நாளை நலம் பெறுவோம், என இருண்டு,
நீண்ட குகைக்குள், இறுதி வெளிச்சம் தேடுகிறான்.
ஆயிரம் சூரியர்கள் அடிக் கடலில் அமிழ்ந்த பின்னர் ,
அன்னை நாட்டிற்கு திரும்ப, அவன் உத்தேசம்.
கிட்டவே தோன்றும், என்றும் எட்டவே முடியாத தொடுவானம்,
தொட்டுவிடுவோம், என நம்புகிறதே மனம்.அதுவே வாழ்க்கை.
நாட்காட்டியில் தேதி கிழித்தும், மனதில் கரிக்கோடிட்டும்.,
நரக நாட்கள் நகருகின்றன. நாடு செல்லும் நல்லநேரம் எண்ணி.
கண்ணிறைந்த மனைவி கட்டழகி காத்திருக்க,அவள்
கணுக் கால்களில் கதை சொல்லுகின்ற கிண்கிணிச் சலங்கைகள்,
இன்னும் தேயாத மெட்டி,காதளவோடிய கண்கள், காதல் கனல் மூச்சு,
என்றும், அவள் கீழ்வெட்டுப் பார்வையில், எப்போதும், அப்பப்பா!
என்னில் ஏகப்பட்ட நில நடுக்கம். எண்ணற்ற சுனாமிகள் ......
இன்னும் அலைகள் கரை நோக்கி வரும்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக