வெள்ளி, 31 டிசம்பர், 2010

எதிர் பார்ப்புக்கள் ...

எதிர் பார்ப்புக்கள் ...
 
பாத்தியில்
புழுக்களை 
கொத்தித் தின்ன 
காத்திருக்கும் 
கொக்குகள் சாட்சியாய் ...
 
விவசாயி 
விதைக்கிறான் ..
விளைவிக்க ..
விளையுமா ?.
விளைந்தாலும்
விலை போகுமா?. 

சனி, 18 டிசம்பர், 2010

வாழ்க்கைக் கோலங்கள் புள்ளி .4.


தன்னார்வமும்..புதுப் புது உத்திகளும்

ஆசிரியர் திரு.கல்யாணராமன்,நோய் வாய்ப்பட்டு சிகிச்சைக்காக, நகரத்தில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதை கேள்வியுற்று வசந்தனும், முகுந்தனும் நலம் விசாரிக்க சென்றனர்.

அப்போது வசந்தன் ஆசிரியரிடம், தான் தயார் நிலையில் உள்ள கான்க்ரீட் கலவையையும்( Ready  Mix  Concrete ) , முன் கூட்டியே தயாரிக்கப் பட்ட கட்டுமான தளவாடங்களையும் (Pre Fabricated Structures )  தம் தொழிலில் பயன் படுத்துவதாய் கூறினார்.

முகுந்தனும் வரை படங்கள் மற்ற வேலைகளுக்கு,ஆட்டோ டெஸ்க்( Auto Desk Civil 3D) போன்ற கணினி மென்பொருளை உபயோகிப்பதாய் சொன்னார்.

ஆசிரியர் நாளுக்கு நாள் முன்னேறும், தம் முன்னாள் மாணாக்கர் பற்றி மிகவும் மனமகிழ்ந்தார். " தன்னார்வமும், அறிவுத் தேடலுக்கான உந்துதலும் இருந்தால், எவரும், எப்பணியிலும் மேன்மையுரலாம்", எனக் கூறினார்.





வழக்கமான வழி முறைகளில இருந்து மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து மாற்றங்கள் (Innovation ) செய்தால், உற்பத்தி சிலவை குறைத்து, கால விரயம் தவிர்த்து,  பொருட்களின் பயன்பாட்டை மேம்படுத்தலாம். உற்பத்தி, நுகர்தல் இவற்றின் இடைவெளியை சுருக்கலாம்,

முடிவெடுக்கும் திறன்(Decision Making ), மாற்றான யோசனை (Out of Box Thinking ), விதி முறைகளில் விலகிய நடைமுறை ( Out of Norms ), இவற்றை கைக் கொள்வதால் பயனுள்ள மாற்றங்கள் பல,சாத்தியம். மனிதஆற்றல்,யந்திரங்கள், மூலப் பொருட்கள் ( Man,Machine and Material ) இவற்றை மேற்கூறிய கோட்பாட்டில் ஆய்ந்து, பின் மாற்றங்கள் செய்தல் பெரும் பயன் அளிக்கும், என்றார்.

மேலும் உதாரணத்திற்காக,

உழவுத் தொழிலில் பாய் நாற்றாங்கால் பயன்பாடு பற்றியும், அதனால் மிச்சமாகும், நிலம் மற்றும்  நீர்த்தேவை...

சுய  உதவிக் குழுக்களின் (Self  Help Group ) நிதி உதவி மூலமாக ( Micro Financing ), மகளிர் அடையும் மேம்பாடு கிட்டத் தட்ட98 % விழுக்காடு வாங்கிய கடன் திரும்பச் செலுத்தப்படல்.

டெல் கணினி ( Dell ) , நைக் காலணி ( Nike ) போன்ற  உற்பத்தியாளர்கள் , நுகர்வோர் தேவைக்கு ஏற்ப வடிவு அமைத்துக் கொடுக்கும் திறன்.

ஐ-கூகுள்( i-Google ) , இணைய தளத்தில்( இன்டர்நெட் ) தேட நினைத்ததை எளிதாக்கிக் கொடுக்கும் வசதி,

     என எல்லாமே "வேலையை எளிதாக்கவேண்டும்", என்ற மாற்றுச் சிந்தனையால் தான், என்றார். இந்த வரிசையில் தென் கொரியா முதலிலும், அமெரிக்கா, ஜப்பான், ஸ்வீடன் அடுத்தடுத்து வருவதாகவும்,  சீனா பதின்மூன்றாம் இடத்திலும், இந்தியா பதினைந்தாம் இடத்திலும் இருப்பதாய், ஆதங்கப்பட்டார்.

நோயுற்ற மனைவி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனாள், என்பதால் பல  வருடங்கள், தனியனாய் 120 மீ. நீளம் 10 மீ.அகலம் மலையைக் குடைந்து வழியை ஏற்படுத்தியபீகாரின் தாஸ்ரத் முன்ஷி( Das Rath Munshi )

தன்னுடைய டிரக்கை வீட்டிற்க்கு அருகாமையில் நிறுத்த இடம் இல்லை என்று, 14வருடம் சுத்தியலும் உளியும் கொண்டு 10 மீ. நீளம் 4 மீ. அகலம் மலையில் சுரங்கப் பாதை அமைத்து 7 கி.மீ சுற்றி வந்து விவசாயம் செய்த மக்களுக்கு குறுக்கு வழியை ஏற்படுத்திய, பீகாரின் ராமச்சந்திர தாஸ். 

எரிகின்ற நெருப்பின் உள்ளே புகுந்து எண்ணைக் கிணறுகளின் தீயை அணைக்கும் உபாயம் கண்ட பால் நீல் ரெட் அடைர் ( Paul Neal Red Adair )

என, எல்லோருமே மாற்று வழிகளைக் கண்டு பிடித்தோர் ( Innovators ) தாம். வாழ்க்கை, தொழில்கூடம் எல்லாமே, ஒரு பரிசோதனைச் சாலை தானுங்க!

சின்னச்,சின்னதா சோதனை பண்ணிப் பார்த்து வெற்றி அடையலாங்க!

"அடிமேல்,அடி எடுத்து வச்சா  சீக்கிரமே சிகரத்தை எட்டிடலாம்", என்றார்.ஆசிரியப் பெருமகனார்.

நன்றி : கூகுள் படங்கள்

வெள்ளி, 17 டிசம்பர், 2010

வாழ்க்கைக் கோலங்கள் ..புள்ளி .3.

வாழ்க்கைக் கோலங்கள் ..புள்ளி .3.


உழைப்பின் உயர்வில் ...பன்முக ஆற்றல் .. 

        இந்தக் கதையின் கதா நாயகர்கள் வசந்தன் ஒப்பந்தக்காரர் ( Contractor ) ஆகவும், முகுந்தன் ஒரு செயற் பொறியாளராகவும் ( Executive Engineer ) தத்தம் துறையில் வளர்ச்சி அடைந்தனர். திருமணமும் ஆகி "நாம் இருவர், நமக்கிருவர், என்று அவர்களின் காலச் சக்கரம்சுழன்றது.

கோடைத் திருவிழாவிற்கு, மனைவி க்களுடன் தாம் பிறந்த ஊருக்கு வந்திருந்தனர்.வழக்கம் போல்,ஆசிரியர் திரு.கல்யாணராமன் அவர்களைச் சந்தித்தனர். வயது முதிர்வால் ஆசிரியர், உடலளவில் மிகவும் தளர்ந்து போய் இருந்தார். இருவரின் வளர்ச்சி பற்றியும் கேட்டு பெருமிதம் அடைந்தார். மேலும் சில வாழ்வியலுக்கு, தேவையான சில உத்திகளைக் கூறினார் .




அவரவர் தம் தொழில் திறமை தவிர, அவர்கள் பணியை மேம்படுத்தக் கூடிய ஆற்றலை வளர்த்துக் கொள்ளவோ அல்லது இத்தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் திறமையுள்ள பணியாளர்களை (Multi-Tasking) தேர்வு செய்யுமாறு, யோசனை சொன்னார். வசந்தனுக்கு ஒப்பந்தம், வரவு சிலவு கணக்கு கடிதப் பரிமாற்றம், அரசாங்க அலுவல் தொடர்பு,வங்கிப் பணிகளில் ஏற்படும் சிக்கல்களைச் சுட்டிக் காட்டி,சரியான தேர்வு மூலம் தம் குறைகளை ஈடுகட்டலாம் என்றார்.

முகுந்தனின் வேலைப் பளுவை சுட்டிக் காட்டி பொறுப்புகளை பகிர்ந்தளித்தல் ( Decentralization ) புதிதாய் தொழிலில் நவீன உத்திகளைப் படித்தோர், உதவிகள் பெற்று சிறப்பாய் பணிபுரிய யோசனை கூறினார். "பக்க வாத்தியங்கள் சிறப்பாய் இருந்தால் ,கச்சேரி மேலும் களை கட்டும்",என்றார்.

வசந்தன், முகுந்தன் ஆகியோருக்கு "அஷ்டாவதானி, தசாவதானி",என்ற பன்முக ஆற்றல் கொண்டோர் பற்றியும் விளக்கமாய் எடுத்துரைத்தார். இவையெல்லாம் நிறைய பேருக்குத் தெரியுமென்றாலும்,"ஆசானாகிய தான், நினைவு படுத்தல் கடமை", என்றார், மென்மையாக.

தாள் பணிந்து, ஆசிபெற்று, வணக்கம் கூறி விடை பெற்றனர், மாணாக்கர் இருவரும்.

வியாழன், 16 டிசம்பர், 2010

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி .....

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி ..... 
 
கவலையின் ரேகைகள், 
கண்களில் தளும்ப, 
வாராத தலை,ரோமம் 
வழிக்காத முகம்.
 
பிரசவ அறையில் 
பிரவேசம் இல்லை.
விடிய விடியக் காவல், 
வாசல் நடையில்.
செவ்வரி விழிகள்,
சிந்தனைச் சுழல்கள்.
 
வரும் உயிர், 
தரும் உயிர்,
இரு உயிர் பற்றி, 
இனமறியா பயம்.
அழுகுரல் கேட்க, 
அங்கம் பதைக்கும்.
 
தாதியர் கிண்டலில் 
தந்தை முகம் நாணும்.
மகவு பிறக்க, 
மகன் இவன்,
தந்தையாய், ஆன நல்
தருணம், இன்று.
 
நூறாம் பதிவில்,
நூறாண்டு மேலும்
வாழ, ஈன்றோரை 
வாழ்த்தி, சீர் மிகு கவிதை பாடி,
நன்றிக் கடனை,
நா நயம் கூட்டி
 
நானிலம் போற்ற,
நவின்றாய். நீ வாழி!.
 
( நண்பர் தினேஷ்குமார் அவர்களின் நூறாம் பதிவை ,வாழ்த்தி சமர்பிப்பது )             
       

திங்கள், 13 டிசம்பர், 2010

வாழ்கைக் கோலங்கள் புள்ளி .2.

வாழ்கைக் கோலங்கள் புள்ளி .2.

முதலாளியை முழுச் சோம்பேறியாக்கு!.




முதலாளி என்பது நாம் எந்த பணியில் இருந்தாலும் நம்ம வாழ்க்கையில், மற்றொரு முக்கியமான புள்ளியாகும். பதவி உயர்விலிருந்து, பதவி விலகல் உள்பட, நம் வாழ்க்கையை திசை திருப்பக் கூடிய ,பெரும் வழிகாட்டியுமாய் அமையக் கூடியவர். "மனைவி அமைவதெல்லாம்...அப்படின்னா மாதிரி கூட சொல்லாங்க.....

வசந்தன் மேஸ்த்ரியாகவும்,முகுந்தன் பொறியியல் பட்டப் படிப்பை தத்தம் பொருளாதாரத்தை பெருக்கிக் கொண்டனர். வழக்கம் போல், இன்னுமொரு விடுமுறையில், இருவரும் ஆசிரியர் திரு.கல்யாணராமனைப் பார்க்கச் சென்றனர்.

வேலையில் பல சமயம், இருவரும் முதலாளி தொல்லைகள் தருவதைக் கூறினர். எல்லாவற்றையும் கவனமாய்க் கேட்ட ஆசிரியர் ஒரு சின்னக் கதையை சொன்னார்.

ஹெர்குலஸ் என்பவர், கிரேக்க கதைகளில் வரும்,நம்ம ஊர் பீமன் மாதிரி. மிகுந்த பலசாலி. இவர் ஒரு முறை உலகத்தின் கோடிக்கு யாத்திரை செல்கிறார்.அப்போது அட்லஸ் என்பவர் தான், உலகத்தை தன் தோளில் சுமந்து கொண்டிருந்ததாய் புராணம். ரொம்ப நாளா தூக்கி வச்சிருந்ததாலே,அவருக்கு தோள் நோவு கண்டுடுச்சு. இந்த சுமையை தூக்க கூடிய ஆள் யாரும், அந்த நாளிலே இல்லை. ஹெர்குலசை பார்த்தவுடன், அட்லஸ் ரொம்ப சந்தோஷப் பட்டார்.கிட்ட வந்தவுடன் "அப்பா என் சுமையை கொஞ்சம் தாங்கிக்கோ", இயற்கை உபாதையை முடிச்சிட்டு வர்றேன்னார். ஹெர்குலஸ் உலகத்தை தூக்கிக் கொள்ள அட்லஸ் "ஜூட்", விட்டார். அட்லாசின் நோக்கம் விளங்கிக் கொண்ட ஹெர்குலஸ், "அண்ணே, ஒரு நிமிடம், "இங்கே வாங்க" அப்படின்னு கூப்பிட்டார். "என்ன ?" என்று, எட்டியே நின்று கேட்ட அட்லாசிடம், "முண்டாசை சரியாகக் கட்டிகிட்டேன்னா, எவ்வளவு நேரம் வேணுமின்னாலும் என்னாலே தூக்க முடியும், நீங்க பொறுமையா திரும்பி வரலாம்", இன்னு சொல்ல, அட்லசும் உடனே, உலகத்தை மீண்டும் தோளில் சுமக்க. ஹெர்குலஸ் "எஸ்கேப்", ஆயிட்டார்.

எதுக்கு இந்த கதையின்னா "உலகத்தில் யாரும் சுமையை தூக்க விரும்பறதில்லே. எப்போடா இறக்கி வைப்போம்", என்பது தான் யதார்த்தம். ஒரு நிறுவனத்தின் தலைவருக்கோ, முதலாளிக்கோ வேலைப் பளுக்கள், நிறைய பொறுப்புகள். இந்த பொறுப்புகளை எடுத்துக் கொள்ள, நாம் தயாரானால், குறிப்பு அறிந்து முன் கூட்டியே செயல்பட்டால்,உங்கள் முன்னேற்றத்தின் எல்லாப் படிகளிலும் உறு துணையாய் இருப்பார்", என அறிவுறுத்தினார். பளுவை பகிர்ந்தால்,அவர் மற்ற வேலைகளை முடிக்க, அவருக்கு அவகாசம் கிடைக்கும்.  

"நாணயம், நம்பிக்கை இரண்டையும் பயன் படுத்தி இன்னமும் முன்னேறலாம்", எனக் கூறி விடை கொடுத்தார்.இதே முறைகளை பின் பற்றி, உங்களுக்கு அடுத்த கட்ட தலைவர் களை", நீங்கள் உருவாக்கலாம் எனவும் பகிர்ந்தார்.

வசந்தனும், முகுந்தனும் அவர்கள் வாழ்கையில் கற்ற மற்றுமொரு முக்கியமான பாடம், இது .

நன்றி :கூகுள் படங்கள் . 

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

பயந்தேன் ..தெளிந்தேன்.

பயந்தேன் ..தெளிந்தேன் ..













நாய்கள் குரைக்க,
நரிகள் ஊளையிட ,
நடுச் சாமத்தில், 
உடுக்கையடித்து, 
நடு நடுங்க வைக்கும், 
குடு குடுப்பைக்காரன். 


இரவில் மரமும், நிழலும் 
பெரும் பேயாய், பூதமாய் 
காற்றின் அசைவில், 
கேட்ட கதை நிசமின்னு 
கலக்கிடும், இன்னமும் என்னை.


எதிரிகளை பிரும்மாண்டமாய்,
எப்போதும் கற்பனை செய்து, 
எண்ணங்கள் அச்சத்தில், 
என்னை முடக்கியபோது , 
செயலிழக்கச் 
செய்த பயம்.


புரிதல் இல்லை,ஆதலின்
தெளிதல்   இல்லை.
புரிந்துணரும், முயற்சிக்கு 
வழி தெரியா தென்னை
வாட்டுவித்த  பெரும் பயம்.


பயந்தேன். பயம் தெளிய 
உபாயம் தெளிந்தேன் .
பயம் எனைக்கண்டு, பயப்பட 
நிழலெல்லாம்,
நிசமில்லை என, 
நான் தெளிந்தேன்.


இமை மூடின்,
இருட்டாகும்,வெளிச்சம்.
இழப்பதற்கு,
 உயிர் தவிர 
இனி ஏதும் இல்லை,
என்றதும் 
இற்றுப்   போனது, பயம்
அற்றுப் போனது, இப்போது.


            

வீரமா ?......விவேகமா ?.

வீரமா ?......விவேகமா ?.  

நேர் கொண்ட,
நெஞ்சம் வேண்டும்.
நீதிக்கு மட்டும்,
அஞ்சல் வேண்டும். 
பதைக்கும் நெஞ்சு,
பாதகங்கள் பல  கண்டு.

ஆயினும், அயலூர் 
அந்நிய மண்ணில், 
அக்கரைச் சீமையில், 
அண்டிப் பிழைக்கையில், 
ஆகாதையா நம் வீரம்!.
அனுசரித்தல்  நலம்.

அடுப்பெரிதல் நின்று போகும். 
அன்னைக்கு சிகிச்சை, 
ஆபத்தில் முடிந்து போகும்.
அடுத்தடுத்த சிலவுகளுக்கு, 
எடுத்தெடுத்து பணம் அனுப்ப, 
எதிர் பார்ப்பீர், யாரை நீயும் ?.

விவேகமாய் காலம் கழித்து, 
வெற்றியுடன் திரும்பி வாரும்.
வழிமேல் விழி வைத்து 
வஞ்சியவள் காத்திருக்கா!.   

சனி, 11 டிசம்பர், 2010

வாழ்க்கை கோலங்கள் புள்ளி .1.

பொருளாதார சுய மதிப்பீடு


கோலங்கள் சில,பல புள்ளிகளால் இணைக்கப் பட்டு சிறியதாகவோ, பெரிதாகவோ அமைகிறது.அவரவர்,கற்பனை செய்ததை,நிஜ வடிவத்தில் கொணர்ந்து இணைக்கும் தன்மையால் திறமையான, அழகான கோலங்கள் உருவாகின்றன.

செவ்வாய், 7 டிசம்பர், 2010

நன்றி நவில்வோம் ..உழவுக்கும் தொழிலுக்கும் ....

நன்றி  நவில்வோம் ..உழவுக்கும் தொழிலுக்கும் ....

எறிந்த குப்பை,
அழுகிய உணவு,
எச்சம் சொச்சம்,
எல்லாம் பொறுக்கி.
கொட்டிடும் அழுக்கை, 
கூட்டியள்ளும்,
குப்பைக்காரர். 
குப்புசாமி.

பெய்யும் மழையில், 
நாய்கள் ஊளை, 
விடியற்க் காலை.
படிகள் ஏறி, 
குடிக்க, படிக்க 
பாலும், பேப்பரும் 
பாங்காய்ப் போடும், 
பள்ளிச் சிறுவன். 
பழனிச்சாமி.

இருந்தால்
ஏற்றம், 
உதிர்ந்தால் 
மாற்றம்.
நாம், முடி  துறக்க 
நம், முடி திருத்தும் 
மூலைக் கடை 
முனுசாமி.

நெடு மழை, 
நீள் வெயில், 
கடும் புயல். 
கம்பும், நெல்லும் 
கண்ணீரில் மூழ்க, 
வயலில் நித்தம், 
வயிற்றில் நெருப்புடன்
வேளாண்மை புரியும்,
வேலுச்சாமி. 

இச்சாமிகள் இன்றி,
சத்தியமாய் தானே!  
சாத்தியமில்லை,
நம் சுக வாழ்வு .
நன்றிகள் நவில, 
நேரமிலை என   
நினை யாமல்,
நின்று,  நாம்
சின்னப் புன்னகை,
சிறிதாய் கைகுலுக்கல் 
சிந்தும் அன்புடன், 
சிரிப்புடன், சில சொல்.

உள்ளத்தின் 
உயரம் காட்டி
உழைப்பின் மேன்மையை 
உணர்வால் போற்றுவோம் !
உயரும் உலகம்.
துயரம் குறையும்.
உலகில் கொஞ்சம்.   
            


திங்கள், 6 டிசம்பர், 2010

அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம் ..(4)

அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம்..(4)

"தோளுக்கு மேல் உயர்ந்தால் தோழன்"

1962-ல்பள்ளி இறுதிப் படிப்பு முடித்து, குடந்தை கலைக் கல்லூரியில், புகுமுக வகுப்பில் சேர்ந்தேன். கிராமத்து பையன்களிடம் , குழாய் சட்டை அதிகமாய் புழங்காத காலம். சிறுவனான நான், உயரம் குறைந்த கட்டை வேட்டி உடுத்து கல்லூரிக்கு செல்ல, பக்கத்துக்கு சிறு நகரம் "வலங்கைமானில்", நிற்கிறேன்.

பேருந்து நிற்குமிடம் ஒட்டினாற் போல், ஒரு கூட்டுறவு அங்காடி. எங்கள் நெருங்கிய குடும்ப நண்பரின் மகன், அந்த அங்காடியின் மேலாளர். கடையில் நிறைய மளிகை சாமான் வாங்கும் கூட்டம். கல்லாவில் காசு வாங்கிப் போட்டுக் கொண்டிருந்த மேலாளர், என்னைப் பார்த்து, "என்னடா தம்பி?. காலேஜ் போகிறாயா?." எனக் கேட்டார். நான் ஒரு சிறிதும் யோசியாமல் "ஆமாண்டா!காலேஜ் தான் போறேன்", எனச் சொல்லி விட்டு, பஸ் ஏறி விட்டேன்.அவர் முகம் கறுத்து விட்டது. எனக்கோ உடனே "அப்படிப் பேசியது மிகவும் தவறு" என்ற மன உளைச்சல். மேலும் தந்தைக்கு இது தெரிந்தால், என்னை "உரித்து உப்பு தடவி விடுவார்கள்", என்ற பயம். இப்போது வெளி வந்த "வெயில்",படக் காட்சி மாதிரி நிழலாட்டம், ஓட ஆரம்பித்தது மனதுக்குள் அப்பொழுது.

மாலையில், கல்லூரி முடிந்து வீடு வந்து சேர்ந்தேன். மேலாளர் சைக்கிளில், என் கிராமத்திற்கு வந்து, என் தந்தையின் வரவுக்காக காத்திருந்தார். அவர் காபி சாப்பிட, எனக்கு அடி வயிற்றைக் கலக்கியது. தந்தை வந்தார். பரஸ்பரம் குசலம் விசாரித்த பின்னர், நடந்ததை விலா வாரியாக எடுத்துரைத்தார், மேலாளர். எல்லோர் முன்னிலையிலும், பெருத்த அவமானமுற்றதாய் கூறினார்.

கதவுக்குப் பின்னால்,முழு வேக ஜன்னியில்,ஓடி ஒளிய தயாராய்நின்றேன்.என் தந்தை மிகக் கோபமாய்,என்னை கடுமையாய் தண்டிப்பதாய்க் கூறினார்கள். என் சப்த நாடியும் ஒடுங்கிப் போயிற்று. "அறியாப் பருவம்",என் செயலை மன்னிக்கச் சொல்லி வேண்டினார்கள். பதறிய மேலாளர் "நீங்கள் என் தந்தை ஸ்தானத்தில் இருப்பவர், சிறு பிள்ளை ஏதோ சொல்லி விட்டார் ",என்று சமாதானமடைந்ததார்.      


என் தந்தை, பிறகு,அவரிடம் "என் மகன் சைக்கிள் ஏறி பள்ளி செல்ல ஆரம்பித்த போதே"வாடா,போடா;",என்று விளிப்பதை நிறுத்தி "வா ,போ என்று கூப்பிட ஆரம்பித்தேன். இப்போதெல்லாம் பேர் சொல்லியோ அல்லது "தம்பி" என்றோ அழைக்கிறேன். "தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளை", அவனை நான் விசாரிக்கிறேன், என்று சொல்லி, அனுப்பி வைத்தார்கள். பின்னர் சிறிது நேரம் கழித்து என்னைக் கூப்பிட்டு "சொன்னது தவறில்லையப்பா?",என்றார்கள். என்னை அடித்திருந்தால் கூடப் பரவாயில்லை.என் நெஞ்சு வலித்தது.
   





" தோளுக்குமேல் வளர்ந்த குழந்தைகளை தோழனாய் ", பாவிக்க வேண்டும் எனபது நான், என் தந்தையிடம், அன்றுகற்ற  பாடம்.








நன்றி :கூகுள் படம் . 

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் ....

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்.. (கடந்த வாரம், நவம்பர் மாதம்,28 -ம் திகதி "விக்கி லீக்", என்னும் அமைப்பு தூதுவரகங்களில் பரிமாறப்பட்ட ரகசிய தந்தி ஆவணங்களை வெளியிட்டு, உண்மைகளை தோலுரித்து காட்டியது.கிட்டத் தட்ட 2,50,000 கேபுல்களுக்கு ஜூலியன் அசான்ஜே( Julian Assange ), மற்றும் அவரின் தோழர்களால்,இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கசிந்த ஆவணங்களில்,கிடைத்த தகவல்கள் பற்றிய கருத்துரை.)

Julian Assange

















அசான்ஜே அடித்தார்,
ஆப்புகள் அனைத்தும்
குவார்டர் மில்லியன்,
கோப்புகள் இறைத்தார்,
குவலயம் முழுதும்

சுதந்திர நாடென்றார்.
சொர்க்க பூமியென்றார்
தந்திர நாடாகி,
தர்க்க பூமியாய்.

புது விருந்தளித்து,
புன்னகை சிந்தி. 
கை நனைத்த பின்னர், 
கை பல குலுக்கி, 
கட்டித் தழுவி,

விடைபெறும் முன்னே,
விடுக்கிறார் மடல்அம்பை.
இளக்காரம் 
இடிச்சொல், என

புல்லுருவி வாசகம்
புரிந்துணர்வில், 
புரியாத வார்த்தைகள்.
புதைந்த மர்மங்கள். 

சங்கேதமாய்,தந்திகளில்
சடுதியில் செல்லும். 
சங்கேத சந்துகளின், 
சணல் பிரித்து, 
சங்கிலிகளின்
பின்னல் அறுத்து 
இனம் காட்டினார் 
இன்று இணைய தளத்தில்.

உள்ளொன்று வைத்து 
புறமொன்று பேசுவார்.
உதட்டுச் சாயம் 
உலரும் முன்னரே.
உலகே நீ உணர்வாய்.
உய்யும் வழி தேடிடுவாய்.

நீ சிரித்தால் ..நான் சிரிப்பேன்

நீ சிரித்தால் ... 
   
நீரில் நனைந்த ரோசாவாய், 
நிறம் கூடிச் சிரிக்கும் என்  மனசு.
கானகத்து மூங்கில்களில்
கசிந்து வரும் குழலோசையாய் 
கனிந்து விடும் என்  மனம். 
கொட்டங்கச்சி தம்பூராவில் 
கொப்பளிக்கும் கீதம், என்
குதூகலிக்கும் உள்ளத்தில்.

நீ சினந்தால் ...

நீர் பட்ட காகிதப் பூவாய்
நிறம் வெளுக்கும் என் மனசு.
புல்லாங்குழல் உள்ளில்,
புக மறுத்த காற்றாய்,
ஒலியின்றி ஓலமிடும் .
இதய வீணையின் தந்திகள்
இற்றுப் போகும் மீட்டாமல்.
அரும்பாமலே,வதங்கி
அப்பொழுதே  கூம்பிப் போகும்.
என் இதயம்.              

வெள்ளி, 3 டிசம்பர், 2010

கொஞ்சம் கடிக்கலாமா...

கொஞ்சம் கடிக்கலாமா...






எவுரு நோட்டு லேயோ ( Evernote ) ,வரவு செலவு கணக்கு   எழுதி பொட்டியிலே  (Dropbox) போட்டுட்டு,சோம்பல் முறிச்சிட்டு , ஹாய்யா பேஸ் புக்கில் (Facebook)  ஒரு
 கதை படிச்சார்.திடுக்கிட்டுப் போய் "யாஹூ", ன்னு,  கத்திட்டு சூடா "ஹாட்மெயில்"லே  ஒரு மின்னஞ்சல் அனுப்பிட்டு, ஆருகிட்டேயும் ( Orkut )பேசாம "ஜிமெயில்", புடிச்சு ஊருக்கு வந்துட்டார்.

"உம்",முன்னு இருந்த, இவரைப் பார்த்து ,என்னாச்சு 
இவருக்குன்னு" , ஐ(ய)ப்பாடு "(I pod ) வந்து ,எட்டு போன்
(Head Phone) பண்ணி விசாரிச்சா,அவரு கோவம் ஏன்னு புரிஞ்சுது.

"யு ட்யூப்" லே ஓட்டை,  தோட்டத்துக்கு  தண்ணி பாய்ச்ச முடியலே. ஹோட்டலுக்கு போனா "சர்வர்" பிரச்னை. வீட்டுக்குள்ள "மவுஸ்" தொல்லை.
"கீ போர்டு"லே வாசிக்க முடியலே. "பார்லர்", க்கு போனா  Brows(e) பண்ண முடியலே.
  
வீட்டுக்கார அம்மா "நெட்"டை தலையிலே மாட்டிகிட்டு
வெளியிலே  போய்ட்டாங்க.கடுப்பு வாராதா?.பின்னே.

நீங்களே சொல்லுங்க...ஞாயத்தை.......உங்களைத்தாங்க .....


                                                  

வியாழன், 2 டிசம்பர், 2010

அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம்.. (3)..

அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம்.. (3)..

"ஆற்றில் போட்டாலும் அளந்து போடு"















மறைந்த என் தந்தை ஒரு விவசாயி,கிராமத்துமணியக்காரர், பொதுப்பணித் துறை, ஒப்பந்தக்காரர், என பலதொழிலில் ஈடுபட்டிருந்தவர்.ஒரு டிராக்டரும், லாரி ஒன்றும் சொந்த உபயோகத்திற்காக இருந்தது. இதனால் தினமும், விவசாய தொழிலாளிகளுக்கான கூலி நெல், தளவாட சாமான் வாங்கும் சிலவுகள், நிலத்திற்கான  கிஸ்தி,  வரி வசூல் செய்த பணம் என்று, ஏகப்பட்ட வரவு சிலவுகள்.

அனைத்தையும், அவ்வப்போது டைரியில் எழுதி வைப்பார்கள் ஸ்ரீவித்யா என்னும் பெரிய டைரி தான் அவர்களின்  அந்தக் காலத்திய, ஆஸ்தான டைரி. பின் இந்த சிலவுகள் யாவும்,  இனம் பிரிக்கப் பட்டு, ஒரு பெரிய பேரட்டில் தலைப்பு வாரி யாய் எழுதுவார்கள். குறிப்பிட்ட பணி முற்றுப் பெற்ற பின் வரவு செலவுகள்,சரி பார்த்து லாப நட்ட கணக்குகள் ஆராயப் படும்.

இந்த கணக்குகளில் விவசாய நெல் உற்பத்தி முதல்,ஏழு குழந்தைகளாகிய எங்கள் படிப்புக்கு ஆகும் சிலவு, உள்பட அடங்கும்.எனக்கு விவரம் தெரிந்து பள்ளிப் படிப்பு இறுதி வகுப்பு வரை, பெரும் பகுதி இந்த கணக்கர் பணி, என்னிடம் ஒப்படைக்கப் பட்டது.தந்தை வீட்டில் இல்லாத சமயங்களில், கூலிப் பணம் பட்டுவாடா செய்வது எல்லாம்,பெரும்பாலும் என் பொறுப்பில்.தான்.

இந்த குடும்ப சூழல் வரவு, சிலவு, லாப, நட்டம்,எதிரிடும் அவசிய, அனாவசிய  செலவினங்கள், பற்றிய அறிவையும், முன்னுரிமை(Prioritization), கட்டுப் படுத்தல் (Financial Control) போன்ற தாக்கத்தை,எனக்கு எர்ப்படுதித் தந்தன.

நான் சுயமாய் சம்பாதிக்க ஆரம்பித்ததில் இருந்து கணக்கு எழுதும் வழக்கத்தை ஏற்படுத்தியது. அலுவலக நிர்மாணப் பணிகளின் போதும், வாழ்க்கையில் பொருளாதாரப் போராட்டங்களின் போதும், நிதி நிலைமை களைச் சமாளிக்கும்,  உத்திகளைத் உணர வைத்தது. அடிப்படை யிலிருந்து திட்டமிடல்(Zero Based Budgeting),  முழுப் பயன்பாடு (Optimization), ஆகிய உத்திகளைப் புரிந்து கொள்ளவும், பின்னாளில் செயலாக்கவும் துணை நின்றது.

காலம் சென்ற என் தந்தையின் "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு", என்ற அறிவுரையே பல கோணங்களில்,  சீர் தூக்கிப் பார்த்து செயல் பட வைத்த, என் அடிப்படை பொருளாதார  அறிவுக்கான  அஸ்திவாரம்.

பகிராத பகிர்வுகள் ..

பகிராத பகிர்வுகள் ..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அள்ள அள்ளக் குறையா, 
அறிவுக் களஞ்சியம்.
மின்னல் போல் வரும்,    
மின்னஞ்சலாய்  மடல்.  
இறை முதல் இரை தேடும்,
இணையதளம்.
யாவும் தேடு களம்.  
 
வலைஎனும் விளக்கில், 
விட்டில் பூச்சியாய்.
மென்பொருள் பின்னலில், 
மீள இயலா வண்டாய்.
மவுஸ் கிளிக்கின் இடையே
மவுன நொடிகள், யுகங்களாய்.
 
வலைத் தளம் கண்ணுற, 
விழித்திமை காக்கும் நேரம், 
விளி முடியா தூரம் போலும்.
விழித்திருந்து, விடிய விடிய
பிழை   திருத்தி, பகிர்வதற்கு  
எழுதியதை, ஏற்றும் முன்னர், 
எல்லாமே மறைந்த மாயம்.
தட்டுத் தடுமாறி 
தவறிய, என்  கை சொடுக்கால்.
 
( எழுதி முடித்த பகிர்வை பிரசுரிக்கும் முன், என்  தவறான கணினி  இயக்கத்தால் இழந்த வருத்தத்தில்  எழுதியது...) 
 
 
                 

புதன், 1 டிசம்பர், 2010

எல்லை இல்லை ..நீ நினைத்தால்

எல்லை இல்லை.....நீ நினைத்தால்.




தோற்றால் துவளாதே !
துணிவில் தொய்யாதே !
விழுந்தால் எழுந்திரு,
விழிப்புடன் கவனி.    
வையகம் புலப்படும்.
வானம் உன் வசப்படும்.

கூழாங்கல் காக்கைப் பாடம்.
உழைப்பைக் கூறும் தேனீ, எறும்பு .
படிப் படியாய், உன் அடியை 
பதறாமல் எடுத்து வை.
திண்ணமாய்,
திடமாய். 

ஏறிடுவாய் ஏணியை ,
ஏன் இன்னும் தாமதம்?.
என்ன இல்லை... நம் தாயகத்தில் ?.
எல்லை இல்லை........நீ நினைத்தால் .....