வியாழன், 26 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் ..5.


மும்பை யில் இருந்து தில்லி ..முதல் பயணம்.

“It is good to have an end to journey toward; but it is the journey that matters, in the end” ....By Ursula K.Leguin    
.

ஒவ்வொரு மனிதனும், காலத்தின் கட்டாயத்தில், எப்போதேனும் தன வாழ்க்கையில் வேறுபட்ட இடங்களுக்கு, மாறுபட்ட சூழலில் பயணிக்க நேரிடுகிறது. இந்த பயணங்களில்,சில மனதில் மகிழ்ச்சி எனும் மத்தாப்பு களையும், மற்றும் சில பயணங்கள் அச்சத்தையும், திகிலையும்,  அல்லது இன்னவென்று சொல்லத் தெரியாத   எண்ண  அலைகளை காலம் காலத்துக்கும் ஏற்படுத்தி விடுகிறது.


பசு மரத்து ஆணியாய் இவை   மனதில் பதிந்து, அவசரமாய் மேய்ந்து, பின் ஆர அமர அசை போடும் பசு போலவும், அவ்வப்போது மனக் குகையில் அதிர்வு கேட்ட வெளவால் வட்டமிட்டு வந்து அமர்தல் போலவும். குளத்தில் இட்ட கல் போல, விரிகின்ற வளையங்களாய் அலை எழுப்பி, பின் வலுவிழக்கின்றன. காலம்  கடுகிட,  தன்னில் சற்றே விலகி, தொலைவில் நின்று, புகை போன்று எழும்புகிற இந் நினைவுகளை  நோக்கின், பெரிதே நகைப்பையும்,சிறிதே  நாணத்தையும் கூட ஊட்டும்.



 " பயணங்கள் எல்லாம் காதலர்களின்   சந்திப்பில் முடிவதாய் " , ஷேக்ஸ்பியர் சொல்லிச் சென்றார். காதலிக்கும் முன்னமே, கல்யாணம் கட்டி வைக்கப்பட்ட ஆண்கள் வர்க்கத்தில், அடியேனும் ஒருவன். கரம் பிடிக்கும் போது தான், மணமேடையில் மாதரசியின், திருமுகம் பார்த்தவன். கதைக்கு வருகிறேன். கொஞ்சமாய் ,கதைக்க வருகிறேன்.

ஆங்கிலேயர்களால் தீவாந்திரச் சிறைக்கும்,தப்பிக்க இயலா கார கிருகத்திற்கும் பெயர் போன அந்தமான் தீவில் பணி புரிந்து மாற்றலாகி, மும்பை அகில இந்திய வானொலிக்கு 1972 ன் கடைசி மாதத்தில், வந்து சேர்ந்தேன்.1974 மே மாதம், அலுவலகம் என்னை பயிற்சிக்காக, தில்லி செல்ல பணித்தது. பணியில் புதியவருக்கு, இந்த மூன்று மாத கால 
அடிப்படை  பயிற்சி, கட்டாயம். ஒரு "ரூம், கிச்சனில்", ஒண்டுக் குடித்தனம். ரூபாய் 125  வீட்டு வாடகை. துணைவியை ஊரில் விட்டு வர, நேரமும் விடுப்பும் இல்லை. கூடவே அழைத்து சென்றுவிட முடிவெடுத்தேன்.

கோடை விடுமுறை நேரம். முதல் வகுப்பில் செல்ல இன்னும் ஒரு வருட பணிமூப்பு வேண்டும்.முன் பதிவெல்லாம் முடிந்து விட்டது. மூன்றாம் வகுப்பில் டிக்கெட் எடுத்தாகி விட்டது. நண்பர் வாசு தேவனும் அவரது மனைவியும் எங்களை ரயிலில் வழி அனுப்ப வந்தனர்.சென்ட்ரல் ஸ்டேஷனா?, தாதரா?. நினைவில்லை. சரியான கூட்டம். எங்கும் ஜனத் திரள். ரயில் இன்னமும், நிலையத்திற்குள் வரவில்லை. 





அப்போது ஒரு போர்ட்டர் எங்களை அணுகி, "இந்தக் கூட்டத்தில் நீங்கள் உள்ளே ஏறுவதே சிரமம் .ஒரு இருக்கைக்கு ரூ 20௦/  கொடுத்தால் இடம் பிடித்து தருகிறேன்", என்றார். அந்த இக்கட்டிலும், வழக்கம் போல் பேரம் பேசினோம். ' பாலிஷா ' ,கெஞ்சினோம். கொஞ்சம் குறைத்துக் கொண்டார். என்னைப் பார்த்து" நீங்கள் என்னுடன் வாருங்கள். ரயில் யார்டில் உள்ளது. அங்கேயே உங்களை ஏற்றி இருக்கை போட்டுத் தந்து விடுவேன். அதற்க்கு அப்புறம், இடத்திற்கு நான் பொறுப்பல்ல", என்றார்.முன தொகையாய், அங்கேயே, முக்கால்வாசி பணம் வாங்கிக் கொண்டார்.


பலி பீடத்திற்கு இட்டுச் செல்லப் படும் ஆடு போல,நான் ,அவரை பின் தொடர்ந்தேன். " யார்டில் ", மூடப் பட்டு இருந்த பயணிகள் பெட்டியின் கதவொன்றைத் தட்டினார். உள்ளே போனோம். இன்னும் சில போர்ட்டர்களும், பயணிகளும் உள்ளே அமர்ந்து இருந்தனர். என்னை நடு இருக்கையில் அமர வைத்து, எதிர் இருக்கையில் முண்டாசை விரித்து " பாற்க் கடலில்  பள்ளி கொண்ட பெருமாள் ", மாதிரி படுத்துக் கொண்டார். தணலாய்க்  கொதிக்குது ரயில் பெட்டி. ஆறாய் ஓடுது வியர்வை. தீடிரென்று "தட, தட ", வென்று கதவை ' இடி ' மாதிரி தட்டுகின்ற சத்தம். இரு வாயில் வழியாகவும் நுழைந்த போலீசார், போர்ட்டர்களை சகட்டு மேனிக்கு அடிக்கத் துவங்கினர். அமளி,துமளி ஆகி விட்டது . அடியிலிருந்து ,ஓரிரு பயணிகளும் தப்பவில்லை. எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது. கால்கள்" மோர்ஸ் கோட்", அதாங்க!. தந்தி அடிக்க ஆரம்பிச்சுடுச்சு .

நம்மாளு,  உடனே பலமா மராத்தியிலே ஏதோ கத்தினார் . மந்திரம் போட்ட மாதிரி, லத்தியெல்லாம் "கப்பு, சிப்பு ",ன்னு ஆயிடுச்சு. மந்தை ஆட்டை, சந்தையிலே, விலை பேசுற மாதிரி, போலீசும் போர்டரும், துணி போடாம, கைக்குள்ளே கை மாத்திகிட்டாங்க. புண்ணியமா போச்சு, கண்ணியமா விலகிட்டாங்க." கூ", ன்னு கத்திகிட்டு ரயில்  புறப்பட்டு நிலையத்திற்கு வந்தது. "எள்ளு விழுந்தா,  எள்ளு எடுக்க முடியாத ", சனம். எட்டிப் பாக்க முடியலே.எட்டிப் பார்த்தா இருக்கை போய்டும் .ஒரே பேஜாராப் போச்சு . 



எப்படியோ, அடிபட்டு மிதிபட்டு என்னைக் கண்டு பிடிச்சி, நாலு பேரு சீட்டிலே ஏழாவுதா, எம் மவராசி என் பக்கத்திலே  உக்காந்தாங்க.தடக் ,தடக்குன்னு தாலாட்டி கிட்டே,பெரிசா புகையும் பெருமூச்சும் விட்டு கிட்டு ரயில் கிளம்பிச்சு .

புழுக்கம், பாலைவனப் புழுதி, நெரிசலில்," கோட்டா ", என்ற இடத்தை ரயில் கடக்கையில், என் துணைவியார் மூர்ச்சையாகி விட்டார்கள். முதலுதவி செய்து " முக்கி, முனகி ", எங்களுக்கு அறிமுகமில்லாத தில்லியை அடைந்தோம். முதல் முறையாய்.

மாலை மூன்று  மணி. சூட்கேஸ் , கள்ளிப் பெட்டி சகிதம் பிளாட்பாரத்தில், வெள்ளை சட்டையணிந்து, மீசை வழித்து, உயரமாய், வரவேற்க வரும் , சிவத்த மேனி  நண்பருக்காக ..

வழிமேல் விழி வைத்து ..


காத்திருந்தோம் ...காத்திருந்தோம் ..காத்திருந்த காலமெல்லாம்.                          

2 கருத்துகள்:

  1. தங்கள் பயணத்தொடரில் முதன்முதலாய் பயனிக்கிறேன் இத்தகைய பயணானுபவங்கள் மற்றவர்க்கு முன்மாதிரியாக அமையும்

    பதிலளிநீக்கு
  2. ஊக்கமளிக்கும் உங்கள் கருத்துக்கு.மிக்க நன்றிங்க திரு.மணி கன்னையன்.

    பதிலளிநீக்கு