திங்கள், 9 ஜனவரி, 2012

ஆலய தரிசனம் ..1.

ஆலய தரிசனம் ..1.

ஸ்ரீசிவா - விஷ்ணு கோவில.

இன்று  சனிக் கிழமை (07 /01/2012 ), வார விடுமுறை தினம். குடும்ப சகிதம், மெல்பெர்ன் ( Melbourne )  நகரத்தின் மற்றொரு கோடியில் காரும் டௌன்ஸ் (Carrum  Downs ) -ல் உள்ள ஸ்ரீசிவா -விஷ்ணு ஆலயத்திற்கு சென்றோம்..

க்லென்வேவர்லி(Glen  Waverley ) -ல் பஸ் பிடித்து, டான்டீனங் (Dandenong )  சென்று, மற்றுமொரு பஸ் மாறி,, சுமார் முப்பது ௦ கிலோ மீட்டர் பயணம் செய்து கோவில் சென்றடைந்தோம்.




வழி நெடுக நேர்த்தியான வீடுகள், போட்டி போட்டுக்   கொண்டு பூத்துக் குலுங்கும் தோட்டங்கள், வெள்ளை,சிகப்பு , மஞ்சள், நீலம் என வித விதமாய் கதம்ப மலர்கள், ஓட்ட வெட்டப் பட்டு, ஒய்யாரமாய் படுத்திருக்கும் பச்சைக் கம்பள புல்வெளிகள், கரு நாகம் போல் நீண்ட சாலைகள்,வயல் வெளியில், பட்டுப் போல் உடல் மின்ன, பயிர் தின்னும் பசுக்கள் கூட்டம், ஆங்காங்கே சில குதிரைகள், என 'ஆஸ்திரேலிய', கண்டம் எட்டிய தூரம் கண்களுக்கு  குளுமையூட்டியது.

பிரதான சாலையில் இருந்து விலகி,  சுமார் நானூறு மீட்டர் தூரத்தில், கம்பீரமான இரு கோபுரங்களுடன், பெரிய நிலப் பரப்பில் அழகாய் கோவில்.. .ஊருக்கு ஒதுப் புறத்தில், அமைதியான சூழலில்.




மிகுந்த   பக்தியும், தொண்டுள்ளமும்  நிறைந்த இந்து சொசைட்டி(Hindu Society) அன்பர்கள், மற்றும் பலரின்  முயற்சியில், பெரும் பொருட் செலவில் எழுப்பிய கோவில். கடல் கடந்த கண்டத்திலும் காப்பாற்றப் படுகின்ற, நம் கலாச்சாரம். ஆஸ்திரேலிய கட்டிட கட்டுமானத் திறனில், இந்துப் பாரம்பரியம் இம்மியும் பிறழாமல், நிர்மாணிக்கப்பட்ட திருத்தலம்.தெய்வச் சிலைகள் யாவும் மிகவும்அற்புதமாய் வடிக்கப் பட்டுள்ளன .மொத்தம் 32 மூர்த்திகள் உள்ளதாய், கோவில் பற்றிய குறிப்பு கூறுகிறது.

முதலில் " விக்னம் எல்லாம் விலக்கிடும் ", விநாயகப் பெருமானைத் தொழுது, உள்ளே நுழைகிறோம். சடுதியில் மனம், சலனமின்றி அமைதி அடைகிறது. திடீரென பத்தாயிரம் மைல் தாண்டி, நம்ம ஊர் கோவிலில் இருக்கும் பிரமை, கூடியிருக்கும் சகோதர சகோதரிகளை, ஒருமித்து பார்த்த போது.

ஓயாமல் கரை தழுவி, தன் கதை சொல்லும், கடல் அலை போல, பிறந்த மண்ணின் எண்ணங்கள், புகுந்த நாட்டில் புளகாங்கிதம் அடையச் செய்கிறது.பள பளக்கும் மரத்தில் பளிங்கு மாதிரி தரைத் தளம்.மந்திரங்கள், மங்களஇசை,ஓங்கி ஒலிக்கின்ற மணிச்சத்தம்..உள்ளத்தை உருக்குகின்றன, இந்த இன்னிசை  நாதங்கள்.சிவனும்,திருமாலும் மற்றும் ஏனைய தெய்வங்களும் அருள் பாலிக்கின்றனர். நாங்கள் போன போது, அய்யன் சிவனுக்கும் அன்னை விசாலாட்சிக்கும் அபிஷேக ஆராதனை.அனைவரும் மெய்மறந்தனர். மிக அருமையான, ஆனந்தமான தரிசனம். .

மன்னிக்கவும் ..இந்த இடத்தில் சிறிதே விலகி ஒரு சின்ன கவனச் சிதறல் ..
.
பிரகாரம் சுற்றிவிட்டு வந்து, அமர்ந்து இருக்கையில், புது நண்பர் ஒருவரைச் சந்தித்ததை சொல்லியே ஆகவேண்டும். நான் பணி புரிந்த காலத்தில், என் மேலாளரும், நெருங்கிய நண்பருமான திரு .தியாகராஜன் அவர்களுக்கு மின்னஞ்சலில் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுப்பினேன்.

பதில் கடிதத்தில், நான் மெல்பெர்ன் (Melbourne) வந்திருக்கும் தகவல் தெரிந்து, இங்கிருக்கும் அவரது ஆத்ம நண்பர் திரு. ராமநாராயணன் அவர்களின் விலாசமும், தொலைபேசி எண்ணும் அனுப்பி வைத்தார். நான், திரு.ராமநாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க, ஞாயிற்று கிழமை இல்லத்திற்கு வருமாறு அழைத்திருந்தார்.மேலும் பேசும் போது " சிவன் கோவிலுக்கு சனிக்கிழமை போக எண்ணியுள்ளேன்", என்றார்.

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை. திரு. ராம நாராயணன்  பல ஆண்டுகள், அமெரிக்காவில் பணி  புரிந்து, இரண்டு மாதம் முன்பாக, வேலை நிமித்தம் இங்கு வந்துள்ளார்.சிங்கப்பூரில்  பணி புரிந்த என் மகளும், மருமகனும், குழந்தைகளுடன் நவம்பர் கடைசியில் இங்கே குடியேற்றம். மூன்று  மாத விசாவில்,கொசுறாய் ஒட்டிக் கொண்டு அடியேனும் வருகை.

பிரகாரத்தில் அமர்ந்திருக்கையில் என் மகள் "காலெண்டர்" வாங்கும் இடத்தில, "அப்பா, அம்மா, பையன்", என மூவர் உள்ளனர். ஒருவேளை அது "திரு. நாராயணன் சார் ",ஆக இருப்பாரோ? ". என்று வினவ, திரும்பிப் பார்த்த நான் "அவர்தான்", என்று கூறினேன். "அது எப்படியப்பா ? அவ்வளவு உறுதியா சொல்றிங்கன்னு கேட்க .

ஒன்னுமில்லையம்மா ..என்னை மாதிரி தொண்டு கிழமெல்லாம் முக நூலில் (Facebook ) -ல இருக்காங்க. என்னை விட, இளைய அவரும் Facebook  இல் நிச்சயம் இருப்பாரு, என தேடித்  பார்த்தேன். இல்லை. ஆனால் Linked - In  என்ற சமூக தளத்தில்  அவரு இருக்காரு ..போய்ப்  பாருங்கன்னு .. அது சொல்லிச்சு அங்கே போய் பாத்தா ..  பக்கம்.. பக்கமா கொட்டுச்சு... பத்தாததுக்கு அவர் போட்டோவும் ..போட்டு இருந்தாரு..என்றேன்.

வாட்சன்-ஷெர்லாக் ஹோம்ஸ்..கதை மாதிரி ஆயிப் போச்சு. நாங்க, அவரை சந்தித்த விஷயம். அப்புறம் என்ன..காது வலிக்கும் அளவுக்கு கலந்துரையாடி..இதிலே என் பேரனும் அவர் மகனும்..பச்சக்கின்னு ஓட்டிகிட்டு..அவுங்க உலகத்துக்கு போய்ட்டாங்க.பிறகென்ன .. ஒன்னா கோவில் கான்டீன் ல சாப்பிட்டு, ஒன்னா பஸ்  ஏறி, தனித் தனியா வீட்டுக்குப் போனோம்.

புது வருடம், புது இடம், புது நட்பு. கிட்டத் தட்ட.பிசிராந்தையார் ரேஞ்சுக்கு...வைச்சிக்குங்களேன்..பழகலாம் ..பழகிப் பார்க்கலாம்..நட்பு ..நட்புதாங்க .

கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுடேங்க..மீண்டும் ..


  

இந்தக் கோவிலில் நூலகம் ஒன்று உள்ளது. இந்து மதம் பற்றிய வகுப்புக்களும் நடை பெறுகின்றன,மிக தூய்மையாகவும் நன்றாகவும் பராமரிக்கப் படுகிறது.இந்த அரிய,பெரிய கோவிலைக் கட்டியதில் பலரின் உழைப்பு தெரியுதுங்க. விருட்சமும் வேர்களும் தாய் மண்ணில்... விழுதுகள் இங்கே தழைக்கின்றன.இவர்கள் அனைவருக்கும், என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கான பிரார்த்தனைகளும்..

என்றும் வாழ்க வளமுடன்..  

நன்றி : கூகுல் படங்கள் ,யு ட்யூப்           

12 கருத்துகள்:

  1. Dear Sri Kalidoss, I felt very happy after meeting you and it was a pleasant experience.Very apt description regarding Dandenong and the temple, I felt the same way !!

    Thanks
    Ramanarayanan

    பதிலளிநீக்கு
  2. தமிழகத்திலிருந்து பல மைல் தூரம் தாண்டி நமது பாரம்பரியமும் திருக்கோயிலின் அமைப்பும் மாறாமல் இருக்கும் ஒரு திருக்கோயில் தரிசனம் தங்கள் மூலம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி காளிதாஸ் ஐயா. மிக்க நன்றி. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு மற்றும்
    பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. உலகம் சுற்றும் வாலிபரே வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. சகோதரி புவனேஸ்வரி ராமநாதன் அவர்களுக்கு என் புத்தாண்டும்,பொங்கல் வாழ்த்துக்களும்..
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ..

    பதிலளிநீக்கு
  5. திரு.G.M.B. அய்யா,
    தங்கள் அன்புக்கும் ஆசிக்கும் என் நன்றியும்,வணக்கங்களும்.இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ..

    பதிலளிநீக்கு
  6. நெருங்கி விட்டோம். மிக்க நன்றி.அருமையான அயல்நாட்டுக் கோயிலில் சென்று வழிபட்டு வந்த உணர்வு கிடைத்தது. இசையுடன் கூடிய வீடியோ
    அருமை.உங்கள் தற்போதைய இருப்பிடம் எங்கே?
    அடிக்கடி தொடர்பு கொள்வோம்.
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. நன்றிங்க திரு.radhakrishnan.தற்பொழுது Melbourne-ல் அடுத்த மாதம் தஞ்சையில். தடம் பதித்ததில் மகிழ்கிறேன்.தொடர்ந்து சந்திக்கலாமுங்க.இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  8. நன்றிங்க அமைதிச்சாரல்.உங்களுக்கும் குடும்பத்தில் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ..

    பதிலளிநீக்கு
  9. 2009 இல் மெல்பன் வந்திருந்தேன். குறைந்த நாட்கள் மட்டும் அங்கு நின்றதால் சிவா/விஷ்ணு கோவில் பார்க்கமுடியவில்லை. உங்கள் புண்ணியத்தில் கொஞ்சம் படங்கள் /விடியோ பார்த்தாயிற்று. நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க திரு.சக்திவேல்

    பதிலளிநீக்கு