மனதென்னும் தறியில் ..மங்காத இழைகள் .
தூக்கிச் செருகிய கொண்டை, காதளவோடிய காந்தக் கண்கள், காதோரம் அலை பாயும் கருங் குழல், சங்குக் கழுத்தில் சின்னதாய் ஒரு மச்சம், சன்னமாய் அவள் உடலில் ஆலிலைக் கோடுகளாய் பவனி வரும் பச்சை நரம்புகள், இதழோரம் இள நகை.. சின்ன வயதில் என் கற்பனையில் வலம் வந்த யவன ராணி.
சோறு தண்ணியின்றி, கண் துஞ்சாமல், கிறங்கிய மனம். அலைகடலும் ஓய்ந்திருக்க, ஆழ்கடலில் துடுப்பிட்டு அகக் கடலை அலைக்கழித்த பூங்குழலி. வந்தியத் தேவனின் வசீகரமும், உடலெங்கும் வீரத் தழும்புகள் விழுப் புண்களாய், போர் பல கண்ட பழு வேட்டரையர் என கண்ணில் விரிந்த, காப்பியம்.பொன்னியின் செல்வன்.கல்கி தந்த வரம்.கடலைக் குறுக்கி கமண்டலத்தில் வைத்தார் போல் இன்னும் நெஞ்சப் பேழையில்..