சனி, 2 ஜூன், 2012

இயற்கை வைத்தியம் ... ( Naturopathy )

இயற்கை வைத்தியமும் ..எங்கள் தேனிலவும் .


ஒரு வாரம் தங்கி தேனிலவு கொண்டாட திட்டமிட்டு,மேலூர் மேடோஸ் ( Melur Meadows ) வந்திருந்தோம். இங்கு வசிப்பவர்களோடு அளவளாவியதில், ( Lyaa Wellness center ) இயற்கை வைத்தியம் செய்து கொண்டதாகவும் ,உடல் பருமன் மற்றும் வியாதிகளின் தாக்கம் குறைந்து நலம் பெற்றதாக விளம்பினர்." யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே",எனபது போல் எங்களது கணிசமான தொப்பை ,நிறையவே தொந்தரவு கொடுத்தது. காலில் மூட்டு வலியும் கிட்டத் தட்ட நிரந்தர விருந்தாளியாய். கூட்டி கழிச்சி பார்த்து, வந்ததற்கு வைத்தியம் பண்ணிக் கிடலாம்ன்னு, முடிவுக்கு வந்தோம்.
உண்மையிலேயே தேன் நிலவு இங்கு தான் ஆரம்பிச்சுது.முதலில், திட உணவில் ஆரம்பித்து ,அப்புறம் நான்கு நாட்கள் காலையில், மூலிகைத் தேநீர் கொடுத்துவிட்டு, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தேனும் எலுமிச்சையும் கலந்த தண்ணீர் தந்தாங்க. இதை குடிச்சிட்டு இரவில் நிலவைப் பார்த்தோம் .அப்புறம் என்னாங்க?.முதலில் தேனீ மாதிரி சுறு சுறுப்பா,இயங்குகிற டாக்டர் ஜோடி திரு சதீஷும் ,திருமதி அபர்ணாவும் எங்களோட உடல் நிலையை ஆதியோடு ,அந்தமா விசாரிச்சாங்க .நான் எனக்கு " தண்டு வடத்திலும், சிண்டு முடியிற  இடத்திலும் பிரச்சினை", அப்படின்னு சொன்னேன். மேல பறைங்க என்றார் .விலாவாரியாய்,வரிசைக் கிராமமாய் ,வியாதிகளை நான் பறைய ,வைத்தியர் நிறையவே வாய் பிளந்தார் .சில பேருக்கு ஜலத்தில் கண்டம் என்பார்கள் .என் விஷயத்தில் கண்டத்தில் ஜலம். அதிர் வேட்டு போன்ற அடுக்குத் தும்மல்களுக்கு, எங்கள் ஏரியாவில் நான்ரொம்பவே பிரசித்தம். 
கூடவே, கண்ட நேரத்தில் வந்து, கதி கலங்க அடிக்கும் கழுத்து வலி கவனமாய்க் குறித்துக் கொண்டார் .
என் துணைவியார் மூன்று  பிரசவத்தில் இரு முறை சிசேரியன் .மாத விலக்கு நின்ற பிறகு உடல் பருமன் கூடி,மூட்டு வலியினால் அவஸ்தை .
நான் 15 வருடங்களாய் ரத்த அழுத்ததிற்க்கான மாத்திரை தினமும் சாப்பிடுகிறேன் .என் துணைவியாரும் ஐந்து வருடங்களாய்த் தொடர்கிறார் .இந்த மாத்திரைகள் எல்லாம் நிறுத்தப் பட்டு தொடர் கண்காணிப்பு .தினமும் மூன்று லிட்டர் அளவுக்கு நீர் பருகினோம் .இரண்டு நாள் தலை வலி ,வயிற்றுப் பொருமல் ,வாந்தி வரும் உணர்வு என்று ஒரே குடைச்சல் .காபி ,டி இத்தியாதி எல்லாம் கட் .

 நீர் சிகிச்சை உபகரணம்   
தண்ணீர் ,தண்ணீர் ,எலுமிச்சை ,தேன் மூல மந்திரமாயிற்று. காலையில்  யோகாவும், மூச்சுப் பயிற்சிகளும் .பிறகு எனக்கு மார்பு, மண்டைப் பகுதியில் நீர் சிகிச்சை, ஆவி பிடித்தல். மதியம்  தண்டு வடத்தில் நீர்க் குளியலும் ,பிறகு அக்கு பஞ்சர் சிகிச்சையும். துணைவியாருக்கு மண் சிகிச்சை, மணல் ஒத்தடம் என தொடர்ந்தது. இரண்டு வேளையும் இரத்த  அழுத்தம் சோதிக்கப் பட்டது . 
ஆவி பிடிச்ச நான்  
இரண்டு நாட்கள் நாட்கள்பழச் சாறு. பின் கடைசிஇரண்டு நாட்கள்  படிப் படியாய் திட உணவு .வேகவைத்த காய் கறிகள் ,சூப் ,முளை விட்ட பருப்பு வகைகள், புறப் படும் முன்பு ஒரு சப்பாத்தியை கண்ணில் காட்டினார்கள் .

 சிகிச்சை அளிக்கும் உதவியாளர்கள்   
இந்த மூன்று நாளும் இரண்டு கிங்கரர்கள் உடலை நீட்டி நெளி வெடுத்து விட்டார்கள் .மசாஜ் செய்து விட்டனர் .அப்புறம் நீராவிக் குளியல்.களைப்பிலும் ,பசியிலும் காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே என்று பெரும்பாலும் கண்ணுறங்கிப் போனோம்.
மிகவும் அருமையான அனுபவம் .எங்க வீட்டுக்கார அம்மா ஆறு கிலோ இளைச்சுட்டாங்க. நானும் ஐந்து கிலோ எடை குறைந்தேன். முக்கியமாய் , நான் எடை குறைந்ததற்கு, கொடுத்த பில்லும் ஒரு காரணம் .
 இயற்கை வைத்தியரும் ,இளமை திரும்பிய நாங்களும்.   
புறப்படும் முன்பு, கடைப்   பிடிக்க வேண்டிய உணவு முறைகள், பயிற்சிகள் எல்லாம் அட்டவணை போட்டு, கையில் தந்தனர். எந்நேரமும் ஆலோசனைக்கு, தயக்கம் இன்றி தொடர்பு கொள்ளச் சொன்னார்கள் .
மிகவும் பயனுள்ள சிகிச்சை. உடல் சுறு சுறுப்பாய் ஆனது உணர் கிறோம் . எங்கள் வயது ஒத்த, மூத்த குடி மக்களை சந்தித்து, அனுபவங்களைப்  பகிர்ந்து கொண்டது, அளப்பரிய ஆனந்தம். எப்படி இருந்த நாங்க ,கொஞ்சம் ஒல்லியா இப்படியாகி விட்டோம் என்ற சந்தோசம் .  மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் போது, நிச்சயம் இங்கு வருவோம்.
நாற்பது வருட மண வாழ்க்கையை நிறைவு செய்து மீண்டும்  தேனிலவு கொண்டாடின இடம் ஆச்சுங்களே ! மறக்க முடியுங்களா ?.                    

4 கருத்துகள்:

  1. ”தேனிலவு” கொண்டாடி எடை குறைந்து புத்துணர்வு பெற்றதற்கு வாழ்த்துகள் !!!

    Sneezing, Running nose, Watery eyes....Sinus Allergy பல வருடங்களாக என்னை படுத்துகிறது. பெங்களூர் வந்த்பிறகு கேரளா ஆயுர்வேத சிகிச்சை எடுத்தேன்... பலனில்லை :(

    தற்போது எங்கு இருக்கிறீர்கள்? தஞ்சாவூர் ???

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ரவி..தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.தஞ்சையில் தான் உள்ளோம்.தஞ்சை வரும்போது சொல்லவும்.சந்திக்க ஆவலாய் உள்ளோம்.நல்ல சிகிச்சையும் கவனிப்பும்.வித்தியாசமாக எங்களது 40௦ வது திருமண நிறைவை கொண்டாடினோம்.எதிர் காலத்திற்கு சிறிதே முன் நடவடிக்கை.அவசியம் இல்லத்திற்கு வர வேண்டுகிறேன்.அன்புடன்

    பதிலளிநீக்கு