சனி, 12 மே, 2012

சிந்தனையை கிளரும் சினிமாக்கள் - அங்கும்...இங்கும்.


வழக்காடு மன்றங்கள் ..வழக்கும் ..தீர்ப்பும்.
சுப்ரமணிய புரம், கோரிப் பாளையம் அங்காடித்தெரு வழியாய் வெய்யிலில்   நடந்து சென்ற பொழுது வழக்கு எண் :18 / 9 பட விளம்பர சுவரொட்டி  பார்த்தேன்.
எளிமை யாய், எல்லோர் கவனமும் சிந்தாமல், சிதறாமல் கவரக் கூடிய வகையில், சமூக அவலங்களை தோல்  உரித்து காட்டுகின்றன. வித்தியாச மான, இந்தப் படங்கள்...இவை எழுப்பும் கேள்விகள்..திராணியற்ற நம் நெஞ்சிற்கு, தருகின்ற சவுக்கு அடிகள். பார்த்து, பதை பதைத்து, பின் "இதுவும் கடந்து போகும்",  என்கிற பாமரனாய் நாம்.
திக்கெட்டும்  திரும்பிப் பார்க்க, பேச, வைக்கும் அளவுக்கு புதிய பரிணாமத்தில் தமிழ்த் திரையுலகம்.  ' திடுக் ', என்று திகைத்து எழுந்து நிற்க வைக்கிறது.


அங்காடித் தெருக்கள் இல்லாத உலகமே இல்லை எனத் தோன்றுகிறது. இனம் நிறம், மொழி, தூரம்,பரிணாமங்களின்  வேறுபாடு.அவ்வளவு தான். ஏழ்மை, எதிர்த்து  நிற்க இயலாமை, சாண் வயிற்றுக்கு ஊண் இட, விரும்பியோ விரும்பாமலோ பொந்துக்குள் புதைகின்ற மனிதர்கள், சமாதியாகின்ற வாழ்க்கைகள். அவ்வளவு தான். நிரம்புகின்றன, கொத்தடிமைக் கூடாரங்கள்.
கூடா நட்பு, நம்பிக்கையற்ற பெற்றோர், அதிகார ஆணவங்கள் அவற்றின் துஷ் பிரயோகங்கள், மனிதத்தை நேயமின்றி கசக்கிப் பிழியும் சுயநலமிகள்..
இப்படி பல சமூக அவலங்களை சத்தமின்றி படமெடுத்து, சாட்டையால் சாடுகின்றனர். துண்டாடும் அரிவாளும், தூள் பறக்கும் அடி தடிகளும் தலை காட்டுதல், இன்னமும்  தப்பவில்லை. ஆயினும், புதிய வரவேற்கத்  தக்க மாற்றம் .
வழக்கு எண் : 18 / 9 திரைப் படம் பற்றிய விமரிசனங்கள் விரவிக் கிடக்கின்றன வலை எங்கும். மனித உணர்வுகளை மிக நேர்த்தியாய் சித்தரிக்கிற படம்.  வார்த்தைகளால் சொல்லத் தெரிய வில்லை. நெகிழ்ந்து போனேன். நெஞ்சில் நிழலாய்த் தொடர்கிறது. அந்த ஏழு வருடங்கள் பற்றிய வசனம். இன்னும் பல நினைத்தால்  நிலை குலைய வைக்கிறது ..நீதி தடுமாறுகிற வழக்கு. தீர்ப்பு தரும் அபலை..மீதியை வெள்ளித் திரையில் பார்க்கவும் ..
திரு. பாலாஜி சக்திவேல், திரு. லிங்குசாமி மற்றும் அவர் குழுமத்துக்கும் நன்றிகள், பல. இது, இங்கும் என்ற தலைப்பிற்கான என் கண்ணோட்டம்.
அங்கும் எனபது பற்றி...
படத்தின் பெயர் :குளோஸ் அப் ( close  up ), Persian ,Year 1990 ( Nema -ye Nazdik ) 
இயக்கம் :அப்பாஸ் கியரோஸ்தாமி  (Abbas Kiarostami )
( நிஜத்தில் நடந்த நிகழ்ச்சியாம் ..திரைப் படமாக்கப் பட்டது .)

எதேச்சையாய் குறும்  தகடு விற்பனைக் கடையில் ஒரு அயல் மொழிப் படம் கிடைத்தது.ஆங்கில மொழி பெயர்ப்புடன்.  பாரசீக மொழிப் படம். அதில் பிரதானம். வழக்காடு மன்றம், வாதங்களும், பிரதி வாதங்களும். 
சுருக்கமாய் எனக்கு புரிந்த வகையில் கதையை கோடி காட்டி விடுகிறேன்.
சிறு வயதில் இருந்து, இவன் ஒரு சினிமாப் பைத்தியம். லட்சியம் தலை சிறந்த திரைப் பட இயக்குனராக வேண்டும் எனபது. வாய்க்கும், கைக்கும் எட்டாமல் வறுமையின் விளிம்பில், வாழ்க்கைச் சக்கரம். இவன் வறுமையின் நிழலில் வாழப் பிடிக்காமல், விவாகரத்து வாங்கிப் பிரிகிறாள், மனைவி.
வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளமாய் ஒரு குழந்தையை தன்னுடன் எடுத்துச் செல்லுகிறாள். மற்றொரு குழந்தையுடன், மூப்பினால் முகம் சுருங்கிய அம்மாவுடனும் கஷ்ட ஜீவனம். எப்படியும் ,இயக்குனராக வேண்டும் என்ற, சதா அடி வயிற்றில் நெருப்புடன் . 
சந்தர்ப்ப வசத்தால் ஒரு புகழ் பெற்ற இயக்குனராய் நாடகமாடி, சினிமா மோகம் கொண்ட குடும்பம் ஒன்றை ஏமாற்றி விடுவதாய் கதை. இந்தக் கதையின், ஒவ்வொரு கால கட்டத்திலும், தன முகத் திரை கிழிந்த போதும், தப்பிக்க வாய்ப்புக்கள் இருந்த போதும்.. ..தன திறமையின் மீது உள்ள நம்பிக்கையாலும், தான் நினைத்தபடியே நிகழ்வுகளின் ஓட்டம் அமைவதால், முடிவை அதன் போக்கில் ஏற்றுக் கொள்ளுகிறான் ..பின் கைது செய்யப்பட்டு , வழக்காடு மன்றத்தில்.
தன்னிலை விளக்கம் அளிக்கிறான் .இயக்குனராய் அவதாரம் எடுத்தும் சமூகத்தில் அவனுக்கு கிடைக்கின்ற மதிப்பு, அதனால் அவனுக்கு ஏற்பட்ட தன்னம்பிக்கை, இயக்குனராய் அவர்களை ஆட்டி படைக்க வைத்த தன்  உள் மன வெளிப்பாடு, ஏமாற்றிய குடும்பத்திடம் மன்னிப்பும், தவறு என்று  நினைத்தால் தண்டிக்கக் கோரி நீதி அரசரிடம் விண்ணப்பமும்... என வாதப், பிரதி வாதங்களுடன் நிறைவடைகிறது .நேயம் கலந்த நீதி அரசர், தவறு என்றாலும் இயக்கிய நாடகத்தில் எதிர் கொண்ட வெற்றி, ஏமாற்றப் பட்டும் எதிரியை மன்னித்த குடும்பம், மனித நேயத்தை மையமாய் வைத்த தீர்ப்பு. 
இந்த சம்பவத்தில் பாதிக்கப் பட்ட நபர்களே, இந்த திரை படத்தில் நடித்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன. காண வேண்டிய படம் ..என் கருத்தில் .காலமும் நேரமும் கிடைக்கும் போது கண்டு ரசிக்க வேண்டுகிறேன்.
நன்றி:கூகுள் படங்கள்               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக