செவ்வாய், 30 நவம்பர், 2010

என்று தணியும் என் தாகம் ...

என்று தணியும் என் தாகம் ...
















நிசாமாதானுங்க !
நிலத்தடி நீரு,
வேருக்குக் கிழே
வெகு ஆழம் போச்சுது.

கடல் நீரும்   
கன தூரம் கசிஞ்சு, 
ஊருக்கு உள்ளே, 
உட்புகலாச்சுது.

ஆறு, குளத்துலே 
அமில அழுக்கும், 
கழிவு நீரும் கலந்து, 
கூவம் போல ஆச்சுது.

கொட்டலை 
குழாயிலே 
சொட்டு சொட்டா
சொட்டுது நீரு.

ஏங்கி நிக்கிறேன் 
எக்கி எக்கிப்  பார்க்கிறேன்.
என்று தணியும் 
என் ...தாகம்....                 

பின்னிரவு பணிப் பயணம்..

 பின்னிரவு பணிப் பயணம்..

  இப்போதும் மணி எட்டுதான்




ஆதவன் மறைந்து பூமித் தாய் மீது இருட்டுப் போர்வை.இந்திய நேரம் பத்தரை.இரவுப் பணிக்கான பயணம்.கம்பளிக்கோட்டு, குல்லாய், கண்ணாடி, குறிப்புப் புத்தகங்கள். கனத்த காலணி, கறுத்த இருட்டில், மூச்சு வாங்க நடை.குறுக்கு வழியில், திட்டி வாசல் திறந்து, நிலையத்தில் நுழைவு.அடிக்கும் மணி எட்டு,

இங்கே. ஆரவாரமாய் சப்த ஸ்வரங்களாய்,ஏழு ஒலிகளும் இரட்டை ஒளியும்.நான்கு கண்களும், பதினான்கு காதுகளும் வேண்டும். இருக்கும் இரு கண் கொண்டு, இடை யிடையே கண் காணிப்பு. வண்ணமயமாய், மாயா ஜாலமாய், நட்சத்திரங்களாய் மின்னி, அலை வரிசைக்கு ஏற்றார் போல், நர்த்தனமாடி, அளவைக் கருவிகளில், அசையும் முட்கள்.

துருவப் பிராணிகள் போல சதா குளிரிலேயே (Air Condition) வேலை செய்யும் கருவிகள். சயாமீஸ் இரட்டையராய், எப்போதும் தயாராய். சங்கடமானால் சகோதரனை உசுப்பி விட்டு, சங்கேதம் கொடுக்கும், ஒலி, ஒளி பரப்பிகள். இந்த இடைவெளியில், நோயுற்ற கருவியின், பிணி போக்க வேண்டும்.

கண்கொத்திப் பாம்பாய் எப்போதும் தயாராய்,ஜெனரேட்டர்கள். ராட்சத சத்தமிட்டு, நொடியில் துவங்கி ,நிலையத்தின் நின்று போன  இதயத்தை இயக்கம் .குழப்பமாய் ஒலிகள், கலவையாய்.  இடையே இங்கும், அங்கும், நடை. ஒளிகளில் அலை பாயும் பார்வை, கனக்கும் இமைகள்,கண் மூட இயலா. கனத்த புத்தகங்களில் கண்கள் நிலையாய், கருத்து ஒன்றுதல் கடினம்.

அப்படியும், இப்படியுமாய் நிசி கழிந்து, சாமம் துவங்கும். அரேபியக் கோழிகள், கட்டியம் கூற, அடியேன் கூட்டை நோக்கி. கைச் சாவியால் திட்டி வாசல் திறந்து, திரும்பும் பயணம்.முகம் தவிர, முக்காடிட்ட கோலம். இனம் காண இயலா, இருட்டு. பக்கத்தில் சில புதர்கள். இருட்டும் நிழலும், என்  இளம் பிள்ளைப் பயங்கள். இப்போதும் கூடத் தான். ஆயின் வெளிக்காட்ட இயலா. கன்னத்தில் தொடும்  காற்றில்   கனிவு. குளிரும் அதிகம் தான். பைய நடந்து,  இருட்டிலே உடை களைந்து, கச்சிதமாய் கம்பளிக்குள் அடக்கம். எழுகிறேன். இப்போதும் மணி எட்டு  தான்.

ஆனால், வேளையோ காலை.


( அல் பாஹா தொலைக் காட்சி நிலையத்தில், பின்னிரவில் பணிக்கு சென்றது பற்றி, கடந்த காலத்தில் வேண்டாம்...அன்புடன் )

என்றும் சேராத இணைகோடுகள் !


என்றும் சேராத இணைகோடுகள் !




அலையும் கூந்தல் 
அழகிய கண்கள் 
ஓடியும் இடை 
ஓவியத் தோற்றம்.
பூனை நடையில் 
பூவுலக அழகி 
பளிங்குச் சிலையாய்
பந்தலிட்ட மேடையில்.











அடைந்த கண்கள்
உடைந்த பற்கள் 
ஒட்டிய வயிறு
ஒல்லியான தேகம் 
ஒரு சாண் துணி 
முட்டிக் கால் 
தட்டும் நடை 
பரட்டைத் தலை 
பந்தல்காரன் 
கந்தலுடன் கீழே .        






நன்றி :கூகுள் படங்கள் 

சற்றே சிந்திக்க....

சற்றே சிந்திக்க....

பிரவேசம் மறுக்கப் பட்டவன் கட்டிய கர்பகிரகம்.





ஏசி   எட்டி  உதைத்து,   குடித்து 
வாந்தி எடுத்ததை தன் கையில்
 ஏந்தி,  முந்தானையால் அவன்
 வாய்  துடைக்கும்  மனைவி.



தாசி எனக் காறி உமிழ்ந்து, தனக்கு குடிக்க காசு கேட்கும், கயவன் கணவன்.

எப்போதோ ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்றவன் திரும்ப ,என்றும் அகக் கடலில் அலையின்றி காத்திருக்கும் அல்லி.

காதல் தோல்விகளால் தாடி வளர்த்து சாமியாராகிப் போனான்.கன்னிகள் இப்போது அவன் காலடியில்.

சாப்பிட்ட கோழி வயிற்றில் கொக்கரித்ததால்,விடிந்ததென்று வெளியே போனான்.

லேட் ஆயிடுச்சு வர்றட்டா...                 

பணம் படுத்தும் பாடு....

பணம் படுத்தும் பாடு..
..
















 
பணம் பண்ண,
பரதேசம் போனவன், 
பண்ணாமலே 
பிணமானான்.
பிணம்  எரிக்க, 
பணம் நிறைய, 
பிடுங்கினர்
பாடு படாமலே 
இடுகாட்டில்.
பாவம்
பிணம்.     

திங்கள், 29 நவம்பர், 2010

உழைப்பு ..ஒன்றும்.. ஒன்றும் பதினொன்று

உழைப்பு ..ஒன்றும் ஒன்றும் பதினொன்று
















 
உழைப்பில்
நீ........ஒன்று.
நான் ..ஒன்று.
ஒன்றாய்...
நாம் இணைந்தால்,
நம் பலம்
பதினொன்று.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம்..(2 )

அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம் ..(2 )


வேலைத் தளையில் ஆளைக் கலைக்காதே !

என் தந்தையார் கடுமையான உழைப்பாளி. 1960-ம் ஆண்டு வாக்கிலேயே விவசாயம் செய்ய ட்ராக்டர் (Tractor) போன்ற நவீன கருவிகளையும், மின்சார இணைப்புகள் இல்லாத  நிலையில், பாசனத்திற்காக டீசலில் இயங்கும் இறவை என்ஜின்களையும் பயன் படுத்தியவர்.முன்னோடியான ஒரு  விவசாயி.மேடான, பல தரிசு நிலங்களை,புல்டோசர் கொண்டு சமன் செய்து, விளைநிலமாக  மாற்றியவர்.

பல சமயங்களில், இவ்வாறான பணிகளின்  போது கருவிகள் பழுது அடைதலும் , நிலத்தடி நீர் கிடைக்க ஆழ்குழாய் துளைகள் இடும்போழுதும், வேலைகள் நீண்டு இரவாகி விடும் முன்னேற்பாட்டுடன் பெட்ரோமாக்ஸ்,  லாந்தர் விளக்குகள் பணியாளர் அனைவருக்கும் உணவு, சிற்றுண்டி,  தேநீர் என  கலகலப்பாய், எந்தத் தொய்வும் இன்றி ,எவ்வளவு நேரம் ஆனாலும் வேலைகள், முடியும் வரை தொடரும்.அனைவரின் உருப்படியான யோசனைகளையும் அங்கீகரிக்கப் பட்டு,செயல் நடக்கும். வேலையின் முடிவில் அனைவருக்கும் தகுந்த சன்மானமும்,தேவையான ஓய்வும் கிடைக்கும்.






இந்த வேலைகளுக்கிடையே  துருப்பிடித்த பாகங்களை, நெருப்பில் இட்டு கழற்றுதலும் ,வழுக்கி விழும் சங்கிலிப் பிடிப்பன்களில் (Chain Wrench) மணல் தூவி இறுக்குவதும், என சின்னச் சின்ன வேலை உத்திகள். மாற்றுச் சிந்தனைகள். அரங்கேறும் 

 தந்தையாரின் தாரக மந்திரம் "வேலைத் தளையில் ஆளைக் கலைக்காதே", என்பதே.   

வெளியூரிலிருந்து வந்த வேலை ஆட்கள், வாடகைக் கருவிகள்,  தளவாட  சாமான்கள்  என அனைத்தையும் திரும்பவும் திரட்டி வேலை தொடர்வது , பெரும் காலம் பொருள் விரயம் என்பார். என் தந்தையிடமிருந்து' முன்கூட்டி திட்டமிடல்' , ' இணைந்து செயல்படல்', 'வேலை இடத்தில்  இணக்கமான சூழ்நிலை', மாற்றுச் சிந்தனைகள்',என்னும் வாழ்க்கைப் பாடம்  பயின்றேன்.

சிறு வயதில் நான் கற்ற இப்பாடங்கள், பொறியாளனாய் சிறந்த முறையில்  இங்கும் ,வெளிநாட்டிலும் பணிபுரிய,எனக்கு உதவியது என்றால் மிகையில்லை.

நன்றி : கூகுள் படங்கள் .

சனி, 27 நவம்பர், 2010

வயசான வாலிப சிந்தனை....

வயசான வாலிப சிந்தனை ..

குத்தாட்டம் புடிக்குது, 
குந்தித்தான் பாக்க முடியல, 
குழந்தை குட்டியோட,
கூடிப் பார்க்க, பெரும்  
குழப்பமாயிருக்குது.

கண்டபடி கட்டிபுடி, வைத்தியம் 
கமல் தான் சொன்னாரு.
கட்டிகிட்ட பொண்டாட்டி 
கற்காலக்காரி,கலிகாலம் இல்லே.
கடல் தாண்டுனா,இது  சாத்தியம்.

முத்தக் காட்சிக்கு, சும்மாவேணும்  
முகம் சுளிக்க வேண்டியிருக்கு.
வயசு ஆனதாலே, மனசு
வாலிப சிந்தனை, இந்த வயசிலே
வேண்டாமின்னு.இடிக்குது.
     
நாயம் சொல்லுங்க பெருசுகளே. 
நாமெல்லாம் என்ன செய்யறது.
( என்னைப்போல் வயதான என் நண்பரின் புலம்பல்..)                

அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம்... (1)..



அப்பாவிடமிருந்து அனுபவப் பாடம்...(1)..

முதல் மரியாதை.

கிராமத்து நிலக்கிழார்,மணியக்காரர்,ஒப்பந்தக்காரர் என, பல அவதாரம் தரித்தவர்.என் தந்தை.தந்தையை "அய்யா என விளிப்பது எங்கள் வழக்கம்.ஏழு பிள்ளைகளில் இடையில் பிறந்தவன் நான். இது தவிர, எங்கள் பெரியப்பா பிள்ளைகள் சிலரும், எங்கள் வீட்டில் தங்கிப் படித்தனர். சகோதர, சகோதரிகள்,உறவினர் என, வீட்டில் எப்போதும் கூட்டம். கல கலப்பு.எங்கள் நெருங்கிய உறவினர் ஒருவர்,அண்ணன் முறை வேண்டும்.எங்கள் நிலங்களை  பார்க்கும்  கண்காணியாக இருந்தார்.காலையில் ஆட்களுக்கு இடவேண்டிய பணிபற்றிய  விவரம், என் தந்தையிடம் கேட்டு விட்டு, படியிறங்கிச் சென்றார்.என்னுடைய தந்தை மீண்டும் சில வேலைகளை, அவரிடம் சொல்வதற்காக  என்னை பார்த்து  "கேசவனைக் கூப்பிடு "'என்றார். நான் உடனே தெருவில் இறங்கி "கேசவா! கேசவா !", "அய்யா கூப்பிடறாங்க",என்றேன்,உரத்த குரலில்.

பளீரென்று முதுகில் ஓர் அடி.பொறி கலங்கிப் போயிற்று. திரும்பிப் பார்த்தால் கோபமாய் என் தந்தை. அவருக்கு என்ன வயது ?.அண்ணன் முறை. இப்படி விளிக்கலாமா? என்று.
சுமார் எட்டு வயதிருக்கும் எனக்கு அப்போது.

அன்றையில் இருந்து ,எந்த நிலையிலும் ,எக்காரணம் கொண்டும்  யாரையும் மரியாதையின்றி பேசுதல், நடத்துதல்  தவறு என்பது நான் உணர்ந்த பாடம். என் முதுகில் விழுந்த, என் தந்தையின் முதல் அடி, கற்றுத்  தந்த  பாடம்.

நன்றி :கூகுள் படங்கள்.                     

வியாழன், 25 நவம்பர், 2010

மனமென்னும் மாயக் குகையில் ...

மனமென்னும் மாயக் குகையில் ...

கருப்புக் கட்டமிட்ட, கம்பிச் சன்னல்களுக்கு வெளியே பாதாம் மர  இலைகள் பச்சையும், பழுப்புமாய் காலைக் காற்றில் அசைய, சாய்ந்து தொங்குகின்ற தென்னை மர ஓலைகள் சல சலக்க,  கப்பும் கிளை யுமாய் மாமரத்தின் இலைகள், இவற்றின் ஊடே கண்ணாமூச்சி ஆடி, எட்டிப் பார்க்கின்ற கதிரோனின் கதிர்கள்.கருவுற்ற கார்மேகம் கலைந்து, பிரசவித்த பெரு மழையில், புது ஆடை அணிந்தது போல் பூமி.

சாய்வு நாற்காலியில் சற்றே நான் கண்ணயர,மனத் தூளியில் உறங்குகின்ற நினைவு சிணுங்குகிறது."கிட்ட வா", "எட்டிப் பார்", தாலாட்டு", "என்னைத் தொட்டுத் தூக்கு", என.

நினைவலைகள் காலமெனும், கடலில் பின்னோக்கி தவழ்ந்து, மெள்ளவே ஆழ்கடலில்அமைதியாய். உள்நோக்கி, மன மென்னும் குகையில்,அதன் நீண்டு அடர்ந்த பாதையில், புதைந்த பல நினைவுகள்.நல்லதும், பொல்லாததும், அல்லாததும், பிறர்  அறியாததும் என, துணியின்றி  அலைகின்ற  சில நிர்வாண  உண்மை கள். துணிவின்றி, வெளியில் சொல்ல இயலா நினைவுகள். அச்சங்கள், அடிபட்ட காயங்கள், அவற்றின்  வடுக்கள், ஆழ் மனதில் தறி கெட்டு தாறு மாறாய். புதைந்த புதையல் போல் தோண்டிப் பார்க்க ஆவலும்,அச்சமுமாய்.

வெளியுலக கோட்பாட்டின் வேஷங்களை வெறுத்து,வெளிப்படுத்த விரும்பா, விவரிக்க இயலா உணர்வுகள். உண்மை களை தோல் உரித்துப் பார்த்து,அவற்றின் விகாரங்களில் வெம்புகிற மனசு. இருட் குகையில் பூட்டிய எண்ணற்ற அறைகள். இரவில்,கனவில் இவற்றின் கதவுகள் திறந்து கொள்கின்றனவோ, என்ற அச்சம். காலச் சுவட்டின் அடிகளில் பட்ட வீழ்ச்சிகளும்,எழுச்சிகளும், இடையே எண்ணற்ற வெற்றிடங்களும்.

பழ மரத்தில் வௌவால் போல் ,ஒலி கேட்டவுடன்  பறந்து மன அலைகளை எழுப்பி மறுபடியும் அமர்கிறது.  எழுப்பிய அலைகள் ஏற்ப்படுத்தும் அதிர்வுகள், மனதின்  கால யந்திரத்தை முடுக்க, அரசல், புரசலான பிம்பங்கள் புகைபோல் விரிகிறது,திரைப் படமாய் பூட்டி யிருந்த காட்சிகள்.ஆசை, அவலம், அச்சம், அதீதம்  என காட்சிக்கு காட்சி, இப் புள்ளிகள் வெளிச்சம் பெற்று, விறு விறுப்பாய், திரை யரங்கில் தோன்றும், வண்ணக் கலவையாய்.

சில சத்தங்களின் டெசிபெல்களில், மனம் செவிடாகிறது. மௌன இராகங்களில், மனம் ஊமையாய் அழுகிறது.பற்றும் ,பரவசமும் இல்லாத நினைவுகள் கூட,மேலாடை போர்த்தி, இங்கு இருக்க லாயக்கில்லை என திக்காலுக் கொன்றாய் திரிகிறது.

இந் நினைவலைகளின் நில நடுக்கத்தில், நீயுரான்கள் நிலை தடுமாற, நீண்டு விசும்புகின்ற மூச்சும், குருதிப் புனல் வேகமும் கூட்ட, நெற்றிப் பொட்டில் வலி. "நேரமில்லை உனைத் தாலாட்ட", என எப்போதும் போல் சொல்லி, ஓடுகின்றேன் மனவாசல் கதவடைத்து.

(கொஞ்சம் குழப்பமாய் தலை வலிக்கும் போது எழுதியது .....)
   

புதன், 24 நவம்பர், 2010

விழிப்பது எப்போதோ?. ..விடியும் அப்போதே!

விழிப்பது எப்போதோ?. ..விடியும் அப்போதே !
( திரு ஜெகதீஸ்வரன், பதிவு மூலம்   இரா.நடராசன் 
அவர்களின் 'ஆயிஷா' என்னும் குறு நாவல் படித்தேன்.
கண்கள் குளமாக நெஞ்சம் கனமாயிற்று ............ ) 
கற்பித்தல் பெரும்பேறு 
கற்றல் அதனினும் சுகம் என்ற  
குருகுல வாசங்களும் 
குரு சிஷ்ய நேசங்களும் மறைய 
அரும்பு மலர்களின் 
மலரும் மனங்களில் 
எழுகின்ற
எண்ணற்ற வினாக்கள்,
விடை தெரியா கேள்விகள்
வினவுமுன் மடிந்து போகும்.
அதட்டல், அச்சுறுத்தல் 
ஆயுதமாய், ஆசான்கள் சிலர்.   
அரக்கராய் அவதாரம்.
ஆயிரமாயிரம் ஆயிஷா, 
அன்றாடம் மடிகிறார்.
அடிப் பிறழா மனனம், 
அப்படியே துப்பல் என,
அடிமையாய் மனம். 
உண்மைத் தேடல்கள் 
ஊமையாகிப் போக,
விழிப்பது எப்போதோ?. 
விடியும் அப்போதே !                  

செவ்வாய், 23 நவம்பர், 2010

உலகிற்கு உணர்த்தும் பாடம் ..

உலகிற்கு உணர்த்தும் பாடம் ..

உறவின் பிரிவில்
ஊர்கூடி அழும் காக்கை.

மலர் நுகர்ந்து
மணக்கும் தேன், உறிஞ்சி
மகரந்தம் சேர்த்து
மறு உதவி செய்யும் தேனீ.

ஒன்றாய் இணைந்து
ஒழுங்கை உணர்த்தி
ஒருபோதும் ஓயாது
ஓடி ஓடிச் சேர்க்கும் எறும்பு.

உறவு, உதவி, உழைப்பு என, இவை
உலகிற்கு உணர்த்தும் பாடம்

திங்கள், 22 நவம்பர், 2010

காதல்... மணம்

காதல்... மணம்.

காலம் கனிந்து
கனிந்த மனம்
கரையும். கரைந்த
மனம் முகிழ்ந்து
முகிழ்ந்த மனம்.
மலரும். மலர்ந்த மனம்
மணக்கும்.மணம் புரிந்து
மகிழும்.மனம் புரிந்த
மனைவியுடன்  இனி
மணவாழ்க்கை இனிக்கும் . 

         

ஞாயிறு, 21 நவம்பர், 2010

ஆராய்ச்சிக்குரியது!. அனுபவம் ...

அனுபவம் ...

வயதினால்,
வறுமையால்,
எதிர்பார்ப்பால்,
ஏமாற்றத்தால்,
ஏற்றத்தால்,
செம்மையால்,
சினத்தினால்,
அவசரத்தால்,
அவமானத்தால், 
இயலாமை,
முயலாமை,
இவை எவற்றால்?.
எதனால் வருவது?.
அனுபவம்.
இவை அனைத்தாலுமா?.

ஆராய்ச்சிக்குரியது!. 
அனுபவம்.    
     

சனி, 20 நவம்பர், 2010

பெண்ணாய் ..எங்கள் பெரும் தவமாய்

பெண்ணாய் ..எங்கள் பெரும் தவமாய் ..

தாயமுதுக்கு ஏங்கி
தலைப்புக்குள் முயங்கி
தன்னிறைவோடு மடி மீது 
தலை சாய்க்கும் மழலை.

காதலால் கட்டுண்டு
காமக் கணைகளால் தாக்குண்டு
களைத்து கண்ணயரும்
கணவன் சாயும் மடி.

முதுமையின் எல்லையில்
மூத்த கிழவி, தன்னைப் பெற்ற
தாய், தன் தளர்வு தான்  போக்க
தஞ்சமடைந்த மடி.

இன்னொரு கண் ,
இனியவன்,
இளையவன் தம்பி
பள்ளிக் கதை சொல்ல
பாசமுடன் தலை கோதி
தலை சாய்க்கும்
தமக்கை மடி.

உழைத்துக் களைத்து
உருக்குலைந்த தந்தை
உயிரனைய மலர்க்கொடி நீ
உன் மலரனைய மடி மீது
உயிர் முடங்கும். முன் உறங்கும்.

தாயாய், தாரமாய்
தமக்கையாய், மகளாய்
பெண்ணே !நீ எங்கள்
பெரும் தவமாய் ....                       

வெள்ளி, 19 நவம்பர், 2010

பட்டணமான என் பட்டிக்காடு ..2 ..

பட்டணமான என் பட்டிக்காடு 
 
வானை நம்பி, 
வயிறு நிரம்பா
விவசாயம் விட்டு 
வாழ்வாதாரம் கூட்ட  
வசதிகளை தக்க வைக்க,
 
வாலிபர் பலரும்
வாய்ப்புக்கள்  தேடி
வளைகுடா செல்ல 
தறிகளும் சாயமும் 
திருப்பூர் அழைக்க,
கொல்லை, குடி ,
காடு துறந்து, பலர்
கொல்லத்துக்கும் போக       
   
பட்டணமான  என்
பட்டிக்காடு
 
பால்ய விவாகங்கள் 
பதியில்லா பெண்கள் 
கதியில்லா பெருசுகள்
விவரமறியா விடலைகள் என 
விரக்தியில் வாடி 
ஏங்குகிறது என் கிராமம். 
இன்று இளமையை இழந்து. 

செவ்வாய், 16 நவம்பர், 2010

பட்டணமான என் பட்டிக்காடு....1.

பட்டணமான என் பட்டிக்காடு

திரியிட்ட சிம்னி விளக்கின்,
தீ நாக்கு மறைய 
திரி தெரியாக் குழல் விளக்கின்
மின் வெளிச்சம். இங்கு.

குடம் நீர் எடுக்க, பல கல் 
கால் கடுக்க, கடந்தது எண்ணி 
கொட்டும் குடி நீர், இன்று  
குழாய் மூலம் சிரிக்கும்.

விறகடுப்பும், கும்முட்டியும்
ஊது குழலும், பனை விசிறியும் 
உத்தரத்தில் படிந்த 
ஊர்ப்  பட்ட கரித் துகளும் 
உறிச்சட்டியும், தயிர் மத்தும் 
ஊரெங்கும் காணாமல் போக 
எரிவாய்வில் விசிலடித்து 
என்னைப் பாரீர் !
எனக்  குரல் கொடுத்து,
உலை பொங்கி 
உணவாகும். அதிசயம்!.
சமையலறையில் பெண்களின் 
சீவன் குறைந்த சுவாசப் பைகளில்
சீராய்த் தவழும் மூச்சுக் காற்று.


இரவில், இருட்டில், புதரின் மறைவில் 
ஒதுங்குதல் போய்,
இயற்கையின் உந்துதலுக்கு  
இல்லத்தில் கழிவறை.
சகட வண்டிகள், அச்சிறுத்துப்  போக
சடுதியில் செல்ல ஊரெங்கும் ஊர்திகள்.
கணப் பொழுதில் குசலங்கள், 
கடல் கடந்த சொந்தங்களோடும்,
அளவில்லாப் பேச்சு   
அலை தொலைபேசிகளால்.
அழகிகளின் ஆட்டம்,  பின் பாட்டு என
அனைத்துலக நிகழ்சிகளும்
வான்வெளி விரைந்து 
வண்ணத் திரையில் 
விழி செவி நிரப்பும்.

வளர் சிதை மாற்றங்களில் 
பட்டணமாயிற்று. இன்று என்
பட்டிக்காடு.       
                        

புதன், 3 நவம்பர், 2010

நெஞ்சில் நிற்பவை..நான் பொறந்த மண்ணு.

நெஞ்சில் நிற்பவை..நான் பொறந்த மண்ணு.



 "டும்"," டும்", என பறை சத்தம், காதிற்கு பயணம் வந்தது.வரும் வாரம், அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று. பருவ மழை சிறிதே பொய்த்ததால், தண்ணீர் வரத்திற்காக தவித்துக் கிடக்கிறது கிராமம்.

 மக்களுக்கு மன நிம்மதி தரும் சேதி. ஏரி,குளம்,குட்டை,வயல் எல்லாம் பாளம், பாளமாய் "சஹாரா பாலைவனம்" போல் வெடித்துக் கிடக்கிறது. அக்கரைக்கு குறுக்கே நடந்துபோகவும்,மணல் அள்ளவுமே, அப்போதைக்கு ஆற்றின் உபயோகம். தலைக்கு தக்கன, வரி வைத்து ,பணம் வசூல் பண்ணி வாய்க்கால்,வடிகால் யாவும்,புல் புதர் நீக்கி கச்சிதமாய் செதுக்கப்பட்டு, விருந்தினரை எதிர் நோக்கும் வீட்டுக்காரரை போல் பொலிவாய் இருந்தது. கோடை மழையில் புழுதி உழவு செய்து நாற்றங்காலில் நாற்றுக்கள், காற்றில் அலை அலையாய், பச்சை தலை சாய்த்து வந்தனம் கூறி, புக்ககம் புறப்படும் பெண்கள் போல், நடவுக்கு தயாராய் இருந்தன.

ஏரி,குளம் நிரம்பி ஆற்று நீர்,வெடித்த வயல்களில் ஊறி கொஞ்சம் கொஞ்சமாய் நிரம்புகிறது. அப்போது நிலத்திலிருந்து வரும் வெக்கை, வெடிப்பிலிருந்து வெளிப்படும், பூச்சிகளையும்,பாம்பையும் கொத்தி தின்ன காத்திருக்கும் கொக்கு, நாரைகளின் நளின நடை.

 "உக்கும்"," உக்கும்" என, கணவன் அழைப்பிற்கு நாணி நாவசைக்கும், புது மணப் பெண் போல் குரல் கொடுத்து, ஒய்யாரமாய் நடை பழகும்,  வண்ண வண்ணப் புறாக்கள்.

"கீச்"," கீச்" என, ஓலி எழுப்பி, புழு தின்ன காத்திருக்கும் குருவிகள், வானத்தில் வட்டமிடும் வல்லூறுகள், கழுகுகள், கிளிகள் என இயற்கையின் களியாட்டம்.

மேற்கத்திக் காற்றில் செம்மையாய் புழுதிப் படலம் முன் வர, கட்டியக்காரனைப் போல் மண் வாசனையும், தொடரும் மழைத் தூறலும்.
இனி மேலும், இங்கு வேலை இல்லை என, வயலில் "இத்தனை துண்டு ஆடு,பட்டி கட்டி கிடை போட்டேன்", என கணக்கு காட்டி கூலி நெல் பெற காத்திருக்கும், கெடா மீசைக் கீதாரிகள். வானம் பாத்த பூமிலேயிருந்து, பஞ்சம் பிழைக்க வந்தோர். பனைவோலைக் குடை போட்டு, பொட்ட வயல் வெளியில், இதுகாறும் குடி யிருந்தோர். கையில் தொரட்டியுடன், கருவேல மர இலை,தழை, கருவைக்காய் அறுத்து ஆட்டுக் குட்டிகளுக்கு போடும், அவர் தம் இடைச்சிமார்.கடும் உழைப்பிற்கு அஞ்சாதோர். புறப்பட்டார், புலம் பெயர.

மாடுகள் பூட்டிய ஏர்கள் வரிசையாய் வலம் வர, ஆழ உழுது, சமனாய் சீர் படுகிறது, நிலம். இடுப்பு வேட்டிகளை தார் பாய்ச்சி கட்டி, துண்டை முன்டாசாய், மல்யுத்த பயில்வான் போல், மார் காட்டி, மண்வெட்டியால் கரை அணைக்கும் ஆட்கள். அவர்களின் புடைத்த புஜமும், திரண்ட கெண்டைக் காலும், செதுக்கிய கிரேக்க சிற்பம் போல். உடல் உழைப்பின் உச்சம் காட்டும்.

நடவு வயலில், சேற்றில் கால் புதைதலும், அலாதி சுகம்.நீரில் அலசிய நாற்றுக் கட்டின் வேர்கள், வெள்ளியும், தங்கமுமாய் மின்னும். உச்சிக் கொண்டை, வெற்றிலையில் சிவந்த வாய்,அள்ளிச் செருகிய சேலை, வரிசையாய் குனிந்து நாற்றை லாவகமாய் கிள்ளி எடுத்து, பற்றி இரு விரலால் சேற்றில் செருகி 'தன்னானே தானே தன்னானே' என காற்றில் மிதந்து வருகின்ற என் கிராமத்து சங்கீதம். உள்ளத்தின் உயிர்நாதம். சுயம்வர கூட்ட மாப்பிள்ளைகள் போல் சுருதிகள் கூடும். கிராம மக்களின் பிழைப்பிற்கான, உயிரின் ரீங்காரத்தில், இந்த சுருதிகள் களை கட்டும். கிண்டலும்,கேலிப் பாட்டும், நையாண்டிகளும் என கன்னிப் பெண்களும் மச்சான்களும், கள் குடிக்காமலே,போதையில் புரைஏறிப் போகின்ற காட்சி.

பின்னர் கரையேறி பசியாற்ற, கலயத்தில் நீராகாரமும், சோறும், சுட்ட கருவாடு, கெலுத்தி மீன் குழம்பு, நெத்திலி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் என கம கமக்கும்.நளனையும், கெஞ்ச வைக்கும் நள பாகம். இன்னமும் நினைத்தால் நாவில் நீர் ஊறும்.

பசுமையான வயல் வெளியில்,வரப்பின் மேல் நடப்பது ஓர் சுகமான அனுபவம்.பச்சை புற்களின் நுனிகளில் சொட்டும் பனித்துளிகள். மெல்லிய வெள்ளைச் சல்லாடை போர்த்திய புவிமகள்.உயரப் பனையிலிருந்து சாரை சாரையாய் எறும்புகள் போல் அரும்பி வழியும் நீர்த் திவலைகள்.ஈரத்தில் கால் பதிய, இதயம் எல்லாம் நனையும். முற்றிய நெல் வயல்களில், சான்றோர் போல் செருக்கின்றி, தலை வணங்கி நிற்கும் செந் நெற்கதிர்கள்.பொங்கலுக்காக புதுக் கதிர் அறுக்கும் வைபவம். தை பிறக்க வழி பிறக்கும்.

சாய்வு நாற்காலியில்,ஓய்வாய் அமர்ந்து, சிறு பிராயத்து நினைவுகளில், மனம். "பொங்கல் பண்ணிட்டேன்". உங்களைத் தானே? சாப்பிட வர்றிங்களா?, என்ற என் துணைவியாரின் குரல் கேட்டு. திடுக்கிட்டு விழிக்கிறேன். கொஞ்சமும்,நெஞ்சம் அகலா என் நினைவுகள்........

அசை போட்டதில் பசி இல்லை......

செவ்வாய், 2 நவம்பர், 2010

சூத்திரமும் சரித்திரமும்..

சூத்திரமும் சரித்திரமும்

சகடத்தி னிரு
சக்கரம் போல்
பூஜ்யமும் ஒன்றும்
புரிந்தியங்கும் கணினி.

பூஜ்யத்தின் உபயம்,
புவிக்களித்த பாரதம்,
பூஜ்யமாயிராமல்,முதலாய்
இன்று கணினியில்,தரணியில்.

கணினியும், காமமும்
மென்பொருள் இயக்கம் .
இரண்டின் சூத்திரம்
இந்திய சரித்திரம்.

முன்னதும் பின்னதும்
நாம் முன்னோடி .
பல்கிடும் மாந்தரும்
நல்கிடும் திரவியம்
நவின்றிடும் சாட்சி

இன்றைய தலைமுறை
கண் இனி, கணினி.
கணிப்பொறி ஆற்றல்
கடல் பல கடக்கவும்,
காசு குவிக்கவும்,
கண்டெடுத்த
கடவுச் சீட்டு.

ஏழையின் சிரிப்பில்,
இறைவனைக் காண,
இந்தியர் நமக்கு.
இன்னுமோர் வாய்ப்பு.
இனிய நல் வாய்ப்பு.