செவ்வாய், 31 ஜனவரி, 2012

பயணங்களும் அனுபவமும் .8


  
மும்பை முதல் தில்லி 

மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும் என்ற சொல் வழக்கின்  அர்த்தம் மிக ஆழமானது என்பதை இப்போது உணர்கிறேன்.இடம் ,பொருள், ஏவல் என்ற பல நிலைகளின் பரிணாமங்களை கூட்டுகிறது, இந்த பழ மொழி .முற்றாத ,என் கதையின் தொடர்ச்சிக்கு வருகிறேன்.


இன்றைய சீரியல்கள் மாதிரி முன்கதைச் சுருக்கம் சொல்லி இந்த பகிர்வை இழுக்க விரும்பலே. தில்லியில் நண்பர் வீட்டை, பிரம்ம பிரயத்னம் செய்து கண்டு பிடித்து இந்திரபுரி வந்து சேர்ந்தோம்.இதுதான் நாங்கள் தேடிவந்த ' தோடாபூர் '     என்ற கிராமத்தை விழுங்கி புதிதாய் ஜனனமான நகரம். நீங்க, தேவலோகம் அப்பிடின்னு நெனைசிங்கன்னா! , அதிலேயும் தப்பில்லை .ஏன்னா !. அன்னைக்கு எங்க நிலைமை அப்படி .

" எப்படி எங்கள் வருகை பற்றிய கடிதம் ,தகவல் எல்லாம் நண்பரை அடையவில்லை ", என்கிற பெரும் குழப்பம் கொஞ்சம் பின்னாடி தான் தெளிவானது. ஆனாலும் நான், உங்க கிட்டே, முன்னாடியே சொல்லிடறேன் .போட்டிருந்த கடிதம் பத்திரமாய் வந்து சேர்ந்தது. நாங்கள் தில்லி போய்ச் சேர்ந்ததுக்கு, ஒரு வாரம், அப்புறம். யாரையும் குறை சொல்ல விரும்பலே. நாங்கதான் முன்னாடியே வந்திட்டோம்னு நெனைக்கிறேன் .

பொதுவா, தந்தி வடம் ( ஹாட் லைன் ) மூலமா செய்திகள் ஏதும் யாருக்கேனும் வந்தா, கொட்டை எழுத்திலே ஒரு பேப்பரில் எழுதி, வேலை பார்க்கும் மேசை மேலே இருக்கும் கண்ணாடிக்கு கிழே, எல்லோருக்கும் தெரியுறமாதிரி, " டூட்டி ஷீட்டு ",க்கு  பக்கத்தில் வச்சுடுவோம். இந்த டூட்டி ஷீட் எங்கள் அன்றாட வாழ்கையை பெரிதும்  நிர்ணயிக்கிற சமாச்சாராம் .சம்சாரம்  கிட்டே பேசறது கூட , சமயத்திலே பாதிக்கும்னா ..  பாத்துக்குங்க.

எந்த டூட்டியை மாத்திக்கிட்டா,  சொந்த வேலையை சொகமா,  பழுதில்லாம செய்யமுடியும் என்று , " நாசா ஷட்டில் ",   அனுப்புற அளவுக்கு யோசனை செய்வோம். இதிலே ஏதும் முன் விரோதம் இருந்தா, மேல சொன்ன தகவல் தடம் இல்லாமே , இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் சாரோட "தண்ணீர், தண்ணீர்", கதை மாதிரி ஆயிடும். ஆயிடுச்சு! .ஆனால் என் நண்பரோ வழியில் எறும்பு போனால் கூட, வழி விட்டு ஒதுங்குபவர். அப்புறம்  எப்படி?. இன்னைய வரைக்கும், இதுக்கு விடைதெரியலே.

பெட்டி கிட்டி எல்லாம் க்ளோக் ரூமில் பத்திரமா இருக்கு. அதனாலே உடல் பூரா அப்பிக் கிடந்த புழுதியை மாத்திரம் தட்டிவிட்டு, குளிக்காமலே உணவருந்த வேண்டியதாயிற்று. நண்பர் " என்னுடைய டூட்டி இன்னும் முடியலே, நான் நிலையத்திற்கு செல்லுகிறேன். தெரு முனையில் பஸ் நிறுத்தம். இப்பவே இரவு மணி எட்டு. பஸ் பிடித்து, புது தில்லி ரயில் நிலையம் போய், உங்க லக்கேஜ் எடுத்துகிட்டு ஆட்டோவில் வந்து விடுங்க .",என்றார். " ஆட்டோவிற்கு எவ்வளவு கட்டணம் ஆகும் ", என்றும் சொல்லி, அலுவலகம் சென்றுவிட்டார்.

பஸ் பிடித்து, புது தில்லி ரயில் நிலையம் வந்து. சாமான்களை மீட்டுக் கொண்டு, போர்டர் துணையுடன் வெளியே வரும் போது, கிட்டத் தட்ட இரவு மணி ஒன்பதரை. வழக்கம் போல் ஆட்டோகாரர் அதிகமாய் கேட்க, பேரம் பேசி, நண்பர் சொன்ன ரூபாய்க்கு படிய வைப்பதில் கணிசமான நேரமும் ,என் கம்மிய குரலும் .

இந்த இடத்திலே, நான் அப்போ பார்த்த, புது தில்லி ரயில்வே ஸ்டேசன் வெளிப்புறம் பத்தி சொன்னா தான் ,கதையின் விஸ்தாரம்  விளங்குதல் கூடும். பாதி இருட்டு, மீதி நிழல், அழுது வடிகின்ற விளக்குகள், ரிக்சா ,ஆட்டோ ,கார் என கலைந்து   கிடக்கிற வாகனங்கள், ரத்தம் போல் விரவிக் கிடக்கிற வெற்றிலைத் துப்பல்கள் அவற்றின் வண்ண ஓவியங்கள் , கூட்டுக்கு திரும்பும் பறவைகள் போல் சத்தமாய் பேசிக் கொண்டு இருக்கின்ற துண்டு போட்ட போர்டர்கள், துண்டு பீடிகளும் என, சம்பல் கொள்ளைக் காரர்களுக்கு செட்டிங் போட்ட இடம் மாதிரி, தோற்றம் .

நிலையத்திற்கு வெளியே வரும் வாசலில் துவார பாலகர் இருப்பிடம் மாதிரி, குகை கணக்கா பாதுகாப்பு அறை.இன்னம் கொஞ்சம் மனசை தோண்டினேன் என்றால் , ஹிட்ச்காக் ரேஞ்சில் விவரிக்க முடியும் .சுருங்கச் சொன்னால் திகில் படங்களில் வரும் கிளைமாக்ஸ்   காட்சிக்கான அநேக முஸ்தீபுகளுடன்.

ஆட்டோ புறப் பட்டது .சரியாக துவார பாலகர் வாசலுக்கு வந்தவுடன், சடக் கென்று, ஆட்டோ நின்று விட்டது. ஆட்டோகாரர் என்னைப் பார்த்து " உள்ளே சுங்கத் துறை /காவல் துறை அதிகாரி உள்ளார் அவரை கவனியுங்கள் ", என்றார். நான் இறங்கவில்லை.சங்கேதமாய் குரல் கொடுத்து விட்டு, ஆட்டோவை ஓரம் கட்டி, அப்பால் போய் விட்டார்.
என் ஆட்டோவைச் சுற்றி ஒரே கூட்டம். கன பாடியாய் ஒரு காக்கி சட்டைக்காரர், அதட்டலாய் கையை நீட்டி பணம் கொடு என்றார். முடியாது .எதற்கு பணம் ?. என்றேன் 

நான் வைத்திருந்த கள்ளிப் பெட்டியை காட்டி " எத்தனை பாட்டில் உள்ளே இருக்கு?". என்றார். "எண்ணெய் பாட்டில் தான் உள்ளே இருக்கு", என்றேன் நான், அப்பாவியாய். நான் அரசாங்க ஊழியன், பயிற்சிக்காக வந்துள்ளேன் என்றேன் அவர், அதை காதிலேயே,  வாங்கிக் கொள்ளவில்லை. சுற்றியிருந்த ஆட்டோகாரர்கள் , ஆளுக்கு ஆள், ஒரு வாய் பிளக்கும் அளவு தொகை கூறினர்." தொகையை கொடுத்து விட்டு வம்பை விலைக்கு வாங்காமல் போ!", என்று புத்திமதி கூறினர். காக்கிச் சட்டை ,அந்த பெட்டியை தூக்கிக் கொண்டு அறைக்குள் வா!, என்கிறார்.

 ஏரியா விட்டு ஏரியா வந்த நாய்களுக்குள் " யார் பெரியவர் " என்ற துவந்த யுத்தம் நடக்கும். ரெண்டு பேரும் சவுண்டு விடுவாங்க . தீவிரமா முறைசுப்பாங்க   .இதில் யார் ஒருவர் நீண்ட நேரம் இமைக்காமல் முறைக்கிறாரோ   அவருக்குத் தான் வெற்றி .அந்த மாதிரி யான ஒரு சூழல்.

நான் அவ்வளவு அசடு இல்லேன்னாலும் ,கொஞ்சம் உஷாரான சின்ன வயசு கிராமத்தான். எதுவானாலும் இங்கேயே பெட்டியை, திறந்து காண்பிக்கிறேன் என்றேன். கண்கட்டி வித்தைக்காரனுக்கு ,கூட்டம் சேர்றா போல, வட்டம் கட்டி நிக்கிறாங்க, சனங்க .நேரம் பத்தைத் தொடுது. இதுவரை வேடிக்கை பார்த்த ,என்னுடைய ஆட்டோக்காரர், என்னிடம் இரண்டு டீ  குடிக்கிற அளவு காசை வாங்கி கொடுத்து நிலைமையை சரி செய்தார் .ஏறி  ஆட்டோவை முடுக்கினார். டப்பென்று ஓட்டுனரோடு கூட ஒரசி கிட்டு, இன்னொரு ஆள் ,டிரைவர் சீட்டிலே.

இப்பதான் எனக்கு கொஞ்சம் வியர்க்க ஆரம்பித்தது .தமயந்தி சுயம்வரத்திற்கு போகின்ற நளன் தேர் ஒட்டுன கதையா, வாயு வேகத்திலே, ஆட்டோ பறக்குது . நான் படித்து மறந்து போயிருந்த, திகில் கதைகள் எல்லாம் திரைப்படம் மாதிரி, என் மனக் கண்ணில்.நல்லவேளை நடு வழியில் இறங்கிக் கொண்டார், முன் சீட்டு வில்லன் .    

பின் நிலாக் காலம் . அது வரை பெரிய சாலைகளில்  ஓடிக் கொண்டிருந்த   ஆட்டோ சட்டென்று , ஆளுயர காம்பவுண்டு சுவரில் இருந்த, பெரிய இரும்பு கேட்டுக்குள் புகுந்து போக ஆரம்பித்தது. இருபக்கமும் குடை மாதிரி பெரிய மரங்கள் .ஈ காக்கா இல்லே!. அப்படியே இருந்தாலும், தெரியாத அளவுக்கு இருட்டும் நிழலும் . சட்டை தொப்பலா நனைந்து விட்டது. 

கழுத்தில் கிடந்த மைனர் செயினை எடுத்து காலுறைக்குள்   மறைக்கிறேன்.ஆட்டோ நம்பரை உள்ளங்கையில் எழுதி வைக்கிறேன் .மனசு சங்கர்லால் ,பெர்ரி மேசன் ,ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் இவங்க எல்லாம் இந்த சூழலில் எப்படி சமாளிப்பாங்க என்று யோசிக்க முற்படுது. நல்ல வேளை!. பின்னாடி வாசல் வழியா வந்து, இந்திரா புரியில் கொண்டு வந்துவிட்டார் .

" குறுக்கு வழியென்று பூஸா கேட் என்னும் இடத்தில உள்ள விவசாயக் கல்லூரியில் நுழைந்து ,மனுஷன்  என்னை, இந்திரபுரிக்கு அழைத்து வந்திருக்கிறார் " என்று, பின்னர் அறிந்தேன் .இரவு கிட்டத் தட்ட மணி 11 .அனைவரும் என்னை காணோம் என்று, வாசலில் காத்துக் கொண்டிருந்தனர்.

வெள்ளை நிலா வெளிச்சத்தில் வாரி இறைத்த வைரங்களாய் 
நட்சத்திரங்கள் ." அரண்டவன் கண்ணிற்கு இருண்டது எல்லாம் பேய்',என என்னைப் பார்த்து கண் சிமிட்டுகின்றனவோ ?.

தென்றலும் இரவும் என்னைத் தாலாட்ட, நீண்ட உறக்கத்தில் ஆழ்கிறேன் .... நிம்மதியாய்.               

       

4 கருத்துகள்:

  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.Thiaguji

    பதிலளிநீக்கு
  2. Your narration was excellent -like that of a seasoned witty writer. I am amazed to see your lucid and witty writing.
    S.Ramamurthi

    பதிலளிநீக்கு
  3. Thanks Sri.Ramamurthy Anna..what could be more pleasing than your visit..Feel blessed and greatly elated..pl do point out my lapses and continue as my revered mentor..Thanks again

    பதிலளிநீக்கு