வியாழன், 30 செப்டம்பர், 2010

வீடு நோக்கி ஓடுகின்ற ......

வீடு நோக்கி ஓடுகின்ற ......
முதல் முதலில் வெள்ளை அங்கியிலே, முல்லை பல் வரிசையோடு,
முறுவல் கூட்டி, முக மலர்ச்சி காட்டினீர். மறக்க இயலா தொடக்கம். 
சென்மத் தொடர்பாய்,  அடுத்து அளவளாவிய நாட்கள். அறிவார்ந்த நட்பு.
அன்பரே! ஆகஸ்டில் விடுதலை! அறிந்தேன்.  அளவிலா மகிழ்ச்சி. 
                  
வணக்கத்துடன் வாழ்த்துகிறேன். சவுதியின் வடக்கு கோடியில் இருந்து.
வாழ்க்கையில், மீண்டும் வண்ண மயமான, நாட்களுக்கான கட்டியம்.
அந்தி நேரப் பறவையாய், சிங்காரமாய் சிறகடித்து, கூடு நோக்கி,
அன்பானவரின்  அரவணைப்பு. அதற்கான ஆலத்தி,   இனி,
விவேகமாய் காலம் கழித்து, வெற்றியுடன் வீடு நோக்கி,
வேகமாய் நாட்கள், இனி பட்டம் போல், பறந்து போகும்.
                      ( ஊர் திரும்பும் நினைவில் ..) 
    
இதய வீணைக்குள்,  இங்கிதமாய்,  இன்னிசை நாதம் தோன்றும் .
இழையோடும் மூச்சில்  இன்பத் தென்றல் உலா வரும்.
நாடி நரம்பெல்லாம், நாதசுரம் இசைக்க,
பாலை வெயில் கூட, பனி மழையாய் தோன்றும் .
புயலான உள்ளமும் ,இனி பூவாய் மாறிடும் .
கார்மேகம் கண்டு தோகை விரித்த, மயிலாய் மனம்.
கந்தா!  கடம்பா !  கார்த்திகேயா!  முருகா!  மால் மருகா ! 
இமை மூடா இரவுகள்,  இனி இல்லை அய்யா!
இனி ஆர்ப்பரித்த, அகக்கடலும் அமைதி காணும் .     
           
                  
( அருமை நண்பர்    டாக்டர். கார்த்திகேயன் அவர்கள், ஒப்பந்தம் முடிந்து,  நாடு திரும்பும் போது, அவருக்கு, அடியேன் எழுதிய மடல்)         
                  

Down the memory lane....

 Down the memory lane....
 
 Its time, now, to reflect and recollect,
Those days, I passed, as an innocent young,
When simple things, spread shine and smile,
Then, even serious things, never did matter.
The lillies, lotuses and the many fishes beneath,
The ripples made, when I  swam, in the pond,
The tamarind trees  that lined the roads,
The paddy field, ripe in their golden glory,
The nightly sky, where the stars twinkled,
The darkness that brought fear and chill,
The rains that brought showers and shivers,
The frogs chorus, beetles hum and the eerie silence,
The thunder storms that made me tremble,
The love and care, sheltered ,in my mother's lap,
The twilight in which sparrows sang,
The sun that glittered on the morning dew,
The fresh breeze , the gentle sway of leaves,
The tales, that made me cry, sing, scream and sob,
The wonder years of one's childhood.
Ahh..it's time to remember and to cherish....

புதன், 29 செப்டம்பர், 2010

மலராத மொக்குகள் ....

மலராத மொக்குகள் ....
பல சமயம் பயணங்களின் போதும்,
பார்த்த பல சம்பவங்களின் பாதிப்பின் போதும்,
தனியனாய் மோனத் தவத்திலிருக்கும் போதும்,
தடம் புரண்ட ரயிலாய், தாறு மாறாய்,  
எண்ணற்ற எண்ண அலைகள் என்னை ஆட்டுவிக்கும்.
கணக்கற்ற கற்பனை ஊற்றுக்கள் கண்களை திறக்கும்.
கருவிலே உருவாகி பின் கலைந்து போகும் என் சிசுக்கள்.
முழுமையே அடையாத என் சிப்பியின் முத்துக்கள்.
கணத்தில் தோன்றி மறையும் நீர்க்குமிழிகள்.
ஓட்டை உடைத்து வரப் பயந்த என் பிஞ்சுக் குஞ்சுகள்,
புதை மணலில் சிக்கி மறையும் என் புதிய பிறவிகள். 
ஊட்டி வளர்த்து, பின், உலவ விடப்படாத என் உயிரோட்டங்கள்.
 
இலக்கும், இலக்கணமும் இல்லாத, என் இதயத் துடிப்புகள்.  

திங்கள், 27 செப்டம்பர், 2010

வறுமையின் நிறம்..

வறுமையின் நிறம்..
நித்தம் பருப்பும் பாயசமும் இல்லாத உணவு,
கோடையை தணிவிக்க இல்லை, குளிர் சாதனம்.
சொகுசாய் பயணம் செய்ய, கார் கூட இல்லா கஷ்டம்,
பகட்டாய் உடுத்தவும், பவனி வரவும் வசதி இல்லை. 
கொடிதினும் கொடிது என் வறுமை.
பரந்த கனவுகளில் விரிந்த என்  எல்லைக்  கோடுகள்.
நனவாக்க நான்,  பணம் நாடி ,பிரவேசம் பரதேசம்.
பாலைவனம், பரந்த மணல்வெளி, கானல் நீர்,
காதலி போல் கன்னத்தை முத்தமிடும் அனல் காற்று.
மூச்சை முட்டச் செய்யும் புழுதிப் புயல்,
அரேபியாவில் ஆயிரத்தொரு இரவுகள்,
கழிந்தால், கனவுகள்  நனவாகலாம்.        

மீண்டும் ஏன் இந்த பாலைவனம்....


சோலையில்லா பாலைவனம். சுட்டு எரிக்கிற வெயில்.
பொந்துக் கூட்டுக்குள் எட்டடுக்கு சீட்டுக் கட்டு வீடு.
பதர்களால் வஞ்சிக்கப் பட்டு பாதி ஊதியம், இன்று.
மீதி நேரத்தில்,கார் கழுவி மீத்த பணம்.
பார்த்து பார்த்து செலவழித்து, பின்  சேர்த்த பணம். 
பக்குவமாய் சேமித்தால்......
மீண்டும் ஏன் இந்த பாலைவனம்...
( வளைகுடா நாட்டில் பணி புரிந்த   என் சக தோழனின்  அங்கலாய்ப்பு )     

புதன், 15 செப்டம்பர், 2010

சிறிதே சிந்திக்கவும் ..முடிந்தால் சிரிக்கவும் .. ..

 சிறிதே சிந்திக்கவும் ..முடிந்தால்  சிரிக்கவும் ..
இரவிலே உறங்கும் போது ஒரு கனவு... ..வெளி நாட்டு
உணவு விடுதிகளில் எப்படி விளம்பரம் செய்யலாம் என்று.
மன்னிக்கவும். ஆங்கிலத்தில்    பிதற்றுவதற்கு ......
ஹி..ஹி .வெளிநாட்டுக் கனவல்லவா !
 • Sam bar....Indians drink..
 • No idle talk..........we make idlis.
 • Douse your hunger...Dosas are here.
 • Naan..sense,smell and swallow.
 • Onions and Unions.... ..make us cry.
 • Chic(ken)  legs.........We serve right size.
 • Together we gather.....Good will and a few bucks more.
 • The spices here are the happiest lot......They get mixed up.
 • We provide lunch at your Desktop...you may get Laptop at home.
 • For a little price..............we serve you future chickens.
 • Out of ink.............Today no signature dishes. 

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

கூரை ஏறி கூவும் கோழி ...

கூரை ஏறி கூவும் கோழி ...
                                                             
நம்மில் பலருக்கு திறமை இருந்தும், உரிய முறையில் சரியான
விதத்தில், நம் திறமைகளை  வெளிப் படுத்தாததால், வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பல அரிய வாய்ப்புக்களை இழக்கிறோம்.
                                                                            
காட் என்ற  ஒரு வகை மீன் (Cod Fish) நடுக்கடலில். ஒவ்வொரு முறையும் சுமார் ஐந்து மில்லியன் முட்டைகளை இடுகிறது. இது உலகில் பலருக்கும்  தெரியாத உண்மை.
                                                                                                                                                                        
ஆனால், நம்ம  வீட்டுப் பெட்டைக் கோழியோ மதியம்  முட்டை போட, காலையிலேயே  கூரை   ஏறி,    "கொக்கரக்கோ ",     "கொக்கரக்கோ ", 
'முட்டை இடப் போறேன்' ,  'முட்டை இடப்  போறேன்'  என  கூவுகிறது.

நண்பர்களே ! ஆற்றல்களை (Skill sets) வளர்த்து கொள்ளுங்கள். அதை உலகிற்கும் அறியப்படுத்துங்கள்.


.    Toot your horns and it pays you to advertise...


                                                                                                     

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

ஹைக்கூ பிதற்றல்கள் ...

அவசரமான சிங்கபுராவில்,

குருவி கூட, "குவிக்", "குவிக்",

என கத்துகிறது.
பொய். எனக்கு பிடிக்கும்.

பொய்யில்லை நிசம்.

பாலச்சந்தர் படத்தை சொல்லுகிறேன்.

வாழ்க்கை...வாழ்கையில்

வாழ்க்கை


வாழ்க்கையில் முன்னேற,

நீர் தேடும் வேர் போல, அறிவையும்

வெளிச்சம் நாடும், இலை போல

வாய்ப்புகளையும் தேடி

முயலாமை, முடியாமை எனும்,

ஆமைகள் அகற்றின்,

ஆகாததும் உண்டோ!

இப்புவிதனிலே.வாழ்கையில்

வாழை மரமாய்...

வளர்கையில்

ஆல மரமாய் ..

வழுக்கையில்

தனி மரமாய்..

ஆகிப் போகிறான்

மனிதன்.

வியாழன், 9 செப்டம்பர், 2010

தாயின் தனிமை ..

சொச்சம் இருக்கும் கண்களில்,

மிச்சம் இருக்கும் உயிர், ஊசலாட,

கணக்கற்ற ரேகைகள், காலக் கோடுகளாய்,

கன்னத்தில் படர்ந்தவள். நிலை இல்லா தலை,

கழுத்தின் மேல், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாய்.


ஊழ்வினையாளோ, உண்ண உணவின்றியோ,

உயரம் சுருங்கிப் போனவள்.

குள்ளமான இந்தத் தாய், இன்று,

குப்பை பொறுக்கி பிழைக்கிறாள்.


அனாதையா?. ஆக்கப்பட்டவளா?.

தெரியவில்லை .என் நெஞ்சு தகிக்கிறது .

அனாதையாயின்,அவள் தன்மானத்திற்கு,

என் தலை வணக்கம்.

ஆக்கப்பட்டிருந்தால். என் சமுதாயத்தின்

அவலம். சிதைவு. சீரழிவு.


ஈன்ற பொழுதின் பெரிதுவந்திருப்பாள். இத் தாய்.

எந்தத் தாயுமே. அதுவே தாய்மை. அதன் தனித் தன்மை.

இத் தாய். தவிர்க்கப்பட்டு, தனிமை படுத்தப் பட்டாளோ?.

இன்னும், எதற்காக?. ஏன்?. யாருக்காக.

இந்த உயிரை தாங்கி யாசகம் ....


காமாலைக் கண் காலனுக்கு, கடின மனம்.

கண் தெரியவில்லை.கஷ்டங்களின் எல்லைகளில் இருந்து,

இவளை மீட்கும், ஈரமோ, இதயமோ அவனுக்கு  இல்லை.

இவளின் நிலை கண்டு அல்லாடுகிறது என் மனம்.

இதயத்தில் வலி. இமையோரம் ஈரம்.

இந்த சீனத்து தாயின் தனிமை துயர் கண்டு.

புதன், 8 செப்டம்பர், 2010

இரு சொட்டுக் கண்ணீர் ...

வைத்தியர் சொன்னார். வயிற்றில் புற்று நோய் என்று,
வாத்தியாராய் வாழ்வு.பலருக்கு வழி காட்டியவள்,
வாய்விட்டு அழுகிறாள் எமனிடம் வாய்தா கேட்டு,
வாசம் இன்று மருத்தவ மனையில்........

புற்று நீண்டதால், இன்று வாழ்கையில் பற்று நீங்கியது,
பாசம் இருந்தாலும், பெரும் பணம் கரைந்ததே மிச்சம்.
வலிகளும், வேதனைகளும், மரண விளிம்பின் உச்சத்தை தொட,
வலி மறக்க, மார்பைன் ஊசியில் மயங்கிப் போகிறாள், இத் தாய்.

எமனிடம் யாசிப்பதை விட்டு, தீர யோசித்ததில்,
எண்ணப்பட்டு, மிச்சம் இருக்கும் நாட்களில்,உணர்கிறாள்,
பலனோ, பயனோ இல்லை என்று. முடிவு. உயிர் துறக்க உண்ணாவிரதம்.
பசியில் உண்ணமுடியாமலும் ,உண்டது செரிக்காமலும்,
உடல் படும், உபாதையை விட உயிர் விடுவதே உத்தமம் என்று.

அரற்றிய ஆருயிர் கணவனும்,அழுகின்ற பிள்ளைகளும் ,
அன்னையின் துயரத்தை விட, மரணமே மேல் என்று,அமைதியாயினர்.
செவிலியர், இவளுக்கு புத்தாடை உடுத்தி, போட்டோ எடுக்க,
செந்நிறத்தில் இறக்கப் போகும் அன்னை,
இன்னுமே அழகாய் இருக்கிறாள்.

புத்தமார் பூசை செய்யவும்,சவப் பெட்டிக்கும்,
புனித சமாதிச் சடங்கிற்கும் ஆணையிட்டாள்.

வாழ்ந்த வாழ்க்கை,வசந்தங்கள், மழலையாய், மாணவியாய்,மனைவியாய்,
தாயாய், பள்ளிபருவம், பால நினைவுகள், மனதில் ஊஞ்சலாட,
நெஞ்சும் நினைவும் பின்னோக்கி அசை போட,
நேசமான மருத்துவ மனை, மௌனமாய் அஞ்சலியும்,
நெருக்கமான நெஞ்சங்களின், ஏராளமான பிரார்த்தனைகளும்,
சங்கடம் இன்றி, சாவு சட்டென்று வரவும், பரலோகம் அடையவும்.


இனம் புரியா வேதனை என்னை தீண்டுகிறது .கண்கள் பனிக்கின்றன,
இரு சொட்டுக் கண்ணீர்.   இப்போதும் என் கண்ணில்.
எப்போது நினைத்தாலும்.


( வாழ்க்கை வியாபாரத்தின் கூட்டல்,கழித்தல்களில்,இறுதிப் பயணப்

பாதை,  கல், முள்  இல்லாமல், கஷ்டங்கள் 

 குறைவாய்,சடுதியில் முடிவதே, நான்  சங்கரனிடம் வேண்டுவது. )

முத்தும் தத்தும்....

அலை கடலில் சிப்பியொன்று,

எப்போதோ விழும் மழைத் துளிக்காக,

காத்திருக்கிறது.

அபலைக் குழந்தை ஆசிரமத்தில்,

அன்பு ஸ்பரிசத்திற்காக,

எப்போதும்,

காத்திருக்கிறது.

ஒன்று முத்தாகிறது.

மற்றது தத்தாகிறது.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நிதரிசனம்.....

அவள் கைத் தொலைபேசியில் கனிவாய் திறந்து, அன்புடன்

அத்தான் என்றபோது, அடங்கிப் போகிறது அவன் மூச்சு.

பிரளயப் பெருக்கம். அந்த ஒரு சொல் மந்திரத்தில்.

பச்சை கிளியாய் சிறகடித்துப் பறக்கிறது. மனம்.


மகிழம்பூ, முல்லை, மல்லிகை, மணம்.மனமெல்லாம் பரவசம்,

மாசறு பொன்னே! வலம்புரி சங்கே என, ஆயிரம் வெள்ளை தேவதைகளின்

அபூர்வ நடனம். அதி காலை பனிச் சிதறல்கள். அங்கே,

ஆதவனால், சொட்டுத் தெறிக்கும் நீரில், பட்டுச் சிரிக்கும்,

பல நூறு கிரணங்களாய் மனம். பச்சை கம்பள புல்வெளி,

பாவையிவள்,பளிங்கு மாளிகை என, அந்த நொடியில்.

அற்புதமான கனவு வாழ்க்கை.


நின்று போன மூச்சை இழுத்து நிதர்சனத்திற்கு வருகிறான்.

வெள்ளி  அனுப்பிட்டிங்களா?  என்ற, அவன் தங்கத்தின் குரல் கேட்டு.

நாளை எனும் நம்பிக்கை.......

நாளை நலம் பெறுவோம், என இருண்டு,

நீண்ட குகைக்குள்,  இறுதி வெளிச்சம் தேடுகிறான்.

ஆயிரம் சூரியர்கள் அடிக் கடலில் அமிழ்ந்த பின்னர் ,

அன்னை நாட்டிற்கு திரும்ப, அவன் உத்தேசம்.


கிட்டவே தோன்றும், என்றும் எட்டவே முடியாத தொடுவானம்,

தொட்டுவிடுவோம், என நம்புகிறதே மனம்.அதுவே வாழ்க்கை.

நாட்காட்டியில் தேதி கிழித்தும், மனதில் கரிக்கோடிட்டும்.,

நரக நாட்கள் நகருகின்றன. நாடு செல்லும் நல்லநேரம் எண்ணி.


கண்ணிறைந்த மனைவி கட்டழகி காத்திருக்க,அவள்

கணுக் கால்களில் கதை சொல்லுகின்ற கிண்கிணிச் சலங்கைகள்,

இன்னும் தேயாத மெட்டி,காதளவோடிய கண்கள், காதல் கனல் மூச்சு,

என்றும், அவள் கீழ்வெட்டுப் பார்வையில், எப்போதும், அப்பப்பா!

என்னில் ஏகப்பட்ட நில நடுக்கம். எண்ணற்ற சுனாமிகள் ......


இன்னும் அலைகள் கரை நோக்கி வரும்......

திரை கடலோடி திரவியம் தேடி ....

பயணம் முடிந்து, படி ஏறி, பங்க்கரில் படுக்கிறான்,
பாழும் மனது தேய்ந்து போன ஒலி நாடாவாய்,
அவசரமாய் விழுங்கி, அப்புறமாய், அசை போடும் பசு போல,
அகலாத நினைவுகள், மூடாத இமைகள், இரக்கமில்லா இரவுகள்,
 நினைவு  நெருப்பாய், நிலவு சுடுகிறது, கனவு கருகளைகிறது.
நீண்ட இரவுகளில், இவன் உறங்காமலே கிறங்கிப் போனான்.

                (  தாய் மண்ணில் இவனுக்காக )

மாலை சூடும் மணாளனை எதிர் நோக்கிய தன்னுயிர் தங்கை,
கண்களில் டாக்டர் ஆகும் கனவுகளுடன் பள்ளி செல்லும் பாலகன் தம்பி,
இவன் பிரிவின் துயரில்,மூலையில் மூக்கை சிந்தியழும் பாட்டி,
ஈன்றவளின் கண்களில், எப்போதும், வற்றாத இமையோர ஆறு,
பணம்,பலம், ஏதுமின்றி தடுமாறும், தள்ளாத வயது.தந்தை.
இப் பாரங்களின் பளு தாங்காமல், பறந்து பரதேசம் வந்தவன் .

குட்டிகள் போடும், பல வட்டிக்கு கடன் வாங்கி,முதலை விழுங்கும்,
தரகர்களின் அசுரப் பிடியில், இவன் நிலை, அண்டாவில் மாட்டிய தலை,
மூக்காணங் கயிறு கட்டி, முண்ட இயலாமல் தவிக்கும் காளை....


( இன்னுமொரு இதழ் விழும் நாளை ..... )

திங்கள், 6 செப்டம்பர், 2010

அக்கரைச் சீமையிலே

ஒய்யார சீமையில் ஓடிக் களைத்த ஓர் கூட்டம் ,
ஞாயிறு மாலை களை கட்டும் திருவிழா.கடை கட்டும்.
நலிந்த முகங்களில் நண்பர்களை பார்த்த முறுவல்.
பிரிந்த உறவுகளின் பகிர்வுக்கான பரதேச சங்கமம்.

உடல் பிழிந்து ,உருக்கி ,ஊருக்கு அனுப்பும் வெள்ளி,
இந்த வெள்ளிக்காக விடியலை தொலைத்தவர்கள்.
ஏற்றங்கள்,  ஏமாற்றங்கள்,  கண்ணீர், கவலை,
கால் கடுக்க பேச்சு,கூட்டம் கூட்டமாய்,காகம் போல்.

கடல் அலையாய்,தண்ணியடித்து ,தாகம் தீர்த்து,
ஆசை ஆசையாய் தோசை விழுங்கி,
அரிசியும் ,காய் கறியும் அவசரமாய் வாங்கி,
வரும் வாரம், வருவோம்,என விடை கூறி,
பின்னிரவில்,பேருந்தில் கூடு நோக்கி தொலை தூர பயணம்.
 
 
இன்னும் இந்த பயணம் தொடரும்................

சிறகடிக்கும் சிங்கப்பூர்


காலையில் தீயாய் தகித்த சூரியப் புருஷனை,
மாலையில் மடியில் தாலாட்டும் மனைவி மழை,
கீழே மினுமினுக்கும் பல்லாயிரம் மின்னோளியின் கூச்சத்தில்,
நட்சத்திரங்களும் நாணிச் சிணுங்குகிற மேல் வானம்,


அந்தி மஞ்சள் விளக்குகளின் மந்தகாச சிரிப்புகள்..
ஆங்காங்கே மனிதக் கூட்டங்களை விழுங்கியும், உமிழ்ந்தும்,
அனகோண்டாவாய்,அதிவேகமாய் அற்புதமாய், செல்லும் ரயில்கள்,
எலிப் பொந்துகள் போல்,சங்கிலி நிலவறைக்குள், சலிக்காமல்
.

மொபைலில் நர்த்தனமாடும் நாட்டிய விரல்கள்,
மூடிய காதுகளுக்குள் முணுமுணுக்கும் சங்கீதம்,
இங்கே இங்கிதம் தெரியாத இளைய தலைமுறை.
முன் ஒரு கண் மூடி, முகம் மறைக்கும் குட்டிப் பின்னல்கள்,
ரிப்பன்களும்,புடவைகளும் விலை போகாத ஊர்,
ஆடை பஞ்சத்தால், ஆடவர்களை அலைக்கழிக்கும் ஆரணங்குகள்.


இடுங்கிய பார்வை,கோடு விழுந்த கன்னங்கள்,தளர் நடை,
தாழ் தளத்தில் முதியோர்களின் தனி உலகம்.
அருமை அப்பனின் அருகில் வசிக்க,அரசாங்க உதவி.
என்னையா! எச்சில் கூட துப்ப இயலா, துப்புரவான நகரம்.


வருணனும் கருணை காட்டி, மிச்சமிருக்கும் அழுக்குகளை அழிக்கிறான்
பிளாஸ்டிக் பணத்தின் பிரமாத பிரயோகம்.
பணக்காரனுக்கு பணத்தை வாரித் தரும் வங்கிகள்.
வரிசைகள்,வரிகள்,விதிகள் என எல்லாம்,ஒரு ஒழுங்கு மயம்.


தவறியும்,தப்பேதும் செய்திடலை,தடுத்திடும்,தற்காப்பு காமிராக்கள்.
குற்றம் அதிகம் இல்லா கொற்றவனின் நாடு .
சிங்காரத்துக்கும் சிகை அலங்காரம் செய்யும் சிங்கப்பூர்,
விண்ணை விஞ்சும்  விஞ்ஞான வளர்ச்சி.
அடுத்த நூற்றாண்டை தொட, ஓர் அவசரப் பயணம்.


ஓட்டம்,நடை, ஓய்வில்லா உழைப்பு,  இது ஓர் ஒய்யாரச் சீமை,
இந்த ஒய்யாரச் சீமையில் ஓடிக் களைத்த ஓர் கூட்டம்......


 இன்னமும் உதிரும்........

சனி, 4 செப்டம்பர், 2010

முதன் முதலாய்.....

முதன் முதலாய்..

                                                                                                                                                     இணைய தளத்தின் வலைபின்னலில்.தன்னிச்சையாய்.... பெருவிளக்கின் வெளிச்சம்   
கவர்ந்த விட்டில் பூச்சியாய்.பணி மூப்பால்,தற்போது பொறுப்பில்லை......மனதில் இருப்பில்லை....என்னவாச்சி, ஏன் இந்த முயற்சி என்ற...மண்டை குடைச்சல்களுக்கும் என்னிடம் விடை இல்லை.

               தளத்தில் பலரின் பதிவுகளையும், பகிர்வுகளையும் பார்த்தபோது.. எண்ணற்ற முத்துக்களும், மணிகளும். சிந்தியும் சிதறாமலும்....அப்பப்பா...அயர்ந்து போனேன்.
புறமுதுகு இடுவது மரபல்ல. இல்லையா....புண் படாமல் பொதுவாய் எழுதலாம் தானே...நான் கவிஞனும் இல்லை...எழுத்தாளனும் இல்லை..ஆயின் நல்ல ரசிகன்.

             வாழ்ந்த பாதையில் பின்னோக்கி பார்க்கையில். மணல் சுவடுகள் போலவும்,
கடல் அலையில் கால் பதித்த தடங்களுமாய், அழிந்து போன பல நினைவுகள்.
கருவாகி, உருவாகி, பின் பிறவாமலே கலைந்து போன சிந்தனைகள். வலிகளின் விளிம்பில் பிரசவித்த வார்த்தைகள், இன்ன பிறவும், இப்போதும் பரணில்.மங்கிப் போன மடல்களாய். பல ஆண்டுகளாய். தூக்கி எறிய மனமில்லாமல் ...
மீண்டும்    தூசு தட்ட போறேன்...

 • பாலைவனம்,
 • ஒற்றை பனைமரம்,
 • இரு  சொட்டு கண்ணீர்.

     என என்னை அவ்வப்போது  வெகுவாய் பாதித்ததும், பரிதவிக்க வைத்ததும்.... நிசங்களும் அவற்றின் நிழல்களும்..... அவ்வப்போது கிறுக்க போகிறேன். பிழைகள் நிச்சயம். பொறுப்பதோ....வறுப்பதோ....உங்கள் கையில்..

அன்புடனே.

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

தொடுவானம்

கிட்டவே தோன்றும், என்றும் எட்டவே முடியாத தொடுவானம்.


தொட்டுவிடுவோம், என்பதே நம்பிக்கை.