செவ்வாய், 2 நவம்பர், 2010

சூத்திரமும் சரித்திரமும்..

சூத்திரமும் சரித்திரமும்

சகடத்தி னிரு
சக்கரம் போல்
பூஜ்யமும் ஒன்றும்
புரிந்தியங்கும் கணினி.

பூஜ்யத்தின் உபயம்,
புவிக்களித்த பாரதம்,
பூஜ்யமாயிராமல்,முதலாய்
இன்று கணினியில்,தரணியில்.

கணினியும், காமமும்
மென்பொருள் இயக்கம் .
இரண்டின் சூத்திரம்
இந்திய சரித்திரம்.

முன்னதும் பின்னதும்
நாம் முன்னோடி .
பல்கிடும் மாந்தரும்
நல்கிடும் திரவியம்
நவின்றிடும் சாட்சி

இன்றைய தலைமுறை
கண் இனி, கணினி.
கணிப்பொறி ஆற்றல்
கடல் பல கடக்கவும்,
காசு குவிக்கவும்,
கண்டெடுத்த
கடவுச் சீட்டு.

ஏழையின் சிரிப்பில்,
இறைவனைக் காண,
இந்தியர் நமக்கு.
இன்னுமோர் வாய்ப்பு.
இனிய நல் வாய்ப்பு.

செவ்வாய், 19 அக்டோபர், 2010

காலத்தை வென்ற கதை ...

காலத்தை வென்ற  கதை ...

     T.T.L.Gam என்பவரின் வாழ்க்கையை பற்றிய கதை, இது.
இவர் உலகின் மிகப்பெரும் பணக்காரரில்ஒருவர். பில் கேட்ஸ்,
அம்பானி ,மித்தல் தர வரிசையை, கிட்ட தட்ட தொட்டவர்.
உலகெங்கும், பல தொழில் மையங்களுக்கு அதிபர். சமீப 
காலமாய், அவர் தன் சொந்த ஜெட் விமானத்தை தொடுவதில்லை.
அதுக்கு பதிலா, டெலி போர்டிங் ( Teleporting ) சேவையை பயன் 
படுத்துறார்.பிரேத்யேகமான கண்ணாடி கூண்டுக்குள்ளே நின்னுகிட்டு 
ஒரு விசையை அமுக்கினா, அடுத்த நொடியிலே ஆஸ்த்ரேலியாவுக்கோ,
அமெரிக்காவுக்கோ, நினைத்த இடத்திற்கு சென்று விடுவார்.

             
இது என்னன்னு கேட்டிங்கன்னா "ஸ்டார் ட்ரேக்" ஆங்கில 
சீரியல் பாத்தவுங்களுக்கு,ஒடனே  புரியும். எல்லாம் நம்ம ஊர் 
சமாச்சாரம்தான். நம்ம சித்தர்கள் செய்தது தான். இப்பவும் கூட
இப்படி சம்பவம், நம்ம திருவண்ணாமலையில் நடந்ததாய் யு டூயுப்
( You Tube ) லே போட்டு காமிக்கிராங்கோ. இதனாலே,  நிமிடத்திற்கு 
மில்லியன் டாலர் பண்ற அவருக்கு, ஏகப்பட்ட நேரம் மிச்சம்.


                                   அப்புறம் நம்ம ஆளு, மனித ஆற்றலை சிறப்பா உபயோகிக்கணும்னு கூகுள் கூட ஒப்பந்தம் போட்டு, டிரைவர்
 இல்லாம ஓடுற  பிரயுஸ் காரை  வாங்கிப்போட்டு, எல்லா 
டிரைவரையும் பெரிய வேலைக்கு அனுப்பிட்டாரு.
நம்ப மாட்டிங்க!

இந்த டிரைவர்  ஒட்டாத டெக்னிக்கு, எங்க அய்யா  காலத்திலேயே 
வந்திடுச்சி.செம்மங்குடி என்ற கிராமத்தில் எங்களுக்கு  கொஞ்சம்
நெலம்.நெறைய வைக்கோல். அங்கேயிருந்து 15 கி. மீ. தூரத்திலே உள்ள கும்பகோணம் முனிசிபாலிடிக்கு, வைக்கோல் சப்ளை  பண்ற 
வேலை,எங்க அய்யா  எடுத்திருந்தாங்க.
  
வண்டிக்காரர், இரவில்  பார வண்டியில், வைக்கோல் பொதிகளை ஏற்றி ,
மாடுகளை அதட்டிவிட்டு ,மூக்கணையில் படுத்து உறங்குவார். பாயிண்ட்
டூ பாயிண்ட் பஸ் மாதிரி, மாடுகள் வழக்கமான டீக்கடையில் நிக்கும்.
டீ குடிச்சிட்டு, திரும்ப அதட்டினா,முனிசிபாலிட்டியில் நிக்குமுங்கோ.
அங்கே இருந்து, வைக்கோல் இறக்கிய பிறகு, குப்பைகுழியில் உள்ள உரக் கழிவை வண்டியில் ஏற்றி, அதட்டி விட்டு படுத்தால்,வண்டி  ஊர் வந்து
 சேர்ந்துடும்.நம்புங்க....
அப்பாலே இதே ஆளு, T.T.L.Gam  ,கணினி வேலைக்கெல்லாம் 'சர்வரை'
உபயோகிக்காம 'பைவ் ஸ்டார்' ஹோட்டல் முதலாளியை  உபயோகிச்சாருனா, எவ்வளவு பணக் கொழுப்பு பாருங்க.
                இன்னும் ஒரு படி மேலே போய் க்லவூட் கம்புடிங் ( Cloud Computing
பண்றேன்னு பேர்வழி, ஆபிசை எல்லாம் ஊட்டிக்கு  மேல ரொம்ப  ஒசரமான 
இடத்திற்கு மாத்திட்டாரு. அங்கேதான் நெறைய மேகம் இருக்குமின்னு.

   இப்படி தனி ஆளாவே எல்லாத்திலயும் செயிச்சவரு, எவ்வளவோ
பாடு பட்டும், ஒன்னே ஒன்னுலே மட்டும்,  தோத்திட்டாரு. அதாங்க
" ஊழல் ஒழிக்கிற இயந்திரம்" பண்ணப் போயி. இப்ப நம்ம எல்லாரையும்
ஒத்தாசைக்கு கூப்பிடறாரு.உதவறது நம்ம கடமை. இல்லையா?. யோசிங்க.
தயங்காதிங்க!
            
          இன்னம் கதை கதையாய் சொல்லலாமுங்க.அடிக்க வருவிங்க. 
அதனாலே, இத்தோட நிறுத்திக்கிறேன். அப்பறமா பாக்கலாம்... .ஆ...
மறந்திட்டேனே. இதெல்லாம் நம்ம தஞ்சாவூர் தர்மலிங்கம் கதை தானுங்கோ..

(பின் குறிப்பு :- சம்பவம் எல்லாம் உண்மை.
பெயர்தான் மாற்றப்பட்டுள்ளது)                                                                   ,

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

நிலவே நீ என்னைச் சுடாதே .3.

நிலவே நீ என்னைச் சுடாதே .3.

அயர்ந்து உன் மடியில் தலை சாய்த்து,
உலகை மறந்து உறங்க வேண்டும்.
அன்பு மகன் பிஞ்சு முகம் பார்த்து,
கை கோர்த்து கதை சொல்லவேண்டும்.

கூழானாலும் உன் கையால் குடித்து,
கூடலும் பின் ஊடலுமாய் வாழ வேண்டும்.
கணுக்காலில் மெள்ளவே கிலு கிலுக்கும்
சலங்கை சத்தம். காதருகே உன் கனல் மூச்சு ..
மூக்குத்தி வெளிச்சத்தில்...
முணுமுணுத்த கதைகள்..இன்னும் பல...
நெஞ்சில் மூட்டுதே நெருப்பு ..
பிரிவின் பெரு வேதனை... தருகுதே தவிப்பு ..
நறு முகையாளே! நம் இதயப் பிரளயங்கள் ..
இன்னும் எத்துனை நாள் .....

கை நிறைய இல்லாவிடினும்,
கடனின்றி வாழல் வேண்டும்.
கரை கடந்து, காலத்தே உன் மடியில்
கண்ணயர வேண்டும். வருவேன்.
உனைத் தேடி, விரைவில். வருந்தாதே!.
வதைக்காதே !ஒரு போதும். சொல்லால்
எனை சோர்விழக்க செய்யாதே!.
நைந்த நூலில் நெய்த துணியாய்,
கிழிந்ததே, இன்று என் மனம்.
நினைவெல்லாம் நிறைந்த என்
நிலவே, இன்று நீ எறிந்த பாணம்.

இனி ஒரு பிறவி வேண்டேன்.
பிறப்பின் பிரிவு வேண்டேன்.
கனியே !கண்மணியே! என் காதலியே!
கொஞ்சம் பொறு. எட்டத் தூரம் இல்லை. இன்னும்
கொஞ்சம் தான். நாயகியே !.
வட்டியுடன் முதலாய் வாழ்ந்திடுவோம். என்
வஞ்சிக்கொடியே! எதிர் வரும் காலம், இனி
நம் கையில். நறு முகையாளே!
நாயகனை நம்பு!.    

               
       
.

நிலவே நீ என்னைச் சுடாதே.2.

நிலவே நீ என்னைச் சுடாதே.2.

பாரமும் பல சுமையும் ஏற்றி ,
பிஞ்சிலே கூன் விழுந்த நெஞ்சு .
பிழைப்பை தேடிய பொழுது, இழந்ததோ,
பள்ளிப்படிப்பு. எந்தையும் யாயும் இழந்து,
எடுப்பார் கைப் பிள்ளையாய்,
ஏவல்கள் சுமந்தேன்.
ஏறிய சுமைகளின் பாரத்தில்,
இடுப்பொடிந்து போனேன்.

கண்களில் கனவுகளே இல்லை.
கனவென்றால் தெரியா அளவுக்கு கவலைகள்.
கனவு காணும் நேரம் கூட,
உழைக்கவேண்டிய அளவு தேவைகள்.
மூச்சு முட்ட கடன் வாங்கி, பெட்டி கட்டி ,
கப்பலேறி ,கடல் தாண்டி,முழுதுமாய்,
வட்டி கட்டவே இயலாமல், நான்
வடிக்கின்ற கண்ணீர்.

வாழ்க்கை எனும் ஊழிப் பெருவெள்ளத்தில்,
உருட்டி விடப்பட்டேன்.வழி தெரியாமல்
திக்கு முக்காடியபோது ,
திசை காட்டியவள்.நீயே !.
வாழ்க்கையை கரையேற்ற வந்த,என்
கலங்கரை விளக்கே !. 
காயமான என் மனதிற்கு,  மயிலிறகால்
தடவிய சுகமே. உன் வார்த்தைகள் தானடி.

என் நிலவே நீ என்னை சுடாதே.....

( இன்னும் கொஞ்சம் சுடும் .....)                

நிலவே நீ என்னைச் சுடாதே .1.

நிலவே நீ என்னைச் சுடாதே .1.

அங்கேயே இருங்கள்! அள்ளிச் செல்வம் குவியுங்கள் !
இங்கே ஓர் அபலை இருப்பதையே, மறந்தீர்!. என்றாள்.
அடுக்கடுக்காய் அள்ளிக் கொட்டினாள். என் அல்லிக்கொடியாள்.
அல்லலில், அங்கே அங்கலாய்க்கிறாள். என் அங்கயர்க்கண்ணி.

பாலை வெளியில் பாழும் வெய்யிலாய், பதைக்குதே என் மனம்.
பாவை அவள் சொல் பாய்ச்சியதே, இதயத்தில் இன்னுமோர் கூர் அம்பு.
எப்படிச் சொல்வேன். என் சொல்லித் தெரிய இயலா சோகங்களை.
எவருக்குப் புரிய வைப்பேன் ?.என் இதயம் வடிக்கும் இரத்தக் கண்ணீரை.

பித்தனாய் பேதலித்துப் போனதும், நித்திரை இன்றி,
நித்தமும் நடைப்பிணமாய், நான் படும் அவலங்களை,
பிரிவுகளின் பெரும் துயரில், எண்ணுகிறேன். ஏன் பிறந்தேன் ?.
பிறக்காமலே இருந்திருக்கலாம். பிறந்த அன்றே இறந்திருக்கலாம்.

( நிலவு இன்னும் சுடும் ......)

     
         

சனி, 16 அக்டோபர், 2010

மானே! மயிலே! உன் மச்சானின் மறுபக்கம் ...


மானே! மயிலே! உன் மச்சானின் மறுபக்கம் ..



அத்தியும், குறிஞ்சியும் அடுத்தடுத்து பூத்தபோதும், உன்னிடமிருந்து மடல் ஏதும் இல்லை. இன்று காலைகண் விழித்து, கதவு  திறந்தபோது, வாசலில்  பஞ்சுப் பொதிகள்.குவித்து வைக்கப்பட்ட உப்புப் படிவங்கள். எங்கும் வெண் துகள்களாய், பனிச் சிதறல்கள்.முதல்  முறையாய் நேரில் அனுபவித்த போது, நெஞ்சில் எக்காளமிட்ட மகிழ்ச்சிப் பூக்கள் ஏராளம். குழந்தை போல் ஓர் குதூகலம்.
அரும்பு  மலர்களாய், அடுக்கடுக்காய் காற்றில்பறந்து , மெள்ளவே உதிர்ந்து, மெத்தையாய், பூமியின் மேல், ஆசையாய் படிகிறது. பாலைவனத்திற்கு ஒரு  பனிப்  போர்வை. ஊடே உடைந்து , சுக்கு  நூறாகும்,  கண்ணாடிப் பனியில், பட்டுப் பிரகாசிக்கும், ஆயிரமாயிரம் கதிரவனின் கதிர்கள். சில  மணி  நேரமே யாயினும், என் சிந்தை கவர்ந்த காட்சி.
சின்ன இடை, வஞ்சிக்கொடி உன்னுடன் கூடி , ஆடி, ஓடிப் பாட, ஓர் சரியான  இடம்.கன்னங்குழிய நீ சிரிக்க,  நாம் கை கோர்த்து நடக்க வேண்டும்.

சுற்றிலும் தொடுவானம். தொட்டுக் கொள்ளும் தூரத்தில். கிட்டப் போனால் எட்டிப் போகும், மர்மம்  தெளிய வேண்டும். நம் மாயை விலகவேண்டும். பாரதிராஜாவின் கனவுக் காட்சிகள் போல்,வெண்பட்டுத் தேவதைகள் நம்மை சுற்றி  நடனமிடுவதாய், மனசில் மானசீக கற்பனை. என்ன?எனக்குபுத்தி பேதலித்து விட்டதோ?. என ஐயப்படாதே!.
ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் போல ,அலைக்கழிக்கும் ஓயாத என் எண்ணங் களின் வடிகாலே, இவை. புழுவாய் கூட்டை கிழித்து, பின் வரிசையாய், பரிணமிக்கும் வண்ணத்துப் பூச்சிகளே, இவ்வார்த்தைகள். சில சமயம் தங்கு தடையின்றி பொங்கிப்  பிரவாகம் எடுக்கிறது.
தனிமையில் இரவில் நித்திரை வேண்டி,  நிதம் தவம். இமை மூடா  இரவுகள்.
சன்னமான ஒளியில், காதில் மெள்ளவே கேட்கின்ற சங்கீதம்.கருத்தாழமிக்க கண்ணதாசனின்கவிதைகள், சுசீலா, ஜானகியின் குயிலொத்த,  குரல்களில்..

கத கதப்பாய் கம்பளி போர்வைக்குள் நான். விரிகின்ற  என் கற்பனை சிறகுகள். விவரிக்க இயலா வினோத சிந்தனைகள். ஆழ்மனத்தின்   திரையில் தொடர்பு இல்லா பல காட்சிகள்... கனவுகள்... சோகங்களும், சொர்க்கங்களும் அதில் அடக்கம்.
விடியலுக்கு சிறிது முன்னால்,களைத்துப் போன மனமும், அலுத்துப்  போன உடலுமே, உறக்கத்திற்குஅச்சாணி.
அரேபியாவில்நான்பார்த்த, அநேகரின் நிலையும் இதுவே.
பகிர்வதை பாரமாய் நினைக்காதே!
மானே! என் மயிலே! மச்சான் நான் உனக்கு எழுதுவதில் என் மனச் சுமை குறைகிறது....
( எப்போதோ, ஒரு காலையில்...பாலையில்...வருத்தும் தனிமையில்  எழுதியது.)

நன்றி : கூகுள் படங்கள்

நண்பர்க்கு கடிதம் .2.

நண்பர்க்கு கடிதம் .2.

எல்லையில்லா பாலையில்,
எல்லாம் இழந்தது,
என் மனம்.
எப்போது பெய்யும்?.
எங்ஙனம் பெய்யும்?.

உன் கடித மழை.
கருவாகி உருவாகி ,
கனத்து பொழிய வேண்டும் .
அரபிக் கடலில் சீசாவில்,நான்
அன்று இட்ட சேதி ,
இன்னுமே சேரலையா?.

அதிவேகமான கிழக்கத்தி,
காத்தில் கிசுகிசுத்தேனே ,
காதில் இன்னும் கேக்கலையா?.
தந்திக் கம்பங்களில் சங்கேதமாய்  ,
கல்லால் தட்டினேனே .
தங்கள் இதயத்தில் இன்னிசையை,
இன்னமும் மீட்டலையா?.

தத்தித் சென்ற இலைகள்,கடலில்
தவழ்ந்து வந்து சொல்லலையா?.
கொட்டும் மழையில்,
விழும் ஒரு துளிக்காக,
காத்திருக்கும் சிப்பியாய்.இன்னமும் நான் ....              

நண்பர்க்கு கடிதம்.1.

நண்பர்க்கு கடிதம்.1.
நாடு விட்டு நாடு.
நாட்பட்ட கடிதம்.
நலம்  நாடி,
தங்களின் இடம்
தேடி, ஓடி வரும்.

மன்னிப்பீர்!
மறந்தேனில்லை!
தங்களை
இன்னும், இன்றும்.

மறுபடியும்,
மடல் மூலம்,
மனக்கதவு
திறப்பீர்.

எல்லையில்லா நீரால்,பல சமயம்
தத்தளிக்கும் நம் நாடு விட்டு,
தொல்லையில்லாமல், மணல்வெளியில்,
நீர் நீந்தக் கற்றீர்.

நீரில்லா நீர் நிலையில்,
நீந்தக் கற்ற வித்தகரே.
நீரில்லாமல் நினைவில்,
நித்தமும், தவிக்கிறேன்
அன்பு நண்பனே அறிவீர்!
உடன் மடல் எறிவீர்!

வியாழன், 14 அக்டோபர், 2010

வணக்கம் .3.




நாட்டின் நாடி நரம்பெல்லாம்,தொடுகின்ற இரத்த,
நாளங்களாய்  கண்ணாடி நார்  இழைகள்,
இந்தியாவின் இதயத் துடிப்பை அதிகரிக்கும் ,
இணைய தள அதிவேக இணைப்புக்கள்.
கணக்கில்லா கணினிகள், கோடானு கோடி,
மனிதப் புள்ளிகளை, மாயாவி போல்,
நொடியில் இணைக்கின்ற, தொலை தொடர்பு.
எட்டாத முடுக்குகளில் இருக்கும் எளியோர்க்கும்,
சட்டென சடுதியில், கிட்டிடும்  தகவல் வசதி.
கட்டாயமாய் கல்வி , மருத்துவம், அரசாங்க சேவை ,
கணினி, தண்ணீர், பால், நோய் தடுப்பு என,
அடிப்படை வசதிகள் அனைத்தும்,
அனைவருக்கும் கிடைத்திட, அறிவு ,
அறிவுசார் பொருளாதாரம், இவையே,
அடுத்த தலை முறைக்கு ஆயுதமாய்,
ஆயத்தமாக்கவும், உழைப்பை மதிக்கவும்,
உற்பத்தி திறன் பெருக்கவும், திட்டம் தீட்டி,

" இணையில்லை இந்தியர்க்கு இனியும் ,
இவர் துணை வேண்டி உலகம்,இனி  அலையும்."

என்ற நிலைக்கு கொண்டு வர, பாடுபடும் ,
சாம் பிட்ரோடா வுக்கும், அவர் தம் குழுக்கும்.
 இன்னுமோர் வணக்கம்.இதயம் கனிந்த நன்றி              

செவ்வாய், 12 அக்டோபர், 2010

சிரம் தாழ்த்தி,கரம் கூப்பி பணிவான என் வணக்கங்கள் ....

வணக்கம் .1.

 
குமரி முதல் இமயம் வரை,
மற்றும் புலம் பெயர்ந்து,
புவியனைத்தும் குடியிருக்கும் இந்தியரும்,
பூவுலகில்  தலை நிமிர, தளம் அமைத்தீர்.


தன் தொலைநோக்கால்,
தரணியில் இந்தியா  தான்  நிமிர,
இன்னும் பத்தில், இருபதில்,
வளமுடன், வல்லரசாகவும் மாற,
வழி வகை தான்  நீர்   சொன்னீர்.

ஈரமில்லா உலகுக்கு   நம்மைப் பற்றி,
எடுத்தியம்ப, ஏவுகணை தந்தையாய்,
எய்தீர்! அக்னி,  எனும் அம்பினை.
பிருத்வியையும்  பெற்றெடுத்தீர்.

பொக்ரானில் புத்தர் சிரிக்க,அதிர்ச்சியில்,
புது நிலையில்  அணு உலகம்,
வல்லரசுகளின் தராசில்  எடை மாற்றம்.
வலிமை என்றும்  வம்புகளை குறைக்கும்.
தன்மானம் கூட்டி, வறுமை சுருக்குமென்றீர்.

கனவு கண்டீர். நம் நாடு நலம் பெற.
கனவு கண்டீர். நாளும் இக்கனவு நனவாக.

நாளைய   உலகம். நம் சிறார் கையில் .
நல்லதோர் உலகம். ஐயமில்லை! அவர் அமைப்பாரென,
கதை சொன்னீர். கனவுகள் பல, காணச் சொன்னீர். 
கனல் மூட்டி, கங்குதனை அவர் உள்ளத்தே எழுப்பி,

நாளெல்லாம் பாடுபடும்,
நானிலம் போற்றும்,
அய்யா அப்துல் கலாம் 
அவர்களுக்கு, நலமுடன் வாழ,
நன்றிகள் கோடி சொல்லி,
நாட்கடந்த என் வணக்கம். 
     
( "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வில்லை   .... ".  
ஒரு நகர்புற கிராமத்தானின் நாள் கடந்த நன்றி நவிலல்.
...........வணக்கங்கள் தொடரும் ...........)