செவ்வாய், 26 ஜூன், 2012

அது ஒரு கனாக் காலம் ..

மனதென்னும்  தறியில் ..மங்காத இழைகள் .





தூக்கிச் செருகிய கொண்டை, காதளவோடிய காந்தக் கண்கள், காதோரம் அலை பாயும் கருங் குழல், சங்குக் கழுத்தில் சின்னதாய் ஒரு மச்சம், சன்னமாய்  அவள் உடலில் ஆலிலைக்   கோடுகளாய் பவனி வரும் பச்சை நரம்புகள், இதழோரம் இள நகை.. சின்ன வயதில் என் கற்பனையில் வலம் வந்த யவன ராணி.







சோறு தண்ணியின்றி, கண் துஞ்சாமல், கிறங்கிய மனம். அலைகடலும் ஓய்ந்திருக்க, ஆழ்கடலில் துடுப்பிட்டு அகக் கடலை அலைக்கழித்த பூங்குழலி. வந்தியத் தேவனின் வசீகரமும், உடலெங்கும் வீரத் தழும்புகள் விழுப் புண்களாய், போர் பல கண்ட பழு வேட்டரையர் என கண்ணில் விரிந்த, காப்பியம்.பொன்னியின் செல்வன்.கல்கி தந்த வரம்.கடலைக் குறுக்கி கமண்டலத்தில் வைத்தார் போல் இன்னும் நெஞ்சப் பேழையில்..





நிலவைப் பிடித்து, சிறு கறைகள் துடைத்து, குறு முறுவல் பதித்து, பூரணமாய் என்னுள் புதைந்த, பூரணி.பள்ளிப் பிராயத்தில் பூத்தது அந்த குறிஞ்சி மலர். இன்னமும் வாடவில்லை.அன்று அரவிந்தன் டைரியில் எழுதியது .பசுமரத்து ஆணியாய் பதிந்தது என் மனதில். 




காண்டேகரின் பல நூல்களில் என்னோவோ தெரியவில்லை வெண் முகிலின்  சஞ்சாரம் என் மன வானில். இன்றளவும் அகலவில்லை. நின்று கவனித்து  தாக்கியது, சுஜாதா அவர்களின் படைப்புகள். நெஞ்சின் ஆழத்தில் அமுங்கி, அழுகிய அந்தரங்க நினைவுகள், அலசினால் அசிங்கம் என தயங்கிய, முக மூடி உலகில். சமூகத்தின் அவலங்களை தோலுரித்து அடையாளம் காட்டின ஜெயகாந்தனின் நாவல்கள். நினைவுகளின் ஆழத்தையும் அகலத்தையும் உள்நோக்கிப் பார்க்க வைத்தன. வேங்கையின் மைந்தனைப் படித்து மனசு வீறு கொண்டு எழவும், பாவை விளக்கில், என்னை பரிதவிக்கவும் 
வைத்தார்.. அகிலன்  அவர்கள்.

சித்திரக் கதைகளும், சிந்துபாதும், கால் டவுசர் போட்ட வயசில், பள்ளிக்கு நடந்து போகும் கணிசமான தூரத்தை, கனவுடன் கடக்க வைத்தவை. சங்கர் லாலும், துப்பறியும் சாம்புவும்.. அப்புசாமியும், சீதாப் பாட்டியும்.. மூளையின்  மீள் நீட்சிகளில் சிந்தனையையும் சிரிப்பையும் கூட்டி யவர்கள். விளங்கவும், விவரிக்கவும்  இயலாத, உலகம். காத்து, கருப்பு, மந்திர தந்திர மாயங்களைப் பற்றிய ,ஜாவர் சீதாராமனின்  உடல், பொருள்,  ஆனந்தி. மயிர்க்  கூச்செறிதலும், இனம் காணா இருட்டில்,இன்றும் பய முறுத்துகின்றன.அப் படைப்பின் தாக்கம். 

பாண்டவர் பதைக்கவும், கௌரவர் சிதையவும், கர்ணனின் கம்பீரம், கண்ணனின் சாகசம் என யுத்த சங்கிலிகளின் மாளாத யுத்திகள். மகாபாரதம் எனும் மாபெரும் இதிகாசம். ராஜாஜி அவர்களின் கை வண்ணத்தில். கையில் எடுத்த பின், கண் உறங்காமல் ஒரு கவளமும் உண்ணாமல், கருத்தில் ஊன்றிய, ஊன்றின காட்சிகள். 
பள்ளிக் காலங்களில், வலங்கைமான் நூலகத்தில், மாளாமல் புத்தகம் எடுத்துப் படித்தது. அக்காமார்கள், கவனமாய் இதழ் பிரித்து தைத்து வைத்திருந்த புத்தகங்கள், இரவலாய்ப் படித்தது. டீக் கடையில் மூச்சிரைக்க ஓடி, நாளிதழில்  கன்னித் தீவு (சிந்துபாத் ) படிக்க காத்திருந்தது.  பிஞ்சு நெஞ்சில் பிரமிப்பை ஊட்டிய தருணங்கள். பழுப்பேறிய அந்தக் காகித மணம்,.விரிந்த சரித்திரம் ,கடந்து போன கலாசாரம்.. சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்த கதைகள். கற்பனைக் குதிரையை காற்றில்  பறக்க வைத்த படங்கள், கண் மூடி மெய்மறந்து உடல் சிலிர்த்த உணர்வுகள். 
எதை எழுதுவது...எப்படிச் சொல்லுவது...அது ஒரு பெரிய கனாக் காலங்க! .  கனவுகளிலே காலம் ஒடிச்சு. இன்னும் பல இழைகள், இன்றளவும் நெஞ்சத் தறியில், ஓடி கிட்டே இருக்கு.நினைவுகள் மங்கிய போதும், மாயாமல், மறையாமல் இன்னும் என் மன வானில்.

நன்றி :கூகுள் படங்கள் .Liebstar-award

23 கருத்துகள்:

  1. உண்மைதான். தொலைகாட்சியும், தொல்லை பேசியும் இல்லாத அக்காலத்தில், எழுத்துக்கள் ஒவ் வொருவர் மனதிலும் காட்சிகளை வரைந்தன. கற்பனைத்திறன் ஆசிரியர்கு
    மட்டும் இல்லாமல் வாசகரிடமும் தூண்டப்பட்டது. இந்த நவீன யுகத்தில் அது முடமாக்கப் பட்டதாகத்தான் தோன்றுகிறது. சாண்டில்யனின் வருணனையை
    இன்றுகூட படமாக்குவது மிகவும் சவாலான செயல்தான். பழைய படைப்புகளை நவீன விஞ்ஞான யுக்திகளால் பாதுகாத்து வரும் தலைமுறைகளுக்கு வழங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தியாகு சார் வணக்கம்.புத்தகங்கள் தான் ஒரு பெரும் பொழுது போக்கு,அந்தக் காலத்தில். நாம் வாழ்ந்த வரலாற்றை வசீகரமாய் போதித்தவை.கதா பாத்திரங்கள் பற்றிய வர்ணனைகளும், சம்பவக் கோவைகளும் காலத்தால் அழியாதவை.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..அன்புடன் .

      நீக்கு
  2. உங்கள் படிப்பார்வம் மலைக்கவைக்கிறதுகிட்டத்தட்ட இதேபோல்தான் நானும். சிறுவயதில் படித்த புத்தகங்களைப்
    பாதியில் வைக்க மனமில்லாமல் வேறு வரிசைகளில் ஒளித்துவைத்துவிட்டு, மதியம் சாப்பிட்டபின் அவற்றை
    எடுத்துப் படித்த நூலகநினைவுகள்மறக்கமுடியுமா?உங்கள் மாவட்ட எழுத்தாள ஜாம்பவான்களான தேவன், தி.ஜானகிராமன் ஆகியோரையும் படித்திருப்பீர்கள் என்று நீனைக்கிறேன்.
    பகிர்வுக்கு மிக்க நன்றீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. radhakrishnan சார் வணக்கம் .நம்ம எல்லாம் சம காலம் தான்.அப்பொழுது திரைப்படம் எல்லாம் பார்ப்பதே அபூர்வம்.எப்படியோ புத்தகம் படிக்கும் ஆர்வம்.இன்னமும் சில வரிகளின் தாக்கம் மறக்க இயலவில்லை .பழைய நினைவுகளை அசை போடுகிறேன் .வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, ஈஸி சேரில் சாய்ந்து கொண்டு, தென்னந் தோப்பில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு, சாப்பிடும் போதும் கண்களால் மேய்ந்து கொண்டு புத்தகங்களை ரசித்து ரசித்துப் படித்த அந்தக் காலம் உண்மையிலேயே ஒரு கனாக் காலம்தான். நீங்கள் குறிப்பிட்ட அத்தனை நூல்களும் உங்கள் வாசிப்பு அனுபவத்தைச் சொல்லுகின்றன.

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் சொல்வது முற்றிலும் சரிங்க .சாப்பிடும்போது படிக்காதே என்ற சொல் இன்றளவும் ஒலிக்கிறது .களத்து மேட்டிலும் கழனிகளிலும் நாம் படித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.வருகைக்கு நன்றிங்க தமிழ் இளங்கோ சார் ..

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. வணக்கங்க. நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.நலம் தானே.வருகையில் மகிழ்ச்சி அடைகிறேன்.

      நீக்கு
  6. ஆஹா அருமை....பொன்னியின் செல்வன்...கடல் புறா..சிவகாமியின் சபதம்.....நாக தீபம்...எல்லாமே அப்பா-வுடைய தாக்கத்தினால் படித்தவை...
    எந்த ஊருக்கு போனாலும்....நான் மறக்காமல் எடுத்து செல்வது இந்த புத்தகங்கள் தாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகம் ஒரு தனி உலகம். படைப்புலக பிரம்மாக்களை அறிமுகப் படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். நல்ல புத்தகங்களை ரசித்துப் படித்து அளவளாவிய நிகழ்சிகள் நினைவுக்கு வருகின்றன.நன்றிம்மா ..

      நீக்கு
  7. அன்பு காளிதாஸ், நீங்கள் பட்டியலிட்டுள்ள அனைத்துப் புத்தகங்களும் இன்னும் பலவும் நானும் படித்திருக்கிறேன். என்ன ஒரு வித்தியாசம் என்றால் படித்தவை எல்லாம் மூளையின் நினைவடுக்குகளில் எங்கோ பத்திரமாக இருக்கின்றன. படிக்கும்போது ரசித்தவை மீண்டும் நினைவூட்டும்போதுதான் தலை காட்டுகிறது. எந்த வகைப் புத்தகமானாலும் WITHOUT REASON OR RHYME முடிக்காமல் விடமாட்டேன். நிறைய TRASH வகைப் புத்தகங்களும் படிப்பேன். எங்காவது நல்ல செய்தியோ, உத்தியோ, கருத்தோ வருமா என்னும் நப்பாசை இருந்ததுண்டு, ஹூம்.! அது அந்தக் காலம்.!

    பதிலளிநீக்கு
  8. டிட்டோ உங்களை மாதிரித்தான் நானும் .கையில் கிடைத்தது அனைத்தும் படிப்பேன்.ஆரம்பித்தால் முடிக்காமல் விடுவதில்லை.மனதுக்கு பிடித்த வரிகள் மனப் பாடமாகி விடும்.இன்னமும் நினைவில் உள்ள சிலவற்றை பகிர்ந்து கொண்டேன்.வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.G.M.B. சார்.

    பதிலளிநீக்கு
  9. மிக அருமை. இவைகளை எப்படி மறப்பது.
    பலவற்றை பைண்ட் பண்ணி இன்னும்
    தாய்நாட்டில் தங்கை வீட்டில் உள்ளது.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  10. அனைவரும் சிந்தித்து செயல் படவேண்டிய பகிர்வு.பதிவு.நானும் அகில இந்திய வானொலி ,தொலை காட்சி,அப்புறம் சவூதி தொலைக் காட்சி என கிட்டத் தட்ட முப்பத்தி ஐந்து ஆண்டுகள் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவன்.தங்கள் வருகையும் கருத்தும் நிறையவே மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அந்தக் காலங்கள் நிச்சயமாக ஒரு பொற்காலமாகத் தான் இருந்திருக்க வேண்டும் ... என்னால் முழுவதும் உணர முடியாவிடினும் ... உங்கள் பதிவின் மூலம் கொஞ்சமாவது உணர முடிகின்றது ..

    நாவல்களும், கதைகளும் நிரம்பிய காலப் பகுதிகளை நீங்கள் கடந்து வந்துள்ளீர்கள் .. அவற்றைப் பற்றி அவ்வவ்போது எழுதுங்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  12. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.இக்பால் செல்வன்.தொடர்ந்து எழுதுகிறேன் சகோதரா.

    பதிலளிநீக்கு
  13. அன்புடையீர் வணக்கம்! திரு VGK (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள எனக்கு லிப்ஸ்டர் விருது (LIEBSTAR AWARD) அளித்துள்ளார். அதனை வலைப்பதிவு நண்பர்கள் (நீங்கள் உட்பட) ஐந்து பேருக்கு பகிர்ந்துள்ளேன். ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி!
    – தி.தமிழ் இளங்கோ ( எனது எண்ணங்கள் )
    http://tthamizhelango.blogspot.com/2012/08/liebstar-award.html





    பதிலளிநீக்கு
  14. என்னையும் அவரின் நேசத்திற்கு உரிய,ஒரு பதிவராய் போற்றிலிப்ஸ்டர் விருது (LIEBSTAR AWARD) பகிர்ந்துகொண்ட திரு .தமிழ் இளங்கோ அவர்களுக்கு மனமார்ந்த என் நன்றிகள் .இந்தப் பாராட்டு மேலும் பண்பட உதவும் என நம்புகிறேன்.விருதுக்கான நோக்கமும் விதிமுறையும் புரிந்து வழி நடக்க முயற்சிப்பேன்.
    என்றும் அன்புடன் .
    Now, apparently the 'rules' of the award are the following:
    Thank your Liebster Blog Award presenter on your blog.
    Link back to the blogger who presented the award to you.
    Copy and paste the blog award on your blog.
    Present the Liebster Blog Award to 5 blogs of 200 followers or less who you feel deserve to be noticed.
    Let them know they have been chosen by leaving a comment at their blog.

    பதிலளிநீக்கு
  15. தங்கள் அன்பிற்கும் விருதினை ஏற்றுக் கொண்டமைக்கும் நன்றி! ஜூன் மாதத்திற்குப் பிறகு வலைப் பதிவில் உங்கள் பதிவுகள் வரவில்லை. தொடர்ந்து எழுதவும். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பதிவு எழுதி இன்று பகிர்ந்துள்ளேன்.ஊக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றிங்க ..

      நீக்கு
  16. அத்தனை அருமையான புத்தகங்களையும் நானும் படித்த இந்னைவுகள் மலருகின்றன்..

    பதிலளிநீக்கு
  17. வருகைக்கும் தங்களது மேலான கருத்துக்கும் நன்றிங்க ..சகோதரி .

    பதிலளிநீக்கு
  18. Thanks your post and your blog. It is very interesting.I share information Vehicle towing company. he Pandavas are boring , the dignity of Karna, the majesty of Karna, the invasion of the battle chains of war. Mahabharata is a great epic. keep posting.

    பதிலளிநீக்கு