செவ்வாய், 16 நவம்பர், 2010

பட்டணமான என் பட்டிக்காடு....1.

பட்டணமான என் பட்டிக்காடு

திரியிட்ட சிம்னி விளக்கின்,
தீ நாக்கு மறைய 
திரி தெரியாக் குழல் விளக்கின்
மின் வெளிச்சம். இங்கு.

குடம் நீர் எடுக்க, பல கல் 
கால் கடுக்க, கடந்தது எண்ணி 
கொட்டும் குடி நீர், இன்று  
குழாய் மூலம் சிரிக்கும்.

விறகடுப்பும், கும்முட்டியும்
ஊது குழலும், பனை விசிறியும் 
உத்தரத்தில் படிந்த 
ஊர்ப்  பட்ட கரித் துகளும் 
உறிச்சட்டியும், தயிர் மத்தும் 
ஊரெங்கும் காணாமல் போக 
எரிவாய்வில் விசிலடித்து 
என்னைப் பாரீர் !
எனக்  குரல் கொடுத்து,
உலை பொங்கி 
உணவாகும். அதிசயம்!.
சமையலறையில் பெண்களின் 
சீவன் குறைந்த சுவாசப் பைகளில்
சீராய்த் தவழும் மூச்சுக் காற்று.


இரவில், இருட்டில், புதரின் மறைவில் 
ஒதுங்குதல் போய்,
இயற்கையின் உந்துதலுக்கு  
இல்லத்தில் கழிவறை.
சகட வண்டிகள், அச்சிறுத்துப்  போக
சடுதியில் செல்ல ஊரெங்கும் ஊர்திகள்.
கணப் பொழுதில் குசலங்கள், 
கடல் கடந்த சொந்தங்களோடும்,
அளவில்லாப் பேச்சு   
அலை தொலைபேசிகளால்.
அழகிகளின் ஆட்டம்,  பின் பாட்டு என
அனைத்துலக நிகழ்சிகளும்
வான்வெளி விரைந்து 
வண்ணத் திரையில் 
விழி செவி நிரப்பும்.

வளர் சிதை மாற்றங்களில் 
பட்டணமாயிற்று. இன்று என்
பட்டிக்காடு.       
                        

6 கருத்துகள்:

  1. "வளர்- சிதை மாற்றம்" நல்ல சரியான வார்த்தை. தேர்ந்த எழுத்து. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஊக்கம் அளிக்கும் தங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  3. நல்ல பொருளுள்ள கவிதை.. அங்கங்கு சில ஸ்பெல்லிங் தவறாக உள்ளது அதையும் திருத்துங்கள்

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும்,சுட்டிக் காட்டியமைக்கும் நன்றிங்க L.K. தங்கள் கவிச் சோலையிலும் சற்றே இளைப்பாறினேன்.

    பதிலளிநீக்கு