ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

சில்லென்ற காற்று ..சிந்தை மகிழும் காலை.

சில்லென்ற காற்று ..சிந்தை மகிழும் காலை. 
காலைக் கதிரவன்,
கிழக்கில் உதித்ததை,    
கட்டியம் கூறிடும்,
கீற்றுக் கிரணங்கள் .
விழித்திரை     பிரித்து 
விடிந்தது பொழுதென்று 
கிடந்தவனின், முதல் நடை .


வாய்க்காலும் ,வயலும் 
வரப்பின் இருபக்கம் .
நாணல்களும் ,கோரைகளும் 
நானாவித செடிகொடியும் ,
நண்டுகளும் மீன்களும் 
ஓடுகின்ற நீரில் 
ஆடுகின்ற நடனம் .
சலசலக்கும் தண்ணீரில் 
சரசமிடும் நாரைகள் .
விடிவெள்ளி சூரியனின் 
வெள்ளிக் கதிர்களோடு .
பனி விலகிடும்
பொழுது, 
பனையோலை மீது, 
பட்டு சொட்டும் 
நீர்த் திவலை, 
நிலமகள் மீது, 
இட்டு செல்லும் 
நீர்க் கோலம் . 

பச்சை மரகதப் 
பசும்புல் நுனியில், 
படுத்திருந்த 
பனித்துளி ,
வெள்ளைச் சூரியன் 
வெளிச்சம் வாங்கி 
வைர மின்னல் 
வரிகள் ,விரியும் காலை .

கூட்டுக் குருவிகள், 
குஞ்சுகளுக்கு விடை சொல்லி, 
இங்கிதமாய் இசையெழுப்பி, 
இரைதேடப் போகும், 
சங்கீதப் பயணம் .

சில்லென்ற காற்று
சிந்தை தழுவ 
திரை விலகும் பனியில் 
தொடப் போறேன் .நான் 
தொடுவானம் . 

நன்றி :கூகுள் படங்கள் .      

6 கருத்துகள்:

 1. அழகான கவித்துவம் நிறைந்த சிந்தனைகள் எழுதிய வரிகளில் .கிட்டவே தோன்றும் என்றும் எட்டவே முடியாத தொடுவானம் தொட்டுவிடுவோம் என்ற நம்பிக்கை தெறிக்கும் வரிகள்


  //சில்லென்ற காற்று
  சிந்தை தழுவ
  திரை விலகும் பனியில்
  தொடப் போறேன் .நான்
  தொடுவானம்//

  வாழ்த்துக்கள் காளிதாஸ் சார்.

  பதிலளிநீக்கு
 2. நன்றிங்க G.M.B.சார். வருகைக்கும் தங்கள் மேலான கருத்துக்கும்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிவு,நகரமெனும் நரகத்தில் தொழில் நிமித்தம் உழலும் என் போன்றோரை ஏங்க வைத்து விட்டீர்கள் ஐயா.பணி தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 4. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க..திரு உமேஷ் ஸ்ரீனிவாசன்.

  பதிலளிநீக்கு
 5. வாய்க்காலும் ,வயலும்
  வரப்பின் இருபக்கம் .
  நாணல்களும் ,கோரைகளும்
  நானாவித செடிகொடியும் ,
  நண்டுகளும் மீன்களும்
  ஓடுகின்ற நீரில்
  ஆடுகின்ற நடனம் .
  சலசலக்கும் தண்ணீரில்
  சரசமிடும் நாரைகள் .
  விடிவெள்ளி சூரியனின்
  வெள்ளிக் கதிர்களோடு .
  காளிதாஸ் சார், நான்தான் மௌனமாகிவிட்டேன் என்றால் நீங்களுமா? சொந்தவேலைகள், பயணங்களால் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
  உங்களுக்கு என்ன சுணக்கம்?ஒன்றரை மாதங்களாக்க காணோமே?
  கவிதை அருமை.என்னைப் போன்ற நடுநகர வாசிகளின் வயிற்றெறிச்சலைக் கொட்டிக் கொள்கிறீர்களே?வீதிகளில் நடக்கவே பயம் தரும் நிலையில் காலை நடைக்கு எங்கு போவது?கிராமவாசிகள் கொடுத்து வைத்தவர்கள்
  நல்ல பதிவு நன்றிசார்

  பதிலளிநீக்கு
 6. radhakrishnan சார் அவர்களுக்கு என் வணக்கம்.சிறிது காலமாய் ஒய்வு எடுத்த எனக்கு தங்கள் வருகை மிக உற்சாகம் தரும் செய்தி.பிள்ளைகள் விடுப்பில் வந்ததில் எழுதுவதில் சுணக்கம். தாங்களும் வீட்டில் அனைவரும் நலமா?.கிராமத்திற்கு சென்ற போது செல்லரித்த நினைவுகள் புது சென்மம் எடுத்தபோது எழுதியது..அன்புடன்

  பதிலளிநீக்கு