ஞாயிறு, 17 ஜூன், 2012

மண்ணின் மணம் ...வேரும்.. விழுதும் .

அந்தி சாய்கையில்..ஆற்று வெளிதனில்
நெற்றியில் கை வைத்து அண்ணாந்து பார்க்கிறேன், ஆகாசத்தை. பொழுது இன்னும் சாயலே. ஒரு பாட்டம் ஓடி, " கொள்ளிடத்தில் குளிச்சிட்டு வரலாம்னு ", தோணுது. ஆத்துலே குளிச்சு கன காலம்  ஆச்சு. கரை தாண்டினா, கூப்பிடும் தூரம் தான்,ஆறு. கை தட்டினா காது கேட்கும் தூரத்துக்கு, கொஞ்சம் அப்பாலே. பேரனும் கூட வரணும்னு அடம் பிடிக்கிறான்.பெரும் பகுதி பாலைவன துபாயில் வளந்தவன். தளிர் நடைக் காரனுடன் துண்டு சகிதம் பயணம்.

 நீரில் நர்த்தனம் ..அன்சுமன்   


வெள்ளையும் வெட்கிடும் கொள்ளிடச் சலவை  

 முட்டிப் பாப்போம் ..நீயா ?.நானா ?.   


கட்டை வண்டி போகும் அளவு நீளமான பாதை. இரு மருங்கிலும்  மூங்கில் வேலி.அதன்  மேல் படர்ந்து இருக்கும் கோவை,தூதுவளை, முடக்கத்தான் கொடிகள்,வெய்யிலில் வாய் பிளந்து மூச்சிரைக்க நிற்கும் ஓணான்கள். பச்சையோடு பச்சையாய் பதுங்கி பயமுறுத்தும் பச்சைப் பாம்பும், கொம்பேறி மூக்கன்களும். எப்போதாவது தலை நீட்டும்.
அப்புறமும், இப்புறமும் தென்னை, பனை, மா,வாழை, சவுக்கு பயிரிட்ட தோட்டங்கள். தொலை தூரத்தில் இருந்து, தம் வேர்களைத் தேடி, வருடம் தோறும் வந்து தொழுகின்ற குலதெய்வம் காமாட்சி அம்மன் கோவில், தூரத்தில் தெரியும் சவுக்குத் தோப்பில். அருள் பாலிக்கும் அம்மன்.

baa baa black sheep..Gayathri
பாதை முடிவில், ஆற்றுக் கரையில் ஒதுங்கிக் கிடக்கிறது சுடுகாடு. பூவரசன், வேம்பு, தேக்கு, பனை, வேலிக் கருவை, நாணல் என மொய்த்துக் கிடக்கின்ற, ஆற்றுக்கரை. மரங்களின் நிழல்கள் நீரில் முகம் பார்க்கின்றன. வெறும் மணலில் நிழல் காட்டி நிற்கின்றன. 
மரக் கிளைகளில், கூடுகளில் அடைக்கலமாகிய குருவிகளின், குசலம் விசாரிக்கும் குரல்கள். என்றோ!. தமக்கையை இழந்த " அக்காவோ "  குருவி இன்னமும் நீட்டி முழக்கி, நம் குரலுக்கு எதிர் குரல் கொடுக்கிறது. கிளியும், குயிலும், கரிச்சானும், புறாவும், சிட்டுக் குருவிகளும் சிறகடிக்கின்றன. தென்றலில் இலைகள் பட படக்க, தெம்மாங்கு பாடுகிறது இயற்கை. 


ஆறு அமைதியாய் அகண்டு கிடக்கிறது. வாரி இறைத்த நாட்டுச் சக்கரை மேல், சீனி தூவினார் போன்ற பரந்த மணல் வெளி. சுழன்று அடித்த காற்றில் வரி வரியாய், அலை அலையாய் மணல் மேடுகள், இட்ட வரை படங்கள். நதியின் ஈர மணலில் நண்டும், நத்தையும் இட்ட கோலங்கள். நிரந்தரமில்லா வாழ்வை நினைவுறுத்தல் போல, காற்றின் சீற்றத்தில் காணமல் போன அடித் தடங்கள். இறந்த விலங்கு களின் எலும்புத் துண்டுகள், ஈமக் கிரியை செய்த இடத்தில பூக்களும், புதுப் பச்சை மூங்கிலும், தென்னை ஓலையும், எஞ்சிய எலும்பும், மிஞ்சிய கரித் துகள்களும். மரித்து, எரிந்து போன மனிதனின் ஞாபக மிச்சங்கள். 
குப்பலாய் ஆங்காங்கே முளைத்திருக்கும் காட்டாமணிக் கூட்டமும், கைகோர்த்து நிற்கும் நாணல் புதர்களும்...  நீர் வரத்து இன்றி, ஆறு கூனிக் குறுகி, தூரத்தில் மிக இளைத்து, தவழ்கிறது. நீரில் முழங்கால் மூழ்கினால், பெரும் அதிசயம். ஆற்றின் அலைகளில் ஒளி சிந்தி, மந்த காசமாய் சிதறி சிரிக்கிறான், அந்திச் சூரியன். 
கன நேரம் ஆட்டம் போட்டும் களிப்பு அடங்காப் பேரன். கண்ணாடி நீரில் ஓடி முகம் பார்த்து, ஆற்றின் உள் கிடக்கும் மணல், கிளிஞ்சல் அள்ளி, வண்ண மயமாய், வகை வகையாய், வடிவழகாய் கூழாங்கல். பார்த்துப் பார்த்து வியக்கிறான். நுங்கு நீரில் சங்குக் கால் புதைய, குறு குறுக்கும் சிறுமீன் கூட்டம், அவன் பிஞ்சுப் பாதத்தை முகர்ந்து முத்த மிடுகின்றன. துள்ளிக் குதித்து, கூச்சமும், குழப்பமும், குதூகலமும், குறும்புப் பார்வையும், பயமும் என அவன் ஆடிடும் நடனம். 
நாழி ஆகிவிட்டது. அடிவானில் கோவைப் பழ சூரியன், குளிக்கப் போறான். நாள் முழுதும் தகித்தவனுக்கு சாயும் காலம், தாக சாந்தி நேரம். மாலை முடிந்து போனது என,மங்கிய மஞ்சள் கிரணங்களுடன் , மகாராசன், மறு உலகத்தில் உறங்கப் போறான்.


ஆறு தாண்டி அக்கரையில் மேய்ந்து கொட்டடி திரும்புகின்றன மாடு கள். மேய்ந்த காராம் பசுவுடன் குளித்து, தோளில் துணி உலர்த்தி கரை திரும்பும் கருப்பண்ணன், அவர் தலையில் சுமந்து வரும் புல் கட்டு, அதற்கு மல் கட்ட காத்திருக்கும், தொழுவத்தில் மற்ற பசுக்கள்.


வரிசை, வரிசையாய் அணிவகுத்து அந்தி வானத்தை பின்னுக்கு தள்ளி, அலை அலையாய் பறந்து செல்கின்ற பறவைக் கூட்டங்கள். மீன் கொத்தித் தின்ன, இன்னமும் காத்திருக்கும் கொக்குகள். கழனி யில் வேலை செய்து கை, கால், மேல் கழுவி களைப்பு நீக்க, கள்ளுக் கடை போகும் குடிமகன்கள். அங்கே, காத்திருக்கும் சுட்ட கருவாடும், நாக்கிழுக்கும் ஊறுகாயும்.
மெள்ளவே கரிசனமாய் படர்கிறது, கரும் இருட்டு.தொடரும் மின் வெட்டில், முகத்தை முக்காடிட்டுக் கொள்ளுகிறது கிராமம். நீர் தின்ன காற்றும், நிழலாடும் எண்ணங்களும் நெஞ்சைத் தொட வேரும், விழுதும் வீடு வந்து  சேர்ந்தோம் .                     

19 கருத்துகள்:

 1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க திரு.விமலன்.

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. திரு தனபாலன் அவர்களுக்கு வருகைக்கு என் வணக்கமும் கருத்துக்கு நன்றியும்.

   நீக்கு
 3. ஆற்றங்கரையை நேராய் கண்ட நிறைவு

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கு என் வணக்கமும் கருத்துக்கு நன்றியும்.

  பதிலளிநீக்கு
 5. பதில்கள்
  1. Vanavarayankudi alias Pudhagiri village at the bank of river kollidam..5 kms from Tirukkattuppalli on the way to Thiruvaiyaru.. that's where from my wife hails..

   நீக்கு
 6. Thanks for your visit Ravi..நான் புகுந்த.வாழ்க்கைப் பட்ட இடம்.பிறந்தது திருவாரூர் மாவட்டம்,செம்மங்குடி கிராமம்.ஆலங்குடி குரு பகவான் சந்நிதியில் இருந்து மூன்று கி.மீ. தூரம் தான் .

  பதிலளிநீக்கு
 7. ஆற்று நீர் வற்றினாலும் ஊற்று நீர் வற்றாத கொள்ளிடம்! கொள்ளிடத்துக் குளியல் சுகமே தனி! அனுபவித்தவன் நான், உங்களைப் போலவே! கரையோர மரங்கள், செடிகள், கொடிகள் பெயர்களோடு கட்டுரையில் படங்கள்! புழுதி பறக்க மண் வாசனையை பழைய நினைவுகளை கிளறிவிட்டது உங்கள் பதிவு. நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் திருமழபாடிக்கு இந்தப் பக்கம் தான் நான் எழுதிய ஊரும் .தின்னைகுளம் தாண்டினால் புதகிரி எனப் பெயர் .தங்கள் பதிவுகளைப் படித்தேன் .மிக அருமை. தற்போது தஞ்சையில் தான் உள்ளேன் .தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.என்றும் அன்புடன்.

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
 8. நான் சிறுவயதில் கொள்ளிடக் குளியல் போட்ட இடம் நீங்கள் சொன்ன புதகிரிதான். என்ன பொருத்தம் பாருங்கள். எனது புதகிரி நினைவுகள் குறித்து ஒரு பதிவு “எனது தாத்தாவிடம் இருந்த தாழம்பூ குடை” http://tthamizhelango.blogspot.in/2012/01/blog-post_16.html

  ( நானே பதிலளித்தால் சரியில்லை என்பதால் பதிலளி பகுதியில் இருந்த இந்த கருத்துரையை நீக்கியுள்ளேன். )

  பதிலளிநீக்கு
 9. எங்க தாத்தாவும் தாழம்பூ குடை தான், உபயோகித்தார்கள் .பழைய ஞாபகங்கள், மனதின் அடித் தளத்தில்.அருமையான பகிர்வு .நினைவு படுத்தியமைக்கு நன்றிங்க ..

  பதிலளிநீக்கு
 10. உங்கள் பயணத்தில் என்னையும் கைப்பற்றி அழைத்து சென்று விட்டீர்கள். ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 11. வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் நன்றிங்க ..திரு.மோகன்ஜி

  பதிலளிநீக்கு
 12. நாங்களும் உடன் பயணித்தது போல இருந்தது
  படங்களுடன் விளக்கங்களும் அருமை
  மனம் தொட்ட பதிவு
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. திரு .ரமணி அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 14. என் சொந்த ஊரும் புதகிரிதான் .
  நாங்கள் 50 வருடங்களுக்கு முன் கொள்ளிடத்தில் கோடை விடுமுறைக்குச் செல்வோம் .ஆற்றில் குளிப்போம் . பழைய நினைவுகள் வந்தன.

  பதிலளிநீக்கு