செவ்வாய், 19 அக்டோபர், 2010

காலத்தை வென்ற கதை ...

காலத்தை வென்ற  கதை ...

     T.T.L.Gam என்பவரின் வாழ்க்கையை பற்றிய கதை, இது.
இவர் உலகின் மிகப்பெரும் பணக்காரரில்ஒருவர். பில் கேட்ஸ்,
அம்பானி ,மித்தல் தர வரிசையை, கிட்ட தட்ட தொட்டவர்.
உலகெங்கும், பல தொழில் மையங்களுக்கு அதிபர். சமீப 
காலமாய், அவர் தன் சொந்த ஜெட் விமானத்தை தொடுவதில்லை.
அதுக்கு பதிலா, டெலி போர்டிங் ( Teleporting ) சேவையை பயன் 
படுத்துறார்.பிரேத்யேகமான கண்ணாடி கூண்டுக்குள்ளே நின்னுகிட்டு 
ஒரு விசையை அமுக்கினா, அடுத்த நொடியிலே ஆஸ்த்ரேலியாவுக்கோ,
அமெரிக்காவுக்கோ, நினைத்த இடத்திற்கு சென்று விடுவார்.

             
இது என்னன்னு கேட்டிங்கன்னா "ஸ்டார் ட்ரேக்" ஆங்கில 
சீரியல் பாத்தவுங்களுக்கு,ஒடனே  புரியும். எல்லாம் நம்ம ஊர் 
சமாச்சாரம்தான். நம்ம சித்தர்கள் செய்தது தான். இப்பவும் கூட
இப்படி சம்பவம், நம்ம திருவண்ணாமலையில் நடந்ததாய் யு டூயுப்
( You Tube ) லே போட்டு காமிக்கிராங்கோ. இதனாலே,  நிமிடத்திற்கு 
மில்லியன் டாலர் பண்ற அவருக்கு, ஏகப்பட்ட நேரம் மிச்சம்.


                                   அப்புறம் நம்ம ஆளு, மனித ஆற்றலை சிறப்பா உபயோகிக்கணும்னு கூகுள் கூட ஒப்பந்தம் போட்டு, டிரைவர்
 இல்லாம ஓடுற  பிரயுஸ் காரை  வாங்கிப்போட்டு, எல்லா 
டிரைவரையும் பெரிய வேலைக்கு அனுப்பிட்டாரு.
நம்ப மாட்டிங்க!

இந்த டிரைவர்  ஒட்டாத டெக்னிக்கு, எங்க அய்யா  காலத்திலேயே 
வந்திடுச்சி.செம்மங்குடி என்ற கிராமத்தில் எங்களுக்கு  கொஞ்சம்
நெலம்.நெறைய வைக்கோல். அங்கேயிருந்து 15 கி. மீ. தூரத்திலே உள்ள கும்பகோணம் முனிசிபாலிடிக்கு, வைக்கோல் சப்ளை  பண்ற 
வேலை,எங்க அய்யா  எடுத்திருந்தாங்க.
  
வண்டிக்காரர், இரவில்  பார வண்டியில், வைக்கோல் பொதிகளை ஏற்றி ,
மாடுகளை அதட்டிவிட்டு ,மூக்கணையில் படுத்து உறங்குவார். பாயிண்ட்
டூ பாயிண்ட் பஸ் மாதிரி, மாடுகள் வழக்கமான டீக்கடையில் நிக்கும்.
டீ குடிச்சிட்டு, திரும்ப அதட்டினா,முனிசிபாலிட்டியில் நிக்குமுங்கோ.
அங்கே இருந்து, வைக்கோல் இறக்கிய பிறகு, குப்பைகுழியில் உள்ள உரக் கழிவை வண்டியில் ஏற்றி, அதட்டி விட்டு படுத்தால்,வண்டி  ஊர் வந்து
 சேர்ந்துடும்.நம்புங்க....
அப்பாலே இதே ஆளு, T.T.L.Gam  ,கணினி வேலைக்கெல்லாம் 'சர்வரை'
உபயோகிக்காம 'பைவ் ஸ்டார்' ஹோட்டல் முதலாளியை  உபயோகிச்சாருனா, எவ்வளவு பணக் கொழுப்பு பாருங்க.
                இன்னும் ஒரு படி மேலே போய் க்லவூட் கம்புடிங் ( Cloud Computing
பண்றேன்னு பேர்வழி, ஆபிசை எல்லாம் ஊட்டிக்கு  மேல ரொம்ப  ஒசரமான 
இடத்திற்கு மாத்திட்டாரு. அங்கேதான் நெறைய மேகம் இருக்குமின்னு.

   இப்படி தனி ஆளாவே எல்லாத்திலயும் செயிச்சவரு, எவ்வளவோ
பாடு பட்டும், ஒன்னே ஒன்னுலே மட்டும்,  தோத்திட்டாரு. அதாங்க
" ஊழல் ஒழிக்கிற இயந்திரம்" பண்ணப் போயி. இப்ப நம்ம எல்லாரையும்
ஒத்தாசைக்கு கூப்பிடறாரு.உதவறது நம்ம கடமை. இல்லையா?. யோசிங்க.
தயங்காதிங்க!
            
          இன்னம் கதை கதையாய் சொல்லலாமுங்க.அடிக்க வருவிங்க. 
அதனாலே, இத்தோட நிறுத்திக்கிறேன். அப்பறமா பாக்கலாம்... .ஆ...
மறந்திட்டேனே. இதெல்லாம் நம்ம தஞ்சாவூர் தர்மலிங்கம் கதை தானுங்கோ..

(பின் குறிப்பு :- சம்பவம் எல்லாம் உண்மை.
பெயர்தான் மாற்றப்பட்டுள்ளது)                                                                   ,

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

நிலவே நீ என்னைச் சுடாதே .3.

நிலவே நீ என்னைச் சுடாதே .3.

அயர்ந்து உன் மடியில் தலை சாய்த்து,
உலகை மறந்து உறங்க வேண்டும்.
அன்பு மகன் பிஞ்சு முகம் பார்த்து,
கை கோர்த்து கதை சொல்லவேண்டும்.

கூழானாலும் உன் கையால் குடித்து,
கூடலும் பின் ஊடலுமாய் வாழ வேண்டும்.
கணுக்காலில் மெள்ளவே கிலு கிலுக்கும்
சலங்கை சத்தம். காதருகே உன் கனல் மூச்சு ..
மூக்குத்தி வெளிச்சத்தில்...
முணுமுணுத்த கதைகள்..இன்னும் பல...
நெஞ்சில் மூட்டுதே நெருப்பு ..
பிரிவின் பெரு வேதனை... தருகுதே தவிப்பு ..
நறு முகையாளே! நம் இதயப் பிரளயங்கள் ..
இன்னும் எத்துனை நாள் .....

கை நிறைய இல்லாவிடினும்,
கடனின்றி வாழல் வேண்டும்.
கரை கடந்து, காலத்தே உன் மடியில்
கண்ணயர வேண்டும். வருவேன்.
உனைத் தேடி, விரைவில். வருந்தாதே!.
வதைக்காதே !ஒரு போதும். சொல்லால்
எனை சோர்விழக்க செய்யாதே!.
நைந்த நூலில் நெய்த துணியாய்,
கிழிந்ததே, இன்று என் மனம்.
நினைவெல்லாம் நிறைந்த என்
நிலவே, இன்று நீ எறிந்த பாணம்.

இனி ஒரு பிறவி வேண்டேன்.
பிறப்பின் பிரிவு வேண்டேன்.
கனியே !கண்மணியே! என் காதலியே!
கொஞ்சம் பொறு. எட்டத் தூரம் இல்லை. இன்னும்
கொஞ்சம் தான். நாயகியே !.
வட்டியுடன் முதலாய் வாழ்ந்திடுவோம். என்
வஞ்சிக்கொடியே! எதிர் வரும் காலம், இனி
நம் கையில். நறு முகையாளே!
நாயகனை நம்பு!.    

               
       
.

நிலவே நீ என்னைச் சுடாதே.2.

நிலவே நீ என்னைச் சுடாதே.2.

பாரமும் பல சுமையும் ஏற்றி ,
பிஞ்சிலே கூன் விழுந்த நெஞ்சு .
பிழைப்பை தேடிய பொழுது, இழந்ததோ,
பள்ளிப்படிப்பு. எந்தையும் யாயும் இழந்து,
எடுப்பார் கைப் பிள்ளையாய்,
ஏவல்கள் சுமந்தேன்.
ஏறிய சுமைகளின் பாரத்தில்,
இடுப்பொடிந்து போனேன்.

கண்களில் கனவுகளே இல்லை.
கனவென்றால் தெரியா அளவுக்கு கவலைகள்.
கனவு காணும் நேரம் கூட,
உழைக்கவேண்டிய அளவு தேவைகள்.
மூச்சு முட்ட கடன் வாங்கி, பெட்டி கட்டி ,
கப்பலேறி ,கடல் தாண்டி,முழுதுமாய்,
வட்டி கட்டவே இயலாமல், நான்
வடிக்கின்ற கண்ணீர்.

வாழ்க்கை எனும் ஊழிப் பெருவெள்ளத்தில்,
உருட்டி விடப்பட்டேன்.வழி தெரியாமல்
திக்கு முக்காடியபோது ,
திசை காட்டியவள்.நீயே !.
வாழ்க்கையை கரையேற்ற வந்த,என்
கலங்கரை விளக்கே !. 
காயமான என் மனதிற்கு,  மயிலிறகால்
தடவிய சுகமே. உன் வார்த்தைகள் தானடி.

என் நிலவே நீ என்னை சுடாதே.....

( இன்னும் கொஞ்சம் சுடும் .....)                

நிலவே நீ என்னைச் சுடாதே .1.

நிலவே நீ என்னைச் சுடாதே .1.

அங்கேயே இருங்கள்! அள்ளிச் செல்வம் குவியுங்கள் !
இங்கே ஓர் அபலை இருப்பதையே, மறந்தீர்!. என்றாள்.
அடுக்கடுக்காய் அள்ளிக் கொட்டினாள். என் அல்லிக்கொடியாள்.
அல்லலில், அங்கே அங்கலாய்க்கிறாள். என் அங்கயர்க்கண்ணி.

பாலை வெளியில் பாழும் வெய்யிலாய், பதைக்குதே என் மனம்.
பாவை அவள் சொல் பாய்ச்சியதே, இதயத்தில் இன்னுமோர் கூர் அம்பு.
எப்படிச் சொல்வேன். என் சொல்லித் தெரிய இயலா சோகங்களை.
எவருக்குப் புரிய வைப்பேன் ?.என் இதயம் வடிக்கும் இரத்தக் கண்ணீரை.

பித்தனாய் பேதலித்துப் போனதும், நித்திரை இன்றி,
நித்தமும் நடைப்பிணமாய், நான் படும் அவலங்களை,
பிரிவுகளின் பெரும் துயரில், எண்ணுகிறேன். ஏன் பிறந்தேன் ?.
பிறக்காமலே இருந்திருக்கலாம். பிறந்த அன்றே இறந்திருக்கலாம்.

( நிலவு இன்னும் சுடும் ......)

     
         

சனி, 16 அக்டோபர், 2010

மானே! மயிலே! உன் மச்சானின் மறுபக்கம் ...


மானே! மயிலே! உன் மச்சானின் மறுபக்கம் ..அத்தியும், குறிஞ்சியும் அடுத்தடுத்து பூத்தபோதும், உன்னிடமிருந்து மடல் ஏதும் இல்லை. இன்று காலைகண் விழித்து, கதவு  திறந்தபோது, வாசலில்  பஞ்சுப் பொதிகள்.குவித்து வைக்கப்பட்ட உப்புப் படிவங்கள். எங்கும் வெண் துகள்களாய், பனிச் சிதறல்கள்.முதல்  முறையாய் நேரில் அனுபவித்த போது, நெஞ்சில் எக்காளமிட்ட மகிழ்ச்சிப் பூக்கள் ஏராளம். குழந்தை போல் ஓர் குதூகலம்.
அரும்பு  மலர்களாய், அடுக்கடுக்காய் காற்றில்பறந்து , மெள்ளவே உதிர்ந்து, மெத்தையாய், பூமியின் மேல், ஆசையாய் படிகிறது. பாலைவனத்திற்கு ஒரு  பனிப்  போர்வை. ஊடே உடைந்து , சுக்கு  நூறாகும்,  கண்ணாடிப் பனியில், பட்டுப் பிரகாசிக்கும், ஆயிரமாயிரம் கதிரவனின் கதிர்கள். சில  மணி  நேரமே யாயினும், என் சிந்தை கவர்ந்த காட்சி.
சின்ன இடை, வஞ்சிக்கொடி உன்னுடன் கூடி , ஆடி, ஓடிப் பாட, ஓர் சரியான  இடம்.கன்னங்குழிய நீ சிரிக்க,  நாம் கை கோர்த்து நடக்க வேண்டும்.

சுற்றிலும் தொடுவானம். தொட்டுக் கொள்ளும் தூரத்தில். கிட்டப் போனால் எட்டிப் போகும், மர்மம்  தெளிய வேண்டும். நம் மாயை விலகவேண்டும். பாரதிராஜாவின் கனவுக் காட்சிகள் போல்,வெண்பட்டுத் தேவதைகள் நம்மை சுற்றி  நடனமிடுவதாய், மனசில் மானசீக கற்பனை. என்ன?எனக்குபுத்தி பேதலித்து விட்டதோ?. என ஐயப்படாதே!.
ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் போல ,அலைக்கழிக்கும் ஓயாத என் எண்ணங் களின் வடிகாலே, இவை. புழுவாய் கூட்டை கிழித்து, பின் வரிசையாய், பரிணமிக்கும் வண்ணத்துப் பூச்சிகளே, இவ்வார்த்தைகள். சில சமயம் தங்கு தடையின்றி பொங்கிப்  பிரவாகம் எடுக்கிறது.
தனிமையில் இரவில் நித்திரை வேண்டி,  நிதம் தவம். இமை மூடா  இரவுகள்.
சன்னமான ஒளியில், காதில் மெள்ளவே கேட்கின்ற சங்கீதம்.கருத்தாழமிக்க கண்ணதாசனின்கவிதைகள், சுசீலா, ஜானகியின் குயிலொத்த,  குரல்களில்..

கத கதப்பாய் கம்பளி போர்வைக்குள் நான். விரிகின்ற  என் கற்பனை சிறகுகள். விவரிக்க இயலா வினோத சிந்தனைகள். ஆழ்மனத்தின்   திரையில் தொடர்பு இல்லா பல காட்சிகள்... கனவுகள்... சோகங்களும், சொர்க்கங்களும் அதில் அடக்கம்.
விடியலுக்கு சிறிது முன்னால்,களைத்துப் போன மனமும், அலுத்துப்  போன உடலுமே, உறக்கத்திற்குஅச்சாணி.
அரேபியாவில்நான்பார்த்த, அநேகரின் நிலையும் இதுவே.
பகிர்வதை பாரமாய் நினைக்காதே!
மானே! என் மயிலே! மச்சான் நான் உனக்கு எழுதுவதில் என் மனச் சுமை குறைகிறது....
( எப்போதோ, ஒரு காலையில்...பாலையில்...வருத்தும் தனிமையில்  எழுதியது.)

நன்றி : கூகுள் படங்கள்

நண்பர்க்கு கடிதம் .2.

நண்பர்க்கு கடிதம் .2.

எல்லையில்லா பாலையில்,
எல்லாம் இழந்தது,
என் மனம்.
எப்போது பெய்யும்?.
எங்ஙனம் பெய்யும்?.

உன் கடித மழை.
கருவாகி உருவாகி ,
கனத்து பொழிய வேண்டும் .
அரபிக் கடலில் சீசாவில்,நான்
அன்று இட்ட சேதி ,
இன்னுமே சேரலையா?.

அதிவேகமான கிழக்கத்தி,
காத்தில் கிசுகிசுத்தேனே ,
காதில் இன்னும் கேக்கலையா?.
தந்திக் கம்பங்களில் சங்கேதமாய்  ,
கல்லால் தட்டினேனே .
தங்கள் இதயத்தில் இன்னிசையை,
இன்னமும் மீட்டலையா?.

தத்தித் சென்ற இலைகள்,கடலில்
தவழ்ந்து வந்து சொல்லலையா?.
கொட்டும் மழையில்,
விழும் ஒரு துளிக்காக,
காத்திருக்கும் சிப்பியாய்.இன்னமும் நான் ....              

நண்பர்க்கு கடிதம்.1.

நண்பர்க்கு கடிதம்.1.
நாடு விட்டு நாடு.
நாட்பட்ட கடிதம்.
நலம்  நாடி,
தங்களின் இடம்
தேடி, ஓடி வரும்.

மன்னிப்பீர்!
மறந்தேனில்லை!
தங்களை
இன்னும், இன்றும்.

மறுபடியும்,
மடல் மூலம்,
மனக்கதவு
திறப்பீர்.

எல்லையில்லா நீரால்,பல சமயம்
தத்தளிக்கும் நம் நாடு விட்டு,
தொல்லையில்லாமல், மணல்வெளியில்,
நீர் நீந்தக் கற்றீர்.

நீரில்லா நீர் நிலையில்,
நீந்தக் கற்ற வித்தகரே.
நீரில்லாமல் நினைவில்,
நித்தமும், தவிக்கிறேன்
அன்பு நண்பனே அறிவீர்!
உடன் மடல் எறிவீர்!

வியாழன், 14 அக்டோபர், 2010

வணக்கம் .3.
நாட்டின் நாடி நரம்பெல்லாம்,தொடுகின்ற இரத்த,
நாளங்களாய்  கண்ணாடி நார்  இழைகள்,
இந்தியாவின் இதயத் துடிப்பை அதிகரிக்கும் ,
இணைய தள அதிவேக இணைப்புக்கள்.
கணக்கில்லா கணினிகள், கோடானு கோடி,
மனிதப் புள்ளிகளை, மாயாவி போல்,
நொடியில் இணைக்கின்ற, தொலை தொடர்பு.
எட்டாத முடுக்குகளில் இருக்கும் எளியோர்க்கும்,
சட்டென சடுதியில், கிட்டிடும்  தகவல் வசதி.
கட்டாயமாய் கல்வி , மருத்துவம், அரசாங்க சேவை ,
கணினி, தண்ணீர், பால், நோய் தடுப்பு என,
அடிப்படை வசதிகள் அனைத்தும்,
அனைவருக்கும் கிடைத்திட, அறிவு ,
அறிவுசார் பொருளாதாரம், இவையே,
அடுத்த தலை முறைக்கு ஆயுதமாய்,
ஆயத்தமாக்கவும், உழைப்பை மதிக்கவும்,
உற்பத்தி திறன் பெருக்கவும், திட்டம் தீட்டி,

" இணையில்லை இந்தியர்க்கு இனியும் ,
இவர் துணை வேண்டி உலகம்,இனி  அலையும்."

என்ற நிலைக்கு கொண்டு வர, பாடுபடும் ,
சாம் பிட்ரோடா வுக்கும், அவர் தம் குழுக்கும்.
 இன்னுமோர் வணக்கம்.இதயம் கனிந்த நன்றி              

செவ்வாய், 12 அக்டோபர், 2010

சிரம் தாழ்த்தி,கரம் கூப்பி பணிவான என் வணக்கங்கள் ....

வணக்கம் .1.

 
குமரி முதல் இமயம் வரை,
மற்றும் புலம் பெயர்ந்து,
புவியனைத்தும் குடியிருக்கும் இந்தியரும்,
பூவுலகில்  தலை நிமிர, தளம் அமைத்தீர்.


தன் தொலைநோக்கால்,
தரணியில் இந்தியா  தான்  நிமிர,
இன்னும் பத்தில், இருபதில்,
வளமுடன், வல்லரசாகவும் மாற,
வழி வகை தான்  நீர்   சொன்னீர்.

ஈரமில்லா உலகுக்கு   நம்மைப் பற்றி,
எடுத்தியம்ப, ஏவுகணை தந்தையாய்,
எய்தீர்! அக்னி,  எனும் அம்பினை.
பிருத்வியையும்  பெற்றெடுத்தீர்.

பொக்ரானில் புத்தர் சிரிக்க,அதிர்ச்சியில்,
புது நிலையில்  அணு உலகம்,
வல்லரசுகளின் தராசில்  எடை மாற்றம்.
வலிமை என்றும்  வம்புகளை குறைக்கும்.
தன்மானம் கூட்டி, வறுமை சுருக்குமென்றீர்.

கனவு கண்டீர். நம் நாடு நலம் பெற.
கனவு கண்டீர். நாளும் இக்கனவு நனவாக.

நாளைய   உலகம். நம் சிறார் கையில் .
நல்லதோர் உலகம். ஐயமில்லை! அவர் அமைப்பாரென,
கதை சொன்னீர். கனவுகள் பல, காணச் சொன்னீர். 
கனல் மூட்டி, கங்குதனை அவர் உள்ளத்தே எழுப்பி,

நாளெல்லாம் பாடுபடும்,
நானிலம் போற்றும்,
அய்யா அப்துல் கலாம் 
அவர்களுக்கு, நலமுடன் வாழ,
நன்றிகள் கோடி சொல்லி,
நாட்கடந்த என் வணக்கம். 
     
( "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வில்லை   .... ".  
ஒரு நகர்புற கிராமத்தானின் நாள் கடந்த நன்றி நவிலல்.
...........வணக்கங்கள் தொடரும் ...........)

வணக்கம் .2.

முகம் தெரியா இந்தியனுக்கு,
முகவரி தரும் விழா.மராட்டியத்தில்.
இருந்தானா ? இறந்தானா? என்று தெரியாத,
இந்தியனுக்கு, இன்று ஆதார். (AADHAAR).
இதுவே, இவன் வாழ்க்கைக்கு, இனி ஆதாரம்.
இன்றைக்கு, இவனுக்கு கிடைக்கும் அங்கீகாரம்.

பஞ்சம் பிழைப்பவனிடமும் லஞ்சம்,
மிஞ்சும் பணமோ மிக மிக கொஞ்சம்.
வஞ்சிக்கப்படலும், வழங்கப் படாதலும்,
எஞ்சிய  நாட்களில் மிஞ்ச,இந்த  ஆதாரம்.
ஜீவாதாரம்.

உள்ளுரிலேயே ,
உருவமின்றி அருபமாய்,
உலவும் அபலைக்கு,
உலகை மீட்டுத் தரும்,
நந்தன் நிலேக்கேனிக்கு,
நெஞ்சு நிறைந்த வாழ்த்துக்கள்.
நன்றி நிறைந்த, வணக்கங்கள்.

( ஒரு நகர்புற கிராமத்தானின்,
 நாள் கடந்த நன்றி நவிலல்) 

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

காத்திருக்கிறாள் .4...

வருட இறுதியில்,
வசந்தம் வந்தது .
வந்தது. என்னுயிர்
நிற்பதும் நடப்பதும் ,
நினைவில்லை.
நிசமா?.  கனவா?.
தெரியவில்லை.

வாங்கி வந்த சேலை கட்டி,
ஆரம் அணிந்தபோது,
கணவனின் கள்ளப் புன்னகை.
லேசானது நெஞ்சம்.
விடியும்போதேல்லாம் நாட்கள் ,
கணக்கெடுத்து கனக்கும்.

வருடமொன்று குறைந்ததென,
என்னை  நானே ஒப்புக்குத் தேற்றி ,
கரை புரளும் கண்ணீரை அணை போட்டு,
விழியால், விடை கொடுக்கும் போது,
இன்னுமொரு, வருடமென்றான்.
மடை திறந்த வெள்ளமாய்,
மறுபடியும் நான் .......

காத்திருக்கிறேன் ......

காத்திருக்கிறாள் .3.

காலையில் பிடித்தது நாட்காட்டி தான்,
காத்திருக்கும்  நாள் குறைந்ததே.
மாலையில் பிடிக்காததும் அதுதான்.
மாறாமல் இருக்கிறதே.

தன்னையறியாமல் கதவிற்கிழுக்கும்,
தபால்காரரின் மணியோசை.
மாதம் முழுதும் தவமிருந்து,
மணியாய் வரும், ஒருநாள் மடல்.

பிரிக்கும் போது,பரிதவிக்கும்.
மனம் பரபரக்கும்.
கையெழுத்து காணும் போது,
குபுக்கென்று, கண்ணீர்  கொப்பளிக்கும் ...
கை பிடித்ததும், நகம் கடித்ததும்,
கால் நெட்டிஎடுத்ததும்,
தலை துவட்டியதும் ,
எல்லாம் சேர்ந்து, முட்டி மோதும்.

இன்று கோவிலுண்டு ,
காலற நடையுண்டு.என்னவனோடு
தொலை பேசியில் பேச,
திரும்ப திரும்ப ஒத்திகையுண்டு.

மணியடித்ததும் ,மெல்லிதாய் ,
கடிதம் கிடைத்ததா? என்றவுடன் .
சொல்ல வந்தது சொல்லாமலே,
மௌனம் மட்டும் காதல் பேசும் ....                         

சனி, 9 அக்டோபர், 2010

காத்திருக்கிறாள் .2.

காலை வருகிறது .
மாலை போகிறது.
நாட்களும் நகர்கின்றன .
நினைவுகள் மட்டும் ,
வளர் பிறையாய்!
வளர் பிறையாய்!

செய்யாத சமையல்,
சொல்லாத காதல்,
ஊடலும் கூடலும் ,
கட்டாத புது சேலை,
ரசிக்காத நிலவு ,
பகிராத கவிதை ,
சின்ன சின்ன,
விசும்பல்கள் எனக்குள்ளே ...      

காத்திருக்கிறாள் .1.

காத்திருக்கிறாள் ....
 
கண் நிறைந்த நாயகன்
கடல் தாண்டி,போன போது,
கண்ணீர்க் குளத்தில்,
கரைந்தது,
மையல்ல.மனம்.
 
கடனெல்லாம்,
காரணம் காட்டி,
விநாடிகளை, 
வருடங்களாய் ஆக்கி,
எதிர்காலம் வெளிச்சமாய் ,
நிகழ் காலம் இருட்டாய்,
சொல்லிய சமாதானமெல்லாம்,
மறந்து போய்,மறத்துப் போய்,
மரமாய் நிற்கிறேன் நான்.
 
(  சில வருடங்களுக்கு முன்,என் மகள் திருமதி. ஆஷா வெங்கட்ராமன் அவர்கள் எழுதி,
என்னுடன் பகிர்ந்து கொண்டது.இன்னமும் உதிரும் ..   )                    

புதன், 6 அக்டோபர், 2010

முஷ்டாகின் முடிவான பதில் ...

முஷ்டாகின் முடிவான பதில் ...

என் கேள்வி : சவுதியில் இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்திருக்க வேண்டுமா ?உங்கள் எதிர் காலம் எப்படிப்  போகும் ?.

திரு முஷ்டாக் :
கட்டைதனை எரித்திடாமல், சொர்க்கம் காண முடியுமா ?
மட்டைதனை உரித்திடாமல், தேங்காய் காண முடியுமா ?
குட்டைதனை குழப்பிடாமல், மீன் பிடிக்க முடியுமா?
முட்டைதனை உடைத்திடாமல் ,ஆம்லேட் போட முடியுமா?

கல்லை போல மகனிருக்கான் ,கவலையில்லை தனக்குத்தான்.
நெல்லை தாரேன்,பணமும் தாரேன் ,நிதமும் தாரேன்,உனக்குத்தான்.
சொல்லை தந்தேன்.என்று சொன்னான் .மனமும் போடுது கணககுத் தான்.
பல்லை காட்ட தேவையில்லை .ஏது குறை எனக்குத்தான்.

பணம் காய்ச்சி மரமென்று, சுற்றத்தார் எண்ணவில்லை,
குணம் மாய்க்கும்,பணம் மீது உற்றாரின் எண்ணமில்லை.
மணம்வாய்ந்த, என் உணவை சற்றேனும் உண்ணவில்லை.
மனம் தோய்ந்த அன்புண்டு , மற்றேதும் திண்ணமில்லை.

                                                                                                                                                                                வீட்டிற்கு போகச் சொன்னது, 'முஷ்டாகின் கஷ்டம் இல்லை,
அவரின் அதிர்ஷ்டமே',என  நண்பர் கார்த்திகேயன் அவர்கள் எழுதிய மடல் இது.அவருக்கு என் நன்றி.அயல் நாட்டில் பாடுபட்ட குறிக்கோள்
நிறைவேற, இழந்த சிலதும், கொடுத்த விலையும்,வாழ்க்கையில்  
வருத்தப்பட வேண்டிய அங்கமில்லை ...

                                   ....குறிக்கோளை எட்டி இருந்தால்   ....     

செவ்வாய், 5 அக்டோபர், 2010

முஷ்டாகின் பதில்கள் .2.

முஷ்டாகின் பதில்கள் .2.

என் கேள்வி:
நன்றாக படித்த,உழைக்கத் தயங்காத நீங்கள், சிக்கனமாய்
இருந்து வீடு கட்டியிருக்க கூடாதா?.

திரு முஷ்டாக்:
வீடு இல்லை தமக்கென ,வருஷம் இருபதாச்சுது,
மாடு போல உழைச்சு, கையும் காலுமசந்து போச்சுது .
பாடுபட்டுப் பரிதவிச்சும், பயனுமில்லா தாச்சுது.
ஏடு படிச்சு, என்ன லாபம்?. என்றும் வறுமை ஆச்சுது.

ஆறு மாதம் தவமிருந்து, ஆறு நூறு சேமிப்போம்,
ஆறு போல செலவு வந்து, அடித்துக் கொண்டு போய்விடும் .
கடனை வாங்கி,  உடனை வாங்கி, ஜால வித்தை காட்டுவோம்.
கடனை தீர்க்க கடனை வாங்கி நாளும் பொழுது ஓட்டுவோம் .

என் கேள்வி :
 14ஆண்டு சவுதி வாழ்க்கைக்கு பிறகு தற்போது உங்கள் நிலை
என்ன?.
 
திரு முஷ்டாக்:
உண்ண ஏதும் குறைவில்லை.நுழைந்திடாத கடையில்லை,
எண்ணம் போல,குவித்த பொருட்கள், நிறுத்து பார்க்க எடையில்லை.
மண்ணகத்தில் மனையை வாங்கி, வீடு கட்டத் தடையில்லை.
கண்ணைப் போன்ற மக்கள் படிக்கக், கொடுக்க பணம்,முடையில்லை.

பாலை,எந்தன் பாலன் காண, பாலைவனத்து வாழ்க்கையாம்.
சேலை எந்தன், மனைவி வாங்க ,காலை மாலை வேலையாம்.
மாலை எந்தன், மகளும் காண, வேலை ஏதும் செய்குவேன்.
வேலை ஒன்றில், மகனும் சேர, இரவும் வேலை பண்ணுவேன் .

          ( வினாவும் விடைகளும் இன்னமும் தொடரும் ...)        


                       

முஷ்டாகின் பதில்கள் .1..

முஷ்டாகின் பதில்கள்   .1.
                                                    முஷ்டாகின் கஷ்டம் என்ற என்
கடிதத்தை படித்து டாக்டர். கார்த்திகேயன் அவர்கள் எனக்கு
மறு மொழி இட்டதை, இன்றளவும் பத்திரமாய் பாதுகாக்கிறேன்.
1999 ம் ஆண்டு ,  சவுதியில் ஷருராஎன்னுமிடத்தில் சந்தித்தோம்.
ஒரு நாணயத்தின் மறு பக்கத்தை பார்க்கவும்,சதா
துன்பங்களையே நினைத்திராமல்,அடைந்த வெற்றிகளையும் ,
கடந்த நிலைகளையும் பற்றி, மகிழ்சியுடன் பார்க்க சொல்லி அறிவுறுத்திய  மடல்.
         என் கேள்விக்கென்ன பதில்.... என முஷ்டாக்குடன்  மானசீகமாய் உரையாடி ,அவர் எனக்கு பெற்று தந்த விடைகள் ..
என் கேள்வி  :
திரு.முஷ்டாக் அவர்களே ,இக் கடிதம் பற்றி தங்கள் கருத்தென்ன ?.
திரு.முஷ்டாக் :
ஒன்றுமில்லை எந்தனுக்கு ஈரேழாண்டு முந்தையில்,
அன்று இல்லை உடுப்பதற்கு, மக்களெல்லாம் கந்தையில்.
இன்று இல்லை, கஷ்டமில்லை, கவலையில்லை சிந்தையில்.
என்றுமில்லை, துன்பமில்லை, வாழ்க்கையென்னும்  சந்தையில்.
என் கேள்வி :
பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னால் பாகிஸ்தானில் உங்களுக்கு என்ன கஷ்டம் ?.
திரு.முஷ்டாக் :
துன்பம் கண்டேன். துயரம்  கண்டேன். துடைக்கும் வழி அறிந்திலேன்.
துணைவி கண்ணில்  நீரைக்கண்டும் துடைக்கும் வழி தெரிந்திலேன் .
துள்ளும் மக்கள் கல்வி கற்க ,கொள்ளைப் பணம் தேவையாம்,
வெள்ளைப் பணம் சேகரிக்க, தத்தளித்து தவித்திட்டேன்.
                 
                     ( வினாவும் விடையும் இன்னமும் தொடரும் ...)
       

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

முஷ்டாகின் கஷ்டம் ...

முஷ்டாகின் கஷ்டம் ...

முடிவான பயணத்திற்கான முத்தாய்ப்பு ஓலை.
வெண்தாடி வேந்தரின் அஞ்ஞாத வாசமாம்,
பதினான்கு ஆண்டுகளின் பணிக்கான பயணசீட்டு.
சுருக்கென்று சொல்லாமல், கொள்ளாமல் தைத்த கூரம்பு.

பின் நோக்கி பார்க்கிறார். தன் மன ஏட்டை புரட்டுகிறார்.
சல்லாபம், உல்லாசம்.  கடந்த முறை சங்கமத்தின்,
நித்திரை கலைந்து, வந்த முத்திரை.இன்று சிறுவன். 
கனவுகளுடன் கண்களில்,எதிர்காலம் தேக்கி நிற்பவன்.
வினா எழுப்பும் சிறுவனுக்கு, 
விடை சொல்ல வேண்டும்,எதிர் காலம்.
அருமை நாயகிக்கு ஆசையாய் பூட்ட ,
நகைகள் தேவை இன்னும்,
பாக்கியாய்,பாகிஸ்தானில், 
பாதியிலே நிற்கின்ற பளிங்கு மாளிகை.
எண்ணற்ற எதிர்பார்ப்புக்கள்,
இன்னும் எல்லோரிடமும்.
வறுமைக் கோட்டை தாண்ட, 
வறண்ட நிலத்திற்கு வந்ததால்,
வனப்பு சுந்தரி, வாலைக்  குமரி,
இன்று வயோதிக கிழவியனாள்.
காதலால் கவர்ந்தவளின்,
கன்னக் கதுப்பில், கணக்கில்லா  கோடுகள்.
வெளுத்த தலை, நரைத்த தாடி,
விழுந்த பற்கள், இவருக்கு வெளிறிய தேகம்.
வாழ்க்கை பயணத்தின் கடைசி அங்கம்.
இது ஓர், உதிரப்போகும் சருகு.
கிழவனும் கிழவியுமாய்,
சேர்ந்து கூழ் குடிக்க ,
வந்த நல்வாய்ப்பு இது.
ஆனால் அங்கே வரேவேற்பில்லை.
வருவாய் இழக்கப் போவதால்.

இன்று பட்டுப் போனது,
இந்த பணம் காய்ச்சி மரம்.
நிழலில்லை. நிதரிசனமாய்,
நான் கண்ட நிசம் இது .          

வெள்ளி, 1 அக்டோபர், 2010

கலங்காதே! மனமே! காத்திரு ....

கலங்காதே ! மனமே ! காத்திரு ....
கறுத்த மீசைக்காரன். சற்றே கனத்த உடம்புக்காரன்.
கண்மாய் கரையோரம், காணி நிலம் வாங்கிடவும் ,
கால் வயிற்றுக் கஞ்சிக்கு கணிசமாய் வழியிடவும் ,
கடன் வாங்கி,கப்பலேறி ,காலத்தை போக்குகிறான்,
கழுத்தளவு வட்டி கட்டி, இன்று  கண்ணீரும் கம்பலையுமாய்.
ஊருக்கு கிழக்காலே, இன்னும் வேயாத ஓர் வீடு,
ஊருக்கு போகு முன்னே முடித்திடத்தான், வேண்டுமவன்.
தேவைகள் தணியவில்லை, இன்னும் பணம்,
தேடுதலும் நிக்கவில்லை.
பத்தெட்டு வயசினிலே, இவன் மேல் மீசை கருக்கையிலே ,
முத்தான குமரியவள், மூப்பான தன் மாமன் பொண்ணு ,
மாமன்கள் தொல்லையாலே, மாலையிட்டு மணமுடித்தான்.
மனசெல்லாம் காதல் இல்லை. மல்லிகைப் பூ வாசம், விடவும் இல்லை.
ஆண்டுகள் ஆகும் முன்னே, அடுத்தடுத்து பெத்த புள்ள ,
ஆள வந்த ,அதில் ஒன்னு காலனிடம் ,கடிதில் போனான்.
பின் ஒரு நாள் பித்தனாய், புத்தனை போல் ஞானம் தேடி ,
இவன் காத்தும் கூட, காணாமல் ஓடிப் போனான்.
பேதலித்த பெண்ணவள் ,பெரும் துயரில் மூழ்கிப் போனாள்.
ஓடுகின்ற மேகத்தோடும், வீசுகின்ற  காத்திடமும்,சேதி சொல்லி ,
ஓயாத தேடல், வேண்டாத தெய்வமில்ல, விசும்பல்கள் ஓயவில்ல.
ஆண்டுகள் ஆகிப் போச்சு.  பல ஆவணிகள் ஓடிப் போச்சு
அவன்  விட்டுப் போன ஆட்டுக்குட்டி, இன்னைக்கு 
மந்தையாய் ஆயிடுச்சு .
ஆடாத ஆட்டம் ஆடி,  முறுக்கெல்லாம் தான் கரைய,
நாடி தான் தளர, அந்திக் கருக்கலிலே, ஓர் ஆடி இரவினிலே ,
வழி தவறிய கறுப்பாடு, வந்தது தன் கூட்டுக்குள்ளே.
வீதி எல்லாம் விளக்கு வச்சு ,தன் விடியலைத் தான்,அவ சொன்னா.
விசிய சாமரம், விலகிய முந்தானை, முன்னூறு முனகல்கள்,
நைந்த பாயில், நாள் தோறும் நாடகம்.
சுகமெல்லாம் ஆச்சு. சொத்தும் கொறஞ்சு போச்சு .
வயிற்றுக் கஞ்சிக்கு வழி தேடல் ஆச்சு .
சுருக்கென, கடன் வாங்கி, நறுக்கென கப்பல் ஏறி,
நாலு கடல் தாண்டி,மாமாங்கம் ஆகிப் போச்சு.
மாமதுரை மறந்து போச்சு.
மாமன்னன் ராமனோட,
வனவாசம் கூட, முடிஞ்சு போச்சு.
கப்பலும் தான் ஏறி, கன காலம் ஆகிப் போச்சு.
கண்ணீரும் வத்திப் போச்சு. மனசு கவலையில் மரத்துப் போச்சு. 
கட்டிக்கிட்ட பொம்பளைக்கு, கன்னமும் ஓட்டிப் போச்சு.        
கறுத்த மீசைக்காரன். இக் கண்ணீர்க் கதைக்கு சொந்தக்காரன்.
காலங்கள் ஓடிவிடும். கவலைகள் தான் தீர்ந்து விடும் .
கிழவியுடன் கூடி  காலத்தின்  நினைவுதனை,
கொப்பளிக்கும் காலம் வரும் .நல்ல காலம் வரும்.
கலங்காதே மனமே .காத்திரு ....
                          (  இது கதையல்ல ...)    

துரபா பயணம் ...

துரபா பயணம் ...
கரு நாகமாய் நீண்ட தார் சாலையில்,
கனவேகமாய்  கார்கள்.
பச்சை முட் புதரில்,  இரு புறமும்,
பசும்பொன் மணிகளாய் பேரீச்சை.
கூர் இலைகளோடு வான் நோக்கி ,
கூம்பி  இருக்கும் மரங்கள் .
கருவேல  மரம் , கள்ளிகள் ,
அரக்கனாய்,  நம்மூர்  எருக்கு .
பல வண்ணப்ப் பாறைகள்,
ஊடே சில, பல, பச்சைப் புதர்கள் .
கறுப்பும் வெள்ளையுமாய் ,
கட்டைக் காலுமாய்,மிக நிறைய ஆடுகள்.
முடி திருத்துவோர் சேவை ,
முற்றிலும் இவைகளின் தேவை .
அசப்பில் ஆந்திராவின் அண்ணன்,
இந்த அரேபியா.
பல மலைகளை தள்ளிய பின்,
மணல்வெளி பயணம்.
புதை மணல் இருப்பதாய்,
பயம் கட்டும் பலகைகள்.
தொடாமலே உள்தோலை,
உரிக்கின்ற வெப்பம்.
தொழில் நிமித்தம்,
தூரமான, என் துரபா பயணமே.  
                       

அல் பாஹாவில் மழை மேகம் ...

உச்சத்தில் சிகரத்தை,
உச்சி முகர்கின்ற,
காதல் கார் மேகங்கள்.
சிணுங்கி பின் ஊடலால்,
சிந்தும் மழைத் துளிகள்.
மத்தளமாய் இடியும், பின் 
மத்தாப்பாய்  மின்னலும்.
சத்தமாய் சிந்து பாடி,
சங்கமமாகும்  அல் பாஹா