந்த சிபாரிசையும் ஏற்காத கண்டிப்புக்கு பேர் போன முதல்வர், அவர். மீண்டும் மறுநாள் அதிகாலை எழுந்து நெய்வேலியில் பஸ் பிடித்து, பாண்டிச்சேரி  வந்து, நடந்து முதல்வர் அறைக்கு முன், பாம்பு போல் நீண்ட  வரிசையில், ஜோதியில் ஐக்கியமாவேன். பிரேயர்  முடிந்து முதல்வர் ஒவ்வொருவராய் கூப்பிடுகிறார் .எனக்கு முன்னால்   பெரிய, பெரிய அதிகாரிகள் ..உள்ளே போய் வெளியே ..சவக் களை  தட்டிய முகத்துடன் வெளியே வருகின்றனர் ..என் முறை இப்போது ..லேசாகப் பார்த்தார் ..தொலைக் காட்சி இல்லே.. நீங்க.. என்றார் ..ஆம். என்றேன் ..போய்  வாங்க ..நாளைக்குப் பார்க்கலாம் என்றார். போர்க் களத்திலே ராவணனைப் பார்த்து ஸ்ரீராமபிரான் "இன்று போய் நாளை வா ", என்று சொன்னா மாதிரி. இன்னும் நான்கு ,ஐந்து நாள் இதுவே தொடர் கதை ஆயிற்று ..நின்று கொண்டிருந்த கூட்டம்  சன்னமாய், 'கழுதை தேய்ந்து கட்டெறும்பு ', ஆனது போல் குறைந்து கொண்டே வந்தது. ரொம்பவே யோசித்தேன்.. எதற்கும், யாரையும் இறைஞ்சியதில்லை ..நல்லாவே படிக்கிறான் என் பையன் ..இவன் கரை சேர்ந்து விடுவான். இன்றே கடைசி என்ற முடிவுடன் கஜினி முஹம்மது மாதிரி கடைசியாய் போய் நின்றேன் .என்னைப் பார்த்தார் ..போய் "பணம் கட்டுங்க" என்றார்.அந்தத் அலைச்சல், தவிப்பு, என் மகனின் உழைப்பு, எல்லாம் வீண் போகலைங்க .

மீண்டும் பகிர்வேன்..அன்புடனே .

நன்றி : கூகுள் படங்கள் .         

17 கருத்துகள்:

 1. ப‌ய‌ண‌ அனுபவ‌ங்க‌ளை அருமையாக‌ ப‌கிர்ந்துள்ளீர்க‌ள். தொட‌ருங்க‌ள்....

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றிங்க ரவி.உங்களது தஞ்சைத் தரணி பற்றிய பகிர்வுகள் அருமை..அன்புடன்

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க திரு.சென்னை பித்தன்..

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. We all pay the school bill (It is small anyhow) here in Sydney since we are able to pay; But no school can discriminate any student if his/her parent did not pay. In other words, you can skip paying with no consequences. This is for government schools only.

  Ironically we have roughly the same system in Sri Lanka. All government schools are free. And almost all of the leading schools are goverment schools. And almost all the doctors/engineers/lawyers/other professionals/or almost all people studied in Govt schools in Sri Lanka.

  I believe, in India most people goto Private schools.

  பதிலளிநீக்கு
 6. Thanks for the feedback and I really appreciate.It is also quite heartening to note that the government/school cares,even if fees are not paid due to any reason.The children are not victimized for no fault of them.I laud the efforts in educating at SriLanka and for the quality maintained,as you say.Thanks for sharing your thoughts..best wishes

  பதிலளிநீக்கு
 7. பயணங்கள் மனதை விரிவடையச் செய்யும். புது இடங்கள் புது அனுபவங்கள் எல்லாமே வாழ்க்கையில் நிறையக் கற்றுக் கொடுக்கும். கல்வி பற்றிய விவரங்கள் (அயல் நாட்டு )நம் கல்வி முறையில் இன்னும் எவ்வளவொ முன்னேறவேண்டும் என்று தெரியப் படுத்துகிறது.இப்போது எங்கு இருக்கிறீர்கள். ?வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. திரு G.M.B அய்யா அவர்களுக்கு..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.இன்னமும் மெல்பரனில் தான் உள்ளேன்.அடுத்த வாரம் ஊர் திரும்ப உத்தேசம்..அன்புடன்

  பதிலளிநீக்கு
 9. ///நம்ம ஊர் மாதிரியே அரசாங்கப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் கல்விப் பணியில். இரண்டின் கற்பிக்கும் தரத்தில் இடைவெளி ஜாஸ்தி இல்லேன்னாலும், கறக்கிற இடைவெளியை நம்மூர் மாதிரி " மெயின்டைன்" பண்றாங்க///அலசல் அருமை ....அப்புறம் உங்க எழுத்து பிரவாகம் ரொம்ப அருமை..எளிய நடை

  பதிலளிநீக்கு
 10. கோவை நேரம்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 11. kuzhanthaigalai nalla nilaikku kondu vara vendum atharkku padippum palliyum migavum nanraga amaiya vendum enkinra ungal karuthukku madalil naan thalai vanangukiren mama. vazga valarga ungal sevai.

  பதிலளிநீக்கு
 12. ஊக்கமளிக்கும் உங்கள் கருத்துக்கு.மிக்க நன்றிங்க மாப்பிள்ளை.

  பதிலளிநீக்கு
 13. ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் சிரத்தை எடுத்து அழகாப் பதிவு செய்திருக்கீங்க. ஆஸ்திரேலியாவில் பேரப்பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்த நிகழ்வோடு தங்கள் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்த நிகழ்வுகளையும் ஒப்பிட்டு எழுதியது இன்னும் சிறப்பு. பாராட்டுகள். தங்கள் தளத்துக்கு தொடர்ந்து வருவேன்.

  பதிலளிநீக்கு
 14. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.சகோதரி கீதமஞ்சரி.ஆஸ்திரேலியா பற்றிய தங்கள் பதிவுகள் அருமையும் தெளிவும்.மீதிப் பகிர்வுகளையும் படிக்கிறேன்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. எனது பேரன், பேத்தி ஆரம்ப வகுப்புகளில் படிப்பதால், உங்கள் அனுபவம் எனக்கு கிடைக்க காலம் இருக்கிறது.எனது மகன், மகள் இருவரும் படிக்கும் காலத்தில் கொழும்பில் உயர்பள்ளிகளின் படிகளில் ஏறி, இறங்கிய அனுபவங்கள் உண்டு. உங்களைப்போல சுவையாக எழுதுவேனோ தெரியாது

  பதிலளிநீக்கு
 16. ஒத்த உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கும்,வருகைக்கும் மிக்க நன்றிங்க திரு.பாலச்சந்திரன்..

  பதிலளிநீக்கு