கலங்காதே ! மனமே ! காத்திரு ....
கறுத்த மீசைக்காரன். சற்றே கனத்த உடம்புக்காரன்.
கண்மாய் கரையோரம், காணி நிலம் வாங்கிடவும் ,
கால் வயிற்றுக் கஞ்சிக்கு கணிசமாய் வழியிடவும் ,
கடன் வாங்கி,கப்பலேறி ,காலத்தை போக்குகிறான்,
கழுத்தளவு வட்டி கட்டி, இன்று கண்ணீரும் கம்பலையுமாய்.
ஊருக்கு கிழக்காலே, இன்னும் வேயாத ஓர் வீடு,
ஊருக்கு போகு முன்னே முடித்திடத்தான், வேண்டுமவன்.
தேவைகள் தணியவில்லை, இன்னும் பணம்,
தேடுதலும் நிக்கவில்லை.
பத்தெட்டு வயசினிலே, இவன் மேல் மீசை கருக்கையிலே ,
முத்தான குமரியவள், மூப்பான தன் மாமன் பொண்ணு ,
மாமன்கள் தொல்லையாலே, மாலையிட்டு மணமுடித்தான்.
மனசெல்லாம் காதல் இல்லை. மல்லிகைப் பூ வாசம், விடவும் இல்லை.
ஆண்டுகள் ஆகும் முன்னே, அடுத்தடுத்து பெத்த புள்ள ,
ஆள வந்த ,அதில் ஒன்னு காலனிடம் ,கடிதில் போனான்.
பின் ஒரு நாள் பித்தனாய், புத்தனை போல் ஞானம் தேடி ,
இவன் காத்தும் கூட, காணாமல் ஓடிப் போனான்.
பேதலித்த பெண்ணவள் ,பெரும் துயரில் மூழ்கிப் போனாள்.
ஓடுகின்ற மேகத்தோடும், வீசுகின்ற காத்திடமும்,சேதி சொல்லி ,
ஓயாத தேடல், வேண்டாத தெய்வமில்ல, விசும்பல்கள் ஓயவில்ல.
ஆண்டுகள் ஆகிப் போச்சு. பல ஆவணிகள் ஓடிப் போச்சு
அவன் விட்டுப் போன ஆட்டுக்குட்டி, இன்னைக்கு
மந்தையாய் ஆயிடுச்சு .
ஆடாத ஆட்டம் ஆடி, முறுக்கெல்லாம் தான் கரைய,
நாடி தான் தளர, அந்திக் கருக்கலிலே, ஓர் ஆடி இரவினிலே ,
வழி தவறிய கறுப்பாடு, வந்தது தன் கூட்டுக்குள்ளே.
வீதி எல்லாம் விளக்கு வச்சு ,தன் விடியலைத் தான்,அவ சொன்னா.
விசிய சாமரம், விலகிய முந்தானை, முன்னூறு முனகல்கள்,
நைந்த பாயில், நாள் தோறும் நாடகம்.
சுகமெல்லாம் ஆச்சு. சொத்தும் கொறஞ்சு போச்சு .
வயிற்றுக் கஞ்சிக்கு வழி தேடல் ஆச்சு .
சுருக்கென, கடன் வாங்கி, நறுக்கென கப்பல் ஏறி,
நாலு கடல் தாண்டி,மாமாங்கம் ஆகிப் போச்சு.
மாமதுரை மறந்து போச்சு.
மாமன்னன் ராமனோட,
வனவாசம் கூட, முடிஞ்சு போச்சு.
கப்பலும் தான் ஏறி, கன காலம் ஆகிப் போச்சு.
கண்ணீரும் வத்திப் போச்சு. மனசு கவலையில் மரத்துப் போச்சு.
கட்டிக்கிட்ட பொம்பளைக்கு, கன்னமும் ஓட்டிப் போச்சு.
கறுத்த மீசைக்காரன். இக் கண்ணீர்க் கதைக்கு சொந்தக்காரன்.
காலங்கள் ஓடிவிடும். கவலைகள் தான் தீர்ந்து விடும் .
கிழவியுடன் கூடி காலத்தின் நினைவுதனை,
கொப்பளிக்கும் காலம் வரும் .நல்ல காலம் வரும்.
கலங்காதே மனமே .காத்திரு ....
( இது கதையல்ல ...)
kalangadhe maname!!!
பதிலளிநீக்குpadithadhum kalangi vittadhu kan
Thank you Sadeesh.....
பதிலளிநீக்குJust wonderful daddy
பதிலளிநீக்குThank you ma..
பதிலளிநீக்கு