வியாழன், 26 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் ..5.


மும்பை யில் இருந்து தில்லி ..முதல் பயணம்.

“It is good to have an end to journey toward; but it is the journey that matters, in the end” ....By Ursula K.Leguin    
.

ஒவ்வொரு மனிதனும், காலத்தின் கட்டாயத்தில், எப்போதேனும் தன வாழ்க்கையில் வேறுபட்ட இடங்களுக்கு, மாறுபட்ட சூழலில் பயணிக்க நேரிடுகிறது. இந்த பயணங்களில்,சில மனதில் மகிழ்ச்சி எனும் மத்தாப்பு களையும், மற்றும் சில பயணங்கள் அச்சத்தையும், திகிலையும்,  அல்லது இன்னவென்று சொல்லத் தெரியாத   எண்ண  அலைகளை காலம் காலத்துக்கும் ஏற்படுத்தி விடுகிறது.


பசு மரத்து ஆணியாய் இவை   மனதில் பதிந்து, அவசரமாய் மேய்ந்து, பின் ஆர அமர அசை போடும் பசு போலவும், அவ்வப்போது மனக் குகையில் அதிர்வு கேட்ட வெளவால் வட்டமிட்டு வந்து அமர்தல் போலவும். குளத்தில் இட்ட கல் போல, விரிகின்ற வளையங்களாய் அலை எழுப்பி, பின் வலுவிழக்கின்றன. காலம்  கடுகிட,  தன்னில் சற்றே விலகி, தொலைவில் நின்று, புகை போன்று எழும்புகிற இந் நினைவுகளை  நோக்கின், பெரிதே நகைப்பையும்,சிறிதே  நாணத்தையும் கூட ஊட்டும்.

புதன், 25 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் ..4



இதம் தரும் இருப்பிடம் ..இல்லத்தில் நல்ல இல்லம்.


COOLING SYSTEM
  
குத்துக் காலிட்டு , 
கூரை மேலே குந்தி,
நீர் மெள்ள  உறிஞ்சி ,
நெருப்பான காற்றின்,
நெஞ்சம் குளிர வீசும்.
நிரம்பவே சூடு தணித்து  
          
மச்சு மேலே படுத்து, 
மயக்க நிலையில் கிடக்கும், 
நாகமாய் நீண்ட குழலில்,  
நளினமாய்த், தானே தவழ்ந்து
கொப்பளிக்கும் அறைக்குள் 
குளிர்ந்த காற்றாய்த் தானே !.


HEATING  SYSTEM


































பருவ நிலை மாற ,
பல்லைக் கிட்டும், குளிர். 
கும்மட்டி அடுப்பு மூட்டி, 
குளிர் காற்றில், கனல் ஏற்றி, 
நிலவறையில் நீண்டு, 
நெளிகின்ற குழாய்க் குழுமம் 
ஊரிவரும் காற்று,உடன்  
சீறி வரும்,அறைக்குள்.
சிதற வைக்கும் குளிரை . 
சிவக்க வைக்கும் அறையை .
கத கதக்க வைக்கும் 
கம்பளிகள் தேவையின்றி .


( FRESH AIR )


உசுப்பேத்தும் அனல் காற்றை,
உறவாடி, உள் கலந்து 
ஊடலாய் கொஞ்சும்,
கொஞ்சம் குளிர்காற்று.
நெஞ்சம் குளிரவைக்கும், 
மஞ்சம் மகிழ வைக்கும்.
மகிழ்வில் மனம் சிரிக்கும் .


நன்றி :கூகுள் படங்கள்           

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் ..3


மர வீடுகளும்....என் மனவோட்டமும்.


உலகத்திலே வசிக்கத் தகுந்த சிறந்த நகரங்களில் மெல்பர்ன் (Melbourne ) முதலாவது எனபது, எப்படி?.. என்று, எனக்குள் நிறைய கேள்விகள், எழும்பின. உணவு, உடை, உறையுள் இந்த மூன்றில், முதல் இரண்டையும் மனிதன் தன் விருப்பப் படி, அடிக்கடி, மாற்றிக் கொள்ள இயலும். ஆயின் இருப்பிடம் பல ஆண்டுகள் நிரந்தரமாய் நிலைத்து இருக்கும் தன்மையில் அமைத்துக் கொள்ளுகிறது மனித இயல்பு.




 ஆஸ்திரேலியா சுமார் 23  மில்லியன் ஜனத் தொகையுடன் உலக நிலப் பரப்பில் ஆறாவது இடம். நம் இந்திய தேசம், 1210 மில்லியன் ஜனத் தொகையுடன் உலக நிலப் பரப்பில் ஏழாவது இடத்தில.ஒரு சதுர கி .மீ க்கு மூணு நபருக்கும் கீழே  இங்கே வசிக்க, நாம் 394  பேர் என்ற எண்ணிக்கையில், மூச்சு முட்டுகிறோம்.ஆனால் நம்ம ஜனத் தொகை ஒரு பெரும் பலமும், பலவீனமும் கூட. இதை ஒரு மாபெரும் பலமாய் மாற்றிடலாம்..முடியுங்கிறது.. உண்மைங்க ..இதை பத்தி, அப்புறம், ஒரு பதிவு எழுதினாலும், எழுதுவேன்னு கொஞ்சம் அச்சாரம் இப்போவே போட்டு வைச்சுகிறேன்..

வியாழன், 19 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும்.2.


கேடில் விழுச் செல்வம் கல்வி .

மெல்பர்னுக்கு வர முடிவெடுத்ததால் சிங்கப்பூரில் பாதியிலேயே ராஜனும், காயத்ரியும் படிப்பை விட வேண்டிய தாயிற்று. மேலும் இந்தியா,சிங்கப்பூரில் மே ஜூனில் பள்ளி ஆரம்பித்து மார்ச் அல்லது ஏப்ரல் வகுப்புக்கள்  முடியும். இங்கே பிப்ரவரி முதல் வாரம் ஆரம்பமாகி, டிசம்பர் நடுவில் முடிந்து விடும் .எப்படியானாலும் ரெண்டாம் கெட்டான் சூழ் நிலை.  புலம் பெயரும் முன்னதாகவே குழந்தைகள் பள்ளியில் சேர நாங்கள், 'ஹோம் வொர்க்' செய்தோம். ஏற்கனவே "அடிலைட்"ல் வசிக்கின்ற தங்கை வீட்டார், முன்பே குடி பெயர்ந்த தோழர்கள், இணைய தளம், மின்னஞ்சல்போதாது என்று... என் மகள் குடும்பத்தோடு ஒரு முறையும், தனியாகவும் ஆஸ்திரேலியாவுக்கு  விஜயம் செய்தார். குழந்தைகள் புதிய சூழல், புதிய பள்ளி இதை யெல்லாம் சமாளிக்க இயலுமா  என்பன பற்றிய கவலைகளுடன்.

செவ்வாய், 17 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் .1

பயண அனுபவம்... .மெல்பர்ன்.
மெல்பர்ன்( Melbourne ) வந்து கிட்டத் தட்ட இரண்டு மாதமாகி விட்டது. சிங்கப்பூரில் தங்கியிருந்த வீடு காலி  செய்து கப்பலில் அனுப்பிய சாமான்கள் இன்னமும் வந்து சேர வில்லை.கட்டில், சோபா,மிக்சி, கிரைண்டர், மற்ற இத்தியாதி  சாமான்கள். இட்லி, தோசை, இடியாப்பம்  சாப்பிட்ட நாக்கு . பதிலா பிரெட், பரோட்டா, சப்பாத்தி  என உணவு வகைகளில் மாற்றம். இவையெல்லாம் நான் எப்போதாவது தின்னும் அயிட்டங்கள் , இப்போது எப்போதும் சாப்பிடும் படியான நிலைமை . இரண்டு கட்டில், மெத்தை, தட்டு முட்டு சாமான், என போய்க் கொண்டு இருக்கிறது, நித்திய  வாழ்க்கை.இங்கே .


மெல்பர்ன் ஒரு அருமையான நகரம். உலகத்தில் வசிக்கத் தகுந்த நகரங்களின் தர வரிசையில் " நம்பர் ஓன்", என்று 2011-ம் வருட ஆகஸ்ட் மாத ஆய்வில் பிரசித்தம். இந்த வரிசையில் முதல் பத்தில் மூன்று நகரங்கள், ஆஸ்திரேலியா நகரங்கள் எனபது இன்னும் விசேஷம். முறையே சிட்னி ( Sydney ) ஆறாம் இடத்திலும், அடிலைட் (Adelaide) எட்டாவது  இடத்திலும் உள்ளன. இந்தத் தர வரிசை கல்வி ,கலாசாரம், சுத்தம், சுகா தாரம், சுற்றுசூழல், பொழுதுபோக்கு, பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, அரசியல் ஸ்திரத் தன்மை ஆகியவற்றை மையமாய் வைத்து   கணிக்கப்பட்ட ஒன்று. இதில் தட்ப வெட்ப நிலையும் ( climate ), விலைவாசியும்(Cost of Living) கணக்கில் வராது.

"என்னாடா?",  இது, துட்டு கிட்டு கொடுத்து இந்த லிஸ்டை தயார் பண்ணி விட்டார்களோ ? ,என சந்தேகம் .ஆனால் இந்த மூன்று நகரங்களையும் நான் நேரிலேயே பார்த்து விட்ட படியால் இது மிகவும் உண்மை என்றே படுகிறது.

Wedding  at Adelaide  


Sydney  Reception  
கடந்த முறை 2006 - ம் ஆண்டு ஜூலை  மாதம், என் தங்கை மகளின் திருமணம் "அடிலைட் விநாயகர்", கோவிலில்.அதற்கு நானும் என் துணைவியாரும்  வந்து இருந்தோம்.என் மைத்துனர் டாக்டர். முப்பத்தைந்து  வருடங்களுக்கு முன்பே  இங்கு  குடி யேறியவர். அப்புறம், இப்போது தான் நாங்கள் முதல் முறையாய், மைத்துனர்  வீட்டிற்க்கு, விஜயம் செய்தோம்.  .


கல்யாணம் முடிந்த  பிறகு, மறு வாரம் சிட்னியில்,  மணமகன் வீட்டார் வரவேற்பு . அடிலைடில்   இருந்து விமானம் ஏறி கான்பெர்ரா (Canberra ) வந்து, பார்லிமென்ட் கட்டிடடம் எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, பிறகு காரில் சிட்னி வந்து சேர்ந்தோம் சுமார் 250  கி .மீ தரை மார்க்கமாய். வழி எங்கும் ரொம்ப ரம்மியமான இயற்கைக் காட்சி.௦௦ மிக நேர்த்தியான சாலைகள் அங்கு 'சிட்னி பாலம்'  எல்லாம் பார்த்தோம்.1932 -ல் முழுதும் ஸ்டீல் கட்டுமானம் .சுருக்கமா அறுபது லட்சம் 'ரிவெட்' அடிச்சிருக்காங்க .௦  ஆனால் அதுக்கு பக்கத்திலே புகழ் பெற்ற 'ஒபேரா ஹவுஸ்' பார்ப்பது,ஏனோ  'மிஸ்', ஆகி விட்டது. வரவேற்பெல்லாம் முடிந்து திரும்பவும் அடிலைட் சென்று அங்கு 'பொட்டனிகல்  கார்டன் ' , 'மியுசியம்'  'யுனிவேர்சிட்டி'   மற்றும், பல இடங்களை கண்டு களித்து, ஒரு மாதம் கழித்து, ஊர் திரும்பினோம் .

கடந்த முறை  இந்த பயணத்தில் எங்களுக்கு ரெண்டு.மூணு சிக்கலான அனுபவங்கள். பங்களூரில் இருந்து மும்பை.பிறகு      உள்ளூர் விமான தளத்தில் இருந்து "சத்ரபதி சிவாஜி" சர்வதேச விமான நிலையத்திற்கு டாக்ஸி. "சிட்னி", செல்லும் 'குவாண்டாஸ்' விமானம் .பின் சிட்னி சர்வே தேச விமான தளத்தில் இறங்கி 'அடிலைட்' க்கு லோக்கல் பிளைட்.இது தான் எங்கள் நிகழ்ச்சி நிரல். விமானம் சிட்னி புறப்பட இரண்டு மணி நேரம் தாமதம்,மும்பையில்.இரவு 0930 க்கு பிளேன் கிளம்பியது .சுமார் 11 மணி நேர விமானப் பயணம். நடு நடுவே சிறிதே மூச்சுச் திணறல் .ஏசி ஒத்துக்கலை. துணைவியாருக்கு சொன்னால் 'கவலை படுவார்களே', என சொல்லவில்லை.

"முச புடிக்கிற  நாய் மூஞ்சைப் பார்த்தாலே தெரியும்", அப்பிடின்னு சொலவடை சொல்லுவாங்க.அவங்களுக்கு என்னுடைய சங்கடங்கள் புரிந்து, மாத்திரைகளையும், தைரியத்தையும் ஊட்டினாங்க .முப்பத்தைந்து வருட தாம்பத்தியத்தில் 'என்னை எப்படி சமாளிப்பது எனபது அவர்களுக்கு கை வந்த கலை' .

'அப்படி, இப்படி' ன்னு,எப்பிடியோ சிட்னி வந்து சேர்ந்தோம் . பாஸ்போர்ட் எல்லாம் பரிசீலித்து விட்டு பெட்டியை திறந்து காண்பிக்கச் சொன்னாக. பெட்டியில் ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் ஒன்பது மஞ்சள் கிழங்குகள் , கம்பீரமாய் .உருண்டையாய், பொக்கை,போரை இல்லாமல் .திருமண சடங்குகளுக்காக கொண்டு வந்திருந்தோம். 'ஏன் ?' , இதை அறிவிக்க வில்லை?., என கேள்வி மேல்,கேள்வி கேட்டு வறுத்து எடுத்தார் அந்த சுங்க அதிகாரி .மன்னிச்சுக்குங்க .என் தங்கை மகள் திருமணம் என்று கூறி அழைப்பிதழ்   காட்டினேன்.மேலும்   எங்கள் ஊர் திருமணச் சடங்குளில் தேவைப் படுகின்ற ஒரு மங்களப் பொருள்  அப்பிடின்னேன் .

 "அப்படின்னா என்னான்னு?."  பக்கத்தில் இருந்த சர்தார்ஜியைக் கூப்பிட்டார் .அவரிடமும் நிலைமையை விளக்கினேன் .ஏங்க!, உங்களிடம் கொடுத்த படிவத்தில், ஏன், நீங்கள் இதை எழுதலைன்னு வருத்தப் பட்டார்.சர்தார்ஜி.  "ரொம்பவும் விவாதம் பண்ணாமே, குப்பைத் தொட்டியிலே போட்டிடறேன்னு சொல்லிடுங்க", என்றார். இவ்வளவு சீரியஸ் ஆக, இதை எடுதிப்பிங்கன்னு, தெரியலே. ' "அனுமதிக்கலேன்னா,  குப்பைத் தொட்டியிலே போட்டு விடுறேன்னு " ,  மிகவும் பவ்யமா  சொன்னேன். கொஞ்சம் சாந்தமாய்க் கேட்ட அவர் " சரின்னு" , சொல்லி, அந்த மஞ்சள் எல்லாத்தையும் குப்பைத் தொட்டிக்குள்ளே தூக்கிப் போட்டுட்டார், ரொம்ப கூலா .

இந்த அனுபவம் ஒரு பெரும் படிப்பினை.இந்த முறை பயணத்தில்அந்த அனுபவம்  மிகவும் உதவிற்று. எப்படின்னு, கேக்குறிங்களா. அதையும் சொல்லி முடிச்சுடறேன் .அதுக்கு ஒரு பதிவு எழுதறது அவ்வளவு சிலாக்கியமின்னு, தோணல.

கோவிச்சுக்காதிங்க. கொஞ்சம் முன் கதைச் சுருக்கம் அவசியம், இந்த இடத்திலே. உங்களுக்கு கண்ணு சொக்குதுன்னு,  நல்லாவே தெரியுது .எழுதுற ,எனக்கும் தான்.

நவம்பர் 21 - ம் தேதி, தஞ்சையில் இருந்து துணைவியுடன்   புறப்பட்டு, விமானம் ஏறி , தனியே திருச்சியில் இருந்து, சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன் . வயது முதிர்ந்த தந்தையை கவனித்துக்   கொள்ள வேண்டி, என் பிரியசகி , இந்த முறை என்னுடன் வரலைங்க .ரொம்பவே  'மிஸ்', பண்றேன் ..

மகள் வீட்டிற்க்கு டாக்ஸி பிடித்து, வந்து சேர்ந்தபோது மணி இரவு ஏழரை. ஐந்து நாள் கழித்து, நவம்பர் 25 - ம தேதி இரவு பத்தரைக்கு, மெல்பர்ன் செல்லும் விமானத்தில், நான் பேரன் பேத்தியுடன், பயணம் செய்ய ஏற்பாடு .பேரனும் பேத்தியும்  பாடடி வீட்டில் இருந்து 25 - ம் தேதி மும்பையில் விமானம் ஏறி, அன்று  இரவு ஆறரை மணிக்கு, சிங்கப்பூர் 'சாங்கி ஏர்போர்ட்', வருவார்கள் . அங்கேயிருந்து நான் அவர்களை அழைத்துக் கொண்டு 'மெல்பர்ன்' செல்ல, எங்களை அனுப்பி விட்டு 'பெர்த்' (Perth  ) செல்லும் விமானத்தை என் மகள் பிடிக்க வேண்டும். மகளை ஒரு வாரம் பெர்த்தில் வேலை செய்யச் சொல்லி ஆபீஸ் உத்தரவு.

ஆளுக்கு 40 kg லக்கேஜ் புக் பண்ணியிருந்தோம் .மொத்தம் 17 உருப்படிகள் .நான்கு   லக்கேஜ் மகள் எடுத்துக் கொண்டார் .மீதி 13  ஐ  நாங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் .கூட்டிக் கழித்தால் சுமார் 30 kg அதிகம் .திரும்பவும் அவசர அவசரமாய் எக்ஸ்ட்ரா லக்கேஜை மூட்டைக் கட்டி, ஏர்போர்ட்ல எங்களை வழி அனுப்ப வந்த நண்பர் மாறனிடம் கொடுத்து அனுப்பினோம் .


எங்களுடைய கனமான ஏழு லக்கேஜ், கவுன்டரில்  'புக்' பண்ணிவிட்டு, கையில் இரண்டு லேப் டாப், நாலு பிரீப் கேஸ், ஆளுக்கொரு கம்பளிக் கோட்டு, என திக்கு முக்காடி விமானத்தில் ஏறினோம் எங்களுக்குப் பின்னாடி "பெர்த்" விமானத்தில் போக வேண்டிய என் மகள் சிறிது முன்னாடியே பறந்து விட்டாங்க.என் என்றால் வழக்கம் போல் எங்க விமானம் ,லேட்டுங்கோ .  

இந்த முறை முன்னெச்சரிக்கையாய் மசாலா சாமான்,மருந்து மாத்திரை( டாக்டர் சீட்டுகளுடன்), ஸ்வீட்,வத்தல்,வடாம்,   எல்லாம் தனித் தனியாய் ,' பேக் ' பண்ணி,  குப்பையில் போட தயாராய், மனசை திடப் படுத்திக் கொண்டு வந்தேன் கொஞ்சம் நகைகள் கையில், சூட்கேசில். சுமார் பத்து மணி நேரம் பயணம். காலையில் விமானம் தரை இறங்கறதாத் தெரியலே பைலட் ரவுண்டு கட்டுறார் .சன்னல் வழியா மழை கொட்டுறது, தெரியுது . எனக்கு நிறைய கதைகள் படிக்கிறது வழக்கமா?. விமானத்தில், ஏதோ புட்டுகிடுச்சோ, அப்படின்னு ஒரே காப்ரா ஆயிடுச்சு.  ரொம்ப என் அதீதமான  கற்பனைக்கு இடம் கொடுக்காமே விமானம் "துல்லாமரின்", ஏர்போர்ட் லே, மிக வழுக்கலான தரையிலே, ஒரு லௌகிக டயத்திலே இறங்கிடுத்து .என் பேத்திக்கோ தூக்கம் கலையல.அவளோட "கோட்டா", இரண்டு லக்கேஜ், அவ அதை  தூக்காம ஒன்னும் பண்ண முடியாது. கெஞ்சிக் கூத்தாடி, ஒரு வழியா தர, தர ன்னு எல்லாத்தையும் இழுத்துக் கிட்டு பஸ்ஸில், சொட்டுன  மழையிலே ஏறினது ... புனர்ஜென்மம் தான்.. போங்கோ.

கொஞ்சம் புத்திசாலித்தனமா, அசட்டு பிசட்டுன்னு இல்லாமே, இந்தத் தடவை விலாவாரியா படிவத்தில் கொண்டு வந்ததை ' டிக் ' பண்ணிட்டேன். பிரயாணிகள் திமு, திமுன்னு, ஒரே  திருவிழாக் கூட்டம் மாதிரி. வரிசையிலே கையும், காலும்  கெஞ்ச நிக்கிறோம் . 'வெல்கம்', ன்னு சொல்லி பாஸ்போர்ட் வாங்கி, ஸ்டாம்ப் பண்ணிட்டா.

அடுத்து எங்களோட, மூட்டை, முடிச்சை சேகரிக்க போனோம் பேத்தி காயத்ரி, தூக்கத்தில் இருந்து இன்னமும் விடுபடலை. தோள்   மேலே சாஞ்சு தூங்கித், தூங்கி  வழியறா. சுத்தி ,சுத்தி கடைசியிலே அஞ்சு பெட்டி தான் வந்தது .எல்லாம் கொஞ்சம் 'மெகா' சைஸ். ஆள் ஏறி அமுக்கியது . மீதி ரெண்டு அட்டைப் பெட்டியை காணலை .நான் நின்னு கிட்டே இருக்கேன் .என் பேரன், ராஜன் "தாத்தா, தாத்தா", கன்வேயர் பெல்ட் நின்னுடுச்சு எல்லோரும் போயிட்டா. 'கவுன்ட்டர்' லே விசாரிங்க, என்றான். சரின்னு, அரக்கப் பரக்க போயி, ரெண்டு அட்டைப் பெட்டி காணும் ன்னு சொல்ல "தோ  பாரு" , அங்கே இருக்குன்னு 'அசரீரி' மாதிரி சொல்லுறாரு .உடையக் கூடிய சாமானெல்லாம் தனியே அனுப்புவாளாம்.எங்கள் பெட்டி மாத்திரம் ,கேட்பாரற்று, தனியாய் அனாதையாய் ..பேஷ் ,பேஷ்...

ஆளுக்கு ஒரு தள்ளு வண்டி சகிதம், கழைக் கூத்தாடி போல  பாலன்ஸ் பண்ணிக் கொண்டு,கை காட்டிய இடத்துக்குப் போய் நின்றோம் . 'டென்சிங் ,ஹில்லாரி', கணக்கா ,இமய மலையில் ஏறினா மாதிரி .நான் எழுதி கொடுத்த படிவத்தை கையில்  வைத்துக் கொண்டுசுங்க அதிகாரி," எங்களை மேலே,கீழே பார்த்தார்" ,. வாத்தியார் கொடுத்த செய்யுளைப்  பாராயணம் பண்ணி, என்ன கேட்டா , என்ன சொல்லணும்?, அப்பிடின்னு யோசித்து வைச்ச தெல்லாம்,அந்த சுங்க அதிகாரிய பார்த்த உடனே , நொடியில் கணினியில்  delete பட்டனைத் தட்டின மாதிரி,  erase  ஆயிடுத்து .

சுங்க அதிகாரி ,"பெட்டியில் என்ன ? " ,என்று வினவ , சுவிட்ச் போட்டா மாதிரி, ."வீட்டுக்கான உணவுப் பொருட்கள் ", அப்படின்னு சொல்லி, உடனே ஒருபெரிய மூட்டையை எடுத்துப் போட்டேன். எல்லாம் தெளிவாய்த் தெரிகின்ற பிளாஸ்டிக் பையில். அடுத்த மூட்டையை  கையில் எடுக்கு முன்,ஓசையில்லாம, "ஓடிப் போங்கன்னு"  கண் ஜாடை காட்டிட்டாரு .அவரு கை நீட்டிய அடுத்த மேசைக்குப் போனோம். அங்கே, ஒரு ஆஜானுபாகுவான, அதிகாரி அம்மா . மென்மையாய் "எவ்வளவு மதிப்பு பொறுமான நகை, ரசீது இருக்கான்னு", கேட்டாங்க .என்னுடைய படிவம் பார்த்து, இரண்டு குழந்தைகளும் இங்கே நிரந்தரவாசி ( Permanent Resident )என்பதால் ஆளுக்கு நானூறு டாலர் மதிப்பு உள்ள பொருள் கொண்டு வரலாம், நீங்கள் 'டிக்ளர்' பண்ணத் தேவையில்லை என்றார்கள் .

தன முடிவில் மனம் தளராத விக்ரமாதித்தன் மாதிரி, உண்மையைத் தவிர வேறதையும் சொல்வதில்லை  என்று உறுதியாய் இருந்த நான், ரசீது இல்லை,இது எங்கள் குடும்ப நகை ..என்றேன் .ஒரு ஆயிரம் டாலர் மதிப்பு இருக்குமா ?. எனக் கேட்க ."இன்னும் கொஞ்சம் கூட இருக்கும்", என்றேன். ஆயிரத்தி ஐநூறு மதிப்பு போட்டுக்கவா என பேரம் பேசினார்கள். சரிங்கன்னு சொல்லிட்டு.. விட்டோம் சவாரி..

எங்களைப் போலவே வாசலில் களைத்துப் போய் காத்திருந்த மாப்பிள்ளையுடன் 'மினி லாரி'..சாரி 'வேன்'  பிடித்து வீடு போய்ச் சேர்ந்தோம் ..

ரொம்ப களைப்பா இருக்குங்க ..மீதி கதையை அப்புறம் சொல்றேனுங்க ..

வணக்கங்க ..  

நன்றி :கூகுள் படங்கள் .                                    

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

திசை மாற்றிய திருப்பங்கள் .2

கவனம் கவர்தல் ..(Get  Noticed ) 

சுவாமி விவேகானந்தரின் 149 - வது பிறந்த நாள். இந்த சனவரித் திங்கள் 12 ம் தேதி , இளைஞர் தினம் . இந்திய தேசத்தின் நிகழ்காலமும், எதிர்காலமும் இவர்களின் கரங்களில்.
" நிமிர்ந்து நில் , வீரனாக,வலியவனாக உலகை நீ எதிர் கொள் ." நீ என்னவாக வேண்டும், யாராக வேண்டும்",என்பதை தீர்மானிக்கும் சக்தி, உன் கையில் தான் என்றார், மகான் விவேகானந்தர்.

ருவர் நிமிர்ந்து நின்றாலே, அவரிடம் மற்றவரை விட, ஏதோ ஒரு மேம் பட்ட சக்தி இருக்க வேண்டும், வித்தை வலிமை , அறிவு, அழகு பணம் ,படை என அடுக்கிக் கொண்டே போகலாம். கூட்டத்தில், "இரும்பைக்  கவர்கின்ற காந்தம்", மாதிரி, தம்மைத் திரும்பப் பார்க்க வைக்கும் தனித்துவம் பெற்றவர், இம்மக்கள்.வெற்றியின் முதல் அடிப்படையே ,முதலில் நாம் நம்மை, நம் திறமையை வெளிப்படுத்தும்( Get Noticed ) ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.வேலைக்கான தேர்வு, பெண் பார்க்கும் படலம்,பணி செய்யும் இடம் எதுவாகிலும், முதல் தேவை, "கவனம் கவர்தலே ". உலகில் அனைத்து விளம்பரங்களின் அடிப்படை உத்தியே , இது தான்.

ஏன் ?.விலங்குகளைப் பாருங்கள். ஆண் மயில் தோகை விரித்து ஆடுகிறது, பெண் மயிலைக் கவர. பெரிய மிருகங்கள் முட்டி மோதி, பலம் காட்டி , முதன்மை பெறுகின்றன தம் இனத்தில் .  

முதலில் ஏன், எதற்காக, யார் கவனத்தைக் கவர்தல் வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.அதற்க்கு தேவையான திறமை, ஆற்றல் நம்மிடம் உள்ளதா ?, என சுய பரிசோதனை செய்து கொள்ளல் அவசியம் .நம் பலம், பலஹீனம் அறிந்து முன்னதைக் கூட்டி, பின்னதை குறைக்க முயற்சி செய்யவும். எக் காரணம் கொண்டும், எந்த சூழலிலும் மனம் தளராமல், விழுந்தாலும் எழுந்து  மீண்டும் பயணம் தொடரும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள். "எழுதுவது எல்லாம் சுலபம்",இது எப்படி நடை முறையில் சாத்தியம் ,என்று உங்களுக்கு வினா எழலாம் .
நிறைய உதாரணங்களை வெற்றி பெற்றவர் பற்றிய புத்தகம்  மூலமோ, நிஜ வாழ்கையில்  உச்சாணிக் கொம்பில் இருக்கிற வரை பார்த்தோ நாம் தெரிந்து கொள்ளலாம்.அப்புறம் எதுக்கு இந்தக் கட்டுரை, இடிமுழக்கம் அப்பிடின்னுதோணுதா ?..
யார் யாரையோ உதாரணம் சொல்வதை   விட, என்னுடைய நேரடி அனுபவத்தைப் பகிர்தல், இன்னும் சிறப்பாக   இருக்கும் என்பதால் தான்.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால், தொலைக் காட்சி நிலையத்தில் பொறியியல் இணை இயக்குநராக பணி புரிந்த திரு.வாசன் அவர்கள் ,விருப்ப ஓய்வு எடுத்துக்க் கொண்டு சவுதி அரேபியா தொலைகாட்சி கட்டமைப்பில், ஒரு ஒலி பரப்புப் பொறியாளராய்(Transmitter Engineer ) பணியில் சேர்ந்தார். இந்தக் கட்டமைப்பில் நிறைய வெளி நாட்டுப் பொறியாளர்கள் பணி புரிதல் வழக்கம் .எகிப்து ,சிரியா ,சூடான் போன்ற  அரேபிய தேசத்தவரும், பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர்களும்,     பாகிஸ்தான், இந்தியா போன்ற ஆசிய நாட்டினரும் உள்ளூர்காரர்களுடன்  பணி புரிவர் .அங்கு பொறியியல் தலைமைப் (Project  Manager ) பொறுப்பில் ஒரு அமெரிக்கர்   இருந்தார் . அவரது பெயர் கிர்க் வால்கர் ( Kirk  Walker ) என நினைவு . எல்லா  பொறியாளர் களுக்கும் ,வருடத்திற்கு ஒரு மாதம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை .தாய்நாடு போய் வர. விமான டிக்கெட்டும் கிடைக்கும் .எல்லோரும் ஒரே சமயம் விடுப்பு எடுக்க இயலாது .ஒருவர் போய் திரும்பியவுடன் அடுத்த நபர் என்ற சுழற்சி முறை .
இதனால், புதிதாக சேர்ந்துள்ள பொறியாளரை, விடுப்பில் சென்றவர் இடத்திற்கு,பணி புரிய  அனுப்புவர் .இது புதிய நபரின் வேலைத் திறனை சோதிக்கவும், பிறகு பொருத்தமான  இடத்தில அவரை பராமரிப்புப் பணியில் தக்க வைக்கிற முறை. நிறுவனத்திற்கு ஒத்து வரவில்லை, எனில் ஈவிரக்க மின்றி, கழட்டி விடுதலும் உண்டு .

சவுதியில் வேலைக்குச் சேர்ந்த புதிலில், இது மாதிரி பல ஒலி. ஓளி பரப்பு கேந்திரங்களில் திரு.வாசன் அவர்களும் வேலை செய்ய நேரிட்டது. மேலும் ஒவ்வொரு பொறியாளரும், சுமார் நூறு கி .மீ எல்லைக்குள் உள்ள நான்கு அல்லது ஐந்து நிலையங்களைப் பராமரித்தல் வேண்டும் .
இந்தக் கேந்திரங்களில் டி.வீ மற்றும் பண்பலைக்கான ஒலி, ஒளி பரப்பிகள் உண்டு. சயாமிஸ் இரட்டையர் போல, தானியங்கி வசதிகளுடன். ஒரு கருவி பழுதானால் அடுத்தது, உயிர் பெற்று, ஒளிபரப்பில் தடங்கல் இன்றி, உடனே செயல் படும் வகையில் ஏற்பாடுகள் .பொறியாளர் மத்தியமாய் ஒரு பெரிய  கேந்திரத்தில் நிலை கொள்ள, மற்ற நிலையங்களை தொழில் நுட்ப உதவியாளர் ஒருவர் ( Technician  ) நிர்வகிப்பார். 
பொறியாளருக்கு தங்க இடமும் , காரும் தந்து விடுவர்.தானே காரை ஒட்டிக் கொள்ள வேண்டியதுதான் . எந்த நிலையத்தில் பழுது  என்றாலும், தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று பழுது நீக்கி ஒளி, ஓலி பரப்பி அதனுடன் தொடர்புடைய அனைத்து உப கரணங்களையும் தயார் நிலையில் வைத்திருப்பதே , இவரின் தலையாய பணி.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ,இத்தாலி ,ஜெர்மனி என கதம்பமாய் பல நாட்டுக் கருவிகள் .இது தவிர பாலை வனப் பிரதேசத்தில் மிகவும் சின்ன நகரங்களில் சூரிய சக்தியில் இயங்குகின்ற அமைப்பு (Solar  powered Transposers ). எல்லாக் கேந்திரங்களையும் தேவையானால் தலைமை இடத்தில இருந்து இயக்குகின்ற மின்னணு வசதிகள் . நுண்ணலைத் தொடர்புகள் (Microwave Links )  மொத்தத்தில் நிறைய  இடியாப்பச் சிக்கல்.ரொம்பவும் பின்னிப் பிணைந்தது.     

ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டு ,ஓலி,ஓளி பரப்பில் ஏற்படும் தடங்கல் களுக்கு கடும் அபராதத்தை, பராமரிக்கும் நிறுவனம் , சவுதி அரசாங்கத்திற்கு தர வேண்டியிருக்கும். அங்கெல்லாம் நிலையங்களைப் பராமரிக்கின்ற வேலைகள் ,தனியார் நிறுவனங்களால், ஒப்பந்த அடிப்படையில் செய்யப் படும் .
இப்படிப் போன புதிதில், பல நிலையங்களில் வேலை செய்த திரு வாசன் அவர்கள் ,இந்த பலதரப் பட்ட கருவிகளில் ஏற்படும் கோளாறுகள், முடிந்த வரை அவற்றை அறவே தவிர்க்க அல்லது குறைப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் ,ஓலி பரப்பப் படும் நிகழ்சிகளின் தொழில்நுட்பத் தரம், இன்னும் இந்தத் தரத்தை மேம்படுத்தக் கூடிய வழி முறைகளை ஆய்வு செய்தார். இத்துடன் விலை வாய்ந்த உதிரி பாகங்களை தேவைகேற்றபடி பயன்படுத்தி நேரம், பொருள் விரயம் தவிர்க்கும்  வகைகளையும் பற்றி அறிக்கை தயார் செய்து கூடவே விவரமாய் தன்  யோசனைகளையும் எழுதி நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தார்.
இவர் அறிக்கையை நன்கு ஆய்ந்த நிறுவனம் உடனே இவரை அழைத்து பேசி,இவருக்கு  தரக் கட்டுப்பாடு பொறியாளராய் (Quality  Control Engineer  ) ஆக  பதவி உயர்வு அளித்தது .அப்புறம் அங்கு வேலை செய்கின்ற பன்னாட்டு கருவிகள், பயன்பாடு, பராமரித்தல், மாற்று ஏற்பாடுகள் ,என்பன பற்றி நூற்றுக்கு மேற்ப்பட்ட சுற்றறிக்கைகள். ஒளிபரப்புகளின் திறனையும் தரத்தையும் மேம்படுத்தும் விதத்தில், கடைப் பிடிக்க வேண்டிய வழி முறைகள் யாவும் நடை முறை படுத்தினார் . படிப் படியாய் உயர்ந்து, நிர்வாகம் தலைமைப் பொறுப்பைத் தர விழைந்த போதும், அதற்க்கு ஈடான  தொழில் நுட்ப மேலாளர் (Technical Manager )  என்ற பதவில் நீண்ட காலம் பணி புரிந்தார்.
செய்யும் தொழிலில் இவரது ஆர்வம் ,உழைப்பு, அணுகு முறை பன்னாட்ட வரையும்  அரவணைத்துப் விஷயங்களை தெளிவாக்குகின்ற ஆற்றல்,  தான் கற்றவற்றை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டது ஆகியவையே இவரது உயர்வுக்கு அடிப்படை என்றால் மிகையாகாது. இவர் என் காலத்தவர். என்னை அங்கே வேலை செய்ய தேர்ந்து எடுத்தவர். சுமார் ஆறு ஆண்டுகள் சவுதி தொலைக் காட்சி நிலையக் கட்டமைப்புகளில் நானும்  பணிபுரிந்தவன். அதற்கு முன் 28 ஆண்டு காலம் அகில இந்திய வானொலி மற்றும் தொலைகாட்சி நிலையங்களில் நான், பணிபுரிந்தேன் என்பதே என் கதைச் சுருக்கம்.
இப்போது உலக அரங்கில் ஒளி வீசும் மற்றுமொரு தமிழர் . திரு .கல்ராமன் அவர்கள்,தெரு விளக்கில் படித்து தற்போது அமெரிக்கா வில் 'Global Scholar  ' என்ற நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளார் .  'அமேசான்' ,' காஸ்ட்கோ' ஆகிய பெரும் ஸ்தாபனங்களில் வேலை செய்தவர். இந்தியாவில் குழந்தைகள் கல்வி கற்றலுக்கு பல சீரிய தொண்டுகளைச் செய்து வருகிறார் ..அவருக்கு ஏற்பட்ட சோதனைகளும் வெற்றி கண்ட விதமும் பற்றிய காணொளி நம் அனைவருக்கும் மற்றுமொரு எடுத்துக்காட்டாய்,இருக்கும் என நம்புகிறேன்.
.



ஒரு சின்ன ஒரு உதாரணத்தோடு இந்தக் கட்டுரையை முடிக்கிறேன் .

ஆழ்கடலில் காட்(Cod ) என்ற ஒருவகை மீனினம் ஒரு தடவையில் பல லட்சம் முட்டை இடுதுங்க .யாருக்கும் தெரியறதில்ல ..ஆனால் நம்ம வீட்டு பெட்டைக் கோழி ,கூரை ஏறி "கொக்கரக்கோ" ,"கொக்கரக்கோ" அப்படின்னு ,மதியம் போடப் போற முட்டைக்கு ,காலையில் இருந்து விளம்பரம் பண்ணுது .

நாம் வளர்த்துக் கொண்ட ஆற்றல்களை சரியாய் வெளிப் படுத்தவும், முன்னேறவும் பயன் படுத்திக் கொள்ளணுங்க.                              
                                      ( Toot Your  Horns ) 
போராடி வெற்றி பெறுதல் தான் வாழ்க்கை . தலை நிமிர்ந்தால், தடங்கல் யாவும், தவிடு பொடி ஆக்கிடலாம் .நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, முயற்சி ,உழைப்பு நம்மை நிச்சயம்  வெற்றி என்னும் சிகரத்திற்கு இட்டுச் செல்லும் .

நன்றி :கூகுள் படங்கள் ,யு ட்யூப் 

  

திங்கள், 9 ஜனவரி, 2012

ஆலய தரிசனம் ..1.

ஆலய தரிசனம் ..1.

ஸ்ரீசிவா - விஷ்ணு கோவில.

இன்று  சனிக் கிழமை (07 /01/2012 ), வார விடுமுறை தினம். குடும்ப சகிதம், மெல்பெர்ன் ( Melbourne )  நகரத்தின் மற்றொரு கோடியில் காரும் டௌன்ஸ் (Carrum  Downs ) -ல் உள்ள ஸ்ரீசிவா -விஷ்ணு ஆலயத்திற்கு சென்றோம்..

க்லென்வேவர்லி(Glen  Waverley ) -ல் பஸ் பிடித்து, டான்டீனங் (Dandenong )  சென்று, மற்றுமொரு பஸ் மாறி,, சுமார் முப்பது ௦ கிலோ மீட்டர் பயணம் செய்து கோவில் சென்றடைந்தோம்.




வழி நெடுக நேர்த்தியான வீடுகள், போட்டி போட்டுக்   கொண்டு பூத்துக் குலுங்கும் தோட்டங்கள், வெள்ளை,சிகப்பு , மஞ்சள், நீலம் என வித விதமாய் கதம்ப மலர்கள், ஓட்ட வெட்டப் பட்டு, ஒய்யாரமாய் படுத்திருக்கும் பச்சைக் கம்பள புல்வெளிகள், கரு நாகம் போல் நீண்ட சாலைகள்,வயல் வெளியில், பட்டுப் போல் உடல் மின்ன, பயிர் தின்னும் பசுக்கள் கூட்டம், ஆங்காங்கே சில குதிரைகள், என 'ஆஸ்திரேலிய', கண்டம் எட்டிய தூரம் கண்களுக்கு  குளுமையூட்டியது.

பிரதான சாலையில் இருந்து விலகி,  சுமார் நானூறு மீட்டர் தூரத்தில், கம்பீரமான இரு கோபுரங்களுடன், பெரிய நிலப் பரப்பில் அழகாய் கோவில்.. .ஊருக்கு ஒதுப் புறத்தில், அமைதியான சூழலில்.




மிகுந்த   பக்தியும், தொண்டுள்ளமும்  நிறைந்த இந்து சொசைட்டி(Hindu Society) அன்பர்கள், மற்றும் பலரின்  முயற்சியில், பெரும் பொருட் செலவில் எழுப்பிய கோவில். கடல் கடந்த கண்டத்திலும் காப்பாற்றப் படுகின்ற, நம் கலாச்சாரம். ஆஸ்திரேலிய கட்டிட கட்டுமானத் திறனில், இந்துப் பாரம்பரியம் இம்மியும் பிறழாமல், நிர்மாணிக்கப்பட்ட திருத்தலம்.தெய்வச் சிலைகள் யாவும் மிகவும்அற்புதமாய் வடிக்கப் பட்டுள்ளன .மொத்தம் 32 மூர்த்திகள் உள்ளதாய், கோவில் பற்றிய குறிப்பு கூறுகிறது.

முதலில் " விக்னம் எல்லாம் விலக்கிடும் ", விநாயகப் பெருமானைத் தொழுது, உள்ளே நுழைகிறோம். சடுதியில் மனம், சலனமின்றி அமைதி அடைகிறது. திடீரென பத்தாயிரம் மைல் தாண்டி, நம்ம ஊர் கோவிலில் இருக்கும் பிரமை, கூடியிருக்கும் சகோதர சகோதரிகளை, ஒருமித்து பார்த்த போது.

ஓயாமல் கரை தழுவி, தன் கதை சொல்லும், கடல் அலை போல, பிறந்த மண்ணின் எண்ணங்கள், புகுந்த நாட்டில் புளகாங்கிதம் அடையச் செய்கிறது.பள பளக்கும் மரத்தில் பளிங்கு மாதிரி தரைத் தளம்.மந்திரங்கள், மங்களஇசை,ஓங்கி ஒலிக்கின்ற மணிச்சத்தம்..உள்ளத்தை உருக்குகின்றன, இந்த இன்னிசை  நாதங்கள்.சிவனும்,திருமாலும் மற்றும் ஏனைய தெய்வங்களும் அருள் பாலிக்கின்றனர். நாங்கள் போன போது, அய்யன் சிவனுக்கும் அன்னை விசாலாட்சிக்கும் அபிஷேக ஆராதனை.அனைவரும் மெய்மறந்தனர். மிக அருமையான, ஆனந்தமான தரிசனம். .

மன்னிக்கவும் ..இந்த இடத்தில் சிறிதே விலகி ஒரு சின்ன கவனச் சிதறல் ..
.
பிரகாரம் சுற்றிவிட்டு வந்து, அமர்ந்து இருக்கையில், புது நண்பர் ஒருவரைச் சந்தித்ததை சொல்லியே ஆகவேண்டும். நான் பணி புரிந்த காலத்தில், என் மேலாளரும், நெருங்கிய நண்பருமான திரு .தியாகராஜன் அவர்களுக்கு மின்னஞ்சலில் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுப்பினேன்.

பதில் கடிதத்தில், நான் மெல்பெர்ன் (Melbourne) வந்திருக்கும் தகவல் தெரிந்து, இங்கிருக்கும் அவரது ஆத்ம நண்பர் திரு. ராமநாராயணன் அவர்களின் விலாசமும், தொலைபேசி எண்ணும் அனுப்பி வைத்தார். நான், திரு.ராமநாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க, ஞாயிற்று கிழமை இல்லத்திற்கு வருமாறு அழைத்திருந்தார்.மேலும் பேசும் போது " சிவன் கோவிலுக்கு சனிக்கிழமை போக எண்ணியுள்ளேன்", என்றார்.

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. திரு. ராம நாராயணன்  பல ஆண்டுகள், அமெரிக்காவில் பணி  புரிந்து, இரண்டு மாதம் முன்பாக, வேலை நிமித்தம் இங்கு வந்துள்ளார்.சிங்கப்பூரில்  பணி புரிந்த என் மகளும், மருமகனும், குழந்தைகளுடன் நவம்பர் கடைசியில் இங்கே குடியேற்றம். மூன்று  மாத விசாவில்,கொசுறாய் ஒட்டிக் கொண்டு அடியேனும் வருகை.

பிரகாரத்தில் அமர்ந்திருக்கையில் என் மகள் "காலெண்டர்" வாங்கும் இடத்தில, "அப்பா, அம்மா, பையன்", என மூவர் உள்ளனர். ஒருவேளை அது "திரு. நாராயணன் சார் ",ஆக இருப்பாரோ? ". என்று வினவ, திரும்பிப் பார்த்த நான் "அவர்தான்", என்று கூறினேன். "அது எப்படியப்பா ? அவ்வளவு உறுதியா சொல்றிங்கன்னு கேட்க .

ஒன்னுமில்லையம்மா ..என்னை மாதிரி தொண்டு கிழமெல்லாம் முக நூலில் (Facebook ) -ல இருக்காங்க. என்னை விட, இளைய அவரும் Facebook  இல் நிச்சயம் இருப்பாரு, என தேடித்  பார்த்தேன். இல்லை. ஆனால் Linked - In  என்ற சமூக தளத்தில்  அவரு இருக்காரு ..போய்ப்  பாருங்கன்னு .. அது சொல்லிச்சு அங்கே போய் பாத்தா ..  பக்கம்.. பக்கமா கொட்டுச்சு... பத்தாததுக்கு அவர் போட்டோவும் ..போட்டு இருந்தாரு..என்றேன்.

வாட்சன்-ஷெர்லாக் ஹோம்ஸ்..கதை மாதிரி ஆயிப் போச்சு. நாங்க, அவரை சந்தித்த விஷயம். அப்புறம் என்ன..காது வலிக்கும் அளவுக்கு கலந்துரையாடி..இதிலே என் பேரனும் அவர் மகனும்..பச்சக்கின்னு ஓட்டிகிட்டு..அவுங்க உலகத்துக்கு போய்ட்டாங்க.பிறகென்ன .. ஒன்னா கோவில் கான்டீன் ல சாப்பிட்டு, ஒன்னா பஸ்  ஏறி, தனித் தனியா வீட்டுக்குப் போனோம்.

புது வருடம், புது இடம், புது நட்பு. கிட்டத் தட்ட.பிசிராந்தையார் ரேஞ்சுக்கு...வைச்சிக்குங்களேன்..பழகலாம் ..பழகிப் பார்க்கலாம்..நட்பு ..நட்புதாங்க .

கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுடேங்க..மீண்டும் ..


  

இந்தக் கோவிலில் நூலகம் ஒன்று உள்ளது. இந்து மதம் பற்றிய வகுப்புக்களும் நடை பெறுகின்றன,மிக தூய்மையாகவும் நன்றாகவும் பராமரிக்கப் படுகிறது.இந்த அரிய,பெரிய கோவிலைக் கட்டியதில் பலரின் உழைப்பு தெரியுதுங்க. விருட்சமும் வேர்களும் தாய் மண்ணில்... விழுதுகள் இங்கே தழைக்கின்றன.இவர்கள் அனைவருக்கும், என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கான பிரார்த்தனைகளும்..

என்றும் வாழ்க வளமுடன்..  

நன்றி : கூகுல் படங்கள் ,யு ட்யூப்           

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

திசை மாற்றிய திருப்பங்கள் ...1.

திசை மாற்றிய திருப்பங்கள் ...1.

பெற்றோர் கனவு ...

புது வருஷம் பிறந்து விட்டது .வாழ்க்கைப் புத்தகத்தில் மற்றுமொரு புரட்டப் பட்ட  பக்கம் .கடந்து வந்த பயணத்தில் இன்னொரு மைல் கல்.

புல் மேய்ந்த காராம் பசு போல் மனம் பழைய நினைவுகளை அசை போடுகிறது சந்தித்த மனிதர்கள்,எதிர் கொண்ட போராட்டங்கள், ஏற்ப்படுத்திய மகிழ்ச்சி, வலி, துயரம், கனவுகள், நனவுகள் என... கரை புரண்டு வரும் புதுப் புனலில்  அடித்து வரப் படும் இலை,தழை போல...
நுரைத்து வரும், ஆற்றுச்  சுழலில் குமிழியிட்டு கிளம்பும்  கொப்புளங்கள் போல்....
நினைவுகள் ...பீறிட்டு கிளம்புகின்றன.....
ஒவ்வொருவரும், தாம், தம் வாழ்வில் பல சமயம்சந்தித்த மனிதர்களால், படித்த புத்தகங்களால்,குறுக்கிட்ட நிகழ்வுகளால்.பெற்ற அனுபவங்கள்....







இவர்களின்  வாழ்க்கைப் படகின் திசையை மாற்றி பல சமயம் பெரும் திருப்பங்களை ஏற்படுத்துகின்றன.

"என்னடா ?.", பெரிய பீடிகையாய் போடுகிறானே, என உங்களுக்குத் தோன்றலாம்.

நான் வாழ்க்கைக் கோலங்கள்-8. என்ற தலைப்பில் குழந்தைகள் வளர்ப்பு பற்றிய கருத்தை எழுதி இருந்தேன்.பெற்றோர் தம் கனவை குழந்தைகள் மீது திணிப்பது சரியா எனபது பற்றிய என் அனுபவமும்,அது பற்றிய சிந்தனை களும்.

என்னுடைய குடும்பத்தில், ஏழு குழந்தைகளில், சரியாய் நடுவில் பிறந்தவன். நாலாவதாய் பிறந்ததை கூறுகிறேன். "பிள்ளைகள் பெரும் செல்வம்", " சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்", மாடு மேய்க்க ஆள் தேவை,  எனப் பல காரணங்கள் கூறினாலும், அப்போதெல்லாம் சிகப்பு முக்கோணங்கள் புழக்கத்தில் இல்லாத காலம்."நாம் இருவர், நமக்கு இருவர்", என்று நம் அரசாங்கம் விழித்துக் கொண்டதற்கு முந்தைய கால கட்டம் .

விவசாயியான என் தந்தைக்கு, பட்டப் படிப்பு படித்த, ஒரு நண்பர் இருந்தார். ஓரளவே படித்த, என் தந்தைக்கு, பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு உரமூட்டியவர். அவர் அடிக்கடி," ஏதாவது ஒரு பிள்ளையை பொறியியல் படிக்க வைத்து விடு",என அறிவுறுத்துவார். இந்த அருள் வாக்கு  "எப்போதும் சொன்ன பேச்சு கேட்டு, அப்பாவியாய்,  தேமே", என்று இருந்த என் தலையில் விடிந்தது ...நான் சொல்றது 1960 -ம் வருடங்களில்.இன்றையில் இருந்து ,அரை நூற்றாண்டுக்கு முன்னால்.

பள்ளி இறுதிப் படிப்பை திண்ணை வாத்தியார், கிராமம் ,சிறு நகரம் என, படிப் படியாய் தமிழில் படித்து கரை ஏறினேன் .புகு முக வகுப்பில் அனைத்தும் ஆங்கிலம். கண்ணை கட்டிக் காற்றில் விட்டார்போல ..பொறியியல் படிப்பிற்கு சரியாய் ஐந்து மதிப்பெண் குறைவாய் .கண் கசக்கினேன் ..

அப்புறமென்ன..படித்த அதே, குடந்தைக் கலைக் கல்லூரியில் இளநிலை பௌதீகம்.  தடங்கல் ஏதுமின்றி, இன்றி தப்பித்து வேலை தேடும் படலம். இப்போதைய தேசிய வங்கியில் எழுத்தர் (Clerk ) வேலை, அகில இந்திய வானொலியில் பொறியியல் உதவியாளர் ( Engineering Assistant ) என்ற வாய்ப்புக்கள்.

முன்னது ஊருக்கு பதினைந்து  கி.மீ அருகிலும், பின்னது அந்தமானில் கிட்டத் தட்ட ஆயிரம் கி.மீட்டருக்கு  அப்பாலும்.

நம்புங்க ..எவ்வளவோ சொல்லியும், அந்தப் பொறியியல் என்ற வார்த்தைக் காக, யார் தடுத்தும் கேளாமல்..முதல் முறையாக தந்தை பேச்சைத் தட்டி , கப்பலேறி கடல் தாண்டி 1971 -ல் அந்தமானில், வானொலி நிலைத்தில் வேலைக்குச் சேர்ந்தேன்.

காதில் புகுந்த வண்டு மாதிரி "பொறியாளர் ",ஆகணும் என்ற வார்த்தை குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தது.. சரின்னு, தாகம் தணிக்க A.M.I.E.,Grad.I.E.T.E.,. என்ற வகுப்புகளில் சேர்ந்து கணிசமான பாடங்களை,வெவ்வேறு  கால கட்டங்களில் பூர்த்தி செய்தேன்..பட்டங்களை எட்ட முடிந்தவரை முட்டினேன்...உதவிக்கு திரு.M.S.உதயமூர்த்தி அவர்களை அழைத்துப் பார்த்தேன் ..ஊக்கம் பெற வேண்டி, அவர் புத்தகங்களை படித்தேன்னு ...சொல்ல வர்றேன்.

அப்புறம் 1982- ல், என்னுடைய கீழ் வானத்தில், மெலிதாய் அரும்பியது,  ஒரு வெளிச்சக்கோடு. திருச்சி தேசியக் கல்லூரியில், ஆசிரியர்களுக்கென, மின்னணுவியலில்,பகுதி நேர முதுநிலை பட்டப் படிப்பு ஆரம்பிச்சாங்க. அடிச்சுப்  புடிச்சு,அரக்கப் பரக்க, அதிலே சேர்ந்தேன். என் துணைவியார் இரெண்டாம் குழந்தையை சுமந்த சமயம், அது. குடும்பத்தில்...நிறைய இக்கட்டுக்கள் .

அதிகாலை எழுந்து முதல் 'ஷிப்டு'' வேலையை முடித்து மாலை நேர வகுப்பு கள் போக வேண்டும். வீடு திரும்ப இரவு மணி ஒன்பது ஆகிவிடும்..பிறகு புத்தகங்களை எடுத்துக் கொண்டு, திருச்சி கண்டோன்மென்ட் பக்கத்தில், நீதி மன்ற வளாகத்தின் சுற்றுச் சுவருள் உள்ள சுடுகாட்டுப் பக்கம் படிப்பு..நள்ளிரவு வரை..முதுகலை பட்டம் பெற்றேன். மூச்சு வாங்கி விட்டது.

 இப்படித்தான் படிப் படியாய் உயர்ந்து, உதவி நிலையப் பொறியாளர் (Assistant Station Engineer) ஆனேன். இடையில்,நான் பணி புரிந்த தொலைகாட்சி நிலையத்தின் தயவினாலும், ஆதரவினாலும் I.I.T.(Delhi), மற்றும் I.I.T (Kanpur)  இன்னும் சில  தேசிய பயிற்சி கழகங்களில் பயிலும் வாய்ப்புக்கள் கிடைத்தது.

ஒரு கிராமத்துப் பையனுக்கு வானத்தை தொட்ட சந்தோசம்.

அப்புறம்....." இருக்கிற வேலையைவிட்டு விட்டு,பறக்கிற வேலையை  புடிக்குறா மாதிரி ",  வளைகுடா நாட்டுக்கு ஓடினேன். இதையெல்லாம் பத்தி பின்னாடி சொல்றேங்க ..
அதுவும் ஒரு பெரிய கதைங்க ..

ஏதோவொரு தாகம் ..எப்போதோ ஏற்றி வாய்த்த நெருப்பு ஊதிகிட்டே இருக்கணும் ..அவ்வளவு தாங்க..

பொறிகள் இன்னும் வரும் ...


நன்றி : கூகுள் படங்கள் . 

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

உயரப் பறந்த பறவைகள் ...

                                 உயரப் பறந்த பறவைகள் ... 

கணிணிப் புரட்சியால், இந்தியாவின்  இன்றைய இளைய சமூகம் உலகெங்கும் பணி புரியும் வாய்ப்புக்கள். பொருளாதார சுமையால் முதுகு ஒடிந்து, மூச்சுத் திணறிய குடும்பங்கள் வளமான வாழ்க்கையும், வாங்கும் தன்மையும் கூடி, சற்றே இளைப்பாறுகின்றன. இளைஞர் திறமையும், கல்வியும் தந்த வரம்.



 நாம் கனவில் மட்டுமே கண்ட தேசங்களிலும் , திரைப்பட காட்சிகளில் பார்த்து வியந்த நாடுகளுக்கும் , நம் குழந்தைகள் குடி பெயர்தல், சர்வ சாதாரணமாகி விட்டது . புது வீடு, வாகன வசதி என பெரும்பாலான பெற்றோரின் கனவை நனவாக்கி உள்ளனர்,

 கண்களாய் போற்றி வளர்த்த குழந்தைகள், கண்காணா இடத்தில, தொலை தூர தேசங்களில்....தூரமும், பிரிவும்.  அது தரும் பெரும் துயர்...இதயத்தில்.

செவ்வாய், 13 டிசம்பர், 2011

வாழ்க்கைக் கோலங்கள் புள்ளி .8

நாளைய தலைமுறை ....நமது செல்வங்கள்.


வாழ்க்கைக் கோலங்களின் எதார்த்த நாயகர்களாகிய முகுந்தனும் வசந்தனும் தங்களின் குழந்தைகளின் எதிர் காலம் பற்றி கவலை அடையத் தொடங்கினர் .பள்ளியை பாதியில் விட்ட முகுந்தனும், முதுகலை பட்டம் பெற்ற வசந்தனுக்குமே தத்தம் சிறார்களை வளர்க்கும் விதம் சரியா ? என்ற ஐயப்பாடு.
வழக்கம் போல் தம் ஐயம் தெளிய, தங்கள் ஆசிரியர் திரு. கல்யாணராமனைத் தேடித் போயினர். கால ஓட்டத்தில் கல்யாணராமன் முதுமையின், மூத்த நிலையில் இருந்தார்.
            பழைய மாணாக்கர்களின் வருகையில் மனம் மகிழ்ந்தார்.நெடிது நேரம் அளவளாவிய பின், ஆசிரியர் கல்யாணராமன், "வெகு வேகமாய் வளர்ந்து வரும் நவீன உலகில் பெற்றோர் குழந்தைகளியிடையேயான தலைமுறை இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது..ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனிப்பட்ட மலர் போல்.. ..இடம்,பொருள், வசதி,கல்விக்கான வாய்ப்பு, வளரும் சமுதாய சூழல், பெற்றோர்களின்  ஈடுபாடு,பள்ளியின்  தரம், ஆசிரியர் என பன்முக பங்களிப்பில்இம்மலர்  பரிணமிக்கிறது.மாதா,பிதா, குரு என்ற தத்துவம், குழந்தை வளர்ப்பின் கால கட்டங்களே.
                  "குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பதா? சுதந்திரம் கொடுத்து வளர்ப்பதா ?"எனபது தொன்று தொட்டே எழுப்பப்படும் கேள்வி.சரியான முடிவு சொல்ல இயலா  தர்க்கம். பாமரர் படித்தோர் என பெற்றோர் பலதரப்பட்டவர். "எது சரி? ", என எப்படி முடிவு செய்ய இயலும்?.இதற்க்கு சரியான தீர்வு எது?.
 காலம் காலமாய் எல்லோரும் கேட்டு  வரும் இக்  கேள்விக்கு விடை என்ன என்ற விவாதம், ஒரு முறை பன்னாட்டு அறிஞருக்கு இடையே நடந்ததாம். அந்த பட்டி மன்றத்தின் இறுதித் தீர்வு "உன் தந்தை,தாய் உன்னை எவ்வாறு வளர்த்தனர் என்பதை முதலில், நீ  புரிந்து கொள்.அதில் உள்ள நிறைகளை ஏற்று,குறை என்று கருதுபவற்றை  களைந்தாலே, உன்னை விட உன் குழந்தைகளை நிறைவாய் வளர்க்கலாம் "என்பதே.
"குழந்தை வளர்ப்பில் நம் தாய் தந்தையே நமக்கு முன்னோடி,மேலும் குழந்தைகள் பெற்றோர்களுடன் தம் எண்ணங்களை சுதந்திரமாய்  பகிர்ந்து கொள்ளும் அளவு தோழமையுடன் வளருங்கள் ",என முடித்தார் ஆசிரியப் பெரு மகன்.
நன்றி : கூகுள் படங்கள்