சனி, 23 ஜூன், 2012

பயணங்களும் அனுபவமும் .9

காலனி ( காலணி ) ஆதிக்கமும் ..நான் பட்ட கஷ்டங்களும் .

காலனி ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயனைப் பற்றி..ஆதவன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டதாய் கூறுகிறது, சரித்திரம்.அவன் விட்டுச் சென்றது ரயில் பாதைகளை. எடுத்துச் சென்றது எண்ணற்ற பொக்கிஷங்களை. விதைத்துச் சென்றது ஆங்கிலத்தை, மாற்றிச் சென்றது, நம்மில் ஆடை மாற்றங்களை. அட்டை போல், இவை, ஒட்டிக் கொண்டு, நம்மை ஆட்டிப் படைக்கின்றன, இன்றும். காலனி ஆதிக்கத்தில் அடிமைப்பட்ட ஆசிய நாடுகள் வீறு கொண்டு எழுந்ததாலோ, விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தினாலோ, விடுதலை பெற்றன என்பது, வரலாறு சொல்லும் கதை.


Dress code
" ஓய்வு பெற்று, மோட்டு வளையில் எலி நுழைந்ததா?.",  என்று யோசனை யில் இருந்த நான், பெரிய மகள் கூப்பிட, சிங்கப்பூர் பயணித்தேன். வயது முதிர்ந்த தந்தையை கவனித்துக் கொள்ள துணைவியார், தஞ்சையிலே தங்கி விட்டார்கள். ஏற்கனவே நாலைந்து முறை சிங்கப்பூர் போய் வந்தாகி விட்டது. ஒரு நாள் என் மகள்,பேரன்,பேத்தி, நண்பர் நெடுமாறன் தம்பதியர், அவர் குழந்தைகள் என மரினா பே சாண்ட்ஸ் எனும் இடத்தை, சுற்றி பார்க்கப் போனோம்.
அங்கே ஒரு கேளிக்கை அரங்கம் காசினோ உள்ளது. பெரியவர்கள்   ( வெளி நாட்டவர்க்கு ) அனுமதி இலவசம். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. நண்பர் நெடுமாறன் உள்ளூர்க்காரர், குழந்தைகளை அழைத்துக் கொண்டு, குடும்பத்துடன்  பக்கத்துக்கு கடைக்கு சென்று விட்டார். 
casino
கடைசியாய் காசினோ நுழைந்த என்னை தடுத்து நிறுத்தி விட்டனர். " மன்னிக்கவும், அனுமதிக்க இயலாது ", என்றனர், காவல் சிங்கங்கள்.  " காலை மூடிய காலணி (shoe), அணியவில்லை ", என்று. ஷேம் ஷேம் பப்பி ஷேம் கதையாய். அப்புறம் நான் வாசலில் நிற்க, வந்து சேர்ந்த நெடுமாறன், பதறி தன் ஷுக்களை கழற்றி தந்தார். பார்த்துக் கொண்டிருந்த காவலாளிகள் இருவரும், " அதை மாட்டிக் கொண்டு வாங்க ", என்றனர். எல்லாம்.. நம்ம தமிழ் மக்கள் தான். மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமான் பரம்பரை. உள்ளே நுழைய மறுத்து விட்டேன்  
காலனி ஆதிக்கத்தால் காலணி படுத்திய  கஷ்டம்.அத்தோடு விடலை.   கொஞ்ச நாள் கழிச்சி ..." பட்ட காலிலே படும் ", அப்படிங்குற கதையா...
இங்கே கொஞ்சம், என் காலணி உபயோகிக்கும் விதம் பற்றிய பின் புலம், விவரிக்கறது உசிதம்னு படறது. பொதுவா, காலணிகளை நீண்ட நாள் பயன் படுத்துவோர் சங்கத்தில், நான்  நிரந்தர உறுப்பினன்.  சமீபத்தில் ரூ199 உச்ச விலையை தொட்ட காலணியை தான், பெரும் பாலும் வாங்குவேன். மேலும், சரக்கு கப்பலில் எல்லாம் ப்ளிம்சால் லைன் அப்படின்னு, ஒரு கோடு போட்டிருப்பாங்க. அது மூழ்குகிற அளவுக்கு மேலே பாரம் ஏத்தக்   கூடாது. கைக்கு வந்தது வாய்க்கு எட்டும் நிலையில் வாழ்க்கை சக்கரம். என்ற பல காரணங்கள் . ஆயிரம் மாடல் பார்த்து, கடைசியாய் வாங்குவது அது தான். நீரில் நனைக்க மாட்டேன்.தப்பித் தவறி, நனைந்து விட்டால் தூங்காமல் காய வைப்பேன். காலில் இருந்து கழற்றி, பத்திரமாய் வைப்பதில் குறியாய் இருப்பேன். அது ஆபீஸ் என்றாலும், அயல் இடம் ஆயினும்சரி. சுருங்கச் சொன்னால், என் பழக்கத்தை கேலி செய்யாத நண்பர் களும், மற்றோரும் ரொம்ப சொற்பம். ஷூ அணியவேண்டிய கட்டாய காலங்களை, எப்போதும் பெட்டியில் தூங்கியே பள பளக்கும், ஒற்றை ஜோடி, உதவி செய்யும்.
ஒரு பிறந்த நாளில் குழந்தைகள்,அதற்கு விடை கொடுத்து விட்டு, என் அளவை கணித்து, ஒரு புத்தம் புது, ஷூவை கையில் திணித்தனர். விலை கேட்டு, முகம் வெளிறிப் போனேன்.   
விசா கெடு முடிய இன்னும் ஐந்து தினங்கள் பாக்கி. அங்கிருந்து கிளம்பி, துபாயில் வசிக்கும், என் இரெண்டாவது மகள் வீட்டிற்க்கு, விஜயம் செய்வதாய் திட்டமிட்டு, எடுத்த டிக்கெட்.  மருமகன் விமான நிறுவனத்தில் பணி புரிந்ததால், கையில் இருப்பது சகாய விலை விமானச் சீட்டு. ஆனால் ஒரு கண்டிஷன். பயணத்திற்கு தயாராய் விமான நிலையம் சென்று, காத்திருந்து இடம் இருந்தால் ஏற்றிக் கொள்ளுவார்கள். இல்லையெனில் " அடுத்த பிளைட்டில், முயற்சி பண்ணுங்க", அப்படி என்று, சொல்லி விடுவார்கள்.  
ரொம்பவும் பிசியான சீசன். நள்ளிரவு புறப்படும் விமானத்தில் இரண்டு முறை முயற்சித்தோம். செரங்கூன் ரயில் ஏறி, மாற்றி மாற்றி   மூட்டை தூக்கி, சோர்ந்து போனோம் . ஷூ காலைக் கடித்ததால், புதியதாய் பாதிக்கு பாதி என்று, தள்ளுபடி விலையில் வாங்கிய முப்பது டாலர் செருப்புடன், மூன்றாம் முறை, சாங்கி விமான நிலையம் அடைந்தோம். மாப்பிள்ளையும், நானும். 

Changi Airport
லக்கேஜ் எல்லாம் செக் பண்ணி போர்டிங் பாஸ் கொடுத்து விட்டனர். மாப்பிள்ளைக்கு " டாட்டா ", சொல்லி விட்டு குடியுரிமை கேட்டிற்குப் போகிறேன் 
செக்யூரிட்டி என்னுடைய பாஸ் போர்ட், போர்டிங் பாசும் செக் பண்றார். அப்போது ஓடி வந்த, போர்டிங் பாஸ் கொடுத்த கவுண்டர் மேலாளர், செக்யூரிட்டி இடம் இருந்து போர்டிங் பாசையும் பாஸ் போர்ட்டையும் வாங்கிக் கொண்டு, என்னைத் தனியே அழைத்துச் சென்றார்.  குழம்பியபடியே பின் தொடர்ந்தேன்.
காலில் ஷூ அணியவில்லை என்பதை சுட்டிக் காட்டி, " பணியாளர் சலுகை டிக்கெட்டில், ஷூ இல்லாமல் பயணிக்க, அனுமதி இல்லை ",  என்றார். என்னுடைய வியாக்கியானங்கள் எல்லாம், விழலுக்கு இறைத்த நீராயிற்று. " பத்து நிமிட அவகாசம் தருகிறேன் ", என்றார். அப்போது தான், ஷூ கடிச்சதாலே, கடுப்பில், வீட்டில் விட்டு விட்டது, கவனத்திற்கு வந்தது. மாப்பிள்ளையும் ஷூ அணியவில்லை. கண்களால் துழாவியதில், பக்கத்துக்கு கன்வேயர் பெல்டில், ஒரு தமிழர்  தெரிந்தார். திருச்சிக்காரர். அந்த சப்பை மூஞ்சி " பெரிய ரோதனைக்காரன் ", என்றார், என் கதை கேட்டு. அவர், அங்கு துப்புரவு பணி செய்வோரின், மேலாளர். ஆபத்பாந்தவர் அனாத இரட்சகராய் உடன் மாடியேறி, பணியாளர் அறைக்கு கூட்டிச் சென்று,  நாலைந்து லாக்கரை திறந்து, ஷூக்களை அள்ளிப் போட்டார். குதிகால் உயர்ந்த ஒரு ஷூவில், எப்படியோ காலை நுழைத்தேன். மறுத்தவரிடம் புது செருப்பையும் ,கையில் 30 டாலர் பணம்  நன்றிக் கடனாய் கொடுத்து விட்டு ,கிழே விரைந்தேன்." சீக்கிரம் போங்க ", என்று சொல்லி திருச்சி நண்பர் விடை பெற்றார். நொண்டி அடித்துக் கொண்டு " சப்பாணி ஸ்டைலில் ",  கவுண்டர் வந்து சேர்ந்தேன். கவுண்டர் மேலாளர், நேரமாகி விட்டதால் என்னுடைய லக்கேஜ் இறக்கப் பட்டு விட்டதாகவும், " அடுத்த பிளைட் பாருங்கன்னு ", சொல்லிட்டார். 
மறக்க முடியாத அனுபவம். ரொம்ப நாளு, சிங்கப்பூரும், அப்பா வோட ஷூவும் என் குடும்பக் கதை ஆகிவிட்டது.  காலனி ஆதிக்கத்தில் நான் பட்ட கஷ்டம், அந்தக் காலணிக்கே வெளிச்சம் .             
நன்றி : கூகுள் படங்கள் .         

8 கருத்துகள்:

  1. சிங்கப்பூரில் காலணி இவ்வளவு தொந்தரவு தருமா.?இதுவரை கேள்விப்படாத விஷயம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ..G.M.B..சார் ..முதலாவது நான் சிங்கப்பூரில் பார்க்க விழைந்த காசினோவின் dress code. இரண்டாவது அனுபவமும் சிங்கப்பூரில் தான்.ஆனால் துபாய் எமிரேட் ஏர் லைன்ஸ் பணியாளர்கள் / உறவினர்கள் சலுகையில் பயணிக்கும் போது கடைப் பிடிக்க வேண்டிய dress code. வெள்ளைக் காரன் விட்டுச் சென்ற மிச்சங்கள்.

    பதிலளிநீக்கு
  3. காலனி ஆதிக்கத்தின் எச்சமான காலணி ஆதிக்கத்தின் கதை சுவையாக இருக்கிறது. வாசித்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க திரு.பாலச்சந்திரன்..

    பதிலளிநீக்கு
  5. காலணி என்பது பலசமயம் கால் ஆணி போலத்தான் உறுத்துகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ..ஜோதிஜி ..உங்கள் டாலர் நகரம் வாங்கியுள்ளேன் .மிக அருமையாய் எழுதி இருக்கிறீர்கள் ..வாழ்த்துக்கள் .வளரட்டும் தங்கள் எழுத்துப் பணி ..வாழ்க வளமுடன் .

      நீக்கு