ஞாயிறு, 25 டிசம்பர், 2011

உயரப் பறந்த பறவைகள் ...

                                 உயரப் பறந்த பறவைகள் ... 

கணிணிப் புரட்சியால், இந்தியாவின்  இன்றைய இளைய சமூகம் உலகெங்கும் பணி புரியும் வாய்ப்புக்கள். பொருளாதார சுமையால் முதுகு ஒடிந்து, மூச்சுத் திணறிய குடும்பங்கள் வளமான வாழ்க்கையும், வாங்கும் தன்மையும் கூடி, சற்றே இளைப்பாறுகின்றன. இளைஞர் திறமையும், கல்வியும் தந்த வரம்.



 நாம் கனவில் மட்டுமே கண்ட தேசங்களிலும் , திரைப்பட காட்சிகளில் பார்த்து வியந்த நாடுகளுக்கும் , நம் குழந்தைகள் குடி பெயர்தல், சர்வ சாதாரணமாகி விட்டது . புது வீடு, வாகன வசதி என பெரும்பாலான பெற்றோரின் கனவை நனவாக்கி உள்ளனர்,

 கண்களாய் போற்றி வளர்த்த குழந்தைகள், கண்காணா இடத்தில, தொலை தூர தேசங்களில்....தூரமும், பிரிவும்.  அது தரும் பெரும் துயர்...இதயத்தில்.

செவ்வாய், 13 டிசம்பர், 2011

வாழ்க்கைக் கோலங்கள் புள்ளி .8

நாளைய தலைமுறை ....நமது செல்வங்கள்.


வாழ்க்கைக் கோலங்களின் எதார்த்த நாயகர்களாகிய முகுந்தனும் வசந்தனும் தங்களின் குழந்தைகளின் எதிர் காலம் பற்றி கவலை அடையத் தொடங்கினர் .பள்ளியை பாதியில் விட்ட முகுந்தனும், முதுகலை பட்டம் பெற்ற வசந்தனுக்குமே தத்தம் சிறார்களை வளர்க்கும் விதம் சரியா ? என்ற ஐயப்பாடு.
வழக்கம் போல் தம் ஐயம் தெளிய, தங்கள் ஆசிரியர் திரு. கல்யாணராமனைத் தேடித் போயினர். கால ஓட்டத்தில் கல்யாணராமன் முதுமையின், மூத்த நிலையில் இருந்தார்.
            பழைய மாணாக்கர்களின் வருகையில் மனம் மகிழ்ந்தார்.நெடிது நேரம் அளவளாவிய பின், ஆசிரியர் கல்யாணராமன், "வெகு வேகமாய் வளர்ந்து வரும் நவீன உலகில் பெற்றோர் குழந்தைகளியிடையேயான தலைமுறை இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது..ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனிப்பட்ட மலர் போல்.. ..இடம்,பொருள், வசதி,கல்விக்கான வாய்ப்பு, வளரும் சமுதாய சூழல், பெற்றோர்களின்  ஈடுபாடு,பள்ளியின்  தரம், ஆசிரியர் என பன்முக பங்களிப்பில்இம்மலர்  பரிணமிக்கிறது.மாதா,பிதா, குரு என்ற தத்துவம், குழந்தை வளர்ப்பின் கால கட்டங்களே.
                  "குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பதா? சுதந்திரம் கொடுத்து வளர்ப்பதா ?"எனபது தொன்று தொட்டே எழுப்பப்படும் கேள்வி.சரியான முடிவு சொல்ல இயலா  தர்க்கம். பாமரர் படித்தோர் என பெற்றோர் பலதரப்பட்டவர். "எது சரி? ", என எப்படி முடிவு செய்ய இயலும்?.இதற்க்கு சரியான தீர்வு எது?.
 காலம் காலமாய் எல்லோரும் கேட்டு  வரும் இக்  கேள்விக்கு விடை என்ன என்ற விவாதம், ஒரு முறை பன்னாட்டு அறிஞருக்கு இடையே நடந்ததாம். அந்த பட்டி மன்றத்தின் இறுதித் தீர்வு "உன் தந்தை,தாய் உன்னை எவ்வாறு வளர்த்தனர் என்பதை முதலில், நீ  புரிந்து கொள்.அதில் உள்ள நிறைகளை ஏற்று,குறை என்று கருதுபவற்றை  களைந்தாலே, உன்னை விட உன் குழந்தைகளை நிறைவாய் வளர்க்கலாம் "என்பதே.
"குழந்தை வளர்ப்பில் நம் தாய் தந்தையே நமக்கு முன்னோடி,மேலும் குழந்தைகள் பெற்றோர்களுடன் தம் எண்ணங்களை சுதந்திரமாய்  பகிர்ந்து கொள்ளும் அளவு தோழமையுடன் வளருங்கள் ",என முடித்தார் ஆசிரியப் பெரு மகன்.
நன்றி : கூகுள் படங்கள்             

சனி, 19 பிப்ரவரி, 2011

கருவேல மரமும் ..கரும்பும்


கருவேலம் சிரிக்க, கண் கலங்கும் கரும்பு. 

கரும்பை பார்த்து கருவேலம் சிரிக்குது
















சீமைக் கருவேலம்
சீந்துவோர் இல்லையென்றார்.
உண்ணத் தித்திக்கும் கரும்பு
ஊருக்கெல்லாம் சுவை என்றார்.
















ஊருக்கு உலையான நான்
உழவனுக்குப் பணம் ஆனேன்.
ஊருக்கு சுவையானாலும்,
உழவனுக்கு சுமையானாய்!.நீ.

கண் கலங்குது கரும்பு. 
கருவேலம் சிரிக்குது.

(ஒரு டன் கரும்பு விலை  ரூ .1940-  ஒரு டன் சீமைக் கருவேல விறகு விலை ரூ3000- என்கிறது  தினமலர் நாளேட்டின் 17/02/2011  தேதியிட்ட செய்தி ) 

நன்றி : தினமலர்,கூகுள் படங்கள்.


வாழ்க்கைக் கோலங்கள் புள்ளி . 7.

புன்னகை மந்திரம் .

" நாளொன்று போனால் பொழுது ஒன்று போகும்", என நித்தியச்சிக்கல்களும், கவலைகளும் உடலையும் மனதையும் சோர்வடையச் செய்கின்றன."மோப்பக் குழையும் அனிச்சம் போல் ",நம் மன உளைச்சல், குடும்பம், சுற்றம், என தொடர்ந்து,வாழ்வில் தேக்கத்தை தருகிறது .அன்றாட சிலவுகள், அச்சுறுத்தும் பில்கள்,கல்வி கட்டணம், மருத்துவ சிலவுகள் என மலைக்க வைக்கின்ற தேவைகள்.இதைப்பற்றிய நம் கவலைகள் இதன் தீர்ப்பு ஆகாது. மாற்றாக,இக் கவலைகள் நம் செயல்பாட்டை முடக்கி, முன்னேற்றங்களுக்கு பல சமயம்,முட்டுக் கட்டை ஆகி விடுகிறது.

என்ன செய்யலாம் ?.எப்படி நம் சூழலை மாற்றலாம்?.

முகுந்தனும், வசந்தனும் அவர்களின் வாழ்வில்  இந்த  பாதிப்புக்களை, தம் மதிப்பு மிக்க ஆசிரியர் திரு.கல்யாணராமன் அவர்களிடம் இயம்பினர். ஆசிரியர் ஒரு சிறு புன்னகையுடன் "உங்கள் வாழ்க்கைக் கோலத்தின் மையப் புள்ளியான நீங்கள், முதலில் உங்களையே பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்",நீங்கள் கடந்து வந்த பாதைகளில் பெற்ற வெற்றிகள், இறையருளால் உங்களுக்கு கிடைத்து இருக்கின்ற உடல் ஆரோக்கியம், மனைவி, மக்கள் ஆகிய நல்லனவற்றில் மன நிறைவு பெறுங்கள்.மனதில் உற்சாகமும், சந்தோஷமும் பெறுவதை உணர்வீர்கள். ஒரு "டானிக்", குடித்த தெம்பு வரும்.

ஆரோக்கியமான சிந்தனைகள் உங்கள் மனம், உடல், உணர்வு, சக்தி எனும் கேந்திரங்களை ஒரு முகப்படுத்தி, மேலும் திறமை உள்ளவராய் உங்களை மிளிரச் செய்யும்.கவலை, கோபம், கண்ணீர், மன உளைச்சல் போன்ற எதிர் மறையான எண்ணங்கள் நம் உடலையும் மனதையும் குன்றச்செய்யும்.




நல்லது,கெட்டது என்பது பெரும்பாலும் நம் கண்ணோட்டத்தை பொறுத்தே உள்ளது. கெட்டதை சந்தித்தாலும், இதில் இருந்து மீண்டதை, வாழ்க்கையில் பாடம் கற்றதாய் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் பெறவேண்டும்.
அப்புறம் மனைவி,குழந்தை,சுற்றம், நட்பு, என எல்லோரையும் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.தொன்று தொட்டு, ஒரு மந்திரம் இருக்கு.சிலவே கிடையாது. மனசு வச்சா உடனே செய்யலாம். புன்னகை எனும் பெரும்ந்திரம் தான், அது .என்றார் ஆசிரியர்.
பாராட்டுக்களை எக்காரணம் கொண்டும் ஒத்திப் போடாதிங்க. ஆறின கஞ்சி,பழம் கஞ்சிங்க. எந்த நல்ல செயலையும் அப்போதே, அந்தக் கணமே பாராட்டுங்கள்.அலைபேசி, குறுந்தகவல், மின்னஞ்சல், இணையதளம் என்று காலத்தையும் தூரத்தையும் குறைக்கிற சாதனமெல்லாம் இதற்கு நல்லா பயன் படுத்தலாமுங்க. இது பெரிய ஆக்க சக்திங்க.அம்புடுதேன். சொல்லிப்புட்டேன்.
"பாராட்டு ஒருவரின் மூளையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது", என்ற ஆராய்ச்சியில் உடலிலும் மனதிலும்,உன்னதமான செயல்பாடுகளை உருவாக்குவதை கண்டறிந்துள்ளார்கள்.












எதிர்மறை எண்ணங்கள்.                                                 பாராட்டுக்கள்

"வெற்றி பெற்றவர், புத்திசாலி", என்று நம்மை உலகம் நினைக்க வேண்டும் என கருதுவது, நம் அனைவரின்இயல்புங்க.நம்புங்க!

பாராட்டுக்களும்,புன்னகை மந்திரங்களும், இதை சாதிக்கும்.

சுருங்கச் சொன்னால் பாராட்டுக்கள் மகிழ்ச்சி,மன நிறைவு,வெற்றி என்ற பாதையை நோக்கி இட்டுச் செல்கிறது. விசாலமான மனம்,விரிசல் இல்லா வாழ்க்கை,விரிகின்ற உலகம் என்பது,இதன் அடுத்த படிங்க.என்ன இல்லை என்பதை விட,"என்னவெல்லாம் நாம் பெற்று இருக்கிறோம்" என்ற மன நிறைவு, வெற்றி என்னும் ஆற்றில் சீக்கிரம் கரை ஏற உதவும். மனதாரப் பாராட்டுங்கள்.மனம் விட்டுச் சிரிக்கப் பழகுங்கள். வாய் விட்டு சிரிச்சா,நோய் விட்டுப்போகும். "புன்னகைகளால ஆகாததொன்றும் இல்லைங்க".நேற்றைய விட இன்று,  இன்றை விட நாளை, என நல்லதாய் நம் உலகம் விரியும்...
சரி தானுங்களா!.
         
நன்றி : கூகுள் படங்கள்                             

புதன், 16 பிப்ரவரி, 2011

கொய்தலும்..நெய்தலும்.. இன்றி .


கொய்தலும்..நெய்தலும்.. இன்றி . 


 











கரிசல் மண் வயலில் 
கருவேல மர வரப்பில் 
வெற்றுடம்பு விவசாயி
இற்றுப் போன வேட்டியுடன்.

வெள்ளைப்  பந்துகளாய்
வெடித்த பருத்திகள்
வீசும் காற்றில் 
விதவைக் கோலத்தில்.

தறிக்குப் போகாமல் 
தறி கெட்டுப் பறக்கும்.

கொய்யாத பருத்தி,இன்று  
கொலைகாரன் ஆயிற்று.



கடன் தந்த நெருக்கலில் 
கழுத்திலிட்ட சுருக்கால்.   


நன்றி :கூகுள் படங்கள்          

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

சினமென்னும்.....

சினமென்னும்.....



ஆங்காரத்தில்
அமில வார்த்தைகளைக்
கொட்டிய பொழுது,
கொஞ்சம் கொஞ்சமாய்
உறவின் வேரில்
உயிர் பிரிந்து போனது.



நன்றி :கூகுள் படங்கள்    

புதன், 9 பிப்ரவரி, 2011

வாழ்க்கைக் கோலங்கள் புள்ளி.,,6.

நம் பந்தங்களும், பயன் பாடும் ( Networking ).
பல சமயங்களில் நம் அனைவரின் வாழ்க்கையிலும் நிறைய திருப்பங்கள், நம்முடன் தொடர்புள்ள நபர்களால் ஏற்படுகிறது. இந்த பந்தங்களைப் பரஸ்பரம் பலப்படுத்திக் கொண்டால், எடுத்த காரியங்களில் வெற்றி அடையவும்,நம் குறிக்கோள் களை எளிதே எட்டவும் இயலும்.

























உதாரணமாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு நபர்களைத் தெரிந்தெடுக்கும் போது பல வழிமுறைகளை பின்பற்று கிறார்கள்.எழுத்துத் தேர்வு,பின் நேர்காணல்,கலந்து உரையாடல் போன்ற, பல தகுதிகளும் ஆளுமைத்திறனும் சோதிக்கப் படுகின்றன.வேலைக்கான விளம்பரங்கள் செய்தித் தாள்கள், வானொலி, தொலைகாட்சி, வேலை வாய்ப்பு அலுவலகம், ஆன்லைன்( Internet ) மூலம் அறிவிக்கின்றனர்.
உலகில் இது மாதிரி அறிவிக்கப்படும் வேலையின் அளவு ஐம்பது விழுக்காடு என்றால்,மீதி ஐம்பது விழுக்காடு அளவு வேலைகள் தெரிந்தவர், தொடர்புகள், சிபாரிசுகள் மூலம் நிரப்பப் படுகின்றன என்றால் மிகையில்லை.மற்ற வழிகளைக் காட்டிலும் இவ்வாறு தேர்வு செய்யப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் சுமார் 42 மடங்கு அதிகம்என்பது வல்லுனர்களின் ஆய்வு. இதை எப்படி தமக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்பதே இக் கட்டுரையின் நோக்கம்.
நவீன உலகில்இணையதளம், தொலைதொடர்பு போன்ற சாதனங்களின் அபார பயன்பட்டால் நம்பந்தங்களின் உறவை பலப்பத்திக் கொள்ளுதல் சுலபம்.மின் அஞ்சல், குறுந் தகவல், இணையதளம்,முக நூல் ( Facebook, Twitter, Linked-In, Brijj )  என பலவழிகளில், நம் தொடர்புகளை பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளலாம்.
"எங்கே போகிறோம் ?." , "என்னவாகப்போகிறோம்?." என்பதை சிந்தித்து தெளிந்தால் புலப் படாத வழிகளோ, தெரியாத பாதைகளோ கிடையாது. சரியான தொடர்புகள் நம்மை வழி காட்டி, சுலபமாய் குறிக்கோள் நோக்கி இட்டுச் செல்லும்.
பெரும் நிறுவனங்கள் தம்மிடம் பணிபுரிவோரை தக்க வைத்துக் கொள்ள, பணி விலகும் விகிதத்தை குறைக்க (Attrition Rate)  இணக்கமான அலுவலக சூழல், ஊக்கத் தொகை, உல்லாசப் பயணங்கள் என ஏற்பாடு செய்கின்றனர்.இது தவிர, தம் பணியாளர்கள் சிபாரிசு செய்பவர்க்கு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை (Referrals)  தருகின்றனர்.
நீங்க சொல்றது எல்லாம் சரிங்க...எப்படி நம் தொடர்புகளை உண்டாக்கிக் கொள்வது....

நீங்க..யோசிக்கறது புரியுது...

   சம்பந்தப் பட்ட வேலை பற்றிய விஷயங்களை, இது பற்றிய விஷய ஞானங்கள் உள்ளவர், எல்லோரிடமும் கேளுங்கள். இதில் தயக்கமோ,சோர்வோ அடையாதீர்கள். நல்ல நட்பு வட்டாரத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.அறிமுகம் இல்லை யெனினும், வலிய சென்று தொடர்புகளை சந்திக்கவும். பின் பரஸ்பரம் உறவுகளை பேணி பலப்படுத்திக் கொள்ளல் அவசியம். இதன் வாயிலாய் புதிய வேலை வாய்ப்புக்கள், வணிகத் தொடர்புகள்,உணர்வு பூர்வமான ஆதரவு (Emotional Support), உபயோகமான சிந்தனைகள் போன்ற பல ஆக்கப் பூர்வமான அதிசயங்களின் சாத்தியம் இருப்பது புலப் படும்.
                உதாரணத்திற்கு,  நீங்கள் ஒரு சிறு வணிகராயின் வாடிக்கையாளர், உற்பத்தியாளர், உங்களுடைய தொழில் முறை சக வணிகர்கள், உங்கள் கணக்கு வழக்குகளைப் பார்ப்போர், வங்கி அதிகாரிகள், நண்பர்கள், தொழில் விற்பன்னர்கள் ,என்ற தொடர்புகளை மேம்படுத்தி பரஸ்பரம் வெகுவாய் முன்னேற இயலும்.
" கோடு போட்டா ரோடு போடும் ", இந்தக் காலத்தில் கோடி காட்டினாலே போதும், என நினைக்கிறன்.

 சரி இதையெல்லாம்," ஏன் அய்யா நீ சொல்றேன்னு கேட்கலாம்"....

       என் சொந்த வாழ்க்கையில் பலமுறை, நான் சந்தித்த தொடர்புகள், உறவுகள், சொந்த பந்தங்கள் மூலம் சாதித்த காரியங்களும், முன்னேற்றமும் என்னை இதை எழுதத் தூண்டுகிறது.என் குழந்தைகளும் பல வகையில் சிறப்படையவும், நாங்களும் பலருக்கு உதவவும், ஏதுவாக அமைந்தது.
இந்த தொடர்புகள் ( Networking ) யாவும் பரஸ்பரம் அன்பு, நம்பிக்கை, அக்கறை, மரியாதை என்ற அஸ்திவாரத்தில் அமைய வேண்டும் என்பது மிக மிக முக்கியங்க..இந்த உறவுகள் எல்லாம் இருவழி பாதையாக அமைத்துக் கொள்ளுவது உத்தமம்.
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைங்க. உறவுக்கு கை கொடுக்கலாங்க..பழகிப் பாக்கலாம்.. வாங்க... பிடிக்கிறாமாதிரி பழகிக்கலாம் .பயன் பெறலாங்க.....
நன்றிங்க..
நன்றி : கூகுள் படங்கள்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

வறுமையும் ..வெறுமையும்.

வறுமையும் ..வெறுமையும்.

















கனவுதான் எனது 
 நனவானது மகனால்.
வான் முட்டும் கட்டிடடம், 
வளமிக்க நாடு. 
அளவில்லா செல்வம், 
அமெரிக்க தேசம்.



வாய்ப்புக்கள் தேடி, 
வானத்தில் பறந்து, 
கூடு விட்டுப் போயின, 
குஞ்சுப் பறவைகள்.

கால பைரவரின்
கணக்கேடுகள் புரண்டதால் 
மூச்சில் முனகலும் 
முழங்காலில்   ஆயாசமும்.

பிள்ளைகளின் வளமையால் 
பணமிலை எனும் நிலை மாறி 
வறுமையை வென்றிட்டேன்..இன்று
வெறுமையை வாங்கியதால்..... 
     
நன்றி :கூகுள் படங்கள்.

  

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

வாழ்க்கைக் கோலங்கள் புள்ளி.5.


மகளிர் மேம்பாடு . 


Group Farming
வாழ்க்கையில் மையப் புள்ளியாய் இருக்கும்,அனைவருக்கும் வாழ்நாள் முழுதும் தோள் கொடுப்பது, அவரவர் மனைவியரே. மற்ற எல்லா பந்தங்களும், ரயிலில் சக பயணிகள் போல் விலகிப் போக, இடுகாடு போகும் வரை இற்றுப் போகாத உறவு இதுவே. நம் இல்லறம், நல்லறம் ஆவதும், செழித்து ஓங்குவதும், இவர்கள் கையில் தான்.பெண்கள் தாரமாய், தாயாய், குழந்தைகளுக்கு ஆசானாய், அனைத்துமாய் பல அவதாரம் தரிக்கின்றனர்.

குடும்பத்தில். இப் பெண்டிரை சமையல் கட்டுக்குள்ளேயே முடக்கி விடாமல்,அவர்களின் திறமையை சரியான முறையில் மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பும், ஊக்கமும் அளித்தால் ( Empowerment ) அதுவே நாம், நம் வீட்டிற்க்கும், நாட்டிற்க்கும் செய்யும் அரும் பணியாகும்.", என்றார் ஆசிரியர்.

முகுந்தன் ஒப்பந்தக்காரராய் தொழில் செய்ய, எட்டாம் வகுப்பு வரை படித்த அவர் மனைவி, மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராகி, தையல் தொழில் கற்றும் வருமானத்தை பெருக்கிக் கொண்டார்.சுத்தம், சுகாதாரம் பற்றிய ழிப்புணர்வும் மற்றும் சமூகம், பொருளாதாரம், அடிப்படைத் தேவைகள் பற்றிய அவசியமான அறிவை வளர்த்துக் கொண்டார்.மேலும் தன்னை முன்னேற்றிக் கொள்ள,பள்ளி இறுதித் தேர்வையும், தனிப்பட்டமுறையில் படித்து எழுதத் தலைப்பட்டார்.

வசந்தனின் துணைவியார், இளநிலைப் பட்டதாரி.இவரும் தம் கணவரின் ஒத்துழைப்போடு, தன்னுடைய நீண்ட நாள் கனவான ஒரு குழந்தைகளுக்கான பராமரிப்பகம்(Day Care Center) ஒன்றை நகரத்தில் துவக்கி, பயனுள்ள வகையில் தன் நேரத்தை செலவிட்டு வருமானத்தையும் பெருக்கிக் கொண்டார்.அக்கம், பக்கம் வேலைக்கு செல்லும் பெற்றோர் எண்ணிக்கை கூடவும், இன்னும் சிலபெண்களுக்கு வேலை வாய்ப்பை அளித்தார்.




முகுந்தனும், வசந்தனும் மனைவியருடன் பேசி,மாதாந்திர குடும்ப வரவு சிலவிற்கான தொகையை கொடுத்து தங்களை நச்சரிப்பிலிருந்து காப்பாற்றிக் கொண்டனர்.

மேலும் ஆசிரியர் திரு.கல்யாணராமன் அவர்கள் "ஆண்,பெண் என குழந்தைகளை வித்தியாசம் பாராமல், இயன்றவரை உயர் கல்வி புகட்டவும், என அறிவுறுத்தினார்.

"ஈசனும் தன் உடலில் இடப் பக்கம் தந்து,பெண்மையைப் பேணி அர்த்த நாரீஸ்வரனாய் உள்ளார்" என்றார் ஆசிரியப் பெருமானார்.

நன்றி :கூகுள் படங்கள்.

சனி, 29 ஜனவரி, 2011

ஷிர்டி பகவான் பாபா தரிசனம்

ஷிர்டி பகவான் பாபா  தரிசனம்






   
மும்பை 'நெருல்' இல் இருந்து டிசம்பர் 20-ம் தேதி புறப்பட்டோம்."தாதர்", போகும் வழியில் "குர்லா", ரயில் நிலையத்தில் இறங்கிய ஜனத் திரளில், என் மூக்குக் கண்ணாடி எகிறி பறந்து போனது. பிளாட்பாரத்தில் விழுந்த கண்ணாடி மிதிபட்டு நூறாகிப் போனது.கண்ணிருந்தும் கண்ணாடியில்லாமல் அரைக் குருடன் ஆனேன். மேலும் மாற்றுக் கண்ணாடி பத்திரமாய் சென்னையிலே இருப்பது பொறி தட்ட, கண்ணில் கம்பளிப் பூச்சிகள் அப்போதே ஊர ஆரம்பித்தது.

இரவு 10 மணிக்கு ரயில் ஏறி ஷிர்டியை மறுநாள் அதிகாலை 0430மணிக்கு சென்றடைந்தோம். ஸ்ரீ சாய் பகவானுக்கான முதல் ஆரத்தி நேரம் அது."மிஸ்",பண்ணி விட்டோம்.நேராக ஹோட்டல் சென்று குளித்து விட்டு 0630 க்கு வரிசையில் நின்று 0730 மணிக்கு பகவான் தரிசனம் முடித்தோம்.


  


அங்கிருந்து நாசிக் வழியாக "திரும்பகேஷ்வர்",சிவாலயம் சென்றோம். இது ஜ்யோதிர்லிங்க ஸ்தலத்தில் ஒன்றாகும். பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் என மும்முகம்கொண்டவராய் பிரதிஷ்டை ஆகியுள்ளார்.கோதாவரி நதி உற்பத்தியாகும் இடத்தில் பிரம்மகிரி மலையடி வாரத்தில் அமைந்துள்ள திருத்தலம் இது.பக்தர்கள் கூட்டம்அலை மோதியது. கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம், வரிசையில் நின்று சிவ தரிசனம் செய்தோம்.














பின்னர் நாசிக் திரும்பிய போது,சாயம் காலம் நான்கு மணியாகி விட்டது. அங்கு ஸ்ரீராமன் சீதை, லக்ஷ்மணன் கூட சில காலம் வசித்ததாகவும், இராவணன், சீதா பிராட்டியை இங்கிருந்து தான், இலங்கைக்கு கடத்தியதாகவும், புராணம்.

மீண்டும் மற்றவை அடுத்த பகிர்வில்..

நன்றி: கூகுள் படங்கள்.
                                        

செவ்வாய், 25 ஜனவரி, 2011

மும்பைப் பயணம்

மும்பைப் பயணம்

ஒதுக்கப் பட்ட விடுமுறை நாட்களை எங்களுடன் கழித்த பேரன்,   பேத்தியை பாட்டி வீட்டில் கொண்டு விட மும்பை புறப்பட்டோம். 


டிசம்பர் 13 ம் தேதி இரவு ரயில் ஏறி, தேதி அதிகாலை 03 -30 மணிக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்-ல் இறங்கி, புறநகர் ரயில் பிடித்து 'நெருல்' போன போது நேரம் காலை 06-00  மணி. 

ரயிலில், சக  பிரயாணியாய் ஒரு   எலியாரும் கூடவே பயணிக்க, அனைவர் கவனமும் சோற்று மூட்டையில் தான். பஜ்ஜியில் இருந்து பனை நுங்கு வரை சாப்பிடகிடைத்தது.காப்பி, டீ என்ற பெயரில் அளவு குறைந்த, தரமில்லாத பானகங்களும் கிடைத்தன.வழக்கம் போல் சினேகிதத்தில்,நெருங்கி குசலம் விசாரித்து பெயர் கேட்காமல் பிரிந்து போனோம்.


"மும்பையில் ஆறு நாட்கள் தங்கியதில் "பாலாஜி மந்திர்",மற்றும்  வாஷியில்,"இன் ஒர்பிட்",என்ற அங்காடிக்கு சென்றது தவிர, வீட்டிலேயே முடக்கம்.அந்த வருடத்தின் குறைந்த குளிரை மும்பை எட்டியதை, பத்திரிக்கைகள் சொல்ல என் சுவாசப் பைகளில் அதன் ரீங்காரம் கேட்டதும்,ஒரு காரணம். பேரன், பேத்தியை மும்பை கோதரிகளுடன் விட்டு தம்பதி சமேதராய்,நீண்ட நாள் ஆவலாய் காத்திருந்த ஷீரடிக்கு,ஸ்ரீசாய் பகவானின் திருவடி தரிசனத்திற்குசென்றோம்.                



அடுத்த பகிர்வில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் .இப்போதைக்கு என் வணக்கம் .

புதன், 5 ஜனவரி, 2011

விடுமுறைப் பயணம்..1

விடுமுறைப் பயணம்..1

துள்ளும் சிறார்க்கு
பள்ளி விடுமுறை.
பேரன் பேத்தியோடு 
பெரும் ரயில் பயணம். 

செண்பகம் அம்மாச்சி 
சென்னையில் ...
பிரேமா பாட்டி 
பம்பாயில் ...




தற்போதைய
தலைமுறை
தாத்தா பாட்டிகளின்
தலையாய வேலை ,இது 
தாங்கிப் பிடிக்கும் வேர்களாய் ..




ஓடி ஓடி உழைத்து, 
ஒய்ந்து போன, எமக்கு 
வாழ்க்கையில் காண 
விடுபட்ட தலங்களை,
வழிபாட்டு இடங்களை,
வலம் வரவும் ,வணங்கிடவும் 
வந்ததோர் வாய்ப்பு.

      

காதல் மனம்...

காதல் மனம்













 
உள் வாங்கும் மூச்சில் என்
உயிர் விரியும்.
உன் உள்நோக்கிப் பார்க்க
என் மனம் விழையும் .

கண்கள் ஊடுருவும், உன் 
கடல் ஆழத் தேடலில், 
இதயம் திறந்து, 
இன்னும் ஆழமாய்

முத்துக் குளிக்கும்.எனக்கு 
பித்துப் பிடிக்கும் ....காதலால்!