திங்கள், 11 ஜூன், 2012

படித்ததில் பிடித்தவை .1. ( Daniel Kish ).

மலைக்க வைக்கும் மாற்றுத் திறனாளி ( Daniel Kish ) .
விழி  படைத்தோரே வியக்க வைக்கும் ஆற்றல். பார்வைத் திறன் கொண்டோரும், பதை பதைக்க வைக்கும் செயல் திறமை. இந்த சாதனைச் சிங்கத்தின் பெயர் டேனியல் கிஷ் ( Daniel Kish  ). 
விழித் திரையை பாதிக்கும் மிகக் கொடூரமான புற்று நோயால், பிறந்த ஏழே மாதங்களில் ஒரு கண்ணும், பதிமூன்றாவது மாதத்தில் மறு கண்ணும், மருத்துவர்களால் அகற்றப் பட்டவர். உயிர் காக்கும் உபாயம்,வேறு ஏதும் இன்றி. அன்றிலிருந்து நாவினால் ஒலி எழுப்பி, காதுகளை கண்கள் ஆக்கி, பார்வை இழந்தோர்க்கான புது உலகம் காண எத்தனிக்கிறார்.


நாக்கை மேலன்னத்தில் வைத்து ஒலி எழுப்பி, துல்லியமாய் தம்மை சுற்றியுள்ள பொருள் பற்றிய உணரும் சக்தியை வளர்த்துக் கொண்டு உள்ளார். வினாடிக்கு ஆயிரம் அடிகள் வேகத்தில் விரையும் ஒலி, எதிர் படும் பொருட்கள் மீது மோதி, மீளும் எதிர் ஒலியை காதில் கேட்டு( Echo Location ) மனதில் படமாக்கிக் கொள்ளுகிறார். சாலை ஓர மரங்கள்,வளைந்து திரும்பும் பாதை,வண்டி ,வாகனம் இத்தியாதி என முப்பரிணாமத்தில், முகம் காட்டுகிறது .இவரின் மனத் திரையில். ராடார் போல்.


பல வேறு காரணங்களால் சுமார் நான்கு கோடி மக்கள்,உலகெங்கும் பார்வை அற்றவராய் வாழ்கின்றனர். இவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் நட்சத்திர நாயகனாய். தற்போது 45 வயதாகும் இவர், அமரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மொன்ட்பெல்லோ என்ற ஊரில் பிறந்தவர்.மனோதத்துவத்தில் பட்ட மேற் படிப்பு. விழி இழந்தோருக்கு வழி காட்டிட உதவும் அமைப்பின் தலைவர் ( President of World Access For the Blind ).
இவருக்குப்  பிடிக்காதது .பார்வை அற்றோரிடம், மற்றவர் காட்டும் பச்சாதாபம் . இவை விழி இழந்தோரின் உண்மை ஆற்றலை முடக்கிப் போடுவதாய்க் கூறுகிறார்.
பறவைகளில் வௌவாலும், கடல் வாழ் உயிரினங்களில் "பெலுக", வகை திமிங்கிலங்களும், டால்பின் மீன்களும், மனிதருள் டேனியல் கிஷும் இந்த எதிரொலியை உபயோகித்து, எதிர்ப் பட்டதை, இனம் காணும் உத்தியில் வல்லுனர்களாய் உள்ளனர். இந்த உயிரினங்கள் எல்லாம் அதற்கு ஏற்ற வடிவமைப்பும் திறனும் பெற்றவை. டால்பின் வகை மீனின் மூக்குப் பகுதியில் இருந்து வினாடிக்கு இரு நூறு முறை ஒலி எழுப்பும் வசதி பெற்றது. ஆனால் மனிதர்கள் வினாடிக்கு மூன்று, நான்கு முறைகள் தான் ஒலி எழுப்புதல் சாத்தியம். எப்படி இந்த ஆற்றல் இவருக்கு கை கூடியது ?. 
பொதுவாகவே பார்வை இழந்தோர் சிறு பிராயத்தில் கை தட்டி, கால் தட்டி, விரல் சொடுக்கி, நாவால் ஒலி எழுப்பி அவை பொருட்களின் மீது மோதி திரும்பும் எதிரொலி மூலம் மனக் கண்ணில் அடையாளம் காண முற்சிப்பர் .பெற்றோரும் ,சமுதாயமும் பலமுறை நாகரிக மில்லை என இதனை அங்கீகரிப்பதில்லை. ஆதலின் இந்த ஆற்றல் அவர்களுக்குள் முடங்கிப் போய் விடுகிறது.
ஆனால் கிஷ விஷயத்தில், அந்தக் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாதது, அவர் செய்த அதிர்ஷ்டம். சுமார் இரண்டு வயது முதலே, நாவை சொடுக்கி சத்தமிட்டு, இந்த ஆற்றலில் (Echo Location / Flash Sonar ) முதன்மை ஆனவராய், சாதனை படைக்கிறார்.
தினமும் இரண்டு மணி நேர உறக்கம். மற்ற நேரமெல்லாம், இந்த ஆற்றலை மற்றவர்க்குப் பயிற்சிப்பதைப்  பற்றிய யோசனைகளும், செயல் வடிவமும். கிரிக்கெட் பந்து அளவுள்ள பொருளையும், இனம் காண இயலும் என்கிறது, இவர் ஆற்றல் பற்றிய பட்டியல். விஞ்ஞான உலகம், இவர் திறமையை பல முறை பரிட்சித்து பாராட்டியுள்ளது.
                                         கண் பார்வைக்கு ஒளியும், நோக்கும் இடமும் முக்கியம்.ஆனால் காதுகள் ஒலியை மேலே, கிழே, முன்னே,பின்னே, என எல்லா திக்கு களிலும் இருந்து கேட்க இயலும். இன்னும் சொல்லப் போனால், நல்ல கேட்கும் திறன் படைத்தவருக்கு, நிசப்தம் என்பதே அரிது. இந்த ஒலிகளின் அளவை வேறு படுத்தி ஆயிரம் அடி தூரம் உள்ள கட்டடம் முப்பது அடி தூரத்தில் உள்ள மரம், ஆறடி தூரத்தில் அசையாமல் நிற்கும் மனிதன் என்று அனுமானிக்கிறார், திருவாளர் கிஷ். சிலம்பக்  குச்சியையும், சிகை அசைதலில் முகம் திரும்புவதும் கூட உணரும் ஆற்றல். புதரும், சுவரும், கம்பி வேலி களும் கணிப்பில் தவறு வதில்லை. சமையலில் நிபுணர், தேர்ந்த  நீச்சல்காரர். மலை முகடுகளில் சைக்கிள் ஓட்டுவதும், அடர் வனத்தில் தனியனாய் தங்குவதும் இவருக்கு காது வந்த கலை.



இந்த ஆற்றல் பற்றிய விபரம் 1749 வருடங்களிலேயே தெரியும். இடைப் பட்ட காலத்திலேயும், ஒரு சிலர் இதில் சிறந்தவராய் இருந்து உள்ளனர் .ஆயின் எவரும் இதை நடை முறையில் பயிற்றுவிக்கக் கூடிய வகையில் முயற்சி செய்யவில்லை.விரல் விட்டு எண்ணக் கூடிய சகாக்களுடன் பயிற்சி நிறுவனத்தை தன வீட்டில் நடத்துகிறார். 
மனமிருந்தால் மார்க்கமுண்டு.தடைகள் தாண்டி சாதிக்கலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணம் ,இவர்.தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்க வில்லை என்று வருத்தம் . யாம் பெற்ற பேறு, பெருக இவ் வையகம் அப்படின்னு திரு டேனியல் கிஷ் ,இந்த முயற்சியில் தன்னை அர்ப்பணித்து உள்ளார்.வாழ்க அவரது தொண்டு . வளர்க அவரது நோக்கம்.  
நன்றி : கூகுள் படங்கள் ,யு டுயூப் .                     

7 கருத்துகள்:

  1. தெரியாத தகவல். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. G.M.B. அய்யா அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நலம் விழைகிறேன் .

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான தகவல்...
    மனிதனால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு மற்றுமொரு சான்று.....

    பதிலளிநீக்கு
  4. நிறையவே ஆச்சரியம் அளித்த அற்புதமான பல பதிவுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. திரு.ஜோதிஜி திருப்பூர்.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு