ஞாயிறு, 25 டிசம்பர், 2011

உயரப் பறந்த பறவைகள் ...

                                 உயரப் பறந்த பறவைகள் ... 

கணிணிப் புரட்சியால், இந்தியாவின்  இன்றைய இளைய சமூகம் உலகெங்கும் பணி புரியும் வாய்ப்புக்கள். பொருளாதார சுமையால் முதுகு ஒடிந்து, மூச்சுத் திணறிய குடும்பங்கள் வளமான வாழ்க்கையும், வாங்கும் தன்மையும் கூடி, சற்றே இளைப்பாறுகின்றன. இளைஞர் திறமையும், கல்வியும் தந்த வரம்.



 நாம் கனவில் மட்டுமே கண்ட தேசங்களிலும் , திரைப்பட காட்சிகளில் பார்த்து வியந்த நாடுகளுக்கும் , நம் குழந்தைகள் குடி பெயர்தல், சர்வ சாதாரணமாகி விட்டது . புது வீடு, வாகன வசதி என பெரும்பாலான பெற்றோரின் கனவை நனவாக்கி உள்ளனர்,

 கண்களாய் போற்றி வளர்த்த குழந்தைகள், கண்காணா இடத்தில, தொலை தூர தேசங்களில்....தூரமும், பிரிவும்.  அது தரும் பெரும் துயர்...இதயத்தில்.


தொலைத் தொடர்புகளும், இணைய தளங்களும் இணைப்புப் பாலங்களாய் ... ஒலி, ஒளியில் முகம் கண்டு, மங்குகின்ற காதுகளும் கண்களும் மறு உயிர் பெறுகின்றன... இவ்வயோதிகத்தில். வார இறுதியில், இதயப் பாலையில் இழையோடுகிற பனி மழை.

உள்ளத்தில் பிரிவெனும் பெரும் சோகம் தாங்கி , இந்தக் குஞ்சுகள், இசைவான இரையின்றியும், நிறைவான மனமின்றியும், வாடுகின்றன, இவ் வசதிகளைத் தக்க வைக்க.

எதிர்கால வாழ்க்கை ஒரு புறம், ஈன்றெடுத்த பெற்றோர் மறு புறம் . மனம் அல்லாடுகிறது . வாலிபமும் , வயோதிகமும்  வறுமை அகற்றும் இந்த  போராட்டத்தில். பொறுப்பு சுமந்ததால், விட்டுப் போன வேலைகளும், இவன் தலையில் . விடுமுறை நாட்களிலும் கூட வேலை.உறக்கம் பறிபோக, ஓய்வில்லா சுமை .

பாசம்,பிணைப்பு என்ற சின்ன உலகத்தில், பெரிய ராசாவாய்  இருந்தவன் . தங்கு தடையற்ற சுதந்திரம் இருந்தும், இன்று, இங்கு  தனியனாய்...தாமரை இலைத் தண்ணீராய்...எப்போது ஊர் திரும்புவோம் என்று... எப்போதும்  ஏக்கம் தெரியும் கண்களுடன்.

வார முடிவில் 'வீடியோ',  வில் அப்பா ,அம்மா . பார்த்த உடனே  "குபுக் "என, பொங்கி அழத் தோன்றுகிறது . தன மனக் கண்ணில் கண்ணுறங்கா தாயும், கடன் உடன் வாங்கி படிக்க வைத்த, கனவுகளைச் சுமந்த  தந்தையும் நினைத்து, அழுகையை அடக்கி வெற்றாய்ச் சிரிக்கிறான்.

தந்தை கண்களில் தூசு விழுந்தார் போல், மேல்  துண்டால் தன் கண் துடைக்க தாயோ" பால் பொங்கி, கொட்டிவிட்டது", என அடுக்களைக்குள் நுழைகிறாள், தன் கண்ணில் ஆறாய்  பொங்கி வரும் புனல் அடக்க.

எப்படியோ பேசி முடித்து, எழுந்தவுடன் நாட்காட்டியில் தேதி கிழிக்கிறான். ஊரில் பால்காரன் சுவற்றில் இடும் கரிக்கோடுகள் போல...

மேல் வானத்தில் உறங்கப் போகும் சூரியனின் செங்கதிர்கள்...

தூரத்தே ஆகாசத்தில் ஒலி எழுப்பி தத்தம் கூடு நோக்கி திரும்புகின்ற பறவைகள் ...

வானம் பார்த்து,கண்கள் சொரிய,மனம் ஊமையாய் அழுகிறது .

உயரப் பறந்த பறவைகள். இனி ஊர் திரும்புவது எப்போது ?. 

10 கருத்துகள்:

  1. வளைகுடா நாடுகளில் பணி புரிவோர் அனைவரும் சொர்க பூமியில் இருப்பதான ஒரு மாயத் தோற்றம்.சில நாட்களுக்கு முன் ஒரு பதிவில் உலகின் சிறந்த பூந்தோட்டம் என்று ஒரு அரபு நாடு தேர்ந்தெடுக்கப் பட்டதாக படித்தேன். ஏதும் விளைய முடியா மண்ணில் எழுந்திருந்த அப்பூந்தோட்டத்தின் பின்னணியில் நம் மக்களின் வியர்வையும் ரத்தமும்தான் எனக்குத் தெரிந்தது. துபாயில் அவர்களின் உழைப்பை கண்ணால் கண்டு கண்ணீர் விட்டிருக்கிறேன். ஒன்றைப் பெற ஒன்றை இழக்க வேண்டும் என்பது விதியோ.? உண்மையில் அவர்கள் உயரப் பறக்கிறார்களா.?

    பதிலளிநீக்கு
  2. G.M.B..அய்யா அவர்களுக்கு என் வணக்கம்..பொருளாதாரம் தேடி ,ஆதார வேர்களைத் தொலைத்து தூர தேசங்களுக்கு போகிறோம் .உயரப் போகிறோம் ....வானம் வசப்படும் என்ற கனவுகளோடு ...அதற்க்கான வலிகளும்,விலையும் கொடுத்தே தீர வேண்டியுள்ளது .. என்றும் அன்புடன்

    பதிலளிநீக்கு
  3. இன்றைய தேடல் உலகத்தில் நடக்கின்ற பாசப்பிணைப்பு போராட்டத்தை மென்மையாய் சுருக்கி
    ஆதங்கத்தை கூறிய விதம் சிறப்புங்க சார் ...

    உயரப்பறந்த பறவைகள் என்று கூடு சேரும் ..விடையில்லா கேள்விகளோடு ???
    நெஞ்சம் ஒருகணம் கனத்து போகிறது சார் படித்து முடித்தவுடன் ...

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றிங்க அரசன்...தங்கள்
    வருகைக்கும் மேலான கருத்துக்களுக்கும்..
    என்றும் அன்புடன்..

    பதிலளிநீக்கு
  5. ''எதிர்கால வாழ்க்கை ஒரு புறம் ,ஈன்றெடுத்த பெற்றோர் மறு புறம் .மனம் அல்லாடுகிறது .வாலிபமும் ,வயோதிகமும் வறுமை அகற்றும் இந்த போராட்டத்தில்.பொறுப்பு சுமந்ததால் விட்டுப் போன வேலைகளும், இவன் தலையில் .விடுமுறை நாட்களிலும் கூட வேலை.உறக்கம் பறிபோக,ஓய்வில்லா சுமை .
    என்ன சார் அழ வைப்பது என்று முடிவு கட்டிவிட்டீர்களா? ஒவ்வொரு வீடுகளில் ஒரே பையன், மேல்படிப்புக்காக அயல்நாடு செல்கின்றனர்.
    பெற்றோர் விருப்பத்தையும் மீறி.அங்கே மேல்படிப்பு
    என்றால் அங்குதான் நல்ல வேலைகிடைக்கும் எனகிறார்கள்.அவர்கள் திரும்புவது எக்காலம்?
    எங்கு போகிறது குடும்ப பாசம்? எனவே நாம் பிணைப்பிலிருந்து சற்று விடுபடத் தயாராகவே இருக்க வேண்டும். நம் நாட்டிலும் தற்சமயம் நல்ல வாயப்புகள் இருக்கின்றன. தேவை போதுமென்ற மனம்.
    என் கடைசி மகன் 3வருடம் இருந்தது போதும் என்று
    திரும்பி, தற்போது பெங்களூரில் இருக்கிறான்.
    இது எப்படி?

    பாசம்,பிணைப்பு என்ற சின்ன உலகத்தில் பெரிய ராசாவாய் இருந்தவன் . தங்கு தடையற்ற சுதந்திரம் இருந்தும், இன்று, இங்கு தனியனாய்...தாமரை இலைத் தண்ணீராய்...எப்போது ஊர் திரும்புவோம் என்று... எப்போதும் ஏக்கம் தெரியும் கண்களுடன்''

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பிற்கு உரிய திரு.radhakrishnan அவர்களுக்கு நம் பிள்ளைகள் எல்லாம் வெளியூர் சென்று நமக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்கள் எனபது உண்மை.அதை நான் தீவிரமாய் ஆதரிக்கிறவனும் கூட.வெளி உலக அனுபவம், விசாலமான நடைமுறை அறிவு, தன் குடும்பத்திற்கும்,ஏன் நாட்டிற்கான பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பு, எண்ணங்களில் ஏற்படும் தெளிவுகள் என பல பயன்பாடுகள் ..உண்மை தங்களைப் போலவே, என் மூன்று குழந்தைகளும் ஆஸ்திரேலியா, துபாய் ,அமெரிக்கா என வேலை நிமித்தம். நானும் சுமார் ஆறு வருடம் சவுதி அரேபியாவில் பணி புரிந்தேன். பெருமையே யாயினும் பிரிவின் வலி. "கண்களில் ஈரம் காட்டுதல் ஆண்களுக்கு அழகில்லை",என நினைத்தவன் ..மற்றவை தங்கள் ஊகத்திற்கு விட்டு விடுகிறேன்..நிதரிசனம் ..ஆதங்கம் அவ்வளவு தான்.குழந்தைகள் உயரப் பறப்பதை,கண்ணில் நீர் திரையிட்டாலும்.பார்த்து ரசித்தாலே அழகு ..நன்றிங்க

      நீக்கு
  6. உண்மை..நிதர்சனம்.நெஞ்சு கூட்டுக்குள் ஒரு வித வலி ...என்ன சொல்வது என்று தெரியவில்லை...வணங்குகிறேன்

    பதிலளிநீக்கு
  7. கோவை நேரம்.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஊக்கமளிகிறது உங்கள் வருகை.

    பதிலளிநீக்கு