முஷ்டாகின் கஷ்டம் ...
முடிவான பயணத்திற்கான முத்தாய்ப்பு ஓலை.
வெண்தாடி வேந்தரின் அஞ்ஞாத வாசமாம்,
பதினான்கு ஆண்டுகளின் பணிக்கான பயணசீட்டு.
சுருக்கென்று சொல்லாமல், கொள்ளாமல் தைத்த கூரம்பு.
பின் நோக்கி பார்க்கிறார். தன் மன ஏட்டை புரட்டுகிறார்.
பின் நோக்கி பார்க்கிறார். தன் மன ஏட்டை புரட்டுகிறார்.
சல்லாபம், உல்லாசம். கடந்த முறை சங்கமத்தின்,
நித்திரை கலைந்து, வந்த முத்திரை.இன்று சிறுவன்.
கனவுகளுடன் கண்களில்,எதிர்காலம் தேக்கி நிற்பவன்.
வினா எழுப்பும் சிறுவனுக்கு,
விடை சொல்ல வேண்டும்,எதிர் காலம்.
அருமை நாயகிக்கு ஆசையாய் பூட்ட ,
நகைகள் தேவை இன்னும்,
பாக்கியாய்,பாகிஸ்தானில்,
பாதியிலே நிற்கின்ற பளிங்கு மாளிகை.
எண்ணற்ற எதிர்பார்ப்புக்கள்,
இன்னும் எல்லோரிடமும்.
வறுமைக் கோட்டை தாண்ட,
வறண்ட நிலத்திற்கு வந்ததால்,
வனப்பு சுந்தரி, வாலைக் குமரி,
இன்று வயோதிக கிழவியனாள்.
காதலால் கவர்ந்தவளின்,
கன்னக் கதுப்பில், கணக்கில்லா கோடுகள்.
வெளுத்த தலை, நரைத்த தாடி,
விழுந்த பற்கள், இவருக்கு வெளிறிய தேகம்.
வாழ்க்கை பயணத்தின் கடைசி அங்கம்.
இது ஓர், உதிரப்போகும் சருகு.
கிழவனும் கிழவியுமாய்,
சேர்ந்து கூழ் குடிக்க ,
வந்த நல்வாய்ப்பு இது.
ஆனால் அங்கே வரேவேற்பில்லை.
வருவாய் இழக்கப் போவதால்.
இன்று பட்டுப் போனது,
இந்த பணம் காய்ச்சி மரம்.
நிழலில்லை. நிதரிசனமாய்,
நான் கண்ட நிசம் இது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக