வியாழன், 3 மே, 2012

வெம்மையில் இருந்து விடுதலை .2

வெம்மையில்  இருந்து விடுதலை.தொடரச்சி ....

பகல் முழுதும் கடும் வெய்யிலில் காய்ந்த மொட்டை மாடி, சூரிய ஒளியில் இருந்து வாங்கிய வெப்பம் கான்க்ரீட் மேல் தளம் மூலம் மெள்ள  கசிகிறது. தலைக்கு மேல் சுழலும் மின்விசிறியில் இருந்து சூடான காற்று. என்ன பண்ணலாம்?.எப்படி இந்த அனல் வீச்சை சமாளிப்பது ?. சிலவு குறைவான தற்காலிக தீர்ப்பு ஏதும் உண்டா ?. என பல யோசனைகள். கொஞ்சம் மேலே அன்பு கூர்ந்து படிங்க ...

சாதாரணமாக, மனிதர்களின்  உடல் வெப்பம் 98 .6°F ( 37°C ). உடலை உரிக்கும் சஹாரா, கோபி பாலை வனத்தில் இருந்து, உறைபனி இருக்கும் துருவம் வரை, இப்போ மனுஷன் வசிக்காத இடம் கிடையாது. அப்போ!. ஒரு மனிதனுக்கு சௌகரியமா, தாங்கிக் கொள்ளக் கூடிய சீதோஷணம் எவ்வளவு என்று, தெரிந்து கொள்ளணும்னு ஆசை.

இது குறித்து நிறையவே ஆராய்ச்சி பண்ணி இருக்காங்க. வயசு, உடல் பருமன், பாலினம், ஆரோக்கியம், அணிகின்ற ஆடைகளின் தன்மை, மன நிலை, உணவு ..என்று பல விஷயங்களைச் சார்ந்ததாம். மேலும், சீதோஷ்ண நிலைகளான வெப்பம், குளிர், காற்று, ஈரப் பதம், நீர் ஆவி யாகும் தன்மை, இவற்றையும் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறுமாம். ஆக மொத்தம், சித்திர குப்தன் கூட, துல்லியமாக கணிக்க முடியாத, கணக்குங்க..


இருந்தாலும், தோராயமா கோடையில் 23.5°C - 25.5°C குளிர் காலத்தில் 21°C - 23°C  தட்ப வெட்ப நிலையில் மனிதன் சுகமாய் உணர்கிறான், அப்படின்னு கணிச்சு இருக்காங்க. இதெல்லாம் வினாடிக்கு 0௦.18 மீட்டர் வேகம் வீசும் கற்றோட்டதின், அடிப்படையில் தானுங்க.





சூரியனை ஒரு ஒளிப் பிழம்பு எனவும், நெருப்புக் கோளம் எனவும் வர்ணிக்கின்றனர். பார்வைக்கான  ஒளியும், உணரக்கூடிய வெப்பமும், இதில் பின்னிப் பிணைந்தது, என்றால் மிகையில்லை. பூவுலகில் உயிரினம் வாழ, தேவையான வெப்பம், இப்படித்தான் கிடைக்கிறது. இந்த வெப்பமும், வெளிச்சமும் இல்லன்னா, நாம் இல்லை, நம்ம உலகம் இல்லைங்க.

கிட்டத்தட்ட முழு உருண்டை வடிவில் இருக்கும் சூரியனின் மையப் புள்ளியில் இருந்து வெளிச்சப் புள்ளிகள்( அணுக்கள் ) கிளம்பி மேல் பரப்பிற்கு வருவதற்கு சுமார் பத்தாயிரம் ஆண்டுகள் முதல் ஒரு லட்சத்து எழுபதாயிரம் ஆண்டுகள் ஆகலாம், அப்படின்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க.ரொம்ப மலைக்க வைக்கும் விஷயங்க'!.

அப்புறமா ,அந்த சூரியக் கதிர், சூரியனின் மேற்ப் பகுதியில் இருந்து புறப்பட்டு வினாடிக்கு மூன்று லட்சம் கி.மீ;வேகத்தில் பூமியை நோக்கி பயணிக்கிறது. இடைப் பட்ட பதினைந்து கோடி கி.மீ தூரத்தைக் கடந்து வர எட்டு நிமிடம் பத்தொன்பது வினாடிகள் ஆகிறது.பிரமிக்கத்தக்க விஷயம்.

சூரியனுக்கும் வாய்வு பிரச்சினை தாங்க.முக்கால் வாசி ஹைட்ரஜன் வாய்வும், கால் பங்குக்கும் குறைவாய் ஹீலியமும், சொச்சம் மற்றக் கலவைகளும். கூடங்குளம், கல்பாக்கம் மாதிரி கணக்கில் அடங்காத அணு உலைகள். அவை வெளியிடும் சக்தியில் உண்டாகும் மில்லியன் டிகிரிகள் அளவிலான உள் வெப்பம். சூறாவளிகளும், புயல்களும் நித்திய நடனம் ஆடும் அரங்கம். இதெல்லாம் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில், பவனி வரும் ஆதவன் சரித்திரம்.







கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் புவிமேல் விழும் சூரியக் கதிர்கள்  


தங்கம் போல், தக தகக்கிற, சூரியனின் மேல்பகுதி வெப்பம் 5505°C அப்படின்னு சொல்றாங்க. முப்பது டிகிரி வெப்பத்திற்க்கே நாம் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கறோம். நாளுக்கு நாள் புவி மண்டலத்தில் வெப்பம் அதிகரிக்க காரணம், நம்முடைய மனித இனத்தின் அதீத தேவைகளும் அதனாலே மாசு பட்ட சுற்றுச் சூழலும் தான். இந்த நிலை நீடிக்குமானால் ஒரு பில்லியன் வருடத்திற்குள் நீரெல்லாம் வற்றி, பூமியே பரலோகம் போய் விடும்கறது, ஆராய்ச்சியாளர்கள் கருத்துங்க.
நாசா, இந்திய விண்வெளிக் கழகம் ஆகியவை அனுப்பும் விண்கலங்கள் வளி மண்டலம் கடந்து பூமியை விட்டு செல்லும் போதும் அல்லது பூமிக்குள் நுழையும் போதும் கிட்டத்தட்ட சுமார் 3000 °F  வெப்பத்தை தாங்க வேண்டி யிருக்கும். இதற்காக சிலிகான் ஓடுகளை பயன் படுத்துறாங்க.அப்படி ஏதாவது செய்து மாடியில் இருந்து வெளிப்படும் சூட்டை குறைக்கலாமான்னு யோசிச்சேனுங்க. ஒரு ,ஓய்வு ஊதியக்காரனின் உச்ச கட்ட கற்பனைங்க !.

( வெப்பம் பிரதிபலிக்கும் வண்ணம் ) பூசும் முன்பும், பூசிய பிறகும் .
கடைசியா இந்த வெப்பம் உள்ளே வராமல் பிரதி பலிக்கிற ரசாயனக் கலவை இருக்கு .வெளி நாட்டில் சூப்பர் தெர்ம் (Super Therm ) அப்படின்னு ஒரு பெயிண்ட் .அதை கூரை மேலே அடிச்சா சுமார் பத்து டிகிரி வரை வெப்பம் குறையுமாம். யு டுயுப் ( You Tube ) காணொளியில் பார்த்தேனுங்க உள்ளூரிலேயே ஒரு பவுடர் கிடைச்சுதுங்க.அதை வாங்கி நானே என் கையாலே அடிச்சுட்டேனுங்க. 
அடிச்சதுக்கு அடுத்த நாளில் இருந்து தொடர்ந்து மழைங்க. தமிழ் நாட்டிலேயே வெயில் குறைந்து விட்டதுன்னா !.பார்த்துகோங்க. கொஞ்சம் தமாஷ் பண்ணினேன். அவ்வளவு தான்.



கூல் கோட் ( Cool coat ) என்ற பத்து கிலோ பவுடரை நீரில் நன்றாய்க் கரைத்து வெயில் இல்லாத நேரமாய் ,மேல் தளத்தை பாசி, தூசி  ஏதும் இன்றி கழுவி சுத்தம் செய்து ரோலர் ப்ருஷ் ( Roller Brush ) ஆல் அடிச்சுட்டேனுங்க. மனோரீதியா, கொஞ்சம் வெப்பம் குறைந்தா மாதிரித் தான் தெரியுதுங்க. ஆயிரம் ரூபாயில் அனைத்தும் முடிஞ்சுதுங்க.                                 


கத்தரி வெயில் நாளையில் இருந்து ஆரம்பமாம் .ஏற்கனேவே வெப்ப மானி  சதம் அடிக்கிறது. வீட்டில் சும்மாவும் இருக்க முடியலே அதனாலே உருப்படியாய் ஏதாவது செய்து பார்க்கலாம் என்ற முயற்சி.
நனறி :கூகுள் படங்கள்  

8 கருத்துகள்:

  1. சூரியன் பற்றிய மலைக்கவைக்கும் தகவல்களோடு வெப்பம் குறைக்க உதவும் ஒரு யோசனையையும் முன்வைத்திருக்கீங்க. வெப்பத்தின் அளவு மாறுபாட்டையும் துல்லியமாய்க் கணிக்க முடிந்தால் இது ஒரு பெரும் சாதனைதான். பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல்களை சொல்லி இருக்கீங்க ... முயன்று பார்ப்போம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசரின் வருகைக்கு வணக்கம். கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. சகோதரி கீதமஞ்சரி அவர்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  4. அருமையான யோசனை சொல்லியுள்ளீர்கள் ஐய்யா.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மிக்க நன்றிங்க.சகோதரி.புவனேஸ்வரி ராமநாதன்.

      நீக்கு
  5. கட்டுரை மிக அருமை....வெயிலுக்கு தர்பூசணி ஜூஸ் குடித்த மாதிரி இருந்தது என்று சொல்ல ஆசை....
    ஆனால் இங்கு மெல்பர்னிலோ சரியான குளிர் , மழை... இதற்கும் ஏதாவது தீர்வு இருந்தா சொல்லுங்களேன்..

    பதிலளிநீக்கு
  6. தீர்வு இருக்கும்மா...ஆஷா எல்லோரும் புறப்பட்டு மழையையும் கூட்டிகிட்டு இங்கே வந்திடுங்க.

    பதிலளிநீக்கு