வியாழன், 25 நவம்பர், 2010

மனமென்னும் மாயக் குகையில் ...

மனமென்னும் மாயக் குகையில் ...

கருப்புக் கட்டமிட்ட, கம்பிச் சன்னல்களுக்கு வெளியே பாதாம் மர  இலைகள் பச்சையும், பழுப்புமாய் காலைக் காற்றில் அசைய, சாய்ந்து தொங்குகின்ற தென்னை மர ஓலைகள் சல சலக்க,  கப்பும் கிளை யுமாய் மாமரத்தின் இலைகள், இவற்றின் ஊடே கண்ணாமூச்சி ஆடி, எட்டிப் பார்க்கின்ற கதிரோனின் கதிர்கள்.கருவுற்ற கார்மேகம் கலைந்து, பிரசவித்த பெரு மழையில், புது ஆடை அணிந்தது போல் பூமி.

சாய்வு நாற்காலியில் சற்றே நான் கண்ணயர,மனத் தூளியில் உறங்குகின்ற நினைவு சிணுங்குகிறது."கிட்ட வா", "எட்டிப் பார்", தாலாட்டு", "என்னைத் தொட்டுத் தூக்கு", என.

நினைவலைகள் காலமெனும், கடலில் பின்னோக்கி தவழ்ந்து, மெள்ளவே ஆழ்கடலில்அமைதியாய். உள்நோக்கி, மன மென்னும் குகையில்,அதன் நீண்டு அடர்ந்த பாதையில், புதைந்த பல நினைவுகள்.நல்லதும், பொல்லாததும், அல்லாததும், பிறர்  அறியாததும் என, துணியின்றி  அலைகின்ற  சில நிர்வாண  உண்மை கள். துணிவின்றி, வெளியில் சொல்ல இயலா நினைவுகள். அச்சங்கள், அடிபட்ட காயங்கள், அவற்றின்  வடுக்கள், ஆழ் மனதில் தறி கெட்டு தாறு மாறாய். புதைந்த புதையல் போல் தோண்டிப் பார்க்க ஆவலும்,அச்சமுமாய்.

வெளியுலக கோட்பாட்டின் வேஷங்களை வெறுத்து,வெளிப்படுத்த விரும்பா, விவரிக்க இயலா உணர்வுகள். உண்மை களை தோல் உரித்துப் பார்த்து,அவற்றின் விகாரங்களில் வெம்புகிற மனசு. இருட் குகையில் பூட்டிய எண்ணற்ற அறைகள். இரவில்,கனவில் இவற்றின் கதவுகள் திறந்து கொள்கின்றனவோ, என்ற அச்சம். காலச் சுவட்டின் அடிகளில் பட்ட வீழ்ச்சிகளும்,எழுச்சிகளும், இடையே எண்ணற்ற வெற்றிடங்களும்.

பழ மரத்தில் வௌவால் போல் ,ஒலி கேட்டவுடன்  பறந்து மன அலைகளை எழுப்பி மறுபடியும் அமர்கிறது.  எழுப்பிய அலைகள் ஏற்ப்படுத்தும் அதிர்வுகள், மனதின்  கால யந்திரத்தை முடுக்க, அரசல், புரசலான பிம்பங்கள் புகைபோல் விரிகிறது,திரைப் படமாய் பூட்டி யிருந்த காட்சிகள்.ஆசை, அவலம், அச்சம், அதீதம்  என காட்சிக்கு காட்சி, இப் புள்ளிகள் வெளிச்சம் பெற்று, விறு விறுப்பாய், திரை யரங்கில் தோன்றும், வண்ணக் கலவையாய்.

சில சத்தங்களின் டெசிபெல்களில், மனம் செவிடாகிறது. மௌன இராகங்களில், மனம் ஊமையாய் அழுகிறது.பற்றும் ,பரவசமும் இல்லாத நினைவுகள் கூட,மேலாடை போர்த்தி, இங்கு இருக்க லாயக்கில்லை என திக்காலுக் கொன்றாய் திரிகிறது.

இந் நினைவலைகளின் நில நடுக்கத்தில், நீயுரான்கள் நிலை தடுமாற, நீண்டு விசும்புகின்ற மூச்சும், குருதிப் புனல் வேகமும் கூட்ட, நெற்றிப் பொட்டில் வலி. "நேரமில்லை உனைத் தாலாட்ட", என எப்போதும் போல் சொல்லி, ஓடுகின்றேன் மனவாசல் கதவடைத்து.

(கொஞ்சம் குழப்பமாய் தலை வலிக்கும் போது எழுதியது .....)
   

2 கருத்துகள்:

  1. உண்மை.....
    மறக்க நினைத்ததும்..
    மறுக்க நினைத்ததும்..
    மாற்றியமைக்க முடியாமால் போனதும்..
    மனதிலே பூட்டி வைத்த அறைக்குள்...
    மிகப் பல வகையாய்..நிறமாய்..
    சிலசமயம் தென்றலாய்..
    கவிதையாய் ...கதையாய்...
    வெளி வந்து தாலாட்டும்...
    பலமுறை சொல்ல முடியாமால்..
    நெஞ்சை அழுத்தும்....
    இடம் குடுத்து கூர்ந்து கவனித்தால்...
    இன்றும் நெஞ்சு குமுறி..
    விம்மி வலிக்குமென
    ஓடுகின்றேன் நானும்...
    'நேரமில்லை' எனும்..
    இன்றைய கலிகாலத்தின் மிகப்பெரிய..
    தாரக மந்திரத்தோடு....

    பதிலளிநீக்கு
  2. திரு.வெங்கட் அவர்களுக்கு என் நன்றியும் வணக்கமும்.

    பதிலளிநீக்கு