ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

ஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..

ஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..அண்ணா பல்கலைக் கழகம் மதுரை மாவட்டம் கீழவளவில் கிரானைட் கற்களுக்காக, "கேக்' போல் வெட்டப்பட்ட சர்க்கரை பீர் மலை பகுதியில், ஆளில்லா விமானம் மூலம் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது.- தினமலர் நாளேடு.

மதுரை கீழவளவு பி.ஆர்.பி.,கிரானைட் குவாரியில், ஆளில்லா விமானம் மூலம் பதிவு செய்யப்பட்ட படங்கள்...தினமலர் 


Photo's | Album | Special Gallery | News Pictures | Live images | News Photos - No.1 Tamil News paper

நன்றி :தினமலர் நாளேட்டு செய்தி .

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

நம்பிக்கை நட்சத்திரங்கள் ..3

முருகானந்தமும்.... மாதவிலக்கு பிரச்சினைகளும். 

புழக்கடை ஓரம் உலக்கை வைத்து " மாதவிலக்கு, தீட்டு ", என ஒதுங்கி இருந்த தாய், பின் தமக்கை, தங்கை, மனைவி, மகள், என ஒவ்வொரு ஆண் மகனின் வாழ்க்கையிலும், காலம் காலமாய் எதிர்கொள்ளுகின்ற,தொடர்கின்ற இயற்கை நிகழ்ச்சி. பாராமுகம், பரிதவிப்பு, இயலாமை என அத்துடன் முடிகிறது,ஆண்களின் அவதி.

உடல் அளவிலும், மனதளவிலும் மாதம் தோறும், மாதரை கொடுமை  படுத்துகிறது, இந்த மாத விடாய்.தாங்க முடியாத உதிரப் போக்கு, சொல்ல இயலாத வலி, வேதனை, எரிச்சல் என நீள்கிறது, பெண்களுக்கு சோதனை.இந்தக் காலங்களில், பெண்கள் பழைய துணிகள், காகிதங்கள்,காய்ந்த மரத் தழைகள், சமயத்தில் சாம்பலை யும் கூட உபயோகிப்பதாய்,ஆய்வுகள் எடுத்துக் காட்டு கின்றன.

இந்தப் பழக்க வழக்கங்கள், பிறப்புறுப்பில் பல தொற்று நோய்கள் உண்டாகவும், கர்பப் பையை நீக்கும் அளவிற்கு காரணமாய், பல சமயம் அமைகிறது.தன உடல் சுகாதாரம் பற்றிய அறியாமையும், வசதி இன்மையும், இதற்கான முக்கிய காரணங்கள்.இன்னமும்,நம் நாட்டில் 88 % விழுக்காடு மகளிர், நாப்கின் உபயோகப் படுத்த வில்லை என்கிறது, பெண்களின் சுகாதாரம் பற்றிய மற்றுமொரு ஆய்வு.

நெசவாளர்  குடும்பத்தில்  பிறந்தவர். தாய் விவசாயக் கூலி. பத்தாம் வகுப்பை எட்டாத முருகானந்தம்,மனைவி தனக்குத் தெரியாமல் மறைத்து எடுத்துச் செல்லும் பொருளைப் பற்றி வினவ .." இது பொம்பளைங்க  சமாசாரம்..உங்களுக்கு சம்பந்தமில்லை !", என்பதில் தொடங்குகிறது, இந்தக் கண்டு பிடிப்பு.இதற்குப் பின்னால் பத்தாண்டு கால கடும் உழைப்பு, விலகிப் போன மனைவி, விட்டுப் பிரிந்த தாய், தொடர்பறுத்த நண்பர்கள் ' பைத்தியம் ', என்ற பட்டம், இன்னும் எத்தனையோ, பல இன்னல்கள்.

இன்று 47 வயதாகும் திரு முருகானந்தம் நாப்கின் சந்தையில் கொடி கட்டிப் பறக்கும் ஜான்சன் &ஜான்சன், ப்ரொக்டர் &காம்ப்ளே அவர்களின் நாலு கோடி ரூபாய் இயந்திரத்தை வெறும் அறுபத்தி  ஐயாயிரம் ரூபாயில் வடிவமைத்து வழி காட்டியுள்ளார்.பதிமூணு ரூபாய் விலையில் எட்டு நாப்கின்கள், உலகத் தரத்தில். மற்ற நாப்கின்களை விடவும் சுமார் பதினைந்து மடங்கு விலை குறைவாய் ,சந்தையில் விற்பனை.

இந்தியாவில் 27 மாநிலங்களிலும் உலகத்தில் 110 நாடுகளிலும் இவரின் நாப்கின் தயாரிக்கும் கருவி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

ஜனாதிபதியிடம் விருது பெற்றவர்.பல நிறுவனங்கள் பாராட்டுகின்றன இவரை.படித்தவர் நிறைந்த அவையில்,இன்று ஆங்கிலத்தில் உரையாற்றும் திறன் வளர்த்துக் கொண்டுள்ளார்.
ஒரு கால கட்டத்தில் ஆராய்ச்சிக்கு ஆளின்றி, மகளிரின் பிரச்சினை அறிய, தானே நாப்கின் அணிந்து, ரப்பர் பலூனில் ஆட்டு ரத்தம் நிறைத்து, சோதனை மேற் கொண்டவர். லாபம் கருதாமல் சமூக நோக்கோடு, வசதி இல்லாரும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், செயல் படுகிறது இவரின் ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனம்.

Registered Office 
SF No 577,KNG PUDUR ROAD,
SOMAYAMPALAYAM ( PO ),
COIMBATORE - 641 108.
e-mail:muruganantham_in@yahoo.com   Mobile No : 9283155128 

இவர் தன அனுபவத்தை பகிர்வதை அன்பு கூர்ந்து கீழ் காணும் கானொளியில் காண்க.
இன்று பழித்தவரை பாராட்டுகிறது உலகம் . பிரிந்த பத்தினியும் மீண்டும் கூடவும், தான் மேற்கொண்ட முயற்சியில் மனம் தளராமல், உழைப்பின் உச்சத்தில்,வெற்றி நடை போடுகிறார்.

மனம் மகிழ்கிறேன்....உதயம் ...இந்திய வானில் இன்னுமொரு நட்சத்திரம் .
                      

செவ்வாய், 26 ஜூன், 2012

அது ஒரு கனாக் காலம் ..

மனதென்னும்  தறியில் ..மங்காத இழைகள் .

தூக்கிச் செருகிய கொண்டை, காதளவோடிய காந்தக் கண்கள், காதோரம் அலை பாயும் கருங் குழல், சங்குக் கழுத்தில் சின்னதாய் ஒரு மச்சம், சன்னமாய்  அவள் உடலில் ஆலிலைக்   கோடுகளாய் பவனி வரும் பச்சை நரம்புகள், இதழோரம் இள நகை.. சின்ன வயதில் என் கற்பனையில் வலம் வந்த யவன ராணி.சோறு தண்ணியின்றி, கண் துஞ்சாமல், கிறங்கிய மனம். அலைகடலும் ஓய்ந்திருக்க, ஆழ்கடலில் துடுப்பிட்டு அகக் கடலை அலைக்கழித்த பூங்குழலி. வந்தியத் தேவனின் வசீகரமும், உடலெங்கும் வீரத் தழும்புகள் விழுப் புண்களாய், போர் பல கண்ட பழு வேட்டரையர் என கண்ணில் விரிந்த, காப்பியம்.பொன்னியின் செல்வன்.கல்கி தந்த வரம்.கடலைக் குறுக்கி கமண்டலத்தில் வைத்தார் போல் இன்னும் நெஞ்சப் பேழையில்..

சனி, 23 ஜூன், 2012

பயணங்களும் அனுபவமும் .9

காலனி ( காலணி ) ஆதிக்கமும் ..நான் பட்ட கஷ்டங்களும் .

காலனி ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயனைப் பற்றி..ஆதவன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டதாய் கூறுகிறது, சரித்திரம்.அவன் விட்டுச் சென்றது ரயில் பாதைகளை. எடுத்துச் சென்றது எண்ணற்ற பொக்கிஷங்களை. விதைத்துச் சென்றது ஆங்கிலத்தை, மாற்றிச் சென்றது, நம்மில் ஆடை மாற்றங்களை. அட்டை போல், இவை, ஒட்டிக் கொண்டு, நம்மை ஆட்டிப் படைக்கின்றன, இன்றும். காலனி ஆதிக்கத்தில் அடிமைப்பட்ட ஆசிய நாடுகள் வீறு கொண்டு எழுந்ததாலோ, விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தினாலோ, விடுதலை பெற்றன என்பது, வரலாறு சொல்லும் கதை.

வியாழன், 21 ஜூன், 2012

ஞாயிறு, 17 ஜூன், 2012

மண்ணின் மணம் ...வேரும்.. விழுதும் .

அந்தி சாய்கையில்..ஆற்று வெளிதனில்
நெற்றியில் கை வைத்து அண்ணாந்து பார்க்கிறேன், ஆகாசத்தை. பொழுது இன்னும் சாயலே. ஒரு பாட்டம் ஓடி, " கொள்ளிடத்தில் குளிச்சிட்டு வரலாம்னு ", தோணுது. ஆத்துலே குளிச்சு கன காலம்  ஆச்சு. கரை தாண்டினா, கூப்பிடும் தூரம் தான்,ஆறு. கை தட்டினா காது கேட்கும் தூரத்துக்கு, கொஞ்சம் அப்பாலே. பேரனும் கூட வரணும்னு அடம் பிடிக்கிறான்.பெரும் பகுதி பாலைவன துபாயில் வளந்தவன். தளிர் நடைக் காரனுடன் துண்டு சகிதம் பயணம்.

 நீரில் நர்த்தனம் ..அன்சுமன்   

வியாழன், 14 ஜூன், 2012

திசை மாற்றிய திருப்பங்கள் .3

திரை கடல் ஓடி ..திரவியம் தேடி ..
வாழ்க்கையில் நம் கனவுகள் நிறைவேற,சில சமயம், பலகாலம், காத்திருக்க வேண்டியுள்ளது. நம் முயற்சியும் உழைப்பும் தவிர .நம்பிக்கை இழந்த தருணங்களில், பாய்மரம் திருப்பி ,வாழ்க்கையின் திருப்பங்களுக்கு வித்திடுகின்றனர்.கடவுள் போல் கை கொடுக்கும் ஆசான்கள். மேலும் பீடிகை இன்றி, விஷயத்திற்கு வருகிறேன்.
இருபத்திரண்டு வயது இளைஞனாய் இருக்கும் போது, திரை கடல் ஓடி திரவியம் சம்பாதிக்கணும் அப்படிங்கிற ஒரு தீவிர ஆசை, மனசுக்குள்ளே. எப்படி?. இந்த எண்ணம் எனக்குள்ளே ஊற்றெடுத்தது ,என யோசிக்கிறேன். முதலாவது என் தங்கை 1969 ம் வருடம் டாக்டர் கணவருடன் நியூசிலாந்து போனதும்.. அப்புறம் 1970 களில் வளை குடா நாடுகள், எண்ணெய் வளத்தில் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டதும் .. மந்தையாய் நம்மூர் மக்கள் வேலை தேடிப் போனதும் ...என்னுடன் வேலை பார்த்த சிலர் பத்து, பதினைந்து மடங்கு சம்பாதித்ததும், என என் ஆசைத் தீயில் நெய் ஊற்றிய செய்திகள். இவர்களை ஆவென்று வாய் பிளந்து நான் அண்ணாந்து நோக்கிய தருணங்கள் . என் தகுதியும் திறமையையும் யோசித்ததில், கனவுக்கும் நனவுக்குமான இடைவெளி வானத்துக்கும் பூமிக்குமானது ..நல்லாவே புரிஞ்சுது. ஆனாலும் கண் மூடினா, கடல் கடந்த நாடுகள் தான் கனவில் தெரிந்தது .

Riyadh Television center

திங்கள், 11 ஜூன், 2012

படித்ததில் பிடித்தவை .1. ( Daniel Kish ).

மலைக்க வைக்கும் மாற்றுத் திறனாளி ( Daniel Kish ) .
விழி  படைத்தோரே வியக்க வைக்கும் ஆற்றல். பார்வைத் திறன் கொண்டோரும், பதை பதைக்க வைக்கும் செயல் திறமை. இந்த சாதனைச் சிங்கத்தின் பெயர் டேனியல் கிஷ் ( Daniel Kish  ). 
விழித் திரையை பாதிக்கும் மிகக் கொடூரமான புற்று நோயால், பிறந்த ஏழே மாதங்களில் ஒரு கண்ணும், பதிமூன்றாவது மாதத்தில் மறு கண்ணும், மருத்துவர்களால் அகற்றப் பட்டவர். உயிர் காக்கும் உபாயம்,வேறு ஏதும் இன்றி. அன்றிலிருந்து நாவினால் ஒலி எழுப்பி, காதுகளை கண்கள் ஆக்கி, பார்வை இழந்தோர்க்கான புது உலகம் காண எத்தனிக்கிறார்.


சனி, 2 ஜூன், 2012

இயற்கை வைத்தியம் ... ( Naturopathy )

இயற்கை வைத்தியமும் ..எங்கள் தேனிலவும் .


ஒரு வாரம் தங்கி தேனிலவு கொண்டாட திட்டமிட்டு,மேலூர் மேடோஸ் ( Melur Meadows ) வந்திருந்தோம். இங்கு வசிப்பவர்களோடு அளவளாவியதில், ( Lyaa Wellness center ) இயற்கை வைத்தியம் செய்து கொண்டதாகவும் ,உடல் பருமன் மற்றும் வியாதிகளின் தாக்கம் குறைந்து நலம் பெற்றதாக விளம்பினர்." யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே",எனபது போல் எங்களது கணிசமான தொப்பை ,நிறையவே தொந்தரவு கொடுத்தது. காலில் மூட்டு வலியும் கிட்டத் தட்ட நிரந்தர விருந்தாளியாய். கூட்டி கழிச்சி பார்த்து, வந்ததற்கு வைத்தியம் பண்ணிக் கிடலாம்ன்னு, முடிவுக்கு வந்தோம்.
உண்மையிலேயே தேன் நிலவு இங்கு தான் ஆரம்பிச்சுது.முதலில், திட உணவில் ஆரம்பித்து ,அப்புறம் நான்கு நாட்கள் காலையில், மூலிகைத் தேநீர் கொடுத்துவிட்டு, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தேனும் எலுமிச்சையும் கலந்த தண்ணீர் தந்தாங்க. இதை குடிச்சிட்டு இரவில் நிலவைப் பார்த்தோம் .அப்புறம் என்னாங்க?.

வெள்ளி, 1 ஜூன், 2012

ஆலய தரிசனம் .2.

மருதமலை முருகன்.

மே 17 ம் தேதி குளித்து முடித்து, குறிப்பிட்ட நேரத்தில் வந்த வாடகை ஊர்தியில் ஏறி, மயில் வாகனத்தான் அருள் பெற மருதமலை சென்றோம். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வந்ததது. அறு நூறு படிகள் ஏற வேண்டுமோ?. என அஞ்சினோம். நல்ல வேளை கோவிலின் அடிவாரம் வரை வாகனம் செல்லும் வசதி பண்ணி யுள்ளார்கள்.மீதமுள்ள முப்பது படிகளில் ஏறியதே மூச்சு வாங்கியது.ஞாயிறு, 20 மே, 2012

மேலூர் புல்வெளிகள் ..( Melur Meadows ).

முதியோர் இல்லம் ..ஒய்வுற்றோர் விடுதி .
ஓடிக்களைத்த உடல் .ஓய்ந்து போன மனசு .வயது ஆனதால், வலுவிழந்த புலன்கள் .மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை எல்லா விதத்திலும் தொட்ட நானும் ஒட்டியவராய், என் துணைவியும் .வரும் மே 17ம் தேதி, நாற்பது ஆண்டை நிறைவு செய்த மண வாழ்க்கை.
மே 15 ஆம் தேதி இரவு தஞ்சையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 0630 மணிக்கு தொழில் நகரம் கோயம்புத்தூரை வந்து அடைந்தோம் .சூப்பராய் ஒரு டீ குடித்துவிட்டு 'காரமடை' வழியாய் செல்லும் பேருந்தில் ஏறி, ஒரு மணி நேரத்தில் உருளைக்கிழங்குக்கு பெயர் பெற்ற மேட்டுப்பாளையம் வந்து இறங்கினோம் .தகவல் கொடுத்த சில மணித்துளிகளில் ,மேலூர் புல்வெளிகளின் சிகப்புக் கார் எங்களை கடத்திச் சென்றது .இது ஒரு ஓய்வுற்றோர்க்கான இல்லங்கள் அமைக்கப் பெற்ற இடம் .குமரன் குன்று எனப்படும் கிராமத்தில் ,மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ளது. ஊரில் இருந்து ஒதுங்கி ,சற்றே உள்ளடங்கி ,ஆரவாரமின்றி அமைதி காத்திடும் ,இடமாக .
நாற்பது வருடம் கழித்த நன்னாளை ,இங்கே கழிக்கும் உத்தேசம் .சனி, 12 மே, 2012

சிந்தனையை கிளரும் சினிமாக்கள் - அங்கும்...இங்கும்.


வழக்காடு மன்றங்கள் ..வழக்கும் ..தீர்ப்பும்.
சுப்ரமணிய புரம், கோரிப் பாளையம் அங்காடித்தெரு வழியாய் வெய்யிலில்   நடந்து சென்ற பொழுது வழக்கு எண் :18 / 9 பட விளம்பர சுவரொட்டி  பார்த்தேன்.
எளிமை யாய், எல்லோர் கவனமும் சிந்தாமல், சிதறாமல் கவரக் கூடிய வகையில், சமூக அவலங்களை தோல்  உரித்து காட்டுகின்றன. வித்தியாச மான, இந்தப் படங்கள்...இவை எழுப்பும் கேள்விகள்..திராணியற்ற நம் நெஞ்சிற்கு, தருகின்ற சவுக்கு அடிகள். பார்த்து, பதை பதைத்து, பின் "இதுவும் கடந்து போகும்",  என்கிற பாமரனாய் நாம்.
திக்கெட்டும்  திரும்பிப் பார்க்க, பேச, வைக்கும் அளவுக்கு புதிய பரிணாமத்தில் தமிழ்த் திரையுலகம்.  ' திடுக் ', என்று திகைத்து எழுந்து நிற்க வைக்கிறது.


அங்காடித் தெருக்கள் இல்லாத உலகமே இல்லை எனத் தோன்றுகிறது. இனம் நிறம், மொழி, தூரம்,பரிணாமங்களின்  வேறுபாடு.அவ்வளவு தான். ஏழ்மை, எதிர்த்து  நிற்க இயலாமை, சாண் வயிற்றுக்கு ஊண் இட, விரும்பியோ விரும்பாமலோ பொந்துக்குள் புதைகின்ற மனிதர்கள், சமாதியாகின்ற வாழ்க்கைகள். அவ்வளவு தான். நிரம்புகின்றன, கொத்தடிமைக் கூடாரங்கள்.
கூடா நட்பு, நம்பிக்கையற்ற பெற்றோர், அதிகார ஆணவங்கள் அவற்றின் துஷ் பிரயோகங்கள், மனிதத்தை நேயமின்றி கசக்கிப் பிழியும் சுயநலமிகள்..
இப்படி பல சமூக அவலங்களை சத்தமின்றி படமெடுத்து, சாட்டையால் சாடுகின்றனர். துண்டாடும் அரிவாளும், தூள் பறக்கும் அடி தடிகளும் தலை காட்டுதல், இன்னமும்  தப்பவில்லை. ஆயினும், புதிய வரவேற்கத்  தக்க மாற்றம் .

வெள்ளி, 11 மே, 2012

மின்சாரம் கண்ணா! ...1

மின் தீர்வையும் .. சில தீர்வுகளும் ..
அலைக்கழிக்கும் மின்வெட்டு, அதிகமான தீர்வை ( மின் கட்டணம் ).ஆட்டிப் படைக்கிறது அடிக்கும் வெயிலும், அடி வயிற்றை கலக்கும் கட்டண உயர்வுகளும்.
மின்வெட்டு தீரலாம். அரசாங்கஅஸ்திவாரம் ஆடாமல் இருக்க இது அவசியம். ஆட்சியாளர்களின் அதிக கவனம் தற்பொழுது,மின்வெட்டை எப்படி தவிர்ப்பது என்பதில் தான்.
ஓரளவு நாமே சமாளிக்கலாம். ஜெனேரட்ட்டர், இன்வர்டர்,சூரிய சக்தியால் மின்சாரம் தயாரிக்கும் சாதனம்,ஆகியவற்றின் மூலம், வசதி இருந்தால்.
ஏற்றப்பட்ட மின் கட்டணம் குறைய வாய்ப்பே இல்லை. கொஞ்சம், தொலை நோக்கோடு, யுக்தி சிலதை கடைப்  பிடித்தால் முக்தி அடையலாம்.

Incandescent Light Bulb 
தாமஸ் ஆல்வா எடிசன் December 1879 
மின்விளக்கு கண்டு பிடித்த பெருமகன்  புதன், 9 மே, 2012

ராக் கூத்து ...(Midnight Masala )

ராக் கூத்து ( Midnight  Masala )

நடுநிசி தாண்டிவிட்டது. சாமக் கோழி கூவிச்சான்னும் தெரியலை. உறக்க மின்றி உருள்கிறேன். மின்வெட்டில் தொற்றிய வியாதி. நித்திரா தேவி சொல்லாமா, கொள்ளாம அப்போ, விடுபபில் போனவுங்க தான்...என்ன பண்றது?. வழக்கம் போல, மடிக் கணினியை எடுத்து முக நூலை (Face Book) முப்பதாவது முறையாய், முறைக்கிறேன்.


பல்கலைக் கழக பையன்களின் தகவல் பரிமாற்றத்திற்காக, எலியட் சுகேர் பெர்க் ( Elliot Zuckerberg ) என்பவர்  கண்டுபுடிச்சது, முகநூல்.  பிச்சு கிட்டு போவுது,  இப்பொ.  நூறு பில்லியன் டாலர் மதிப்பை தொட்டுவிடும், அளவிற்க்கு.  இதில் அவருக்கு சொந்தமான பங்குகளே இருபத்தைந்து  பில்லியன் டாலரை தொடும், அப்படின்னு செய்திகள்.

வியாழன், 3 மே, 2012

வெம்மையில் இருந்து விடுதலை .2

வெம்மையில்  இருந்து விடுதலை.தொடரச்சி ....

பகல் முழுதும் கடும் வெய்யிலில் காய்ந்த மொட்டை மாடி, சூரிய ஒளியில் இருந்து வாங்கிய வெப்பம் கான்க்ரீட் மேல் தளம் மூலம் மெள்ள  கசிகிறது. தலைக்கு மேல் சுழலும் மின்விசிறியில் இருந்து சூடான காற்று. என்ன பண்ணலாம்?.எப்படி இந்த அனல் வீச்சை சமாளிப்பது ?. சிலவு குறைவான தற்காலிக தீர்ப்பு ஏதும் உண்டா ?. என பல யோசனைகள். கொஞ்சம் மேலே அன்பு கூர்ந்து படிங்க ...

சாதாரணமாக, மனிதர்களின்  உடல் வெப்பம் 98 .6°F ( 37°C ). உடலை உரிக்கும் சஹாரா, கோபி பாலை வனத்தில் இருந்து, உறைபனி இருக்கும் துருவம் வரை, இப்போ மனுஷன் வசிக்காத இடம் கிடையாது. அப்போ!. ஒரு மனிதனுக்கு சௌகரியமா, தாங்கிக் கொள்ளக் கூடிய சீதோஷணம் எவ்வளவு என்று, தெரிந்து கொள்ளணும்னு ஆசை.

இது குறித்து நிறையவே ஆராய்ச்சி பண்ணி இருக்காங்க. வயசு, உடல் பருமன், பாலினம், ஆரோக்கியம், அணிகின்ற ஆடைகளின் தன்மை, மன நிலை, உணவு ..என்று பல விஷயங்களைச் சார்ந்ததாம். மேலும், சீதோஷ்ண நிலைகளான வெப்பம், குளிர், காற்று, ஈரப் பதம், நீர் ஆவி யாகும் தன்மை, இவற்றையும் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறுமாம். ஆக மொத்தம், சித்திர குப்தன் கூட, துல்லியமாக கணிக்க முடியாத, கணக்குங்க..

புதன், 2 மே, 2012

தஞ்சை பெரிய கோவில்

 தஞ்சைப் பெருவுடையார் கோவில் பிர்மோத்சவ சின்ன மேளம் விழா   

தஞ்சை பெரிய கோவில், மன்னன் ராஜராஜன் உலகிற்கு அருளிய உன்னத வடிவமைப்பு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. தமிழரின் கலாச்சாரத்திற்கும்கட்டிடக்  கலைநுட்பத் திறமைக்கும் எடுத்துக்காட்டாய்    புவியெங்கும் புகழ் பரப்பும் கோவில். 
ஸ்ரீ பிரகதீஸ்வரரும், ஸ்ரீ பெரியநாயகியும் உற்சவ கோலத்தில். சின்ன மேளம் விழாவில் சில காட்சிகள். .. ( நிகழ்ச்சி 30௦.4.2012 இரவு ஏழு மணி. 
சனி, 28 ஏப்ரல், 2012

நம்பிக்கை நட்சத்திரங்கள் .2


தலை நிமிர வைக்கும் தமிழர். 


கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....
இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது.

வியாழன், 26 ஏப்ரல், 2012

வெம்மையில் இருந்து விடுதலை .1

வெம்மையில் இருந்து விடுதலை.

அப்பப்பா!முடியலையடா, சாமி!. உஸ் அப்பாடா! "போன வருடமே தேவலை", என்ற வழக்கமான, உச்சி நேர புலம்பல்கள். கோடை காலம். வெள்ளிக் கிரணங்களின் கண் கூச வைக்கும் வீச்சம்.வெப்பமானியில், சிகரம் முட்டி நிற்கும் அளவைக் கோடுகள்.மிகையான வெக்கையும், தீராத  புழுக்கமும் மின்வெட்டின் உபயம். அறிவித்த மின்வெட்டைத் தவிர ,மற்ற நேரங்களில் மின்னல் போல்,அவ்வப் பொழுது  வந்து போகிறது, மின்சாரம். கொஞ்சம் பொறுங்கள் !.  ஒளிமயமான எதிர்காலம், தடை யில்லா மின்சாரம் என்று நம்பிக்கை தருகிறது, அரசு. சற்றே ஆறுதலான விஷயம். நம்பிக்கை தானேங்க வாழ்க்கை .
சுட்டெரித்த வெயிலில், எங்கள் வீட்டு  மொட்டை மாடி, மணல் இல்லா பாலை வனமாய், கனல் கக்குகிறது. தலைக்கு மேல் சுழலும் மின் விசிறி, அனல் காற்றை அள்ளி வீச, அணிந்து இருக்கும் ஆடைக்குள் தீயின் வாசம். இந்த வெப்பத்தின் வீச்சத்தில் இருந்து தப்ப வழி என்ன ?.என்ற மாறாத கேள்வி களில்..மண்டைக் குடைச்சல்.விடை தேடி ..

புதன், 8 பிப்ரவரி, 2012

ஊக்கமும் ..ஆக்கமும் .


ஊக்கமும் ..ஆக்கமும்.

அலை கடல் தாண்டி ,
அரக்கனிடம் சிறை பட்ட 
அஞ்சுகம் சீதை மீட்க 
அனுமனின் ஆற்றல் உணர்த்தி 
அளவிலா உதவி செய்தான்.

கரடி முகம் கொண்டான்.
கனத்த மதி கொண்டான்.  
வாமணனை எழு முறை 
வலம் வந்த ஜாம்பவான்.


பிராட்டி சீதையவள் 
பிஞ்சுப் பிராயத்தில் ,வில் 
பேழைதனை நகர்த்தி ,பின் 
பெரும் போட்டிக்கு வித்திட்டாள்.      

வில்லொடித்து,வீரம் காட்டி 
விவாகத்தில் முடிந்த கதை .
மிதிலையில் மன்னன் சனகன் 
மகளின் மணம் முடிக்க 
உதவியதொரு சிவ தனுசு.

பாரதத்தில் பீமனுக்கு, 
பார் புகழ்ந்த வீரனுக்கு, 
கீசகனை வதம் பண்ண 
கிருஷ்ணன் சூசகமாய் 
தந்திரமாய் உதவியதொரு 
தலைப்பு மாற்றிய தர்ப்பைப் புல்.

தம் ஆற்றல், தாம் உணரா
தரணியில் மாந்தர் பலர் .

தர்ப்பையாய்!.
தனுசாய்!.
மந்திரியாய்!. 
மாயக் கண்ணனாய்!.
எப்படியோ?. 
எழுப்பிடுவீர். 
உறங்குகின்ற 
உள்ளம் தனை.
விதையும்.... 
விருட்சமாகும்.. . 
      
நன்றி :கூகுள் படங்கள் .  

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

சில்லென்ற காற்று ..சிந்தை மகிழும் காலை.

சில்லென்ற காற்று ..சிந்தை மகிழும் காலை. 
காலைக் கதிரவன்,
கிழக்கில் உதித்ததை,    
கட்டியம் கூறிடும்,
கீற்றுக் கிரணங்கள் .
விழித்திரை     பிரித்து 
விடிந்தது பொழுதென்று 
கிடந்தவனின், முதல் நடை .

செவ்வாய், 31 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் .8


  
மும்பை முதல் தில்லி 

மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும் என்ற சொல் வழக்கின்  அர்த்தம் மிக ஆழமானது என்பதை இப்போது உணர்கிறேன்.இடம் ,பொருள், ஏவல் என்ற பல நிலைகளின் பரிணாமங்களை கூட்டுகிறது, இந்த பழ மொழி .முற்றாத ,என் கதையின் தொடர்ச்சிக்கு வருகிறேன்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் .7


சுத்தம் சுகம் தரும் ..

நூறு எனபது ஒரு நல்ல எண்.எண் கணிதப்படி இதன் கூட்டுத் தொகை ஒன்று .ஒளி தந்து உலகை ரட்சிக்கும் சூரிய பகவான் இந்த எண்ணுக்கு அதிபதி .சகல் ஜீவ ராசிகளும்   தோன்றக் காரணமாய் இருக்கும் காரண கர்த்தா. அவரின்றி அகிலத்தில், ஓர் அணுவும் இல்லை .

பொதுவாகவே  நூறு எனபது ஒரு மைல் கல். ஒரு அளவீடு. குறிக்கோள்களை எட்டிட பலரும்  அமைத்துக் கொள்ளுகிற எல்லைக் கோடு .மேலும் எந்த ஒரு அரசு பதவி ஏற்றாலும் முதல் நூறு நாள், தெம்பா அறிக்கை விடுகிற கால கட்டம். அப்புறம் வம்பெல்லாம் , தானே வந்து சேரும் ,எனபது, இந்த கட்டுரைக்கு அவசியமில்லாத விஷயம் .

வெள்ளி, 27 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் ..6


மும்பை முதல் தில்லி..இரெண்டாம் கட்டம். 

செம்பட்டைத் தலை ,சிவந்த கண்கள் , ரயில் அழுக்குகளில் கணிசமாக   கனக்கின்ற, கசங்கிய உடை. பாலைவனத்தில் நாடோடியாய் ஒட்டகம் மேய்த்து, திரும்பிய தோற்றம். கடிகார முட்கள் வேகமாய் நகர, இனியும் காத்திருத்தல் பயன் இல்லை என்று, தொலைபேசியில் நண்பரின் அலுவலக தொடர்பு எண்ணைச் சுழற்றினோம் ." ட்ரிங் ,ட்ரிங்", என்பதற்கு  பதிலாய், ம்ம்.. ம்ம்.. என்று நீண்ட குரலில் அழுதது. மீண்டும், மீண்டும் இந்த ஒரு தலை ராகம்.விரல் வலிக்க ,தொலைபேசி, வெறும்  தொல்லைபேசியாய். வயிற்றுக்குள் ஜந்துக்கள் நெளிய ,ரெத்த நாளங்களின் அழுத்தத்தில், குருதிப் புனல் கூடி  நெற்றிப் பொட்டில், சம்மட்டி அடிகள்.

சூரியன் சற்றே அடிவானம் இறங்க, என் அடிவயிறு ரொம்பவும் கலங்கியது. அறிமுகமில்லா, புது இடம். தப்பு பண்ணிட்டோம். அப்படின்னு எப்போதும் போல, இக்கட்டான நேரத்தில் இடித்துரைத்தது, மனசாட்சி. நேரமில்ல!. இப்ப, அதோட தர்க்கம் பண்ண !. காணமல் போன பொருளை கண்டு பிடிக்க நினைவுகளின் வேர்களை தோண்டுறா மாதிரி, மனசு சம்பவக் கோர்வைகளை   பின் தொடர்ந்து பாக்குது. கொஞ்சம் நான் இதுக்காக, திரும்பவும் மும்பை போவணும்.கருவின் ஆரம்பம், அங்கேதான் .

நம்பிக்கை நட்சத்திரங்கள் ..1தலை நிமிரவைக்கும் தமிழர்  

வணங்குகிறோம் .வாழ்த்துகிறோம் .பல்லாண்டு வாழவும் 
தங்கள் சீரிய பணி,இன்னும் சிறப்பாய் தொடரவும்.

கலெக்டர் சகாயம் -நேர்மையின் உருவம்

தினந்தோறும் நள்ளிரவு இரண்டு மணியாகிறது அவர் உறங்கச் செல்வதற்கு!

அது வரையில் மலை போல குவிந்து கிடக்கும் கோப்புகளை ஒவ்வொன்றாக பார்வையிடுகிறார். கையெழுத்திடுகிறார்.
எந்த ஒரு கோப்பும் தன் பார்வைக்கு வந்து விட்டே செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் நடைபயிற்சி, யோகா என்று சுறுசுறுப்பாக ஆரம்பித்து விடுகிறார்.
”எப்பவாச்சும் அவரு தூங்குவாருங்களா?” – கேட்கிறார்கள் ஆட்சியர் அலுவலக கடைநிலை ஊழியர்கள்.

அவர் தான் மதுரை மாவட்ட ஆட்சியர் உ. சகாயம், ஐ.ஏ.எஸ்.
’லஞ்சம் தவிர்த்து – நெஞ்சம் நிமிர்த்து’ என்ற வாசகம் அவரது அலுவலகம் முழுவதும் பளிச்சிடுகிறது.
நாமக்கல்லில் ஆட்சியராக இருந்த போது இந்திய ஆட்சிப் பணி வரலாற்றிலேயே முதல் முறையாக தனது சொத்துக் கணக்கை மாவட்ட இணைய தளத்தில் வெளிப்படையாக வெளியிட்டு சக அதிகாரிகளின் சாபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டவர். “இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?”

“கிராம நிர்வாக அதிகாரிகள் அவரவர் வேலை பார்க்கும் கிராமத்தில் தான் தங்கியிருக்க வேண்டும்” என்ற அடிப்படை விஷயத்தை அழுத்தம்திருத்தமாகச் சொல்லியவர். அதனால் அவர்களின் கோபப்பார்வைக்கும், ஏச்சுபேச்சுக்கும் ஆளாகினார்.
கலெக்டர் அலுவலக வாசலிலேயே கூட்டம் போட்டு தகாத வார்த்தைகளால் அவரைத் திட்டும் அளவுக்கு கிராம நிர்வாக அலுவலகர்களை தூண்டி விட்டார்கள் அவரால் பாதிக்கப்பட்ட அரசியல்வா(ந்)திகள்.

’மசூரி’யில் இரண்டு மாத கால பயிற்சிக்கு சென்று வாருங்கள் என்று 2,000 கிலோ மீட்டருக்கு அப்பால் அனுப்பி விட்டு நைஸாக இங்கே நாமக்கல் ஆட்சியர் பதவியிலிருந்து தூக்கினார்கள். அடுத்து எங்கும் பணி ஒதுக்காமல் காத்திருப்பில் வைத்திருந்தார்கள். சில மாதங்கள் கழித்து உப்புச்சப்பில்லாத பணி ஒன்று பேருக்கு ஒதுக்கப்பட்டது. அதிலும் சென்று தன் ‘வேலைகளை’ காட்ட ஆரம்பித்த போது தான் சட்டமன்ற பொதுத் தேர்தல் வந்தது.

இவரது பணி நேர்மையைப் பார்த்த தேர்தல் ஆணையம் இவரை மதுரை ஆட்சியராக பணி மாற்றம் செய்து உத்தரவிட்டது. அதன் பிறகு நட்ந்ததெல்லாம் நாடறியும்.

‘திருமங்கலம் ஃபார்முலா’ என்ற பெயரில் ‘தேர்தலில் வெற்றி பெறும் வழிக்காக’ அப்போதைய ஆளுங்கட்சி ஒரு வழிமுறைய உண்டு செய்து அதன் மூலம் ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருந்த நேரம். அதே திருமங்கலம் உள்ளடக்கிய மதுரையில் நேர்மையான தேர்தல் நடந்தேற வைத்தார் சகாயம்.

தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசும் மதுரையிலேயே ஆட்சியராக தொடரச் செய்துள்ளது.

ஆனந்த விகடனின் 2011 டாப் 10 மனிதர்கள் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளார் சகாயம். போன வருடத்திய டாப் 25 பரபரப்புகளில் முதலாவதாக அழகிரியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள விகடன் அதிலும் இவரது அதிரடியைப் பாராட்டியுள்ளது. ‘மக்கள் சேவகர்’ என்ற பட்டத்தை சகாயத்துக்கு வழங்கியுள்ள விகடன், தனது வாசகர் மேடை பகுதியில் சகாயத்திடம் வாசகர்களை கேள்வி கேட்கச் செய்து பதிலை வரும் வாரங்களில் வெளியிடவிருக்கிறது.

சுதந்திரத்திற்காகப் போராடிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வாரிசுகள் வறுமையில் வாடுவதைக் கேள்விப்படும் சகாயம், அவர்களை அழைத்து மதுரையில் உள்ள ‘உழவன் உணவகம்’ என்ற இயற்கை உணவுச் சாலையில் (இதுவும் இவர் அமைத்தது தான்) ஒரு உணவகம் அமைக்க தகுந்த ஏற்பாடுகளையும், பயிற்சியையும் வழங்கச் செய்திருக்கிறார். இப்போது அவர்கள் அங்கே வெகு மகிழ்ச்சியாக தினமும் வியாபாரம் செய்து வருகிறார்கள். அதே உழவன் உணவகத்தில் இன்னமும் ஒரு சில சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கும் இதே போல உணவகம் அமைக்க உதவியுள்ளார்.
இது குறித்த செய்தி அண்மையில் நாளேடுகளில் வந்ததற்கும் மறுநாள் காலை 7.30 மணியளவில் ஆட்சியர் இல்லத்துக்கு சுமார் 84 வயதுள்ள பெரியவர் ஒருவர், “நானும் கப்பலோட்டிய தமிழரின் வாரிசு. ஆட்சியரைப் பார்க்க வேண்டும்” என்கிறார். உடனடியாக அவரை உள்ளே அழைக்கிறார் ஆட்சியர். உள்ளே நுழைந்து ரோஜாப்பூ மாலையும், பொன்னாடையும் போர்த்தி வாழ்த்தி வணங்குகிறார் சிதம்பரம் என்ற அந்தப் பெரியவர். “வ.உ.சி.யின் வாரிசுகளுக்கு உண்மையிலேயே நீங்கள் செய்திருக்கும் உதவிக்காக நாங்கள் அனைவரும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்” என்கிறார்.

“நான் அவருடைய மனைவி வழி உறவினர். நாளிதழில் நீங்கள் அவருடைய மகன் வழி வாரிசுகளுக்கு உதவியிருப்பதை நேற்று நள்ளிரவு தான் படித்தேன். உடனடியாக நன்றி சொல்வதற்காக ஓடோடி வந்தேன்” என்று உணர்ச்சிவசப்படுகிறார் அந்தப் பெரியவர். “மீனாட்சியம்மன் அருளில் நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன். ஆனால் வ.உ.சி.யின் வாரிசுகள் சிலர் மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கு முன் பல ஆட்சியர்களைச் சந்தித்தும் பார்ப்பதற்கு கூட அனுமதிக்காத நிலையில் நீங்கள் செய்திருக்கும் இந்த உதவி நிச்சயம் பாராட்டத்தக்கது” என்று கூறிவிட்டுக் கிளம்புகிறார் பெரியவர்.
கப்பலோட்டிய தமிழரின் வாரிசு என்பதால் இப்போது செய்யப்பட்டுள்ள உதவி வெளியில் தெரிந்திருக்கிறது. இப்படி இல்லாமல் எத்தனையோ பேருக்கு தன்னால் முடிந்த தனது ஆளுமைக்குட்பட்ட நேர்மையான உதவிகள் அனைத்தையும் தினந்தோறும் செய்து கொண்டு தான் இருக்கின்றார் சகாயம்.

திடீர் திடீரென பள்ளிக்கூடங்களுக்கும், பேருந்து நிலையங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் ஆய்வுக்குச் செல்கிறார். பள்ளிக்கூடங்களில் சத்துணவு போடுவது வருடத்திற்கு 200 நாட்கள் தான் போடுகிறார்களாம். அப்படி ஒரு பள்ளிக்கூடத்திற்குச் சென்ற போது அங்கிருந்த மாணவிகள் தேர்வு சமயங்களில் தங்களுக்கு சத்துணவு போடப்படுவதில்லை என்று சொன்னதும் உடனடியாக தேர்வு சமயங்களிலும் அவர்களுக்கு சத்துணவு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார். “தேர்வு சமயத்தில் பசியோடும், பட்டினியோடும் இருக்கச் செய்தால் அவர்கள் எப்படி ஒழுங்காக தேர்வு எழுத முடியும்?” என்று கேட்கிறார். நியாயம் தானே! சொல்லப் போனால் விடுமுறை தினங்களில் கூட சத்துணவு வழங்க அரசு வழி வகை செய்ய வேண்டும்.

பேருந்து நிலையக் கடைகளில் ‘பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்காதீர்கள்” என்று அறிவுறுத்துகிறார். அங்கே இவரைப் பார்த்து ஓடி வந்து கை குலுக்கும் இளைஞர்கள், குழந்தைகள், முதியோர்களிடம் அவர்களைப் பற்றி விசாரிக்கிறார். தேவைப்படும் இடங்களில் அறிவுரை வழங்குகிறார்.

பொதுமக்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று தன்னுடைய மொபைல் நம்பரை வெளியிட்டிருந்தார். இப்போது எல்லாம், “ஐயா, கேஸ் கம்பெனியிலே ஃபோன் அடிச்சா எடுக்கவே மாட்டேங்கிறாங்க” என்பது போன்ற புகார்கள் எல்லாம் இவரை அழைத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதும் கோபப்படாமல் தனது உதவியாளர்களிடம் ஃபோனைக் கொடுத்து, “இது என்னான்னு கேட்டு பிரச்னையை தீர்க்கப் பாருங்க” என்கிறார்.

“எது எதையெல்லாம் ஒரு ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார்கள் பாருங்கள். எனக்கிருக்கும் வேலைப் பளுவில் இதிலெல்லாம் ஈடுபட்டுக் கொண்டிருக்க முடியாது. ஆனாலும் இவருகிட்ட கொண்டு போனா பிரச்னை தீர்ந்திடும்ன்னு நினைக்கிறாங்க போல. அதான் எதுவா இருந்தாலும் ஃபோன் அடிச்சிடுறாங்க” என்கிறார் சிரித்தபடி!

சுமார் முப்பதாயிரம் வங்கிக் கணக்கில் இருக்கிறது சேமிப்பு. கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் ரூபாயில் எல்.ஐ.சி. கடனுதவியில் வாங்கிய வீடு ஒன்று மதுரையில் இருக்கிறது. ஒரு மாவட்ட ஆட்சியரின் இன்றைய பொருளாதார நிலை இது தான் என்றால் ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் அதான் உண்மை.

”சில ஆண்டுகளுக்கு முன் என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. என் மனைவி ஆஸ்பிடல்ல துடிச்சிக்கிட்டு இருக்காள். அக்கம்பக்கத்தில் உள்ளவங்களோ "உங்க வீட்டுக்காரர்தானே கலால் துறையில இருக்காரு. சிக்னல் காண்பிச்சாலே பிராந்தி கடைக்காரங்க லட்சம் ரூபாயினாலும் வந்து கொட்டிடுவாங்களே'னு சொன்னாங்க. ஆனா என் மனைவியோ "லஞ்சப் பணத்தில்தான் என் குழந்தையைப் பிழைக்க வைக்கனும்னு அவசியமில்லை'ன்னு சொன்னாங்க. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப,எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டு வந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு! நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா… அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய் கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' – தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம். இதான் சகாயம்.
நேர்மை எனும் வேள்வித்தீயில் தினந்தோறும் உழன்று தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் அனைவருக்கும் செய்ய வேண்டும் என்று துடிப்போடு செயல்படும் சகாயம் போன்ற அதிகாரிகள் இன்றைய தேதியில் ஒரு சிலராவது இருப்பதால் தான் நாட்டில் மழை பொழிகிறது.
நிரம்பிய தமிழ் பற்றாளர். பள்ளிக்கூடங்களில் ஆய்வு செய்யச் செல்லும் போதெல்லாம், “தமிழிலேயே கையெழுத்திடுங்களேன்” என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

இவர் இத்தனை நேர்மையாக இருப்பதற்கு இவரது குடும்பத்தினரும் காரணம். புரிந்துணர்வு கொண்ட மனைவி விமலா. மகனின் பெயர் ‘அருள் திலீபன்’. மகளின் பெயர் ‘யாழ்’.
“புதுக்கோட்டை அருகில் பெருஞ்சுனை கிராமத்தில் பிறந்தவன் நான். இப்படித்தான் வாழ வேண்டும் என்று எனக்கு வலியுறுத்தியவர் என் அம்மா. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே… ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ… கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன். தினமும் ஒரு 10 பேராவது எங்கள் வீட்டில் பசியாறுவார்கள். அதை ஏன் நூறு பேர், ஆயிரம் பேர் என உணவருந்தச் செய்யக்கூடாது என்று சிறு வயதிலேயே ஏங்குவேன் நான். இப்போது கூட என்னுடைய லட்சியம் கிராமப்புற ஏழைகளுக்காக அனைத்து வசதிகளும் கூடிய இலவச மருத்துவமனை அமைப்பது தான்” என்கிறார் அவர். “நான் வேலைக்கு போய் சம்பாதித்து பணம் கொண்டு வருகிறேன். அதை வைத்து ஆஸ்பத்திரி கட்டலாம்” என்கிறார் ஒன்பதாவது படிக்கும் அவரது மகன் ‘அருள் திலீபன்’.

”காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்ஸியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்ஸி கம்பெனிக்குப் போனேன். நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்… பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. ’சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்… அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்ஸிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை. ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்ஸிக்கு நான் சீல் வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது” – பெப்ஸி சம்பவம் குறித்து கேட்டதும் சொல்கிறார்.

ஒரு பிரபல பதிப்பகம் சமீபத்தில் ஒரு எழுத்தாளரைக் கொண்டு இவர் குறித்து ஒரு கட்டுரைத் தொகுப்பு எழுதி வெளியிடும் ஏற்பாடுகளைச் செய்தது. விஷயம் கேள்விப்பட்ட சகாயம், “அட, நான் என் கடமையைத் தான் செஞ்சுக்கிட்டிருக்கேன். அதெல்லாம் வேண்டாம்” என்று அன்போடு மறுத்திருக்கிறார். அந்தப் புத்தகத்தில் உண்மையான நடந்த சம்பவங்களுடன் கூடவே, மக்கள் இவரைப் பற்றி இப்படி பேசிக் கொள்கிறார்கள், இப்படி சம்வங்கள் நிகழ்ந்ததாம் என்கிற ரீதியில் சில நடக்காத சம்பவங்கள் இடம் பெற்றிருந்ததாம். “எல்லாமே அவரை ஆஹா, ஓஹோன்னு பாராட்டும் படியான சம்பவங்கள் தான். ஆனாலும் அப்படியெல்லாம் நடக்காத சம்பவங்களை வரலாற்றில் பதிய வேண்டாமே”ன்னு மறுத்திட்டாருங்க” என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இப்படி எத்தனையோ அதிரடி ஆக்‌ஷன் சம்பவங்கள். உணர்ச்சி வசப்பட வைக்கும் உதவிகள்…

தொடுவானம் (www.thoduvanam.com) திட்டம் மூலம் கிராமப்புற மக்கள் தங்கள் புகார்களை இணைய வழியாக பதியும் திட்டம். ‘உழவன் உணவகம்’ என்ற இயற்கை உணவகச் சாலை. மாதிரி கிராமம் என்ற திட்டத்தின் மூலம் முன்மாதிரி கிராமங்களை உருவாக்குதல். ஊனமுற்றவர்களுக்கு ஊன்று கோல் வழங்கும் திட்டம். இலங்கை ஏதிலியர்களுக்கு அவர்கள் சொந்தக் காலில் நிற்கும் விதமாக ஆடை உருவாக்கும் கூடம், BPO.. இப்படி பல திட்டங்கள் தீட்டி மதுரை மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக்க உளப்பூர்வமாக செயல்படுகிறார்.

சமீபத்தில் நடந்த தமிழக மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் சிறப்பான சேவைக்காக மாண்புமிகு தமிழக முதல்வரின் மூன்றாவது பரிசினை பெற்றுள்ளார், மக்கள் மனதில் முதலிடம் பெற்றுள்ள ‘மக்கள் சேவகர்’ சகாயம்.

வாழ்த்துவோம்!

நன்றி தமிழோவியம்ஜனநாயகத்துக்கு எப்போதெல்லாம் ஊறு நேருகிறதோ - அப்போதெல்லாம் நேர்மையான அரசியல்வாதிகள், அதிகாரிகள் மக்களுக்கு நம்பிக்கை தருகிறார்கள். "நாங்கள் இருக்கும்வரை ஜனநாயகத்துக்கு எதுவும் நேராது" என்று
 ·  · 

வியாழன், 26 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் ..5.


மும்பை யில் இருந்து தில்லி ..முதல் பயணம்.

“It is good to have an end to journey toward; but it is the journey that matters, in the end” ....By Ursula K.Leguin    
.

ஒவ்வொரு மனிதனும், காலத்தின் கட்டாயத்தில், எப்போதேனும் தன வாழ்க்கையில் வேறுபட்ட இடங்களுக்கு, மாறுபட்ட சூழலில் பயணிக்க நேரிடுகிறது. இந்த பயணங்களில்,சில மனதில் மகிழ்ச்சி எனும் மத்தாப்பு களையும், மற்றும் சில பயணங்கள் அச்சத்தையும், திகிலையும்,  அல்லது இன்னவென்று சொல்லத் தெரியாத   எண்ண  அலைகளை காலம் காலத்துக்கும் ஏற்படுத்தி விடுகிறது.


பசு மரத்து ஆணியாய் இவை   மனதில் பதிந்து, அவசரமாய் மேய்ந்து, பின் ஆர அமர அசை போடும் பசு போலவும், அவ்வப்போது மனக் குகையில் அதிர்வு கேட்ட வெளவால் வட்டமிட்டு வந்து அமர்தல் போலவும். குளத்தில் இட்ட கல் போல, விரிகின்ற வளையங்களாய் அலை எழுப்பி, பின் வலுவிழக்கின்றன. காலம்  கடுகிட,  தன்னில் சற்றே விலகி, தொலைவில் நின்று, புகை போன்று எழும்புகிற இந் நினைவுகளை  நோக்கின், பெரிதே நகைப்பையும்,சிறிதே  நாணத்தையும் கூட ஊட்டும்.

புதன், 25 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் ..4இதம் தரும் இருப்பிடம் ..இல்லத்தில் நல்ல இல்லம்.


COOLING SYSTEM
  
குத்துக் காலிட்டு , 
கூரை மேலே குந்தி,
நீர் மெள்ள  உறிஞ்சி ,
நெருப்பான காற்றின்,
நெஞ்சம் குளிர வீசும்.
நிரம்பவே சூடு தணித்து  
          
மச்சு மேலே படுத்து, 
மயக்க நிலையில் கிடக்கும், 
நாகமாய் நீண்ட குழலில்,  
நளினமாய்த், தானே தவழ்ந்து
கொப்பளிக்கும் அறைக்குள் 
குளிர்ந்த காற்றாய்த் தானே !.


HEATING  SYSTEM


பருவ நிலை மாற ,
பல்லைக் கிட்டும், குளிர். 
கும்மட்டி அடுப்பு மூட்டி, 
குளிர் காற்றில், கனல் ஏற்றி, 
நிலவறையில் நீண்டு, 
நெளிகின்ற குழாய்க் குழுமம் 
ஊரிவரும் காற்று,உடன்  
சீறி வரும்,அறைக்குள்.
சிதற வைக்கும் குளிரை . 
சிவக்க வைக்கும் அறையை .
கத கதக்க வைக்கும் 
கம்பளிகள் தேவையின்றி .


( FRESH AIR )


உசுப்பேத்தும் அனல் காற்றை,
உறவாடி, உள் கலந்து 
ஊடலாய் கொஞ்சும்,
கொஞ்சம் குளிர்காற்று.
நெஞ்சம் குளிரவைக்கும், 
மஞ்சம் மகிழ வைக்கும்.
மகிழ்வில் மனம் சிரிக்கும் .


நன்றி :கூகுள் படங்கள்           

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் ..3


மர வீடுகளும்....என் மனவோட்டமும்.


உலகத்திலே வசிக்கத் தகுந்த சிறந்த நகரங்களில் மெல்பர்ன் (Melbourne ) முதலாவது எனபது, எப்படி?.. என்று, எனக்குள் நிறைய கேள்விகள், எழும்பின. உணவு, உடை, உறையுள் இந்த மூன்றில், முதல் இரண்டையும் மனிதன் தன் விருப்பப் படி, அடிக்கடி, மாற்றிக் கொள்ள இயலும். ஆயின் இருப்பிடம் பல ஆண்டுகள் நிரந்தரமாய் நிலைத்து இருக்கும் தன்மையில் அமைத்துக் கொள்ளுகிறது மனித இயல்பு.
 ஆஸ்திரேலியா சுமார் 23  மில்லியன் ஜனத் தொகையுடன் உலக நிலப் பரப்பில் ஆறாவது இடம். நம் இந்திய தேசம், 1210 மில்லியன் ஜனத் தொகையுடன் உலக நிலப் பரப்பில் ஏழாவது இடத்தில.ஒரு சதுர கி .மீ க்கு மூணு நபருக்கும் கீழே  இங்கே வசிக்க, நாம் 394  பேர் என்ற எண்ணிக்கையில், மூச்சு முட்டுகிறோம்.ஆனால் நம்ம ஜனத் தொகை ஒரு பெரும் பலமும், பலவீனமும் கூட. இதை ஒரு மாபெரும் பலமாய் மாற்றிடலாம்..முடியுங்கிறது.. உண்மைங்க ..இதை பத்தி, அப்புறம், ஒரு பதிவு எழுதினாலும், எழுதுவேன்னு கொஞ்சம் அச்சாரம் இப்போவே போட்டு வைச்சுகிறேன்..

வியாழன், 19 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும்.2.


கேடில் விழுச் செல்வம் கல்வி .

மெல்பர்னுக்கு வர முடிவெடுத்ததால் சிங்கப்பூரில் பாதியிலேயே ராஜனும், காயத்ரியும் படிப்பை விட வேண்டிய தாயிற்று. மேலும் இந்தியா,சிங்கப்பூரில் மே ஜூனில் பள்ளி ஆரம்பித்து மார்ச் அல்லது ஏப்ரல் வகுப்புக்கள்  முடியும். இங்கே பிப்ரவரி முதல் வாரம் ஆரம்பமாகி, டிசம்பர் நடுவில் முடிந்து விடும் .எப்படியானாலும் ரெண்டாம் கெட்டான் சூழ் நிலை.  புலம் பெயரும் முன்னதாகவே குழந்தைகள் பள்ளியில் சேர நாங்கள், 'ஹோம் வொர்க்' செய்தோம். ஏற்கனவே "அடிலைட்"ல் வசிக்கின்ற தங்கை வீட்டார், முன்பே குடி பெயர்ந்த தோழர்கள், இணைய தளம், மின்னஞ்சல்போதாது என்று... என் மகள் குடும்பத்தோடு ஒரு முறையும், தனியாகவும் ஆஸ்திரேலியாவுக்கு  விஜயம் செய்தார். குழந்தைகள் புதிய சூழல், புதிய பள்ளி இதை யெல்லாம் சமாளிக்க இயலுமா  என்பன பற்றிய கவலைகளுடன்.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் .1

பயண அனுபவம்... .மெல்பர்ன்.
மெல்பர்ன்( Melbourne ) வந்து கிட்டத் தட்ட இரண்டு மாதமாகி விட்டது. சிங்கப்பூரில் தங்கியிருந்த வீடு காலி  செய்து கப்பலில் அனுப்பிய சாமான்கள் இன்னமும் வந்து சேர வில்லை.கட்டில், சோபா,மிக்சி, கிரைண்டர், மற்ற இத்தியாதி  சாமான்கள். இட்லி, தோசை, இடியாப்பம்  சாப்பிட்ட நாக்கு . பதிலா பிரெட், பரோட்டா, சப்பாத்தி  என உணவு வகைகளில் மாற்றம். இவையெல்லாம் நான் எப்போதாவது தின்னும் அயிட்டங்கள் , இப்போது எப்போதும் சாப்பிடும் படியான நிலைமை . இரண்டு கட்டில், மெத்தை, தட்டு முட்டு சாமான், என போய்க் கொண்டு இருக்கிறது, நித்திய  வாழ்க்கை.இங்கே .


மெல்பர்ன் ஒரு அருமையான நகரம். உலகத்தில் வசிக்கத் தகுந்த நகரங்களின் தர வரிசையில் " நம்பர் ஓன்", என்று 2011-ம் வருட ஆகஸ்ட் மாத ஆய்வில் பிரசித்தம். இந்த வரிசையில் முதல் பத்தில் மூன்று நகரங்கள், ஆஸ்திரேலியா நகரங்கள் எனபது இன்னும் விசேஷம். முறையே சிட்னி ( Sydney ) ஆறாம் இடத்திலும், அடிலைட் (Adelaide) எட்டாவது  இடத்திலும் உள்ளன. இந்தத் தர வரிசை கல்வி ,கலாசாரம், சுத்தம், சுகா தாரம், சுற்றுசூழல், பொழுதுபோக்கு, பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, அரசியல் ஸ்திரத் தன்மை ஆகியவற்றை மையமாய் வைத்து   கணிக்கப்பட்ட ஒன்று. இதில் தட்ப வெட்ப நிலையும் ( climate ), விலைவாசியும்(Cost of Living) கணக்கில் வராது.

"என்னாடா?",  இது, துட்டு கிட்டு கொடுத்து இந்த லிஸ்டை தயார் பண்ணி விட்டார்களோ ? ,என சந்தேகம் .ஆனால் இந்த மூன்று நகரங்களையும் நான் நேரிலேயே பார்த்து விட்ட படியால் இது மிகவும் உண்மை என்றே படுகிறது.

Wedding  at Adelaide  


Sydney  Reception  
கடந்த முறை 2006 - ம் ஆண்டு ஜூலை  மாதம், என் தங்கை மகளின் திருமணம் "அடிலைட் விநாயகர்", கோவிலில்.அதற்கு நானும் என் துணைவியாரும்  வந்து இருந்தோம்.என் மைத்துனர் டாக்டர். முப்பத்தைந்து  வருடங்களுக்கு முன்பே  இங்கு  குடி யேறியவர். அப்புறம், இப்போது தான் நாங்கள் முதல் முறையாய், மைத்துனர்  வீட்டிற்க்கு, விஜயம் செய்தோம்.  .


கல்யாணம் முடிந்த  பிறகு, மறு வாரம் சிட்னியில்,  மணமகன் வீட்டார் வரவேற்பு . அடிலைடில்   இருந்து விமானம் ஏறி கான்பெர்ரா (Canberra ) வந்து, பார்லிமென்ட் கட்டிடடம் எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, பிறகு காரில் சிட்னி வந்து சேர்ந்தோம் சுமார் 250  கி .மீ தரை மார்க்கமாய். வழி எங்கும் ரொம்ப ரம்மியமான இயற்கைக் காட்சி.௦௦ மிக நேர்த்தியான சாலைகள் அங்கு 'சிட்னி பாலம்'  எல்லாம் பார்த்தோம்.1932 -ல் முழுதும் ஸ்டீல் கட்டுமானம் .சுருக்கமா அறுபது லட்சம் 'ரிவெட்' அடிச்சிருக்காங்க .௦  ஆனால் அதுக்கு பக்கத்திலே புகழ் பெற்ற 'ஒபேரா ஹவுஸ்' பார்ப்பது,ஏனோ  'மிஸ்', ஆகி விட்டது. வரவேற்பெல்லாம் முடிந்து திரும்பவும் அடிலைட் சென்று அங்கு 'பொட்டனிகல்  கார்டன் ' , 'மியுசியம்'  'யுனிவேர்சிட்டி'   மற்றும், பல இடங்களை கண்டு களித்து, ஒரு மாதம் கழித்து, ஊர் திரும்பினோம் .

கடந்த முறை  இந்த பயணத்தில் எங்களுக்கு ரெண்டு.மூணு சிக்கலான அனுபவங்கள். பங்களூரில் இருந்து மும்பை.பிறகு      உள்ளூர் விமான தளத்தில் இருந்து "சத்ரபதி சிவாஜி" சர்வதேச விமான நிலையத்திற்கு டாக்ஸி. "சிட்னி", செல்லும் 'குவாண்டாஸ்' விமானம் .பின் சிட்னி சர்வே தேச விமான தளத்தில் இறங்கி 'அடிலைட்' க்கு லோக்கல் பிளைட்.இது தான் எங்கள் நிகழ்ச்சி நிரல். விமானம் சிட்னி புறப்பட இரண்டு மணி நேரம் தாமதம்,மும்பையில்.இரவு 0930 க்கு பிளேன் கிளம்பியது .சுமார் 11 மணி நேர விமானப் பயணம். நடு நடுவே சிறிதே மூச்சுச் திணறல் .ஏசி ஒத்துக்கலை. துணைவியாருக்கு சொன்னால் 'கவலை படுவார்களே', என சொல்லவில்லை.

"முச புடிக்கிற  நாய் மூஞ்சைப் பார்த்தாலே தெரியும்", அப்பிடின்னு சொலவடை சொல்லுவாங்க.அவங்களுக்கு என்னுடைய சங்கடங்கள் புரிந்து, மாத்திரைகளையும், தைரியத்தையும் ஊட்டினாங்க .முப்பத்தைந்து வருட தாம்பத்தியத்தில் 'என்னை எப்படி சமாளிப்பது எனபது அவர்களுக்கு கை வந்த கலை' .

'அப்படி, இப்படி' ன்னு,எப்பிடியோ சிட்னி வந்து சேர்ந்தோம் . பாஸ்போர்ட் எல்லாம் பரிசீலித்து விட்டு பெட்டியை திறந்து காண்பிக்கச் சொன்னாக. பெட்டியில் ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் ஒன்பது மஞ்சள் கிழங்குகள் , கம்பீரமாய் .உருண்டையாய், பொக்கை,போரை இல்லாமல் .திருமண சடங்குகளுக்காக கொண்டு வந்திருந்தோம். 'ஏன் ?' , இதை அறிவிக்க வில்லை?., என கேள்வி மேல்,கேள்வி கேட்டு வறுத்து எடுத்தார் அந்த சுங்க அதிகாரி .மன்னிச்சுக்குங்க .என் தங்கை மகள் திருமணம் என்று கூறி அழைப்பிதழ்   காட்டினேன்.மேலும்   எங்கள் ஊர் திருமணச் சடங்குளில் தேவைப் படுகின்ற ஒரு மங்களப் பொருள்  அப்பிடின்னேன் .

 "அப்படின்னா என்னான்னு?."  பக்கத்தில் இருந்த சர்தார்ஜியைக் கூப்பிட்டார் .அவரிடமும் நிலைமையை விளக்கினேன் .ஏங்க!, உங்களிடம் கொடுத்த படிவத்தில், ஏன், நீங்கள் இதை எழுதலைன்னு வருத்தப் பட்டார்.சர்தார்ஜி.  "ரொம்பவும் விவாதம் பண்ணாமே, குப்பைத் தொட்டியிலே போட்டிடறேன்னு சொல்லிடுங்க", என்றார். இவ்வளவு சீரியஸ் ஆக, இதை எடுதிப்பிங்கன்னு, தெரியலே. ' "அனுமதிக்கலேன்னா,  குப்பைத் தொட்டியிலே போட்டு விடுறேன்னு " ,  மிகவும் பவ்யமா  சொன்னேன். கொஞ்சம் சாந்தமாய்க் கேட்ட அவர் " சரின்னு" , சொல்லி, அந்த மஞ்சள் எல்லாத்தையும் குப்பைத் தொட்டிக்குள்ளே தூக்கிப் போட்டுட்டார், ரொம்ப கூலா .

இந்த அனுபவம் ஒரு பெரும் படிப்பினை.இந்த முறை பயணத்தில்அந்த அனுபவம்  மிகவும் உதவிற்று. எப்படின்னு, கேக்குறிங்களா. அதையும் சொல்லி முடிச்சுடறேன் .அதுக்கு ஒரு பதிவு எழுதறது அவ்வளவு சிலாக்கியமின்னு, தோணல.

கோவிச்சுக்காதிங்க. கொஞ்சம் முன் கதைச் சுருக்கம் அவசியம், இந்த இடத்திலே. உங்களுக்கு கண்ணு சொக்குதுன்னு,  நல்லாவே தெரியுது .எழுதுற ,எனக்கும் தான்.

நவம்பர் 21 - ம் தேதி, தஞ்சையில் இருந்து துணைவியுடன்   புறப்பட்டு, விமானம் ஏறி , தனியே திருச்சியில் இருந்து, சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன் . வயது முதிர்ந்த தந்தையை கவனித்துக்   கொள்ள வேண்டி, என் பிரியசகி , இந்த முறை என்னுடன் வரலைங்க .ரொம்பவே  'மிஸ்', பண்றேன் ..

மகள் வீட்டிற்க்கு டாக்ஸி பிடித்து, வந்து சேர்ந்தபோது மணி இரவு ஏழரை. ஐந்து நாள் கழித்து, நவம்பர் 25 - ம தேதி இரவு பத்தரைக்கு, மெல்பர்ன் செல்லும் விமானத்தில், நான் பேரன் பேத்தியுடன், பயணம் செய்ய ஏற்பாடு .பேரனும் பேத்தியும்  பாடடி வீட்டில் இருந்து 25 - ம் தேதி மும்பையில் விமானம் ஏறி, அன்று  இரவு ஆறரை மணிக்கு, சிங்கப்பூர் 'சாங்கி ஏர்போர்ட்', வருவார்கள் . அங்கேயிருந்து நான் அவர்களை அழைத்துக் கொண்டு 'மெல்பர்ன்' செல்ல, எங்களை அனுப்பி விட்டு 'பெர்த்' (Perth  ) செல்லும் விமானத்தை என் மகள் பிடிக்க வேண்டும். மகளை ஒரு வாரம் பெர்த்தில் வேலை செய்யச் சொல்லி ஆபீஸ் உத்தரவு.

ஆளுக்கு 40 kg லக்கேஜ் புக் பண்ணியிருந்தோம் .மொத்தம் 17 உருப்படிகள் .நான்கு   லக்கேஜ் மகள் எடுத்துக் கொண்டார் .மீதி 13  ஐ  நாங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் .கூட்டிக் கழித்தால் சுமார் 30 kg அதிகம் .திரும்பவும் அவசர அவசரமாய் எக்ஸ்ட்ரா லக்கேஜை மூட்டைக் கட்டி, ஏர்போர்ட்ல எங்களை வழி அனுப்ப வந்த நண்பர் மாறனிடம் கொடுத்து அனுப்பினோம் .


எங்களுடைய கனமான ஏழு லக்கேஜ், கவுன்டரில்  'புக்' பண்ணிவிட்டு, கையில் இரண்டு லேப் டாப், நாலு பிரீப் கேஸ், ஆளுக்கொரு கம்பளிக் கோட்டு, என திக்கு முக்காடி விமானத்தில் ஏறினோம் எங்களுக்குப் பின்னாடி "பெர்த்" விமானத்தில் போக வேண்டிய என் மகள் சிறிது முன்னாடியே பறந்து விட்டாங்க.என் என்றால் வழக்கம் போல் எங்க விமானம் ,லேட்டுங்கோ .  

இந்த முறை முன்னெச்சரிக்கையாய் மசாலா சாமான்,மருந்து மாத்திரை( டாக்டர் சீட்டுகளுடன்), ஸ்வீட்,வத்தல்,வடாம்,   எல்லாம் தனித் தனியாய் ,' பேக் ' பண்ணி,  குப்பையில் போட தயாராய், மனசை திடப் படுத்திக் கொண்டு வந்தேன் கொஞ்சம் நகைகள் கையில், சூட்கேசில். சுமார் பத்து மணி நேரம் பயணம். காலையில் விமானம் தரை இறங்கறதாத் தெரியலே பைலட் ரவுண்டு கட்டுறார் .சன்னல் வழியா மழை கொட்டுறது, தெரியுது . எனக்கு நிறைய கதைகள் படிக்கிறது வழக்கமா?. விமானத்தில், ஏதோ புட்டுகிடுச்சோ, அப்படின்னு ஒரே காப்ரா ஆயிடுச்சு.  ரொம்ப என் அதீதமான  கற்பனைக்கு இடம் கொடுக்காமே விமானம் "துல்லாமரின்", ஏர்போர்ட் லே, மிக வழுக்கலான தரையிலே, ஒரு லௌகிக டயத்திலே இறங்கிடுத்து .என் பேத்திக்கோ தூக்கம் கலையல.அவளோட "கோட்டா", இரண்டு லக்கேஜ், அவ அதை  தூக்காம ஒன்னும் பண்ண முடியாது. கெஞ்சிக் கூத்தாடி, ஒரு வழியா தர, தர ன்னு எல்லாத்தையும் இழுத்துக் கிட்டு பஸ்ஸில், சொட்டுன  மழையிலே ஏறினது ... புனர்ஜென்மம் தான்.. போங்கோ.

கொஞ்சம் புத்திசாலித்தனமா, அசட்டு பிசட்டுன்னு இல்லாமே, இந்தத் தடவை விலாவாரியா படிவத்தில் கொண்டு வந்ததை ' டிக் ' பண்ணிட்டேன். பிரயாணிகள் திமு, திமுன்னு, ஒரே  திருவிழாக் கூட்டம் மாதிரி. வரிசையிலே கையும், காலும்  கெஞ்ச நிக்கிறோம் . 'வெல்கம்', ன்னு சொல்லி பாஸ்போர்ட் வாங்கி, ஸ்டாம்ப் பண்ணிட்டா.

அடுத்து எங்களோட, மூட்டை, முடிச்சை சேகரிக்க போனோம் பேத்தி காயத்ரி, தூக்கத்தில் இருந்து இன்னமும் விடுபடலை. தோள்   மேலே சாஞ்சு தூங்கித், தூங்கி  வழியறா. சுத்தி ,சுத்தி கடைசியிலே அஞ்சு பெட்டி தான் வந்தது .எல்லாம் கொஞ்சம் 'மெகா' சைஸ். ஆள் ஏறி அமுக்கியது . மீதி ரெண்டு அட்டைப் பெட்டியை காணலை .நான் நின்னு கிட்டே இருக்கேன் .என் பேரன், ராஜன் "தாத்தா, தாத்தா", கன்வேயர் பெல்ட் நின்னுடுச்சு எல்லோரும் போயிட்டா. 'கவுன்ட்டர்' லே விசாரிங்க, என்றான். சரின்னு, அரக்கப் பரக்க போயி, ரெண்டு அட்டைப் பெட்டி காணும் ன்னு சொல்ல "தோ  பாரு" , அங்கே இருக்குன்னு 'அசரீரி' மாதிரி சொல்லுறாரு .உடையக் கூடிய சாமானெல்லாம் தனியே அனுப்புவாளாம்.எங்கள் பெட்டி மாத்திரம் ,கேட்பாரற்று, தனியாய் அனாதையாய் ..பேஷ் ,பேஷ்...

ஆளுக்கு ஒரு தள்ளு வண்டி சகிதம், கழைக் கூத்தாடி போல  பாலன்ஸ் பண்ணிக் கொண்டு,கை காட்டிய இடத்துக்குப் போய் நின்றோம் . 'டென்சிங் ,ஹில்லாரி', கணக்கா ,இமய மலையில் ஏறினா மாதிரி .நான் எழுதி கொடுத்த படிவத்தை கையில்  வைத்துக் கொண்டுசுங்க அதிகாரி," எங்களை மேலே,கீழே பார்த்தார்" ,. வாத்தியார் கொடுத்த செய்யுளைப்  பாராயணம் பண்ணி, என்ன கேட்டா , என்ன சொல்லணும்?, அப்பிடின்னு யோசித்து வைச்ச தெல்லாம்,அந்த சுங்க அதிகாரிய பார்த்த உடனே , நொடியில் கணினியில்  delete பட்டனைத் தட்டின மாதிரி,  erase  ஆயிடுத்து .

சுங்க அதிகாரி ,"பெட்டியில் என்ன ? " ,என்று வினவ , சுவிட்ச் போட்டா மாதிரி, ."வீட்டுக்கான உணவுப் பொருட்கள் ", அப்படின்னு சொல்லி, உடனே ஒருபெரிய மூட்டையை எடுத்துப் போட்டேன். எல்லாம் தெளிவாய்த் தெரிகின்ற பிளாஸ்டிக் பையில். அடுத்த மூட்டையை  கையில் எடுக்கு முன்,ஓசையில்லாம, "ஓடிப் போங்கன்னு"  கண் ஜாடை காட்டிட்டாரு .அவரு கை நீட்டிய அடுத்த மேசைக்குப் போனோம். அங்கே, ஒரு ஆஜானுபாகுவான, அதிகாரி அம்மா . மென்மையாய் "எவ்வளவு மதிப்பு பொறுமான நகை, ரசீது இருக்கான்னு", கேட்டாங்க .என்னுடைய படிவம் பார்த்து, இரண்டு குழந்தைகளும் இங்கே நிரந்தரவாசி ( Permanent Resident )என்பதால் ஆளுக்கு நானூறு டாலர் மதிப்பு உள்ள பொருள் கொண்டு வரலாம், நீங்கள் 'டிக்ளர்' பண்ணத் தேவையில்லை என்றார்கள் .

தன முடிவில் மனம் தளராத விக்ரமாதித்தன் மாதிரி, உண்மையைத் தவிர வேறதையும் சொல்வதில்லை  என்று உறுதியாய் இருந்த நான், ரசீது இல்லை,இது எங்கள் குடும்ப நகை ..என்றேன் .ஒரு ஆயிரம் டாலர் மதிப்பு இருக்குமா ?. எனக் கேட்க ."இன்னும் கொஞ்சம் கூட இருக்கும்", என்றேன். ஆயிரத்தி ஐநூறு மதிப்பு போட்டுக்கவா என பேரம் பேசினார்கள். சரிங்கன்னு சொல்லிட்டு.. விட்டோம் சவாரி..

எங்களைப் போலவே வாசலில் களைத்துப் போய் காத்திருந்த மாப்பிள்ளையுடன் 'மினி லாரி'..சாரி 'வேன்'  பிடித்து வீடு போய்ச் சேர்ந்தோம் ..

ரொம்ப களைப்பா இருக்குங்க ..மீதி கதையை அப்புறம் சொல்றேனுங்க ..

வணக்கங்க ..  

நன்றி :கூகுள் படங்கள் .