செவ்வாய், 12 அக்டோபர், 2010

சிரம் தாழ்த்தி,கரம் கூப்பி பணிவான என் வணக்கங்கள் ....

வணக்கம் .1.

 
குமரி முதல் இமயம் வரை,
மற்றும் புலம் பெயர்ந்து,
புவியனைத்தும் குடியிருக்கும் இந்தியரும்,
பூவுலகில்  தலை நிமிர, தளம் அமைத்தீர்.


தன் தொலைநோக்கால்,
தரணியில் இந்தியா  தான்  நிமிர,
இன்னும் பத்தில், இருபதில்,
வளமுடன், வல்லரசாகவும் மாற,
வழி வகை தான்  நீர்   சொன்னீர்.

ஈரமில்லா உலகுக்கு   நம்மைப் பற்றி,
எடுத்தியம்ப, ஏவுகணை தந்தையாய்,
எய்தீர்! அக்னி,  எனும் அம்பினை.
பிருத்வியையும்  பெற்றெடுத்தீர்.

பொக்ரானில் புத்தர் சிரிக்க,அதிர்ச்சியில்,
புது நிலையில்  அணு உலகம்,
வல்லரசுகளின் தராசில்  எடை மாற்றம்.
வலிமை என்றும்  வம்புகளை குறைக்கும்.
தன்மானம் கூட்டி, வறுமை சுருக்குமென்றீர்.

கனவு கண்டீர். நம் நாடு நலம் பெற.
கனவு கண்டீர். நாளும் இக்கனவு நனவாக.

நாளைய   உலகம். நம் சிறார் கையில் .
நல்லதோர் உலகம். ஐயமில்லை! அவர் அமைப்பாரென,
கதை சொன்னீர். கனவுகள் பல, காணச் சொன்னீர். 
கனல் மூட்டி, கங்குதனை அவர் உள்ளத்தே எழுப்பி,

நாளெல்லாம் பாடுபடும்,
நானிலம் போற்றும்,
அய்யா அப்துல் கலாம் 
அவர்களுக்கு, நலமுடன் வாழ,
நன்றிகள் கோடி சொல்லி,
நாட்கடந்த என் வணக்கம். 
     
( "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வில்லை   .... ".  
ஒரு நகர்புற கிராமத்தானின் நாள் கடந்த நன்றி நவிலல்.
...........வணக்கங்கள் தொடரும் ...........)

2 கருத்துகள்: