வியாழன், 30 செப்டம்பர், 2010

வீடு நோக்கி ஓடுகின்ற ......

வீடு நோக்கி ஓடுகின்ற ......
முதல் முதலில் வெள்ளை அங்கியிலே, முல்லை பல் வரிசையோடு,
முறுவல் கூட்டி, முக மலர்ச்சி காட்டினீர். மறக்க இயலா தொடக்கம். 
சென்மத் தொடர்பாய்,  அடுத்து அளவளாவிய நாட்கள். அறிவார்ந்த நட்பு.
அன்பரே! ஆகஸ்டில் விடுதலை! அறிந்தேன்.  அளவிலா மகிழ்ச்சி. 
                  
வணக்கத்துடன் வாழ்த்துகிறேன். சவுதியின் வடக்கு கோடியில் இருந்து.
வாழ்க்கையில், மீண்டும் வண்ண மயமான, நாட்களுக்கான கட்டியம்.
அந்தி நேரப் பறவையாய், சிங்காரமாய் சிறகடித்து, கூடு நோக்கி,
அன்பானவரின்  அரவணைப்பு. அதற்கான ஆலத்தி,   இனி,
விவேகமாய் காலம் கழித்து, வெற்றியுடன் வீடு நோக்கி,
வேகமாய் நாட்கள், இனி பட்டம் போல், பறந்து போகும்.
                      ( ஊர் திரும்பும் நினைவில் ..) 
    
இதய வீணைக்குள்,  இங்கிதமாய்,  இன்னிசை நாதம் தோன்றும் .
இழையோடும் மூச்சில்  இன்பத் தென்றல் உலா வரும்.
நாடி நரம்பெல்லாம், நாதசுரம் இசைக்க,
பாலை வெயில் கூட, பனி மழையாய் தோன்றும் .
புயலான உள்ளமும் ,இனி பூவாய் மாறிடும் .
கார்மேகம் கண்டு தோகை விரித்த, மயிலாய் மனம்.
கந்தா!  கடம்பா !  கார்த்திகேயா!  முருகா!  மால் மருகா ! 
இமை மூடா இரவுகள்,  இனி இல்லை அய்யா!
இனி ஆர்ப்பரித்த, அகக்கடலும் அமைதி காணும் .     
           
                  
( அருமை நண்பர்    டாக்டர். கார்த்திகேயன் அவர்கள், ஒப்பந்தம் முடிந்து,  நாடு திரும்பும் போது, அவருக்கு, அடியேன் எழுதிய மடல்)         
                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக