சனி, 16 அக்டோபர், 2010

மானே! மயிலே! உன் மச்சானின் மறுபக்கம் ...


மானே! மயிலே! உன் மச்சானின் மறுபக்கம் ..



அத்தியும், குறிஞ்சியும் அடுத்தடுத்து பூத்தபோதும், உன்னிடமிருந்து மடல் ஏதும் இல்லை. இன்று காலைகண் விழித்து, கதவு  திறந்தபோது, வாசலில்  பஞ்சுப் பொதிகள்.குவித்து வைக்கப்பட்ட உப்புப் படிவங்கள். எங்கும் வெண் துகள்களாய், பனிச் சிதறல்கள்.முதல்  முறையாய் நேரில் அனுபவித்த போது, நெஞ்சில் எக்காளமிட்ட மகிழ்ச்சிப் பூக்கள் ஏராளம். குழந்தை போல் ஓர் குதூகலம்.
அரும்பு  மலர்களாய், அடுக்கடுக்காய் காற்றில்பறந்து , மெள்ளவே உதிர்ந்து, மெத்தையாய், பூமியின் மேல், ஆசையாய் படிகிறது. பாலைவனத்திற்கு ஒரு  பனிப்  போர்வை. ஊடே உடைந்து , சுக்கு  நூறாகும்,  கண்ணாடிப் பனியில், பட்டுப் பிரகாசிக்கும், ஆயிரமாயிரம் கதிரவனின் கதிர்கள். சில  மணி  நேரமே யாயினும், என் சிந்தை கவர்ந்த காட்சி.
சின்ன இடை, வஞ்சிக்கொடி உன்னுடன் கூடி , ஆடி, ஓடிப் பாட, ஓர் சரியான  இடம்.கன்னங்குழிய நீ சிரிக்க,  நாம் கை கோர்த்து நடக்க வேண்டும்.

சுற்றிலும் தொடுவானம். தொட்டுக் கொள்ளும் தூரத்தில். கிட்டப் போனால் எட்டிப் போகும், மர்மம்  தெளிய வேண்டும். நம் மாயை விலகவேண்டும். பாரதிராஜாவின் கனவுக் காட்சிகள் போல்,வெண்பட்டுத் தேவதைகள் நம்மை சுற்றி  நடனமிடுவதாய், மனசில் மானசீக கற்பனை. என்ன?எனக்குபுத்தி பேதலித்து விட்டதோ?. என ஐயப்படாதே!.
ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் போல ,அலைக்கழிக்கும் ஓயாத என் எண்ணங் களின் வடிகாலே, இவை. புழுவாய் கூட்டை கிழித்து, பின் வரிசையாய், பரிணமிக்கும் வண்ணத்துப் பூச்சிகளே, இவ்வார்த்தைகள். சில சமயம் தங்கு தடையின்றி பொங்கிப்  பிரவாகம் எடுக்கிறது.
தனிமையில் இரவில் நித்திரை வேண்டி,  நிதம் தவம். இமை மூடா  இரவுகள்.
சன்னமான ஒளியில், காதில் மெள்ளவே கேட்கின்ற சங்கீதம்.கருத்தாழமிக்க கண்ணதாசனின்கவிதைகள், சுசீலா, ஜானகியின் குயிலொத்த,  குரல்களில்..

கத கதப்பாய் கம்பளி போர்வைக்குள் நான். விரிகின்ற  என் கற்பனை சிறகுகள். விவரிக்க இயலா வினோத சிந்தனைகள். ஆழ்மனத்தின்   திரையில் தொடர்பு இல்லா பல காட்சிகள்... கனவுகள்... சோகங்களும், சொர்க்கங்களும் அதில் அடக்கம்.
விடியலுக்கு சிறிது முன்னால்,களைத்துப் போன மனமும், அலுத்துப்  போன உடலுமே, உறக்கத்திற்குஅச்சாணி.
அரேபியாவில்நான்பார்த்த, அநேகரின் நிலையும் இதுவே.
பகிர்வதை பாரமாய் நினைக்காதே!
மானே! என் மயிலே! மச்சான் நான் உனக்கு எழுதுவதில் என் மனச் சுமை குறைகிறது....
( எப்போதோ, ஒரு காலையில்...பாலையில்...வருத்தும் தனிமையில்  எழுதியது.)

நன்றி : கூகுள் படங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக