பயண அனுபவம்... .மெல்பர்ன்.
மெல்பர்ன்( Melbourne ) வந்து கிட்டத் தட்ட இரண்டு மாதமாகி விட்டது. சிங்கப்பூரில் தங்கியிருந்த வீடு காலி செய்து கப்பலில் அனுப்பிய சாமான்கள் இன்னமும் வந்து சேர வில்லை.கட்டில், சோபா,மிக்சி, கிரைண்டர், மற்ற இத்தியாதி சாமான்கள். இட்லி, தோசை, இடியாப்பம் சாப்பிட்ட நாக்கு . பதிலா பிரெட், பரோட்டா, சப்பாத்தி என உணவு வகைகளில் மாற்றம். இவையெல்லாம் நான் எப்போதாவது தின்னும் அயிட்டங்கள் , இப்போது எப்போதும் சாப்பிடும் படியான நிலைமை . இரண்டு கட்டில், மெத்தை, தட்டு முட்டு சாமான், என போய்க் கொண்டு இருக்கிறது, நித்திய வாழ்க்கை.இங்கே .
மெல்பர்ன் ஒரு அருமையான நகரம். உலகத்தில் வசிக்கத் தகுந்த நகரங்களின் தர வரிசையில் " நம்பர் ஓன்", என்று 2011-ம் வருட ஆகஸ்ட் மாத ஆய்வில் பிரசித்தம். இந்த வரிசையில் முதல் பத்தில் மூன்று நகரங்கள், ஆஸ்திரேலியா நகரங்கள் எனபது இன்னும் விசேஷம். முறையே சிட்னி ( Sydney ) ஆறாம் இடத்திலும், அடிலைட் (Adelaide) எட்டாவது இடத்திலும் உள்ளன. இந்தத் தர வரிசை கல்வி ,கலாசாரம், சுத்தம், சுகா தாரம், சுற்றுசூழல், பொழுதுபோக்கு, பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, அரசியல் ஸ்திரத் தன்மை ஆகியவற்றை மையமாய் வைத்து கணிக்கப்பட்ட ஒன்று. இதில் தட்ப வெட்ப நிலையும் ( climate ), விலைவாசியும்(Cost of Living) கணக்கில் வராது.
"என்னாடா?", இது, துட்டு கிட்டு கொடுத்து இந்த லிஸ்டை தயார் பண்ணி விட்டார்களோ ? ,என சந்தேகம் .ஆனால் இந்த மூன்று நகரங்களையும் நான் நேரிலேயே பார்த்து விட்ட படியால் இது மிகவும் உண்மை என்றே படுகிறது.
|
Wedding at Adelaide |
|
Sydney Reception |
கடந்த முறை 2006 - ம் ஆண்டு ஜூலை மாதம், என் தங்கை மகளின் திருமணம் "அடிலைட் விநாயகர்", கோவிலில்.அதற்கு நானும் என் துணைவியாரும் வந்து இருந்தோம்.என் மைத்துனர் டாக்டர். முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே இங்கு குடி யேறியவர். அப்புறம், இப்போது தான் நாங்கள் முதல் முறையாய், மைத்துனர் வீட்டிற்க்கு, விஜயம் செய்தோம். .
கல்யாணம் முடிந்த பிறகு, மறு வாரம் சிட்னியில், மணமகன் வீட்டார் வரவேற்பு . அடிலைடில் இருந்து விமானம் ஏறி கான்பெர்ரா (Canberra ) வந்து, பார்லிமென்ட் கட்டிடடம் எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, பிறகு காரில் சிட்னி வந்து சேர்ந்தோம் சுமார் 250 கி .மீ தரை மார்க்கமாய். வழி எங்கும் ரொம்ப ரம்மியமான இயற்கைக் காட்சி.௦௦ மிக நேர்த்தியான சாலைகள் அங்கு 'சிட்னி பாலம்' எல்லாம் பார்த்தோம்.1932 -ல் முழுதும் ஸ்டீல் கட்டுமானம் .சுருக்கமா அறுபது லட்சம் 'ரிவெட்' அடிச்சிருக்காங்க .௦ ஆனால் அதுக்கு பக்கத்திலே புகழ் பெற்ற 'ஒபேரா ஹவுஸ்' பார்ப்பது,ஏனோ 'மிஸ்', ஆகி விட்டது. வரவேற்பெல்லாம் முடிந்து திரும்பவும் அடிலைட் சென்று அங்கு 'பொட்டனிகல் கார்டன் ' , 'மியுசியம்' 'யுனிவேர்சிட்டி' மற்றும், பல இடங்களை கண்டு களித்து, ஒரு மாதம் கழித்து, ஊர் திரும்பினோம் .
கடந்த முறை இந்த பயணத்தில் எங்களுக்கு ரெண்டு.மூணு சிக்கலான அனுபவங்கள். பங்களூரில் இருந்து மும்பை.பிறகு உள்ளூர் விமான தளத்தில் இருந்து "சத்ரபதி சிவாஜி" சர்வதேச விமான நிலையத்திற்கு டாக்ஸி. "சிட்னி", செல்லும் 'குவாண்டாஸ்' விமானம் .பின் சிட்னி சர்வே தேச விமான தளத்தில் இறங்கி 'அடிலைட்' க்கு லோக்கல் பிளைட்.இது தான் எங்கள் நிகழ்ச்சி நிரல். விமானம் சிட்னி புறப்பட இரண்டு மணி நேரம் தாமதம்,மும்பையில்.இரவு 0930 க்கு பிளேன் கிளம்பியது .சுமார் 11 மணி நேர விமானப் பயணம். நடு நடுவே சிறிதே மூச்சுச் திணறல் .ஏசி ஒத்துக்கலை. துணைவியாருக்கு சொன்னால் 'கவலை படுவார்களே', என சொல்லவில்லை.
"முச புடிக்கிற நாய் மூஞ்சைப் பார்த்தாலே தெரியும்", அப்பிடின்னு சொலவடை சொல்லுவாங்க.அவங்களுக்கு என்னுடைய சங்கடங்கள் புரிந்து, மாத்திரைகளையும், தைரியத்தையும் ஊட்டினாங்க .முப்பத்தைந்து வருட தாம்பத்தியத்தில் 'என்னை எப்படி சமாளிப்பது எனபது அவர்களுக்கு கை வந்த கலை' .
'அப்படி, இப்படி' ன்னு,எப்பிடியோ சிட்னி வந்து சேர்ந்தோம் . பாஸ்போர்ட் எல்லாம் பரிசீலித்து விட்டு பெட்டியை திறந்து காண்பிக்கச் சொன்னாக. பெட்டியில் ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் ஒன்பது மஞ்சள் கிழங்குகள் , கம்பீரமாய் .உருண்டையாய், பொக்கை,போரை இல்லாமல் .திருமண சடங்குகளுக்காக கொண்டு வந்திருந்தோம். 'ஏன் ?' , இதை அறிவிக்க வில்லை?., என கேள்வி மேல்,கேள்வி கேட்டு வறுத்து எடுத்தார் அந்த சுங்க அதிகாரி .மன்னிச்சுக்குங்க .என் தங்கை மகள் திருமணம் என்று கூறி அழைப்பிதழ் காட்டினேன்.மேலும் எங்கள் ஊர் திருமணச் சடங்குளில் தேவைப் படுகின்ற ஒரு மங்களப் பொருள் அப்பிடின்னேன் .
"அப்படின்னா என்னான்னு?." பக்கத்தில் இருந்த சர்தார்ஜியைக் கூப்பிட்டார் .அவரிடமும் நிலைமையை விளக்கினேன் .ஏங்க!, உங்களிடம் கொடுத்த படிவத்தில், ஏன், நீங்கள் இதை எழுதலைன்னு வருத்தப் பட்டார்.சர்தார்ஜி. "ரொம்பவும் விவாதம் பண்ணாமே, குப்பைத் தொட்டியிலே போட்டிடறேன்னு சொல்லிடுங்க", என்றார். இவ்வளவு சீரியஸ் ஆக, இதை எடுதிப்பிங்கன்னு, தெரியலே. ' "அனுமதிக்கலேன்னா, குப்பைத் தொட்டியிலே போட்டு விடுறேன்னு " , மிகவும் பவ்யமா சொன்னேன். கொஞ்சம் சாந்தமாய்க் கேட்ட அவர் " சரின்னு" , சொல்லி, அந்த மஞ்சள் எல்லாத்தையும் குப்பைத் தொட்டிக்குள்ளே தூக்கிப் போட்டுட்டார், ரொம்ப கூலா .
இந்த அனுபவம் ஒரு பெரும் படிப்பினை.இந்த முறை பயணத்தில்அந்த அனுபவம் மிகவும் உதவிற்று. எப்படின்னு, கேக்குறிங்களா. அதையும் சொல்லி முடிச்சுடறேன் .அதுக்கு ஒரு பதிவு எழுதறது அவ்வளவு சிலாக்கியமின்னு, தோணல.
கோவிச்சுக்காதிங்க. கொஞ்சம் முன் கதைச் சுருக்கம் அவசியம், இந்த இடத்திலே. உங்களுக்கு கண்ணு சொக்குதுன்னு, நல்லாவே தெரியுது .எழுதுற ,எனக்கும் தான்.
நவம்பர் 21 - ம் தேதி, தஞ்சையில் இருந்து துணைவியுடன் புறப்பட்டு, விமானம் ஏறி , தனியே திருச்சியில் இருந்து, சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன் . வயது முதிர்ந்த தந்தையை கவனித்துக் கொள்ள வேண்டி, என் பிரியசகி , இந்த முறை என்னுடன் வரலைங்க .ரொம்பவே 'மிஸ்', பண்றேன் ..
மகள் வீட்டிற்க்கு டாக்ஸி பிடித்து, வந்து சேர்ந்தபோது மணி இரவு ஏழரை. ஐந்து நாள் கழித்து, நவம்பர் 25 - ம தேதி இரவு பத்தரைக்கு, மெல்பர்ன் செல்லும் விமானத்தில், நான் பேரன் பேத்தியுடன், பயணம் செய்ய ஏற்பாடு .பேரனும் பேத்தியும் பாடடி வீட்டில் இருந்து 25 - ம் தேதி மும்பையில் விமானம் ஏறி, அன்று இரவு ஆறரை மணிக்கு, சிங்கப்பூர் 'சாங்கி ஏர்போர்ட்', வருவார்கள் . அங்கேயிருந்து நான் அவர்களை அழைத்துக் கொண்டு 'மெல்பர்ன்' செல்ல, எங்களை அனுப்பி விட்டு 'பெர்த்' (Perth ) செல்லும் விமானத்தை என் மகள் பிடிக்க வேண்டும். மகளை ஒரு வாரம் பெர்த்தில் வேலை செய்யச் சொல்லி ஆபீஸ் உத்தரவு.
ஆளுக்கு 40 kg லக்கேஜ் புக் பண்ணியிருந்தோம் .மொத்தம் 17 உருப்படிகள் .நான்கு லக்கேஜ் மகள் எடுத்துக் கொண்டார் .மீதி 13 ஐ நாங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் .கூட்டிக் கழித்தால் சுமார் 30 kg அதிகம் .திரும்பவும் அவசர அவசரமாய் எக்ஸ்ட்ரா லக்கேஜை மூட்டைக் கட்டி, ஏர்போர்ட்ல எங்களை வழி அனுப்ப வந்த நண்பர் மாறனிடம் கொடுத்து அனுப்பினோம் .
எங்களுடைய கனமான ஏழு லக்கேஜ், கவுன்டரில் 'புக்' பண்ணிவிட்டு, கையில் இரண்டு லேப் டாப், நாலு பிரீப் கேஸ், ஆளுக்கொரு கம்பளிக் கோட்டு, என திக்கு முக்காடி விமானத்தில் ஏறினோம் எங்களுக்குப் பின்னாடி "பெர்த்" விமானத்தில் போக வேண்டிய என் மகள் சிறிது முன்னாடியே பறந்து விட்டாங்க.என் என்றால் வழக்கம் போல் எங்க விமானம் ,லேட்டுங்கோ .
இந்த முறை முன்னெச்சரிக்கையாய் மசாலா சாமான்,மருந்து மாத்திரை( டாக்டர் சீட்டுகளுடன்), ஸ்வீட்,வத்தல்,வடாம், எல்லாம் தனித் தனியாய் ,' பேக் ' பண்ணி, குப்பையில் போட தயாராய், மனசை திடப் படுத்திக் கொண்டு வந்தேன் கொஞ்சம் நகைகள் கையில், சூட்கேசில். சுமார் பத்து மணி நேரம் பயணம். காலையில் விமானம் தரை இறங்கறதாத் தெரியலே பைலட் ரவுண்டு கட்டுறார் .சன்னல் வழியா மழை கொட்டுறது, தெரியுது . எனக்கு நிறைய கதைகள் படிக்கிறது வழக்கமா?. விமானத்தில், ஏதோ புட்டுகிடுச்சோ, அப்படின்னு ஒரே காப்ரா ஆயிடுச்சு. ரொம்ப என் அதீதமான கற்பனைக்கு இடம் கொடுக்காமே விமானம் "துல்லாமரின்", ஏர்போர்ட் லே, மிக வழுக்கலான தரையிலே, ஒரு லௌகிக டயத்திலே இறங்கிடுத்து .என் பேத்திக்கோ தூக்கம் கலையல.அவளோட "கோட்டா", இரண்டு லக்கேஜ், அவ அதை தூக்காம ஒன்னும் பண்ண முடியாது. கெஞ்சிக் கூத்தாடி, ஒரு வழியா தர, தர ன்னு எல்லாத்தையும் இழுத்துக் கிட்டு பஸ்ஸில், சொட்டுன மழையிலே ஏறினது ... புனர்ஜென்மம் தான்.. போங்கோ.
கொஞ்சம் புத்திசாலித்தனமா, அசட்டு பிசட்டுன்னு இல்லாமே, இந்தத் தடவை விலாவாரியா படிவத்தில் கொண்டு வந்ததை ' டிக் ' பண்ணிட்டேன். பிரயாணிகள் திமு, திமுன்னு, ஒரே திருவிழாக் கூட்டம் மாதிரி. வரிசையிலே கையும், காலும் கெஞ்ச நிக்கிறோம் . 'வெல்கம்', ன்னு சொல்லி பாஸ்போர்ட் வாங்கி, ஸ்டாம்ப் பண்ணிட்டா.
அடுத்து எங்களோட, மூட்டை, முடிச்சை சேகரிக்க போனோம் பேத்தி காயத்ரி, தூக்கத்தில் இருந்து இன்னமும் விடுபடலை. தோள் மேலே சாஞ்சு தூங்கித், தூங்கி வழியறா. சுத்தி ,சுத்தி கடைசியிலே அஞ்சு பெட்டி தான் வந்தது .எல்லாம் கொஞ்சம் 'மெகா' சைஸ். ஆள் ஏறி அமுக்கியது . மீதி ரெண்டு அட்டைப் பெட்டியை காணலை .நான் நின்னு கிட்டே இருக்கேன் .என் பேரன், ராஜன் "தாத்தா, தாத்தா", கன்வேயர் பெல்ட் நின்னுடுச்சு எல்லோரும் போயிட்டா. 'கவுன்ட்டர்' லே விசாரிங்க, என்றான். சரின்னு, அரக்கப் பரக்க போயி, ரெண்டு அட்டைப் பெட்டி காணும் ன்னு சொல்ல "தோ பாரு" , அங்கே இருக்குன்னு 'அசரீரி' மாதிரி சொல்லுறாரு .உடையக் கூடிய சாமானெல்லாம் தனியே அனுப்புவாளாம்.எங்கள் பெட்டி மாத்திரம் ,கேட்பாரற்று, தனியாய் அனாதையாய் ..பேஷ் ,பேஷ்...
ஆளுக்கு ஒரு தள்ளு வண்டி சகிதம், கழைக் கூத்தாடி போல பாலன்ஸ் பண்ணிக் கொண்டு,கை காட்டிய இடத்துக்குப் போய் நின்றோம் . 'டென்சிங் ,ஹில்லாரி', கணக்கா ,இமய மலையில் ஏறினா மாதிரி .நான் எழுதி கொடுத்த படிவத்தை கையில் வைத்துக் கொண்டுசுங்க அதிகாரி," எங்களை மேலே,கீழே பார்த்தார்" ,. வாத்தியார் கொடுத்த செய்யுளைப் பாராயணம் பண்ணி, என்ன கேட்டா , என்ன சொல்லணும்?, அப்பிடின்னு யோசித்து வைச்ச தெல்லாம்,அந்த சுங்க அதிகாரிய பார்த்த உடனே , நொடியில் கணினியில்
delete பட்டனைத் தட்டின மாதிரி,
erase ஆயிடுத்து .
சுங்க அதிகாரி ,"பெட்டியில் என்ன ? " ,என்று வினவ , சுவிட்ச் போட்டா மாதிரி, ."வீட்டுக்கான உணவுப் பொருட்கள் ", அப்படின்னு சொல்லி, உடனே ஒருபெரிய மூட்டையை எடுத்துப் போட்டேன். எல்லாம் தெளிவாய்த் தெரிகின்ற பிளாஸ்டிக் பையில். அடுத்த மூட்டையை கையில் எடுக்கு முன்,ஓசையில்லாம, "ஓடிப் போங்கன்னு" கண் ஜாடை காட்டிட்டாரு .அவரு கை நீட்டிய அடுத்த மேசைக்குப் போனோம். அங்கே, ஒரு ஆஜானுபாகுவான, அதிகாரி அம்மா . மென்மையாய் "எவ்வளவு மதிப்பு பொறுமான நகை, ரசீது இருக்கான்னு", கேட்டாங்க .என்னுடைய படிவம் பார்த்து, இரண்டு குழந்தைகளும் இங்கே நிரந்தரவாசி ( Permanent Resident )என்பதால் ஆளுக்கு நானூறு டாலர் மதிப்பு உள்ள பொருள் கொண்டு வரலாம், நீங்கள் 'டிக்ளர்' பண்ணத் தேவையில்லை என்றார்கள் .
தன முடிவில் மனம் தளராத விக்ரமாதித்தன் மாதிரி, உண்மையைத் தவிர வேறதையும் சொல்வதில்லை என்று உறுதியாய் இருந்த நான், ரசீது இல்லை,இது எங்கள் குடும்ப நகை ..என்றேன் .ஒரு ஆயிரம் டாலர் மதிப்பு இருக்குமா ?. எனக் கேட்க ."இன்னும் கொஞ்சம் கூட இருக்கும்", என்றேன். ஆயிரத்தி ஐநூறு மதிப்பு போட்டுக்கவா என பேரம் பேசினார்கள். சரிங்கன்னு சொல்லிட்டு.. விட்டோம் சவாரி..
எங்களைப் போலவே வாசலில் களைத்துப் போய் காத்திருந்த மாப்பிள்ளையுடன் 'மினி லாரி'..சாரி 'வேன்' பிடித்து வீடு போய்ச் சேர்ந்தோம் ..
ரொம்ப களைப்பா இருக்குங்க ..மீதி கதையை அப்புறம் சொல்றேனுங்க ..
வணக்கங்க ..
நன்றி :கூகுள் படங்கள் .