வியாழன், 14 ஜூன், 2012

திசை மாற்றிய திருப்பங்கள் .3

திரை கடல் ஓடி ..திரவியம் தேடி ..
வாழ்க்கையில் நம் கனவுகள் நிறைவேற,சில சமயம், பலகாலம், காத்திருக்க வேண்டியுள்ளது. நம் முயற்சியும் உழைப்பும் தவிர .நம்பிக்கை இழந்த தருணங்களில், பாய்மரம் திருப்பி ,வாழ்க்கையின் திருப்பங்களுக்கு வித்திடுகின்றனர்.கடவுள் போல் கை கொடுக்கும் ஆசான்கள். மேலும் பீடிகை இன்றி, விஷயத்திற்கு வருகிறேன்.
இருபத்திரண்டு வயது இளைஞனாய் இருக்கும் போது, திரை கடல் ஓடி திரவியம் சம்பாதிக்கணும் அப்படிங்கிற ஒரு தீவிர ஆசை, மனசுக்குள்ளே. எப்படி?. இந்த எண்ணம் எனக்குள்ளே ஊற்றெடுத்தது ,என யோசிக்கிறேன். முதலாவது என் தங்கை 1969 ம் வருடம் டாக்டர் கணவருடன் நியூசிலாந்து போனதும்.. அப்புறம் 1970 களில் வளை குடா நாடுகள், எண்ணெய் வளத்தில் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டதும் .. மந்தையாய் நம்மூர் மக்கள் வேலை தேடிப் போனதும் ...என்னுடன் வேலை பார்த்த சிலர் பத்து, பதினைந்து மடங்கு சம்பாதித்ததும், என என் ஆசைத் தீயில் நெய் ஊற்றிய செய்திகள். இவர்களை ஆவென்று வாய் பிளந்து நான் அண்ணாந்து நோக்கிய தருணங்கள் . என் தகுதியும் திறமையையும் யோசித்ததில், கனவுக்கும் நனவுக்குமான இடைவெளி வானத்துக்கும் பூமிக்குமானது ..நல்லாவே புரிஞ்சுது. ஆனாலும் கண் மூடினா, கடல் கடந்த நாடுகள் தான் கனவில் தெரிந்தது .

Riyadh Television center

ஒரு இளநிலை பௌதிக பட்டத்துடன், அகில இந்திய வானொலியில் சேர்ந்து, ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. இளநிலை பொறியாளர் மாதிரியான பதவி ( Engineering Assistant ). 1976 ம் ஆண்டு கல்யாண மாகி கையில் ஒரு வயது குழந்தை ஆஷா. ஆகஸ்ட் மாதம், என நினைவு. மும்பை தொலைகாட்சி நிலையத்தில் இருந்து, நண்பர் வாசுதேவன் ஒரு தந்தி அனுப்பியிருந்தார். சவூதி வானொலி நிலையத்திற்கு  பணியாளர்கள் தேர்ந்து எடுக்க, ஒரு குழு வருவதாகவும், நேர் காணலுக்கு வருமாறு அழைத்திருந்தார். 
கைப்பெட்டி சகிதம் திருச்சியில் இருந்து ரயில் ஏறி, விடியற் காலை சுமார் ஐந்து மணியளவில், எழும்பூர் வந்து சேர்ந்தேன். ரயில் நிலையத்தின் எதிரே ஒரு தேநீர் அருந்தி, ரிகஷாகாரருடன் பேரம். எழும்பூரில் இருந்து சென்ட்ரல் நிலையம் செல்ல. அங்கிருந்து தான்  மும்பை செல்லும் ரயில் பிடிக்க வேண்டும். பேரம் படிந்து, ரிக்சாவில் ஏறி அமர்ந்தேன். எங்கிருந்தோ "சார், சார்", என்ற பழக்கமான, பலத்த குரல்.  அடேடே! எதிர்த்த வீட்டுத் தம்பி. எங்கேப்பா! நீ, எப்படி இந்நேரத்திலே?...இங்கே . அவரு கூலா.." உங்களைதான் திரும்ப அழைச்சிட்டு போக வந்தேன் ", அப்படின்னு சொன்னாரு.நான் கிளம்பிய பிறகு " நேர்காணல் கான்செல் ஆகிவிட்டதாகவும், புறப்பட்டு வரத் தேவையில்லை ", என்றும், மற்றொரு தந்தி  .என் துணைவியார் அலறிப் பிடித்து எதிர் வீட்டு நண்பரிடம் சொல்ல, அவர் மகனை அனுப்பி என்னை மீட்டது தான், பிள்ளையார் சுழி .          
மனசும் ஓயலை,  என் அடுத்த முயற்சிக்கு, ஒரு மாமாங்கம் ஆகி போச்சு. .அதுக்குள்ளே நான் திருச்சி தேசியக் கல்லூரியில் பகுதி நேர வகுப்புகளில் படித்து பெளதிகத்தில் M.Sc ( மின்னணுவியல் சிறப்புப் பாடமாய் ) முடித்தேன். அலுவலகத்திலும் உதவிப் பொறியாளராய், பதவி உயர்வு.1990 ம் ஆண்டு பெங்களூர் தொலைக் காட்சி பராமரிப்பு நிலையத்தில் பணி புரியும் போது, என் மேலாளரின் நண்பர் சவூதி தொலைகாட்சி அமைப்பில் பெரிய பொறுப்பில் இருந்தார். அவருக்கு என்னுடைய விண்ணப்பமும், பரிந்துரையும் அனுப்பி வைத்தார். குவைத் தேசத்தில் போர் மூண்டது. எல்லாம் எண்ணெய் சமாசாரம் தான். அந்த  எண்ணெயில் என் விண்ணப்பமும் எரிஞ்சு போச்சு. வழக்கம் போல. 
காலச் சக்கரம் இதையெல்லாம் கண்டுகாமே சுழன்று கொண்டே போனது. நானும் தேசியக் கொள்கையை மதிக்காம இரண்டுக்குப் பதிலா மூணு குழந்தைகளுக்கு தகப்பனாகி என் பாரத்தையும், தேசத்தின் பாரத்தையும் கூட்டிட்டேன்.
வெள்ளிக் கம்பிகளுக்கு இடையே சில கரு முடிகள். பள பளக்கும் சொட்டைத் தலை, 28 வருட பழம் தின்னு கொட்டை போட்ட அனுபவம், எல்லாம் கூட்டிக் கழிச்சி பார்த்து, உதவி நிலையப் பொறியாளர் என்ற பதவிக்கு உயர்த்தினாங்க. உள்ளுக்குள்ளே, என் கனவின் பரிணாமம் கொஞ்சமும் குறையவே இல்லை.                 
இதன் தொடர்ச்சியாய்,1999 ம்  ஆண்டு  சவூதி தொலைகாட்சி நிறுவனத்தில் தொழில் நுட்ப மேலாளர் ஆக பணி புரிந்து வந்த திரு. வாசன் அவர்களை சென்னையில் சந்தித்தேன். விடுப்பில் வந்து இருந்தார்.
என் கோரிக்கையை செவி மடுத்த அவர், எனனை நேர்கண்டு, விண்ணப்பம் அனுப்புமாறு பணித்தார். அவ்வாறே செய்வதாய்க் கூறி பாண்டிச்சேரி திரும்பினேன். பொறியியல் படித்த என் சகா," நானும் விண்ணப்பிக்க துணை செய்யுங்கள் ", என்றார். என் சகாவின் திறமைக்கு நான் உத்தரவாதம் அளித்தால்,அவர் விண்ணப்பத்தையும் வாங்கி அனுப்புமாறு கூறினார் திரு.வாசன்.இருவரும் அனுப்பினோம்  சுமார் பதினைந்து நாட்கள் கழித்து திரு.வாசன் அவர்களை தொலை பேசியில், தொடர்பு கொண்டேன். 
முகமன் கூறி, மெள்ள விண்ணப்பம் எல்லாம் வந்து சேர்ந்ததா?. என பணிவுடன் வினவினேன். " ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி " ,என்றார். இதயம் காது கிட்டே வந்துட்டா மாதிரி லப் டப் சத்தம். some thing wrong அப்படின்னு மனசு கவுளி அடிக்குது. ஒண்ணும் இல்லே!. உங்களுடைய பட்ட மேற் படிப்பு தகுதியை சவுதி ஒளி பரப்பு மந்திராலயம் ஒத்துக்கலை. " உங்க நண்பர் பொறியியல் படித்தவர் ,அவருக்கு வேலை தர சம்மதித்துள்ளனர் " ,என்றார்.இடியுண்ட நாகம் போல இடிஞ்சி போயிட்டேன்னு கூட சொல்லலாம் .தோல்விகள் தொடர் கதை ..துவளுவதால் ஆகப் போகிறது ஒண்ணும் இல்லை. நண்பரை வாழ்த்தினேன். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ,அவர், நீங்க போகலேன்னா, நானும் போகலை. அப்படின்னுட்டார். 
மனசே சரியில்லை.எங்கே கோட்டை விட்டோம்.அடுத்து என்ன ?. மண்டைக் குடைச்சல். தூக்கம் வரேலே. உட்கார்ந்து, ஒரு நீண்ட கடிதம் ஒன்றை திரு.வாசன் அவர்களுக்கு எழுதினேன்.
பட்ட மேற் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி, மின்னணுவியலில் நான் எடுத்துப் படித்த பாடங்கள், தொலைக் காட்சி நிலையத்தில் ஆற்றிய பணிகள், எழுதிய தொழில் நுட்பக் கட்டுரைகள், பெற்ற சான்றிதழ்கள் என எல்லாம் எழுதி, முக்கியமானவற்றை கவனமாய் பச்சை நிற மார்கர் பேனாவில் அடிக்கோடிட்டு, 28 வருட வானொலி, தொலைகாட்சி அனுபவம் தொகுத்து அனுப்பி வைத்தேன்.மேலும் இந்தத் தருணத்தில் அவர் உதவி செய்யுமாறு வேண்டியிருந்தேன். சவுதி தொலைகாட்சி நிறுவனத்தில் திரு வாசன் அவர்களுக்கு இருந்த பெரும் மரியாதையும்,அவர் என் மீது வைத்த நம்பிக்கையும் ..எனக்கு அங்கே வேலை கிடைக்க வைத்தது. ஆறு வருடம், அவர் பெயரைக் காப்பாற்றும் அளவுக்கு பணி புரிந்தேன்.பின் தாயகம் திரும்பினேன்.


திரை கடல் ஓட நான் எடுத்துக்கொண்ட முயற்சி, என் வாழ்க்கையில்  ஒரு நீண்ட அத்தியாயம். கிட்டத் தட்ட கால் நூற்றாண்டு. இந்த கடலைக் கடக்க நான் பட்ட சிரமங்களும் ,தாண்டிய தடைகளும் நிறையவே. பகீரதப் பிரயத்னம். ஆனாலும் அதற்கான பலன்கள், மன நிறைவை தருகின்றன. திரும்பிப்  பார்க்கையில் என் தீராத தாகம் தீர்ந்ததாய், மன ஆறுதல். முட்டி மோதினால் திறக்கப் படாத கதவுகள் இல்லை என்ற என் எண்ணம் வலுப் படுகிறது.
திருப்பங்கள் இன்னும் தொடரும் ..அன்புடன்            

10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றிங்க..கோவைநேரம்.

   நீக்கு
 2. அன்று ஆரம்பிச்ச திருப்பம் தாங்க....
  இன்று உலகம் சுற்றும் வாலிபரா ஆகிடுச்சு...

  பதிலளிநீக்கு
 3. அன்புக் குழந்தைகளான உங்களால் தான் எங்களுக்கு உலகம் சுற்றும் வாய்ப்புக்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றிம்மா ஆஷா ..

  பதிலளிநீக்கு
 4. மிக்க நன்றிங்க தனபாலன்.உங்கள் பதிவுகள் அருமை.வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி..

  பதிலளிநீக்கு
 5. இந்த கடலைக் கடக்க நான் பட்ட சிரமங்களும் ,தாண்டிய தடைகளும் நிறையவே. பகீரதப் பிரயத்னம். ஆனாலும் அதற்கான பலன்கள், மன நிறைவை தருகின்றன

  அருமையான தன்னம்பிக்கை - வெற்றி பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 6. தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க..சகோதரி இராஜராஜேஸ்வரி.

  பதிலளிநீக்கு
 7. எப்படி சார் கொஞ்சமும் சளைக்காமல் விடாப்பிடியாக நினைத்ததை சாதித்தீர்கள். இதைத்தான் முயற்சி திருவினை ஆக்கும் என்பார்களா? ஊக்கமது கைவிடேல் என்பதற்கு எடுத்துக்காட்டாக உங்கள் வாழ்க்கை அமைந்திருக்கின்றது. உங்கள் இப் படைப்பு மனதுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுக்கின்றது .நம்பிக்கையை ஊட்டுகின்றது .நன்றி சார்

  பதிலளிநீக்கு
 8. அன்பு சகோதரி சந்திரகௌரி அவர்களுக்கு வணக்கமும் நன்றியும் .எப்போதோ ,எப்படியோ பற்றிக் கொண்டது ஒரு பொறி ..அணையாமல் ஊதிக் கொண்டிருந்தது மனது .மற்றவை நம்பிக்கையும் உழைப்பும் .தகுந்த நேரத்தில் ஈசனின் அருளால் கிடைத்த உதவிகளும் ..தங்கள் வார்த்தைகள் பெரிதும் எனக்கு ஊக்கம் அளிக்கின்றன ..என்றும் அன்புடன்.

  பதிலளிநீக்கு