வெள்ளி, 27 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் ..6


மும்பை முதல் தில்லி..இரெண்டாம் கட்டம். 

செம்பட்டைத் தலை ,சிவந்த கண்கள் , ரயில் அழுக்குகளில் கணிசமாக   கனக்கின்ற, கசங்கிய உடை. பாலைவனத்தில் நாடோடியாய் ஒட்டகம் மேய்த்து, திரும்பிய தோற்றம். கடிகார முட்கள் வேகமாய் நகர, இனியும் காத்திருத்தல் பயன் இல்லை என்று, தொலைபேசியில் நண்பரின் அலுவலக தொடர்பு எண்ணைச் சுழற்றினோம் ." ட்ரிங் ,ட்ரிங்", என்பதற்கு  பதிலாய், ம்ம்.. ம்ம்.. என்று நீண்ட குரலில் அழுதது. மீண்டும், மீண்டும் இந்த ஒரு தலை ராகம்.விரல் வலிக்க ,தொலைபேசி, வெறும்  தொல்லைபேசியாய். வயிற்றுக்குள் ஜந்துக்கள் நெளிய ,ரெத்த நாளங்களின் அழுத்தத்தில், குருதிப் புனல் கூடி  நெற்றிப் பொட்டில், சம்மட்டி அடிகள்.

சூரியன் சற்றே அடிவானம் இறங்க, என் அடிவயிறு ரொம்பவும் கலங்கியது. அறிமுகமில்லா, புது இடம். தப்பு பண்ணிட்டோம். அப்படின்னு எப்போதும் போல, இக்கட்டான நேரத்தில் இடித்துரைத்தது, மனசாட்சி. நேரமில்ல!. இப்ப, அதோட தர்க்கம் பண்ண !. காணமல் போன பொருளை கண்டு பிடிக்க நினைவுகளின் வேர்களை தோண்டுறா மாதிரி, மனசு சம்பவக் கோர்வைகளை   பின் தொடர்ந்து பாக்குது. கொஞ்சம் நான் இதுக்காக, திரும்பவும் மும்பை போவணும்.கருவின் ஆரம்பம், அங்கேதான் .


பயிற்சிக்கு நான் கட்டாயம் போகனுமின்னு சொன்னவுடனே, "  இந்தியத் தலைநகரில் எனக்கு யாரைத் தெரியும் ?.", என்று மூளையை கசக்கிக் கொண்டேன். உள்ளூரிலேயே, ஒருவரையும் தெரியாத உனக்கு, ஏன் இந்த வீண் வேலை?. என, உள் மனது முனகியது. 

நல்ல வேளை!. மும்பைத் தொலைகாட்சியில் வேலை செய்த, என் "தேனீ", நண்பர், திரு .ராசேந்திரன் அவரது ஆத்ம நண்பர் திருS.S .அய்யர் அவர்களை பற்றிக் கூறி, என் அங்க அடையாளங்களுடன், விரிவாய்( என் தில்லி விஜயம் பற்றி) எழுதி, என் கண் முன்னாலே கடிதம் போட்டார். சரியான அஞ்சல் தலை ஒட்டி . 

வழக்கம் போலவே சிக்கனத்தின் சின்னமாய், என் சக ஊழியர்கள் போல, அலுவலக தொலைபேசி மூலம், நான் தில்லி வரும் செய்தியை, அஞ்சல் செய்திருந்தேன். மும்பை வானொலி கேந்திர கட்டுப்பாட்டு அறைக்கும் தில்லி ஆகாசவாணிக்கும் உள்ள நேரடித் தொடர்பு ( Hot Line ) மூலம். இது நிலையங்களுக்கு இடையே நிகழ்ச்சி பரிமாற்றம் செய்ய உதவிடும், தந்திவடம். இடைப்பட்ட நேரங்களில், சொந்த பந்தங்களின் பிரயாண வரவேற்பு நிகழ்ச்சி நிரல் தான் இதில் ஓடும். மரபுகளை மாற்ற விரும்பாத நானும், இதற்க்கு விதி விலக்கல்ல. தந்தி வடத்தின், மறு முனையில், பல தடவை, தெளிவாய் திரும்பத் திரும்ப கேட்ட, முகம் தெரியா தோழர், முகமன் கூறி, தடங்கலின்றி செய்தி உரிய   இடத்துக்கு, போய்ச் சேர்ந்து விட்டது என்றார்.

 நண்பர் அய்யர் அவர்கள், அங்கிருந்து 20௦ கல் தொலைவில், செய்திகளை வான் வழி வாங்கி, பின் அஞ்சல் செய்யும் நிலையத்தில் பணி புரிபவர். ஏதோ தகவல் குழப்பம் . எப்படியோ என்னுடைய "ஆபரேஷன் தில்லி",  யாரோ "ஹாக்" பண்ணிட்டாங்க . " பிளாக் பெர்ரி, ஆப்பிள், ஆரஞ்சு ",  எல்லாம் தோட்டத்தில் விளைந்த காலம்.  'சாரி', டயத்தை வளத்துறேன். 

 உடனே பிளான் B- க்கு மனசு தாவியது. கொண்டு வந்த மூட்டை முடிச்சை " க்ளோக் ரூம் " ல போடறோம். இந்த நேரத்திலே, எங்கள் லக்கேஜ் பத்தி சொல்லியே ஆகணும். கதையிலே, ஒரு முக்கிய திருப்பத்தை பின்னாலே ஏற்படுத்தப் போவுது .

ரூ 95 க்கு வாங்கிய "ப்ரெஸ்டிஜ்"   பிரஷர் குக்கர், கிருஷ்ணாயில் இயங்குற பித்தளை பிரஷர் ஸ்டவ் , பிலிப்ஸ் "கமான்டர்" ரேடியோ.. என எல்லாம் , பேரைப் பார்த்தே வாங்கியது. தட்டு, தம்ளர், குண்டான், கரண்டி என்று ஜோடி, ஜோடியாய், தட்டு முட்டு சாமான். இரண்டு சூட்கேசும், ஒரு கள்ளிப் பெட்டியும். மொத்தம் ஐந்து   உருப்படிகள், எங்களையும் சேர்த்து. சில ரூபாய் நோட்டுக்கள்  பாண்டில், கொஞ்சம் ரகசியமான இடத்திலே .

விட்ட இடத்திலே இருந்து வாரேன் .பிளான் B படி நாங்கள் 21X பஸ் பிடித்து " தோடாபூர்", என்று   கேட்டால், கடைசி ஸ்டாப். நகரத்தின் ஒரு கோடியில். அங்கே தான் இறங்க வேண்டும் .

"ஆகாசவாணி"  லே செய்தி கேட்டுருப்பிங்க .இதை பிற நிலையங்களுக்கு அனுப்பவும், உலக நாடுகளின் செய்திகளை சேகரிக்கவும், சக்தி வாய்ந்த வானொலி கருவிகளை உபயோகிப்பாங்க . அதுக்கு மழை காலத்திலே, நாம கொடி கட்டி துணி காயப் போடறா மாதிரி, பெரிய, பெரிய கம்பங்களில்,  நீட்ட, நீட்ட ஒயர் கட்டி வச்சிருப்போம் .அதே Aerial Field இன்னு சொல்லுவோம் .இதை நிர்மாணிக்க ஏகப்பட்ட விஸ்தீரணம் உள்ள இடம் வேணும் .அந்தந்த நகர கலெக்டரை அணுகினால், ஊருக்கு அப்பாலே, கண்ணுக்கு தெரியாத தூரத்தில், எதுவும் விளைவிக்கவே முடியாத இடமா, இலவசமா தருவாங்க. இங்கே நிலையத்தை கட்டி, ஆள்களை தேசப் பிரஷ்டம் பண்ணிடுவோம் .அப்படிப் பட்ட பொட்டல் காட்டை கண்டுபிடிக்கறது, அவ்வளவு கஷ்டம் இல்லைன்னு, சொல்ல வாரேன்.


ஆக, புது தில்லி ரயில் நிலையத்தில்,வெளியே  இருந்து வாரோம்." D Day ", க்கு இன்னும் ரெண்டு மணி நேரம் தான், இருக்கு என் கணக்கிலே. அதாங்க!  சூரியன் அஸ்தமிக்கு முன் ஆடு கிடைக்கு போய்டணும். 21X அப்படின்னா ?. என்னன்னு கேட்கிறாங்க ?.கீறல் விழுந்த ரெகார்ட் மாதிரி திரும்பவும்   சொல்றோம். பல காதுகளில் ஊதுனோம் .

கடைசியா, ஒருத்தர், " மூணு வருடத்திற்கு முன்னாடியே . அந்த பஸ் சர்வீசை நிறுத்திட்டாங்க ", என்று, அடுத்த அஸ்திரம் ஏவினார். " இடியுண்ட நாகம் ", போல் கலங்கி விட்டோம். கொஞ்சம் ' கேப் '  குடுத்து. எங்க பேய் அறைஞ்ச  முகத்தை பார்த்து,  ஒரு பஸ்சை நிறுத்தி,  இதில் ஏறி கடைசி ஸ்டாப்பில் இறங்கிகங்க. அங்கே போய் " வழி கேட்டு போய் விடலாம் " , என்றார். தொத்திக் கொண்டோம். தில்லி கடைசியில்,  இடம் ஞாபகமில்லை. பஸ் நின்றது. கண்டக்டர், " சத்தியமா! . நீங்க கேக்குற இடம், எனக்கு தெரியாது", என சொல்லிவிட்டார். சக பிரயாணிகளும், துண்டு போட்டு, தாண்டாத குறை .

பஸ்ஸை விட்டு இறங்கிட்டோம். எதிரில் ஒரு சூப்பர் மார்கெட் இப்போ மாதிரி 'மெகா சைஸ்' இல்லே ! .அங்கே ஒரு டீக் கடை அளவு ஓட்டல் .உள்ளே போய் உட்கார்றோம். சர்வர்  எல்லாரையும் இந்தியிலே கேட்டவரு, எங்கள் கிட்டே வந்து என்ன வேணுமின்னு ?. தமிழில் கேட்டார் .மேலும், " பாத்ரூம் போகணுமின்னா, அங்கே ஒதுங்குங்க ", அப்படின்னார்.

நான் அதெல்லாம் வேணாங்க. ஒரு போன் வேணுமின்னு சொன்னேன். "அதெல்லாம் தர்றதில்லை", என்று தமாஷ் பண்ணிய அவரிடம், அடி முதல் நுனி வரை கொஞ்சம் கக்கியவுடன், மீதியை அவரே " செர்லாக் ஹோல்ம்ஸ்" மாதிரி யூகிச்சுட்டார். கல்லாவில் இருக்கிற சர்தார்ஜி கடிச்சுடுவார். "உள்ளே போய் போன் பண்ணிட்டு வர்றேன்னு", சொன்னார் .

இடைப்பட்ட இந்த நேரத்திலே எல்லா தெய்வங்களையும்  வேண்டி என் துணைவியார் நேர்ந்து கொள்ள, நானும் அப்படியே follow  பண்றதா, வாக்கு கொடுத்தேன்.

அன்பர் வந்து "ஐயர்! சார் தான், டூட்டியிலே, இருக்காரு !. உங்களை தெரியாதாம். நீங்கள் வரப் போகின்ற தகவலும் அவருக்கு கிடைக்கவில்லை. இங்கிருந்து இரண்டு கி. மீ தூரம் தான். பத்து ரூபாய் கொடுத்து ஆட்டோ வில் வரச் சொன்னார்", என்றார்.

அவர் கையை பிடித்துகொண்டேன்.உண்மையில்,என்  உள்ளத்தில், அவர் கையை, காலாய் நினைத்துக் கொண்டேன். எங்கள் நன்றியில், திக்கு முக்காடிப் போனார். இன்றளவும், எங்கள் நெஞ்சை விட்டு, நீங்காத அனுபவம் .அன்று சிகப்பு வானத்தில் சூரியன், சிறிது சிரித்துக் கொண்டே மறைந்ததாய் நினைவு .  

அப்புறமென்ன !. ஆட்டோ புடிச்சு, ஐயர் அவர்களை சென்று     பார்த்தோம். அவர் வீட்டிற்க்கு அழைத்து சென்றார் .தம் துணைவியாரிடம், எங்களை  அறிமுகம் செய்து ,சீக்கிரம் உணவு தரச் சொன்னார் .

பசியா இருக்குங்க!. மீதியை அப்புறம் சொல்றேனுங்க ..                 

4 கருத்துகள்:

  1. இது இன்றைய பசியா (அ)அன்றைய பசியா? எங்களை பசிக்கவைத்து தாங்கள் புசிக்கச் செல்லுதல் முறையோ?

    பதிலளிநீக்கு
  2. நான் கூறியப் பசி அறிவுப்பசி(கதையறிவு)

    பதிலளிநீக்கு
  3. பகிர்ந்து உண்ணல் மனதில் பெரும் நிறைவு தரும்.தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் பெரும் பயனும்,பலனும் கூட. எல்லோரிடமும் கற்றுக் கொள்ளலாம்.திறந்த மனப் பாங்கு வேண்டும் அவ்வளவே.தங்கள் வருகையிலும் கருத்திலும் மகிழ்கிறேன். திரு.மணி கன்னையன்.

    பதிலளிநீக்கு
  4. அய்யா திரு.ரத்னவேல் அவர்களுக்கு வணக்கமுங்க.ரொம்ப நாளா சந்திக்கவில்லை வலை உலகத்திலே.நலம் தானே ! வருகைக்கு நன்றிங்க .

    பதிலளிநீக்கு