பின்னிரவு பணிப் பயணம்..
இப்போதும் மணி எட்டுதான்
ஆதவன் மறைந்து பூமித் தாய் மீது இருட்டுப் போர்வை.இந்திய நேரம் பத்தரை.இரவுப் பணிக்கான பயணம்.கம்பளிக்கோட்டு, குல்லாய், கண்ணாடி, குறிப்புப் புத்தகங்கள். கனத்த காலணி, கறுத்த இருட்டில், மூச்சு வாங்க நடை.குறுக்கு வழியில், திட்டி வாசல் திறந்து, நிலையத்தில் நுழைவு.அடிக்கும் மணி எட்டு,
இங்கே. ஆரவாரமாய் சப்த ஸ்வரங்களாய்,ஏழு ஒலிகளும் இரட்டை ஒளியும்.நான்கு கண்களும், பதினான்கு காதுகளும் வேண்டும். இருக்கும் இரு கண் கொண்டு, இடை யிடையே கண் காணிப்பு. வண்ணமயமாய், மாயா ஜாலமாய், நட்சத்திரங்களாய் மின்னி, அலை வரிசைக்கு ஏற்றார் போல், நர்த்தனமாடி, அளவைக் கருவிகளில், அசையும் முட்கள்.
துருவப் பிராணிகள் போல சதா குளிரிலேயே (Air Condition) வேலை செய்யும் கருவிகள். சயாமீஸ் இரட்டையராய், எப்போதும் தயாராய். சங்கடமானால் சகோதரனை உசுப்பி விட்டு, சங்கேதம் கொடுக்கும், ஒலி, ஒளி பரப்பிகள். இந்த இடைவெளியில், நோயுற்ற கருவியின், பிணி போக்க வேண்டும்.
கண்கொத்திப் பாம்பாய் எப்போதும் தயாராய்,ஜெனரேட்டர்கள். ராட்சத சத்தமிட்டு, நொடியில் துவங்கி ,நிலையத்தின் நின்று போன இதயத்தை இயக்கம் .குழப்பமாய் ஒலிகள், கலவையாய். இடையே இங்கும், அங்கும், நடை. ஒளிகளில் அலை பாயும் பார்வை, கனக்கும் இமைகள்,கண் மூட இயலா. கனத்த புத்தகங்களில் கண்கள் நிலையாய், கருத்து ஒன்றுதல் கடினம்.
அப்படியும், இப்படியுமாய் நிசி கழிந்து, சாமம் துவங்கும். அரேபியக் கோழிகள், கட்டியம் கூற, அடியேன் கூட்டை நோக்கி. கைச் சாவியால் திட்டி வாசல் திறந்து, திரும்பும் பயணம்.முகம் தவிர, முக்காடிட்ட கோலம். இனம் காண இயலா, இருட்டு. பக்கத்தில் சில புதர்கள். இருட்டும் நிழலும், என் இளம் பிள்ளைப் பயங்கள். இப்போதும் கூடத் தான். ஆயின் வெளிக்காட்ட இயலா. கன்னத்தில் தொடும் காற்றில் கனிவு. குளிரும் அதிகம் தான். பைய நடந்து, இருட்டிலே உடை களைந்து, கச்சிதமாய் கம்பளிக்குள் அடக்கம். எழுகிறேன். இப்போதும் மணி எட்டு தான்.
ஆனால், வேளையோ காலை.
( அல் பாஹா தொலைக் காட்சி நிலையத்தில், பின்னிரவில் பணிக்கு சென்றது பற்றி, கடந்த காலத்தில் வேண்டாம்...அன்புடன் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக