வியாழன், 26 ஏப்ரல், 2012

வெம்மையில் இருந்து விடுதலை .1

வெம்மையில் இருந்து விடுதலை.

அப்பப்பா!முடியலையடா, சாமி!. உஸ் அப்பாடா! "போன வருடமே தேவலை", என்ற வழக்கமான, உச்சி நேர புலம்பல்கள். கோடை காலம். வெள்ளிக் கிரணங்களின் கண் கூச வைக்கும் வீச்சம்.வெப்பமானியில், சிகரம் முட்டி நிற்கும் அளவைக் கோடுகள்.மிகையான வெக்கையும், தீராத  புழுக்கமும் மின்வெட்டின் உபயம். அறிவித்த மின்வெட்டைத் தவிர ,மற்ற நேரங்களில் மின்னல் போல்,அவ்வப் பொழுது  வந்து போகிறது, மின்சாரம். கொஞ்சம் பொறுங்கள் !.  ஒளிமயமான எதிர்காலம், தடை யில்லா மின்சாரம் என்று நம்பிக்கை தருகிறது, அரசு. சற்றே ஆறுதலான விஷயம். நம்பிக்கை தானேங்க வாழ்க்கை .
சுட்டெரித்த வெயிலில், எங்கள் வீட்டு  மொட்டை மாடி, மணல் இல்லா பாலை வனமாய், கனல் கக்குகிறது. தலைக்கு மேல் சுழலும் மின் விசிறி, அனல் காற்றை அள்ளி வீச, அணிந்து இருக்கும் ஆடைக்குள் தீயின் வாசம். இந்த வெப்பத்தின் வீச்சத்தில் இருந்து தப்ப வழி என்ன ?.என்ற மாறாத கேள்வி களில்..மண்டைக் குடைச்சல்.விடை தேடி ..

சம்சார சாகரத்தை பெரும் சுனாமி ஏதும் இன்றி, கணிசமாய் கடந்ததால், இப்போதைக்கு தினசரி அமளி, துமளிகள் அவ்வளவாய் இல்லை.கால தேவனின் ஓட்டத்தில், பணி மூப்பு. பகலில்  ஓய்வெடுக்க அலுவலகம் இல்லை. பஞ்சம் பிழைக்க வேலை தேடி வெகு தூரம்பறந்து போயினர், குழந்தைகள்.

விளையாட்டாய், வெய்யிலில் துள்ளித் திரிந்த காலம் போய்,  இப்பொழுது  மூப்பும் முதுமையும் முரசு கொட்டுகின்றன. வெயிலின் வேக்காட்டில் வெம்புகிறது உடம்பு. வெம்மையில் இருந்து தப்பிக்கும் உபாயம் தேடி சில, பல சிந்தனைகள் .மனசு யோசிக்கிறது..

ஊட்டி ,கொடைக்கானல் என்றவுடேனே முகில் தவழும் முகடுகள், வானளாவிய மரங்கள், உயரத்தில் இருந்து வெள்ளியாய் உருகி குதித்து, பாறைகளில் முட்டி மோதி நர்த்தனம் ஆடி ,இரைச்சலுடன் வழிகின்ற அருவிகள், அவற்றின் நீர் குடித்து, நெஞ்சம் குளிர்விக்கும் காற்று, பறவைகளின் சங்கீதம், வண்டுகள் இசைக்கும் ரீங்காரம், வண்ணம் கூடி மணம் கமழும் மலர்கள், எங்கும் பச்சைப் பசேல் என்ற காடு, பசும் புல் மெத்தை போர்த்தி, என கண்களையும் மனதையும் கவர்ந்து, உள்ளத்தில் விவரிக்க இயலா சுவர்க்கம். ஆஹா !. கற்பனையிலேயே மனசு குளிர்கிறது.

பேப்பர் பேனா சகிதம், திட்டம் தயார். கூட்டி  கழிச்சுப் பார்த்தா, செலவுத் தொகையின் கடைசி இலக்கங்களில்  ரெண்டு சைபரை கூட போட்டு விட்டோமோ எனத்  தோணுது. அப்புறமும் திரும்ப இங்கே தான், தஞ்சாவூரில். தற்போதைய வாசஸ்தலத்தில். நிரந்தரத் தீர்வு இல்லை, இது.நினைப்பில் இனிமை ஊட்டியது தான், மிச்சம்.
  
அப்புறம் திருட மகாஜனங்கள் எல்லோரும் ஆந்திராவுக்கு போகாமல், அடம் பிடித்து  சீசனை இங்கே கொண்டாடுரதாலே, வீட்டைத் தனியே விட்டுப் போக முடியாது.கூட எடுத்துக் கிட்டும் போக முடியாது. சாரி,கொஞ்சம் கடிச்சிட்டேன். மன்னிக்கவும். ஏற்கனவே இருமுறை கள்வர்கள் விஜயம், எங்களை தரை மட்டத்திற்கு (Ground Zero.Level.) கொண்டு வந்து விட்டது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. ஆகவே,  இந்த திட்டமும், உருப்பெறாமல், கருவிலே கலைந்துபோனது, களவாணி  பயத்தில் .
   
எனவே அடுத்ததாய், மொட்டை மாடியில ஒரு பந்தல் போடலாமா?. என்ற சிந்தனைப்  பொறி. சில வருடங்களுக்கு முன்னர், ரயில் பயணத்தில் திரு .சிவசுப்பிரமணியன் என்ற ஒய்வு பெற்ற ஆசிரியர், ஒருவரை சந்தித்தேன்.திருவிடை மருதூரைச் சேர்ந்தவர். ஜனாதிபதியிடம் விருது பெற்றவர். சூரிய சக்தியில் இயங்கும் பல உபகரணங்களை தயாரிப்பதாய்   கூறினார். மேலும் கிராமங்களில் தென்னை ஓலைகளை கொண்டு கீற்று முடைவார்கள். இந்த கீற்றுகளின் பள பளப்பான பகுதியை கீழ்புறம் வைத்து பந்தல் வேய்தல், காலம், காலமாய் புழங்கி வரும்   நடை முறை. ஆசிரியர் அவர்கள், அவ்வாறின்றி கீற்றுக்களை மாற்றி வைத்து பந்தல் அமைத்தால், அதன் ஆயுளை இரண்டு மடங்கு நீட்டிக்கலாம் என்று பல இடங்களில் செயல் விளக்கம் செய்து காட்டியதாய் கூறினார். இது ஒருமிகவும் உபயோகமான செய்தி, என்பதால் உங்கள் காதில் போட்டு வைக்கிறேன்.

மூங்கில், கீற்று, கயிறு, கூலி, சந்தை நிலவரம்... கணினியே திணறிப் போனது .சொந்தப் பந்தல், சோர்வில் நின்று போனது.
அடுத்த கட்டமாய் வாடகைப் பந்தல்.

விலாவாரியாய், விசாரித்ததில் வாடகைப் பந்தல் விலைக்கு, ஒரு வசந்த மாளிகை கட்டி விடலாம் போல. தேவையில்லை. வயசு போயிடுச்சு. ம்..ம் வசந்த மாளிகை தான் கொறச்சல் ..  மொக்காய் மலராமலே கருகிப் போனது, இதுவும். இதையும் விட எளிமையான வழி என்ன ?.

அதிகமா தண்ணி குடிங்க. எலுமிச்சை சாறு நல்லது, தடு பூசணி, வெள்ளரிக் காய் சாப்பிடுங்க என்றெல்லாம் மானா வாரியா யுத்திகளும் புத்திமதிகளும்.கடைப் பிடிக்க ஆரம்பிச்சுட்டோம் .இருந்தாலும் ...


ஐயோ!. உடல் எல்லாம்  சுடுதுங்க ..என்னா பண்ணலாம் ?. சுடு உணர்வை, மூளைக்கு தெரிவிக்கின்ற ரெண்டு பேரை, கொஞ்சம் தாஜா பண்ணுங்க. சூடு கொறைஞ்ச மாதிரி இருக்கும்.கை மணிக்கட்டு பகுதியும், கழுத்துக்கு பின்புறமும் கொஞ்சம் சில்லுன்னு இருக்கிறா மாதிரி ஈரமான கைக் குட்டை அல்லது துணியை சுத்தி வச்சுக்கலாம். மேலும், பாதங்கள்  நீரில் நனைகிறா மாதிரி ஏற்பாடு செஞ்சுக்கலாம். ஈரத் துண்டை போத்திக்கலாம். அப்படின்னு பல யோசனை.

" பார்ட்,பார்ட்டா ",  இப்படி செய்யறதை விட்டு விட்டு ஒரேயடியா குளிக்கலாம். நல்ல யோசனைன்னு, இதை எல்லாம் நான் செயல் படுத்த ஆரம்பிச்சேன். முடிவு .வீடு  பூரா " குட்டையும், குளமுமா ",   தண்ணியும், நனைந்த துணி மூட்டையும்.  "திரிபுரம் எரித்த சிவன்" மாதிரி விசுவ ரூபம் எடுத்து, என் பிரிய நாயகி, என்னை ஒரு வழி பண்ணிட்டாங்க. தண்ணிப் பஞ்சம். வேறே ஒன்னும் இல்லைங்க.சுவத்திலே அடிச்ச  பந்து மாதிரி, இதுவும் "வொர்க் அவுட்", ஆகலே. நொந்து போயிட்டேனுங்க.

ஆயினும், இந்த தடைகள் எல்லாம் தாண்டி, ஒரு வெம்மை குறைக்கும் யுத்தியை நடைமுறை படுத்தினேன். இதை பற்றிய விவரங்களை அடுத்த பதிவில் சொல்றேனுங்க .

ஆதவனை அலைக் கழிக்கின்றன கார் மேகங்கள். மப்பும்  மந்தாரமுமாய் வானம். இடி, மின்னல். இயற்கையே என்னுடைய இந்த அலம்பலை, சாரி, புலம்பலைப் பொறுக்க முடியாமல் நேற்றும், இன்றும் பெய்த மழையில் வெப்பத்தில் இருந்து சிறிதே விடுதலை..

6 கருத்துகள்:

  1. இயற்கையோடு வாழப் பழக வேண்டியதுதான். மின்சார சாதனங்கள் கண்டு பிடிப்புக்கு முன் நம் முன்னோர்கள் எப்படி இருந்திருப்பார்கள். எதுவும் கடந்து போகும். தவிர்க்கப் பட முடியாதது அனுபவிக்கப்பட்டே ஆக வேண்டும் அல்லவா. ?

    பதிலளிநீக்கு
  2. திரு G.M.B அய்யா அவர்களுக்கு நன்றியும் வணக்கமும். தங்கள் கருத்து முற்றிலும் சரி.இயற்கையோடு இணைந்து வாழ்தலே நலம்.மாற்று வழிகளைப் பற்றிய சிந்தனை ஓட்டம்,கருத்துப் பரிமாற்றம் அவ்வளவே.அன்புடன் தங்கள் நலம் விழைகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. //மூங்கில், கீற்று, கயிறு, கூலி, சந்தை நிலவரம்... கணினியே திணறிப் போனது .சொந்தப் பந்தல், சோர்வில் நின்று போனது.
    அடுத்த கட்டமாய் வாடகைப் பந்தல்.

    விலாவாரியாய், விசாரித்ததில் வாடகைப் பந்தல் விலைக்கு, ஒரு வசந்த மாளிகை கட்டி விடலாம் போல. தேவையில்லை. வயசு போயிடுச்சு. ம்..ம் வசந்த மாளிகை தான் கொறச்சல் .. மொக்காய் மலராமலே கருகிப் போனது, இதுவும்.//

    வெய்யிலுக்கேத்த சரியான பகிர்வு.
    மிக்க நன்றி காளிதாஸ் ஐயா.

    பதிலளிநீக்கு
  4. வெய்யிலுக்கு உன்கள் படம் தான் சூப்பர்...

    பதிலளிநீக்கு
  5. என் புலம்பல் செவிமடுத்த சகோதரி புவனேஸ்வரி ராமநாதன் அவர்களுக்கு என் வணக்கமும்,கருத்துக்கு நன்றியும்.

    பதிலளிநீக்கு
  6. திரு பாபு நடராஜன் அவர்களுக்கு. .தங்கள் வருகையில் மகிழ்கிறேன்.கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு