ஞாயிறு, 15 ஜனவரி, 2012

திசை மாற்றிய திருப்பங்கள் .2

கவனம் கவர்தல் ..(Get  Noticed ) 

சுவாமி விவேகானந்தரின் 149 - வது பிறந்த நாள். இந்த சனவரித் திங்கள் 12 ம் தேதி , இளைஞர் தினம் . இந்திய தேசத்தின் நிகழ்காலமும், எதிர்காலமும் இவர்களின் கரங்களில்.
" நிமிர்ந்து நில் , வீரனாக,வலியவனாக உலகை நீ எதிர் கொள் ." நீ என்னவாக வேண்டும், யாராக வேண்டும்",என்பதை தீர்மானிக்கும் சக்தி, உன் கையில் தான் என்றார், மகான் விவேகானந்தர்.

ருவர் நிமிர்ந்து நின்றாலே, அவரிடம் மற்றவரை விட, ஏதோ ஒரு மேம் பட்ட சக்தி இருக்க வேண்டும், வித்தை வலிமை , அறிவு, அழகு பணம் ,படை என அடுக்கிக் கொண்டே போகலாம். கூட்டத்தில், "இரும்பைக்  கவர்கின்ற காந்தம்", மாதிரி, தம்மைத் திரும்பப் பார்க்க வைக்கும் தனித்துவம் பெற்றவர், இம்மக்கள்.வெற்றியின் முதல் அடிப்படையே ,முதலில் நாம் நம்மை, நம் திறமையை வெளிப்படுத்தும்( Get Noticed ) ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.வேலைக்கான தேர்வு, பெண் பார்க்கும் படலம்,பணி செய்யும் இடம் எதுவாகிலும், முதல் தேவை, "கவனம் கவர்தலே ". உலகில் அனைத்து விளம்பரங்களின் அடிப்படை உத்தியே , இது தான்.

ஏன் ?.விலங்குகளைப் பாருங்கள். ஆண் மயில் தோகை விரித்து ஆடுகிறது, பெண் மயிலைக் கவர. பெரிய மிருகங்கள் முட்டி மோதி, பலம் காட்டி , முதன்மை பெறுகின்றன தம் இனத்தில் .  

முதலில் ஏன், எதற்காக, யார் கவனத்தைக் கவர்தல் வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.அதற்க்கு தேவையான திறமை, ஆற்றல் நம்மிடம் உள்ளதா ?, என சுய பரிசோதனை செய்து கொள்ளல் அவசியம் .நம் பலம், பலஹீனம் அறிந்து முன்னதைக் கூட்டி, பின்னதை குறைக்க முயற்சி செய்யவும். எக் காரணம் கொண்டும், எந்த சூழலிலும் மனம் தளராமல், விழுந்தாலும் எழுந்து  மீண்டும் பயணம் தொடரும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள். "எழுதுவது எல்லாம் சுலபம்",இது எப்படி நடை முறையில் சாத்தியம் ,என்று உங்களுக்கு வினா எழலாம் .
நிறைய உதாரணங்களை வெற்றி பெற்றவர் பற்றிய புத்தகம்  மூலமோ, நிஜ வாழ்கையில்  உச்சாணிக் கொம்பில் இருக்கிற வரை பார்த்தோ நாம் தெரிந்து கொள்ளலாம்.அப்புறம் எதுக்கு இந்தக் கட்டுரை, இடிமுழக்கம் அப்பிடின்னுதோணுதா ?..
யார் யாரையோ உதாரணம் சொல்வதை   விட, என்னுடைய நேரடி அனுபவத்தைப் பகிர்தல், இன்னும் சிறப்பாக   இருக்கும் என்பதால் தான்.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால், தொலைக் காட்சி நிலையத்தில் பொறியியல் இணை இயக்குநராக பணி புரிந்த திரு.வாசன் அவர்கள் ,விருப்ப ஓய்வு எடுத்துக்க் கொண்டு சவுதி அரேபியா தொலைகாட்சி கட்டமைப்பில், ஒரு ஒலி பரப்புப் பொறியாளராய்(Transmitter Engineer ) பணியில் சேர்ந்தார். இந்தக் கட்டமைப்பில் நிறைய வெளி நாட்டுப் பொறியாளர்கள் பணி புரிதல் வழக்கம் .எகிப்து ,சிரியா ,சூடான் போன்ற  அரேபிய தேசத்தவரும், பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர்களும்,     பாகிஸ்தான், இந்தியா போன்ற ஆசிய நாட்டினரும் உள்ளூர்காரர்களுடன்  பணி புரிவர் .அங்கு பொறியியல் தலைமைப் (Project  Manager ) பொறுப்பில் ஒரு அமெரிக்கர்   இருந்தார் . அவரது பெயர் கிர்க் வால்கர் ( Kirk  Walker ) என நினைவு . எல்லா  பொறியாளர் களுக்கும் ,வருடத்திற்கு ஒரு மாதம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை .தாய்நாடு போய் வர. விமான டிக்கெட்டும் கிடைக்கும் .எல்லோரும் ஒரே சமயம் விடுப்பு எடுக்க இயலாது .ஒருவர் போய் திரும்பியவுடன் அடுத்த நபர் என்ற சுழற்சி முறை .
இதனால், புதிதாக சேர்ந்துள்ள பொறியாளரை, விடுப்பில் சென்றவர் இடத்திற்கு,பணி புரிய  அனுப்புவர் .இது புதிய நபரின் வேலைத் திறனை சோதிக்கவும், பிறகு பொருத்தமான  இடத்தில அவரை பராமரிப்புப் பணியில் தக்க வைக்கிற முறை. நிறுவனத்திற்கு ஒத்து வரவில்லை, எனில் ஈவிரக்க மின்றி, கழட்டி விடுதலும் உண்டு .

சவுதியில் வேலைக்குச் சேர்ந்த புதிலில், இது மாதிரி பல ஒலி. ஓளி பரப்பு கேந்திரங்களில் திரு.வாசன் அவர்களும் வேலை செய்ய நேரிட்டது. மேலும் ஒவ்வொரு பொறியாளரும், சுமார் நூறு கி .மீ எல்லைக்குள் உள்ள நான்கு அல்லது ஐந்து நிலையங்களைப் பராமரித்தல் வேண்டும் .
இந்தக் கேந்திரங்களில் டி.வீ மற்றும் பண்பலைக்கான ஒலி, ஒளி பரப்பிகள் உண்டு. சயாமிஸ் இரட்டையர் போல, தானியங்கி வசதிகளுடன். ஒரு கருவி பழுதானால் அடுத்தது, உயிர் பெற்று, ஒளிபரப்பில் தடங்கல் இன்றி, உடனே செயல் படும் வகையில் ஏற்பாடுகள் .பொறியாளர் மத்தியமாய் ஒரு பெரிய  கேந்திரத்தில் நிலை கொள்ள, மற்ற நிலையங்களை தொழில் நுட்ப உதவியாளர் ஒருவர் ( Technician  ) நிர்வகிப்பார். 
பொறியாளருக்கு தங்க இடமும் , காரும் தந்து விடுவர்.தானே காரை ஒட்டிக் கொள்ள வேண்டியதுதான் . எந்த நிலையத்தில் பழுது  என்றாலும், தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று பழுது நீக்கி ஒளி, ஓலி பரப்பி அதனுடன் தொடர்புடைய அனைத்து உப கரணங்களையும் தயார் நிலையில் வைத்திருப்பதே , இவரின் தலையாய பணி.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ,இத்தாலி ,ஜெர்மனி என கதம்பமாய் பல நாட்டுக் கருவிகள் .இது தவிர பாலை வனப் பிரதேசத்தில் மிகவும் சின்ன நகரங்களில் சூரிய சக்தியில் இயங்குகின்ற அமைப்பு (Solar  powered Transposers ). எல்லாக் கேந்திரங்களையும் தேவையானால் தலைமை இடத்தில இருந்து இயக்குகின்ற மின்னணு வசதிகள் . நுண்ணலைத் தொடர்புகள் (Microwave Links )  மொத்தத்தில் நிறைய  இடியாப்பச் சிக்கல்.ரொம்பவும் பின்னிப் பிணைந்தது.     

ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டு ,ஓலி,ஓளி பரப்பில் ஏற்படும் தடங்கல் களுக்கு கடும் அபராதத்தை, பராமரிக்கும் நிறுவனம் , சவுதி அரசாங்கத்திற்கு தர வேண்டியிருக்கும். அங்கெல்லாம் நிலையங்களைப் பராமரிக்கின்ற வேலைகள் ,தனியார் நிறுவனங்களால், ஒப்பந்த அடிப்படையில் செய்யப் படும் .
இப்படிப் போன புதிதில், பல நிலையங்களில் வேலை செய்த திரு வாசன் அவர்கள் ,இந்த பலதரப் பட்ட கருவிகளில் ஏற்படும் கோளாறுகள், முடிந்த வரை அவற்றை அறவே தவிர்க்க அல்லது குறைப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் ,ஓலி பரப்பப் படும் நிகழ்சிகளின் தொழில்நுட்பத் தரம், இன்னும் இந்தத் தரத்தை மேம்படுத்தக் கூடிய வழி முறைகளை ஆய்வு செய்தார். இத்துடன் விலை வாய்ந்த உதிரி பாகங்களை தேவைகேற்றபடி பயன்படுத்தி நேரம், பொருள் விரயம் தவிர்க்கும்  வகைகளையும் பற்றி அறிக்கை தயார் செய்து கூடவே விவரமாய் தன்  யோசனைகளையும் எழுதி நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தார்.
இவர் அறிக்கையை நன்கு ஆய்ந்த நிறுவனம் உடனே இவரை அழைத்து பேசி,இவருக்கு  தரக் கட்டுப்பாடு பொறியாளராய் (Quality  Control Engineer  ) ஆக  பதவி உயர்வு அளித்தது .அப்புறம் அங்கு வேலை செய்கின்ற பன்னாட்டு கருவிகள், பயன்பாடு, பராமரித்தல், மாற்று ஏற்பாடுகள் ,என்பன பற்றி நூற்றுக்கு மேற்ப்பட்ட சுற்றறிக்கைகள். ஒளிபரப்புகளின் திறனையும் தரத்தையும் மேம்படுத்தும் விதத்தில், கடைப் பிடிக்க வேண்டிய வழி முறைகள் யாவும் நடை முறை படுத்தினார் . படிப் படியாய் உயர்ந்து, நிர்வாகம் தலைமைப் பொறுப்பைத் தர விழைந்த போதும், அதற்க்கு ஈடான  தொழில் நுட்ப மேலாளர் (Technical Manager )  என்ற பதவில் நீண்ட காலம் பணி புரிந்தார்.
செய்யும் தொழிலில் இவரது ஆர்வம் ,உழைப்பு, அணுகு முறை பன்னாட்ட வரையும்  அரவணைத்துப் விஷயங்களை தெளிவாக்குகின்ற ஆற்றல்,  தான் கற்றவற்றை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டது ஆகியவையே இவரது உயர்வுக்கு அடிப்படை என்றால் மிகையாகாது. இவர் என் காலத்தவர். என்னை அங்கே வேலை செய்ய தேர்ந்து எடுத்தவர். சுமார் ஆறு ஆண்டுகள் சவுதி தொலைக் காட்சி நிலையக் கட்டமைப்புகளில் நானும்  பணிபுரிந்தவன். அதற்கு முன் 28 ஆண்டு காலம் அகில இந்திய வானொலி மற்றும் தொலைகாட்சி நிலையங்களில் நான், பணிபுரிந்தேன் என்பதே என் கதைச் சுருக்கம்.
இப்போது உலக அரங்கில் ஒளி வீசும் மற்றுமொரு தமிழர் . திரு .கல்ராமன் அவர்கள்,தெரு விளக்கில் படித்து தற்போது அமெரிக்கா வில் 'Global Scholar  ' என்ற நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளார் .  'அமேசான்' ,' காஸ்ட்கோ' ஆகிய பெரும் ஸ்தாபனங்களில் வேலை செய்தவர். இந்தியாவில் குழந்தைகள் கல்வி கற்றலுக்கு பல சீரிய தொண்டுகளைச் செய்து வருகிறார் ..அவருக்கு ஏற்பட்ட சோதனைகளும் வெற்றி கண்ட விதமும் பற்றிய காணொளி நம் அனைவருக்கும் மற்றுமொரு எடுத்துக்காட்டாய்,இருக்கும் என நம்புகிறேன்.
.ஒரு சின்ன ஒரு உதாரணத்தோடு இந்தக் கட்டுரையை முடிக்கிறேன் .

ஆழ்கடலில் காட்(Cod ) என்ற ஒருவகை மீனினம் ஒரு தடவையில் பல லட்சம் முட்டை இடுதுங்க .யாருக்கும் தெரியறதில்ல ..ஆனால் நம்ம வீட்டு பெட்டைக் கோழி ,கூரை ஏறி "கொக்கரக்கோ" ,"கொக்கரக்கோ" அப்படின்னு ,மதியம் போடப் போற முட்டைக்கு ,காலையில் இருந்து விளம்பரம் பண்ணுது .

நாம் வளர்த்துக் கொண்ட ஆற்றல்களை சரியாய் வெளிப் படுத்தவும், முன்னேறவும் பயன் படுத்திக் கொள்ளணுங்க.                              
                                      ( Toot Your  Horns ) 
போராடி வெற்றி பெறுதல் தான் வாழ்க்கை . தலை நிமிர்ந்தால், தடங்கல் யாவும், தவிடு பொடி ஆக்கிடலாம் .நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, முயற்சி ,உழைப்பு நம்மை நிச்சயம்  வெற்றி என்னும் சிகரத்திற்கு இட்டுச் செல்லும் .

நன்றி :கூகுள் படங்கள் ,யு ட்யூப் 

  

4 கருத்துகள்:

 1. நல்லதொரு நம்பிக்கை ஊட்டும் அனுபவக் கட்டுரை. ONE MUST GET NOTICED FOR THE RIGHT REASONS.இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. திரு.G.M.B சாருக்கு. நன்றிங்க ஆசான்..இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..குடும்பத்தில் அனைவரும் நலமா..அன்புடன்

  பதிலளிநீக்கு
 3. உங்கள் பதிவுகளை ஒருமுறை படித்தால் போதவில்லை.மிக அருமையாக உள்ளது.
  கல்ராமன் பேச்சும் முழுவதும் கேட்டுவிட்டு உங்களுடன் பேசுகிறேன்(பின்னூட்டத்தில்தான்).மற்ற சமீபத்திய பதிவுகளையும்ஒரு கிளான்ஸ்
  பார்த்துவிட்டேன். மிகவும் ஆர்வத்தோடு, சிரமபஃ பட்டு, மிகுந்த சிரத்தையுடன்
  எங்களுக்கு எல்லாவற்றையும் கூறுகிறீர்கள்.நன்றாகப் படித்துவிட்டு உங்களுடன்
  உரையாடுகிறேன்.இது ஒரு இண்டர்மீடியேட் பின்னூட்டம் மட்டுமே.மிக்க நன்றி.(
  இனிய(காலங்கடந்த) பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. திரு.radhakrishnan சாருக்கு மிக்க நன்றி.தங்கள் வருகையும் கருத்தும் உற்சாகத்தையும் மனநிறைவையும் தருகின்றன..

  பதிலளிநீக்கு