ஞாயிறு, 22 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் ..3


மர வீடுகளும்....என் மனவோட்டமும்.


உலகத்திலே வசிக்கத் தகுந்த சிறந்த நகரங்களில் மெல்பர்ன் (Melbourne ) முதலாவது எனபது, எப்படி?.. என்று, எனக்குள் நிறைய கேள்விகள், எழும்பின. உணவு, உடை, உறையுள் இந்த மூன்றில், முதல் இரண்டையும் மனிதன் தன் விருப்பப் படி, அடிக்கடி, மாற்றிக் கொள்ள இயலும். ஆயின் இருப்பிடம் பல ஆண்டுகள் நிரந்தரமாய் நிலைத்து இருக்கும் தன்மையில் அமைத்துக் கொள்ளுகிறது மனித இயல்பு.




 ஆஸ்திரேலியா சுமார் 23  மில்லியன் ஜனத் தொகையுடன் உலக நிலப் பரப்பில் ஆறாவது இடம். நம் இந்திய தேசம், 1210 மில்லியன் ஜனத் தொகையுடன் உலக நிலப் பரப்பில் ஏழாவது இடத்தில.ஒரு சதுர கி .மீ க்கு மூணு நபருக்கும் கீழே  இங்கே வசிக்க, நாம் 394  பேர் என்ற எண்ணிக்கையில், மூச்சு முட்டுகிறோம்.ஆனால் நம்ம ஜனத் தொகை ஒரு பெரும் பலமும், பலவீனமும் கூட. இதை ஒரு மாபெரும் பலமாய் மாற்றிடலாம்..முடியுங்கிறது.. உண்மைங்க ..இதை பத்தி, அப்புறம், ஒரு பதிவு எழுதினாலும், எழுதுவேன்னு கொஞ்சம் அச்சாரம் இப்போவே போட்டு வைச்சுகிறேன்..



அப்புறம் ஆஸ்திரேலியாவில் பெரும் பான்மையான மக்கள் கடற்கரை யோரம் அமைந்த நகரங்களிலும், ஊரிலும் தான் வசிக்கின்றனர். இந்த நாட்டில் கிட்டத்தட்ட முக்கால் வாசி நிலப் பரப்பு, நீண்ட வறண்ட பிரதேசங்களும் பாலைவனப் பகுதிகளும் ஆகும். இதில்  ' மெல்பர்ன் '  தென்கிழக்குப் பகுதியில் கடற்கரையை ஒட்டிய  நகரம். நாலு மில்லியனுக்கு   சற்று மேலே,மக்கள் பெருக்கம். இதன் மறுபுறம் மிக உஷ்ணமான பாலைவனப் பிரேதேசம். ஆகையால் இங்கு அடிக்கடி மாறுகின்ற சீதோஷ்ண நிலை. அதிக அளவில் உறைநிலைக்கு கிழே 3* C டிகிரியையும் வெய்யில் 46* C  தொட்டதாய், வானிலை கோப்புக்கள், பகர்கின்றன. ஒரே நாளில், நான்கு விதமான பருவநிலை ( Day of Four Seasons ) மாற்றங்கள் ஏற்படுதல், இங்கு சகஜம் என்கின்றனர்.வருணன் ,வாயு ,அக்னி பகவான்கள் எல்லாம் கொஞ்சம் அடிக்கடி "மூட் அவுட்", ஆகிற இடம். ' மெல்பர்ன் '  1901 - 1927  வருடம் வரை, 26  ஆண்டுகள், ஆஸ்திரேலியாவின் தலைநகரமாய் கோலோச்சியது. அப்புறம் ' கான்பெர்ரா ' தலை நகர் ஆகி விட்டது. உலகத்திலேயே பெரிய திராம்( Tram ) வண்டித் தடங்கள், ரயில், பஸ் போக்குவரத்து ஆகிய வசதிகள்.கூடவே , நகரத்தின் கூடி வரும் மக்கள் பெருக்கத்தில், இந்த நகரின் எல்லைகள் விரிவாகிவிட்டன. ஆதலின் கார்களின் எண்ணிக்கை கூடிவிட்டது. மெல்பர்ன் ஆஸ்திரேலியாவின் கலாச்சார தலைநகரம். உலகத்தில் சிறந்த பல்கலைக் கழகங்கள் உள்ள பத்து நகரங்களில் இதுவும் ஒன்று. மேலும், உலகில் உள்ள முதல் இருபது புது உத்திகளைக்   கண்டுபிடிக்கிற (Innovation center )  நகரங்களில் இதுவும் ஒன்று,சிறந்த சுற்றுலா மற்றும் கேளிக்கை தளம்  என, அடுக்கிக் கொண்டே போகிறது, செய்திகள் .இதெல்லாம் நான் சில கேட்டதும், பல படித்ததும், சொல்பம் பார்த்ததும்.


எந்த ஒரு மனிதனும் தன வாழ்க்கையின் பெரும் பகுதியை செலவிடுவது தன் இல்லத்தில் தான். " பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் " , போல, தங்கியிருக்கும் வீட்டைச் சுற்றி என் எண்ணம் பரவிற்று.




ஊரிலிருந்து நுழைகிறோம். அடேடே! ..அழகான, ரொம்பவும் நேர்த்தியான சாலைகள், சைக்கிள் ஓட்டிச் செல்லும் அளவுக்கு சீரான நொடிகள் ஏதும் இல்லாத நடைபாதைகள். குப்பை கூளங்கள் ஏதும் அடைக்காத மழை நீர்த் தாரைகள் ..தேவலாமே!.




தெருவின் முனையிலேயே, அந்தத் தெருவில் உள்ள வீட்டின் இலக்கங்கள் பற்றிய விபரம். தெருவின் ஒரு வரிசையில் இருக்கும் இல்லங்களுக்கு ஒற்றை இலக்க எண்கள், எதிர் வரிசை இல்லங்களுக்கு   இரட்டை இலக்க எண்கள். வீட்டின் முனையில் தார் சாலையின் பக்க வாட்டில் வீட்டின் இலக்க எண். இரவோ, பகலோ வாகனத்தில் இருந்து இறங்காமலே வீட்டின் இலக்கத்தை தெரிந்து கொள்ளும் வசதி. பேஷ்.. பேஷ்..


நடைபாதைக்கும், சாலைக்கும்   நடுவே உள்ள புல்வேளி எல்லாம், நன்கு, கத்தரிக்கப் பட்டு அழகாய் உள்ளதே !.    முனிசிபாலிடிக்கு, நன்றி சொல்லலாம்ன்னா... இல்லைங்க. இதெல்லாம், அந்தந்த வீட்டுக்காரர்களே சரி பண்ணி வைச்சுக்கணும். முனிசிபாலிடிக்கு இதை விட முக்கிய வேலை யெல்லாம் இருக்குன்னு.. சொல்லிட்டாங்க. 


"காம்பவுண்ட்"  ன்னு சொல்லிக்கிறே அளவுக்கு பெரிசா ஒண்ணும் இல்லைங்க.பெரும்பாலான வீடுகளில் மரத் தடுப்பு அல்லது இரண்டடி உயர பளபளக்கும் செங்கலில் சுவர்.. இல்லேன்னா பின்னல் கம்பி வேலி..நம்மூர் ஆடு, கோழி, சுவர் ஏறி குதிப்பவர் எல்லாம், பெருமூச்சு விட்றது, இங்கே தெளிவாக்  கேட்குது.


சுற்றி ஒரு முறை பார்க்கிறோம், பறவைக் கண் நோக்கில்.. அதாங்க ..Birds eye view அப்பிடி.. போட்டா, போட்டின்னு வீட்டுக்கு வீடு, பூத்துக் குலுங்குகின்றன மலர்கள். மர நாவிதர்களும் தங்கள் வேலையைச் சிறப்பாகவே செஞ்சிருக்காங்க.மரம் செடி கொடி எல்லாம் ஓழுங்காய் கத்தரிக்கப்பட்டு...தோட்டக் கலை வித்துவான்களாய்... ஊட்டுக்கு ஊடு, நம்ம ஊரு, ஊட்டி மாதிரி வச்சிருக்காங்கன்னா.   பாத்துக்குங்களேன். கண் குளிர்ந்து போச்சு .




கீழே முன் வராந்தா, வாகனம் நிறுத்துற இடம், தரை வசதிக்கு ஏற்றபடி,  வர்ணங்களே பூசத்   தேவையில்லா வீட்டுச் சுவர்கள் , மரப் பலகை அடித்து கார்பெட் விரித்த தரை, கூரை உச்சி தாங்கும் முக்கோண மரச் சட்டங்களை மறைத்துமச்சி அடைப்புப் பலகைகள் . கம்பி இல்லாம, ஆளுயர அகண்ட  கண்ணாடி சன்னல்கள் ( திருடர்கள் கொஞ்சம் இங்கே கவனிக்கவும் ..),  அங்கங்கே கொசு, பூச்சிகள் நுழைய இயலா மெல்லிய சல்லைடையிட்ட தடுப்பான்கள். காற்றோட்ட வசதிக்கு தேவையானால் கண்ணாடி சன்னல்களில் திறந்து மூட வசதிகள்.மேலே மின்னுகின்ற சீமை ஓடும்,தண்ணீர் தவழ தகரமும்.


அய்யே மர வீடு !.இவ்வளவு மரம் கட்டுமானத்தில், நம் ஊரிலே நாலு வீடு கட்டுவோம்.. இந்த மரம் வாங்குற விலைக்கு ..ஏன் இப்பிடி?. மிச்சம், மண்டையில் இருக்கின்ற  நீயுரான்கள் எல்லாம் இணைப்புக் கொடுத்து, கூகுள் ஆண்டவரையும் துணைக்கு கூப்பிட்டு யோசிக்க தோணிச்சு.. 


இங்கு சகட்டு மேனிக்கு  மரத்தின் உபயோகம். பின்னே காடுகள் அதிகம்..உடுவாங்களா. மரம் எந்த சீதோஷ்ண நிலையையும் தாங்கக் கூடியது. பாருங்க காத்து, மழை ,புயல் பனி அப்படின்னு எல்லாத்தையும் தாங்கி,கடைசியா " மரம் மாதிரி நிக்கிறியே " ,என்ற பழிச் சொல்லுக்கு ஆளாகிற... பாவமான தாவரம்.முப்பது ,நாப்பது வருடங்கள் , இந்த கட்டிடங்கள் தாங்குமாம். அப்புறமும், இந்தக் கட்டிடக்  கழிவுகள், சுழற்சி முறையில் மீண்டும் உபயோகம் ஆகுமாம். மீண்டும் காடுகள் வளர்த்தல் ,அதனால் ஏற்படும் வேலை வாய்ப்பு, ஏற்றுமதி என, சங்கிலித்  தொடராய் பல பயன்கள். தவிர, வான்வெளி மண்டலத்தில் கரியமில வாய்வின் அடர்த்தி குறைத்து, மாசு குறைந்த உலகத்தில், மனித குலம் வசிக்க மரங்கள் துணை செய்கின்றன. அப்பிடின்னு பல காரணங்கள் ..




இன்னும் வீட்டுக்குள்ளே முழுசா போகலே ..உள்ளே போய் கொஞ்சம் களைப்பாறிட்டு பாக்கியை எழுதுறேன்னுங்க...


வணக்கங்க ..    

8 கருத்துகள்:

  1. ரொம்ப அருமையான கட்டுரை காளிதாஸ் சார். எங்களையும் மெல்பெர்னுக்கே கூட்டீட்டு போயிட்டீங்க. புகைப்படங்கள் எல்லாம் நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. மீண்டும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. மெர்ல்பன் நகரை நேரடியாக சுற்றி பார்த்த ஃபீலிங் மிக்க நன்றி...!!!

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.சகோதரி புவனேஸ்வரி ராமநாதன்.

    பதிலளிநீக்கு
  4. MANO நாஞ்சில் மனோ அவர்களுக்கு..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  5. அருமையான எளிய முறையில் எங்களை சுத்தி காட்டிவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  6. கோவை நேரம்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க .

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.சகோதரி சித்ரா .

    பதிலளிநீக்கு