மும்பை முதல் தில்லி..இரெண்டாம் கட்டம்.
செம்பட்டைத் தலை ,சிவந்த கண்கள் , ரயில் அழுக்குகளில் கணிசமாக கனக்கின்ற, கசங்கிய உடை. பாலைவனத்தில் நாடோடியாய் ஒட்டகம் மேய்த்து, திரும்பிய தோற்றம். கடிகார முட்கள் வேகமாய் நகர, இனியும் காத்திருத்தல் பயன் இல்லை என்று, தொலைபேசியில் நண்பரின் அலுவலக தொடர்பு எண்ணைச் சுழற்றினோம் ." ட்ரிங் ,ட்ரிங்", என்பதற்கு பதிலாய், ம்ம்.. ம்ம்.. என்று நீண்ட குரலில் அழுதது. மீண்டும், மீண்டும் இந்த ஒரு தலை ராகம்.விரல் வலிக்க ,தொலைபேசி, வெறும் தொல்லைபேசியாய். வயிற்றுக்குள் ஜந்துக்கள் நெளிய ,ரெத்த நாளங்களின் அழுத்தத்தில், குருதிப் புனல் கூடி நெற்றிப் பொட்டில், சம்மட்டி அடிகள்.
சூரியன் சற்றே அடிவானம் இறங்க, என் அடிவயிறு ரொம்பவும் கலங்கியது. அறிமுகமில்லா, புது இடம். தப்பு பண்ணிட்டோம். அப்படின்னு எப்போதும் போல, இக்கட்டான நேரத்தில் இடித்துரைத்தது, மனசாட்சி. நேரமில்ல!. இப்ப, அதோட தர்க்கம் பண்ண !. காணமல் போன பொருளை கண்டு பிடிக்க நினைவுகளின் வேர்களை தோண்டுறா மாதிரி, மனசு சம்பவக் கோர்வைகளை பின் தொடர்ந்து பாக்குது. கொஞ்சம் நான் இதுக்காக, திரும்பவும் மும்பை போவணும்.கருவின் ஆரம்பம், அங்கேதான் .