புதன், 3 நவம்பர், 2010

நெஞ்சில் நிற்பவை..நான் பொறந்த மண்ணு.

நெஞ்சில் நிற்பவை..நான் பொறந்த மண்ணு.



 "டும்"," டும்", என பறை சத்தம், காதிற்கு பயணம் வந்தது.வரும் வாரம், அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று. பருவ மழை சிறிதே பொய்த்ததால், தண்ணீர் வரத்திற்காக தவித்துக் கிடக்கிறது கிராமம்.

 மக்களுக்கு மன நிம்மதி தரும் சேதி. ஏரி,குளம்,குட்டை,வயல் எல்லாம் பாளம், பாளமாய் "சஹாரா பாலைவனம்" போல் வெடித்துக் கிடக்கிறது. அக்கரைக்கு குறுக்கே நடந்துபோகவும்,மணல் அள்ளவுமே, அப்போதைக்கு ஆற்றின் உபயோகம். தலைக்கு தக்கன, வரி வைத்து ,பணம் வசூல் பண்ணி வாய்க்கால்,வடிகால் யாவும்,புல் புதர் நீக்கி கச்சிதமாய் செதுக்கப்பட்டு, விருந்தினரை எதிர் நோக்கும் வீட்டுக்காரரை போல் பொலிவாய் இருந்தது. கோடை மழையில் புழுதி உழவு செய்து நாற்றங்காலில் நாற்றுக்கள், காற்றில் அலை அலையாய், பச்சை தலை சாய்த்து வந்தனம் கூறி, புக்ககம் புறப்படும் பெண்கள் போல், நடவுக்கு தயாராய் இருந்தன.

ஏரி,குளம் நிரம்பி ஆற்று நீர்,வெடித்த வயல்களில் ஊறி கொஞ்சம் கொஞ்சமாய் நிரம்புகிறது. அப்போது நிலத்திலிருந்து வரும் வெக்கை, வெடிப்பிலிருந்து வெளிப்படும், பூச்சிகளையும்,பாம்பையும் கொத்தி தின்ன காத்திருக்கும் கொக்கு, நாரைகளின் நளின நடை.

 "உக்கும்"," உக்கும்" என, கணவன் அழைப்பிற்கு நாணி நாவசைக்கும், புது மணப் பெண் போல் குரல் கொடுத்து, ஒய்யாரமாய் நடை பழகும்,  வண்ண வண்ணப் புறாக்கள்.

"கீச்"," கீச்" என, ஓலி எழுப்பி, புழு தின்ன காத்திருக்கும் குருவிகள், வானத்தில் வட்டமிடும் வல்லூறுகள், கழுகுகள், கிளிகள் என இயற்கையின் களியாட்டம்.

மேற்கத்திக் காற்றில் செம்மையாய் புழுதிப் படலம் முன் வர, கட்டியக்காரனைப் போல் மண் வாசனையும், தொடரும் மழைத் தூறலும்.
இனி மேலும், இங்கு வேலை இல்லை என, வயலில் "இத்தனை துண்டு ஆடு,பட்டி கட்டி கிடை போட்டேன்", என கணக்கு காட்டி கூலி நெல் பெற காத்திருக்கும், கெடா மீசைக் கீதாரிகள். வானம் பாத்த பூமிலேயிருந்து, பஞ்சம் பிழைக்க வந்தோர். பனைவோலைக் குடை போட்டு, பொட்ட வயல் வெளியில், இதுகாறும் குடி யிருந்தோர். கையில் தொரட்டியுடன், கருவேல மர இலை,தழை, கருவைக்காய் அறுத்து ஆட்டுக் குட்டிகளுக்கு போடும், அவர் தம் இடைச்சிமார்.கடும் உழைப்பிற்கு அஞ்சாதோர். புறப்பட்டார், புலம் பெயர.

மாடுகள் பூட்டிய ஏர்கள் வரிசையாய் வலம் வர, ஆழ உழுது, சமனாய் சீர் படுகிறது, நிலம். இடுப்பு வேட்டிகளை தார் பாய்ச்சி கட்டி, துண்டை முன்டாசாய், மல்யுத்த பயில்வான் போல், மார் காட்டி, மண்வெட்டியால் கரை அணைக்கும் ஆட்கள். அவர்களின் புடைத்த புஜமும், திரண்ட கெண்டைக் காலும், செதுக்கிய கிரேக்க சிற்பம் போல். உடல் உழைப்பின் உச்சம் காட்டும்.

நடவு வயலில், சேற்றில் கால் புதைதலும், அலாதி சுகம்.நீரில் அலசிய நாற்றுக் கட்டின் வேர்கள், வெள்ளியும், தங்கமுமாய் மின்னும். உச்சிக் கொண்டை, வெற்றிலையில் சிவந்த வாய்,அள்ளிச் செருகிய சேலை, வரிசையாய் குனிந்து நாற்றை லாவகமாய் கிள்ளி எடுத்து, பற்றி இரு விரலால் சேற்றில் செருகி 'தன்னானே தானே தன்னானே' என காற்றில் மிதந்து வருகின்ற என் கிராமத்து சங்கீதம். உள்ளத்தின் உயிர்நாதம். சுயம்வர கூட்ட மாப்பிள்ளைகள் போல் சுருதிகள் கூடும். கிராம மக்களின் பிழைப்பிற்கான, உயிரின் ரீங்காரத்தில், இந்த சுருதிகள் களை கட்டும். கிண்டலும்,கேலிப் பாட்டும், நையாண்டிகளும் என கன்னிப் பெண்களும் மச்சான்களும், கள் குடிக்காமலே,போதையில் புரைஏறிப் போகின்ற காட்சி.

பின்னர் கரையேறி பசியாற்ற, கலயத்தில் நீராகாரமும், சோறும், சுட்ட கருவாடு, கெலுத்தி மீன் குழம்பு, நெத்திலி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் என கம கமக்கும்.நளனையும், கெஞ்ச வைக்கும் நள பாகம். இன்னமும் நினைத்தால் நாவில் நீர் ஊறும்.

பசுமையான வயல் வெளியில்,வரப்பின் மேல் நடப்பது ஓர் சுகமான அனுபவம்.பச்சை புற்களின் நுனிகளில் சொட்டும் பனித்துளிகள். மெல்லிய வெள்ளைச் சல்லாடை போர்த்திய புவிமகள்.உயரப் பனையிலிருந்து சாரை சாரையாய் எறும்புகள் போல் அரும்பி வழியும் நீர்த் திவலைகள்.ஈரத்தில் கால் பதிய, இதயம் எல்லாம் நனையும். முற்றிய நெல் வயல்களில், சான்றோர் போல் செருக்கின்றி, தலை வணங்கி நிற்கும் செந் நெற்கதிர்கள்.பொங்கலுக்காக புதுக் கதிர் அறுக்கும் வைபவம். தை பிறக்க வழி பிறக்கும்.

சாய்வு நாற்காலியில்,ஓய்வாய் அமர்ந்து, சிறு பிராயத்து நினைவுகளில், மனம். "பொங்கல் பண்ணிட்டேன்". உங்களைத் தானே? சாப்பிட வர்றிங்களா?, என்ற என் துணைவியாரின் குரல் கேட்டு. திடுக்கிட்டு விழிக்கிறேன். கொஞ்சமும்,நெஞ்சம் அகலா என் நினைவுகள்........

அசை போட்டதில் பசி இல்லை......

16 கருத்துகள்:

  1. உங்கள் எழுத்துகளை அசை போட்டதில் எனக்கும் பசியாறியது.அருமை.

    பதிலளிநீக்கு
  2. Appa!
    Ungalukku Nenjil nirpavai!
    naangal Yeattil mattum padipavai!
    Indha alaadhi sugangalai naangal izhandadhu yen?

    பதிலளிநீக்கு
  3. இனிமையான நினைவலைகள்! அருமை!
    ஆனால் அவை இப்போது கிடைப்பதில்லையே!

    பதிலளிநீக்கு
  4. நன்றி எஸ்.கே அவர்களே இன்னும்
    கிராமங்களில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.
    தேடினால் நிச்சயம் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  5. Young and dynamic.this generation has much more to enjoy..thanks Sadeesh for sharing your mind.

    பதிலளிநீக்கு
  6. அய்யா ..வணக்கம்.நினைவலைகள் அருமைங்க.

    பதிலளிநீக்கு
  7. பாராட்டுக்கு நன்றி.வணக்கம்.

    பதிலளிநீக்கு
  8. ஐய்யா நினைவுகள் என்றும் பசுமையானது என்பதை உங்களெழுத்து நிரூபிக்கிறது. நம்ம சொந்த ஊரின் சுகங்கள் மறக்க முடியுமா? வாழ்க்கை அங்கே கிடக்கிறது. வறுமை அகற்றுவதாய் நினைத்து வாழ்வை தொலைத்து விட்டோம். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஐயா

    நினைவுகளின்
    நீரூற்றாய்
    நிரம்பிய வரிகளில்
    நீரில்லாமல்
    நனைகிறது
    என் மனம்.........

    பதிலளிநீக்கு
  10. தமிழ்காதலன் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி

    பதிலளிநீக்கு
  11. தினேஷ்குமார் அவர்களுக்கு என் நன்றி.
    இனி நீர் இன்றி நனையாது என் மனம்.

    பதிலளிநீக்கு
  12. கண்முன் விரிந்தது கடந்தகாலம்.

    பதிலளிநீக்கு
  13. நண்பர் திரு .ஷாஜஹான் அவர்களுக்கு ..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க .

    பதிலளிநீக்கு
  14. நன்றாக ரசித்திருக்கிறீர்கள். இந்த சொர்க்கம்தான் ரசிக்கக் கூடியது. ஏனெனில். நமது சொர்க்கத்தில்தான் ' மனிதம் ' கலந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு